என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிலவற்றை வெல்வோம், சிலவற்றை இழப்போம், ஆனால்.. வெற்றி குறித்து கம்பீர் நெகிழ்ச்சி பதிவு
- 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இந்தியா அணி தொடரை சமன் செய்தது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை இழப்போம்.... ஆனால் நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்! சபாஷ் பாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.






