என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • இங்கிலாந்து இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
    • சுந்தர் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கிலாந்து- இந்தியா ஆகிய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர் அனைவராலும் கவரப்பட்டது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 'IMPACT PLAYER' விருது வழங்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் விளாசிய 53 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.
    • அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இத்தொடரில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறினர். குறிப்பாக 4-வது போட்டியில் பாதத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் நடக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும் அவர் நாட்டுக்காக மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 53 ரன்கள் குவித்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

    அதே போல இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் கடைசி நாளில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஒற்றைக் கையுடன் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் பாராட்ட வைத்தது.

    முன்னதாக இப்படி திடீரென காயமடைபவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க முடியாது என்பது ஐசிசி விதிமுறையாகும். அதனால் காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைப்பதற்கு விதிமுறைகளில் தேவையான மாற்றம் செய்ய வேண்டும் என்று 4-வது போட்டியின் முடிவில் ஐசிசிக்கு கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.

    ஆனால் அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸை கர்மா பழி தீர்த்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்ய முடியும். அவருடைய மிகப்பெரிய ரசிகரான நான் அவருடைய அணுகுமுறையை ரசிக்கிறேன். ஆனால் நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.

    கிறிஸ் ஓக்ஸ் இங்கிலாந்துக்கு உதவி செய்வதற்காக தனது ஒற்றைக்கையை சட்டைக்குள் வைத்துக்கொண்டு விளையாட வந்தார். கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய அவருடைய அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். இருப்பினும் அது போன்ற காயத்திற்கு மாற்று வீரர் தேவை என்று மைக்கேல் வாகனும் தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்த வரை மற்ற அணிகளின் கருத்தையும் பாருங்கள் என்று சொல்வேன்.

    ரிஷப் பண்ட் போன்றவர் காயத்தால் வெளியேறும் போது என்னவாகும் என்பதை ஸ்டோக்ஸ் கருத வேண்டும். நீங்கள் உங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதற்காக மற்றவர்கள் கருத்தை நகைச்சுவை என்று சொல்வது மரியாதையற்றது. பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் உங்களை கர்மா உடனடியாக அடித்துள்ளது.

    என்று அஸ்வின் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது.
    • ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது டெஸ்டில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்னே தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை குறிப்பாக முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தோற்றது.

    இந்த நிலையில் ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்து விட்டது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்திருந்தால் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி இருப்பார். ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அச்சமடைந்துவிட்டது.

    இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது. பயத்தினால் அதிரடியாக விளையாட முயன்று தோல்வி அடைந்தனர். ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு மிகப் பெரிய சவாலானதாக அமைந்தது.

    இவ்வாறு வாகன் கூறி உள்ளார்.

    மற்றொரு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தால் அது ஒரு கேலிக்கூத்தாக இருந்து இருக்கும். இந்த தொடரில் இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. இதனால் 2-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய தகுதியானது. 2-வது இன்னிங்சில் இந்தியா குவித்த ஸ்கோர் தகுதியானது. மேலும் கடைசி விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தியது மிகவும் பொருத்தமாக அமைந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சமீபத்திய ஆண்டுகளில் சில மூத்த வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளில், சில தொடர்களில் ஆடாமல் அவர்களே முன்வந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிகழ்வுகள் நடந்தன.
    • பணிச்சுமை என்று கூறி மிக முக்கிய போட்டிகளை தவற விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் லண்டன் ஓவலில் நடந்த பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய அணி முகமது சிராஜின் அபார பந்து வீச்சால் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிலிர்க்க வைத்தது.

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இரு ஜாம்பவான்கள் அடுத்தடுத்து விலகிய நிலையிலும், சுப்மன் கில் தலைமையிலான இளம் படை சாதித்து காட்டியிருக்கிறது. இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் நாசர் ஹூசைன், மைக்கேல் வாகன், அலஸ்டயர் குக் ஆகியோர் இந்த தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும், கிரேமி ஸ்வான், ஜோஸ் பட்லர் ஆகியோர் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று கூறியிருந்தனர். அவர்களின் கணிப்பை இந்திய வீரர்கள் சுக்கு நூறாக்கி விட்டனர். அது மட்டுமின்றி ரன்வேட்டையிலும் (சுப்மன் கில் 754 ரன்), விக்கெட் வீழ்த்தியதிலும் (முகமது சிராஜ் 23 விக்கெட்) நமது வீரர்களுக்கே முதலிடம்.

    பெரிய வீரர்கள் இல்லாததால் இப்போது இந்திய கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கரின் ஆதிக்கம் முழுமையாக தொடங்கி விட்டது. சமீபத்திய ஆண்டுகளில் சில மூத்த வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளில், சில தொடர்களில் ஆடாமல் அவர்களே முன்வந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிகழ்வுகள் நடந்தன. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை காரணம் காட்டி மூன்று டெஸ்டில் மட்டுமே விளையாடினார். இரு டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார்.

    ஆனால் பயிற்சியாளர் கம்பீரை பொறுத்தவரை, அணியில் சூப்பர் ஸ்டார் வீரர் கலாசாரத்துக்கு எதிரானவர். அதாவது எப்படிப்பட்ட நட்சத்திர வீரராக இருந்தாலும் சரி முதலில் அணியின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனிநபரின் விருப்பம் எல்லாம் 2-வது பட்சம் தான் என்பதில் உறுதியாக இருப்பவர். முன்னணி வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் தேர்ந்தெடுத்து விளையாடும் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் கம்பீரும், அகர்கரும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வருவதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த சிக்கலும் இருக்காது.

    'இது தொடர்பாக இந்திய அணியின் நிர்வாக கூட்டத்தில் அவ்வப்போது விவாதிக்கப்படுகிறது. ஒப்பந்த வீரர்கள் குறிப்பாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் அவர்கள் ஆடும் போட்டிகளை அவர்களே தேர்வு செய்வதற்கு இனி வரும் காலங்களில் அனுமதிக்கப்படாது என்ற செய்தி வீரர்களை சென்றடையும்' என பெயர் வெளியிட விரும்பாத மூத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதற்காக வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதை புறந்தள்ளிவிட்டதாக அர்த்தம் கிடையாது. வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றால் தளர்ந்து விடுவார்கள் அல்லது காயம் அடைய வாய்ப்பு உண்டு. அதனால் அவர்களுக்கு ஓய்வு அவசியம் தான். ஆனால் பணிச்சுமை என்று கூறி மிக முக்கிய போட்டிகளை தவற விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    • இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார்.
    • இலங்கையை சேர்ந்த முரளீதரன் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

    ஓவல்:

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் பும்ராவின் சாதனையை சமன் செய்தார். பும்ரா 2021-22 இங்கிலாந்தில் தொடரில் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருவரும் இருக்கிறார்கள்.

    இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார். அவர் 7-வது முறையாக 4 விக்கெட்டுக்கு மேல் (11 போட்டி) எடுத்துள்ளார்.

    இலங்கையை சேர்ந்த முரளீதரன் (6 டெஸ்ட்), பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸ் (10 போட்டி) ஆகியோர் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். இவர்களை சிராஜ் முந்தினார். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 5 தடவையும், இஷாந்த் சர்மா 4 முறையும் 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    சிராஜ் 3-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். 2023 ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டிலும், 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    • சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார்.
    • 2-வது டெஸ்டில் கில் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது.

    லண்டன்:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை கொண்ட அணி இங்கிலாந்தில் சாதித்து காட்டியது. தொடரை இழக்காமல் சமன் செய்தது பாராட்டுதலுக்குரியதாகும்.

    சுப்மன்கில் கேப்டனாக பொறுப்பேற்று முதல் தொடரிலேயே சாதித்து காட்டினார். மேலும் பேட்டிங்கிலும் அவர் அபாரமாக செயல்பட்டார். 5 டெஸ்டில் 754 ரன்கள் (10 இன்னிங்ஸ்) குவித்தார். சராசரி 75.40 ஆகும். இதில் 4 சதம் அடங்கும். அதிகபட்சமாக 269 ரன் குவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக கூறியதாவது:-

    ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக சுப்மன்கில்லை தேர்வு செய்ய தேர்வுக்குழு பரிசீலனை செய்யலாம். ரோகித் சர்மா, விராட் கோலி ஒரு நாள் போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் தேர்வுக் குழுவை பொறுத்தது.

    ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வுக்குழு விரும்பினால் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம். இதுவே சரியான நேரமாகும்.

    சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார். 2-வது டெஸ்டில் அவர் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது என்பதை அவர் அந்த டெஸ்டில் உறுதிப்படுத்த விரும்பினார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

    மும்பை:

    லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பான 5-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.

    கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு 10-க்கு10 மதிப்பெண் கொடுப்பேன். இந்திய அணியின் சூப்பர்மேன்கள் கலக்கி விட்டனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி.

    கங்குலி:-

    இந்திய அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

    சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் சிராஜ் இந்திய அணியை அவ்வளவு எளிதாக தோற்கவிடமாட்டார். ஓவல் டெஸ்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டனர்.

    வீராட் கோலி:-

    இந்திய அணியின் சிறந்த வெற்றி. சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதியும், தொடர் முயற்சியும் இந்த அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளது. அணிக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சிராஜுக்கு சிறப்பு பாராட்டு. அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனில் கும்ப்ளே:-

    இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. என்ன ஒரு அருமையான டெஸ்ட் தொடர். அற்புதமாக ஆடிய 2 அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டனர் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.

    புஜாரா:-

    வரலாற்று வெற்றி. இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரசியமாக சென்ற இந்த தொடரில் சிறப்பான முடிவு கிடைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப்போன்று சிறந்தது வேறு ஒன்றுமில்லை.

    ஹர்பஜன் சிங்:-

    முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசினார்கள். இந்திய அணிக்கு என்ன ஒரு சிறப்பான வெற்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ரகானே:-

    டெஸ்ட் கிரிக்கெட் இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. மிகவும் பரபரப்பான போட்டி. அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.

    • 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இந்நிலையில் இந்தியா அணி தொடரை சமன் செய்தது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை இழப்போம்.... ஆனால் நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்! சபாஷ் பாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.

    • 4-வது நாளில் ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள்.
    • நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும்.

    லண்டன்:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    கடைசி நாளன இன்று இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெடுகள் தேவையாக இருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

    இந்நிலையில் போட்டி நான்காவது நாள் முடிந்து இருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும் எனவும் நடுவர்கள் தவறு செய்து விட்டதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திங்கட்கிழமை வேலை ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க பெருமளவு பணத்தை செலவழித்து இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தது. அவர்களுக்கு ஆட்டத்தின் கிளைமாக்ஸ் 4-வது நாளிலே அரங்கேற அனுமதித்து இருக்க வேண்டும்.

    நான்காவது நாளில் இந்த போட்டி நடந்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றிக்கு தேவையான 35 ரன்கள் அடித்திருக்கலாம். ஆட்டம் மேலும் 42 முதல் 43 நிமிடம் வரை நடத்தலாம் என்ற விதி இருந்த போதும். ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

    நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும். இரண்டு அணிகளில் யாராவது ஒருவர் கூட நாங்கள் நாளை விளையாடுகிறோம் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. நடுவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு என்பதே கிடையாது. நேற்று ஆட்டம் நடைபெறாமல் இருந்தது நிச்சயம் அவமானம் தான்.

    என்று நாசர் உசேன் கூறியிருந்தார்.

    • போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
    • இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் (2-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்களும் இந்தியா 4 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசியிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது :

    உண்மையிலேயே இந்த கடைசி போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். இந்த போட்டியும் 5-ம் நாள் வரை வந்து மிகச் சிறப்பாக முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே களத்தில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த ஒட்டுமொத்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக அமைந்தது.

    போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொருவருமே இந்த தொடரில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

    அதிலும் குறிப்பாக போட்டியின் சூழல் கடினமாக இருந்த போதெல்லாம் தனித்தனியே வீரர்கள் அணியின் நலனுக்காக நின்று இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியாக இணைந்து நாங்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக உள்ளது.

    என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    • 5-வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
    • 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடர் சமமானது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கூட மிஸ் செய்யாமல் அனைத்து போட்டியிலும் சிராஜ் விளையாடி அசத்தியுள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 185.3 ஓவர்கள் (1113 பந்துகள்) வீசி 26 மெய்டனுடன் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.

    இந்நிலையில் சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன் என இங்கிலாந்து அணியின் பேட்டர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன். 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி, ஒவ்வொரு முறையும் 135kmph+ வேகத்தில் பந்து வீசினார். அவர் சிறந்தவர். இந்த வெற்றி அவருக்கு உரித்தானது.

    என ஹாரி ப்ரூக் கூறினார்.

    • 5-வது போட்டியின் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் சிராஜ் வென்றார்.
    • 5 டெஸ்ட் போட்டியிலும் முகமது சிராஜ் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

    இந்த போட்டியில் கடைசி நாளன இன்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்தியாவுக்கு 4 விக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சால் 4 விக்கெட்டை வீழ்த்திய இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் சிராஜ் வென்றார்.

    இந்நிலையில் இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

    ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    https://www.maalaimalar.com/news/sports/cricket/mohammed-siraj-is-a-real-warrior-he-gives-his-everything-for-india-joe-root-782980

    ×