என் மலர்
வழிபாடு
- 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள்.
- நாளை 8-ம் கால வேள்வி பூஜை, பேரொளி ஆராதனை நடக்கிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, கும்பாபிஷேக விழா நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோலகலமாக நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்திற்காக 79 குண்டங்களுடன் இதுவரை எந்த கோவிலிலும் இல்லாத அளவில் வேள்வி சாலை அமைக்கப்பட்டுள்ளது. 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 29-ந்தேதி முதல்கால வேள்வி பூஜை தொடங்கியது. இன்று 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும், காலை 10 மணிக்கு அவினாசியப்பர் துணை நிற்கும் அவினாசியப்பருக்கு துணை நிற்கும் தெய்வங்களான அரசமர வினாயகர், செல்வ வினாயகர், பாதிரியம்மன், வீரபத்திரர், உள்பிரகார கோஷ்ட தேவதைகள், தட்சிணாமூர்த்தி, பைரவர், செந்தில் ஆண்டவர், 63 - நாயன்மார்கள், பஞ்சலிங்கம், கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம், சனீஸ்வரர், வெளி பிரகார கோஷ்ட தேவதைகள், நைருதி வினாயகர், தண்டபாணி, விஷ்ணு துர்கை, சிவதுர்கை உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்தது. கும்பாபிஷேக பெருவிழாவும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.

நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி யும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி அவிநாசி, சேவூர், கருவலூர், பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- குரால்நத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது.
- தல விருட்சமாக ஆச்சா மரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
சேலம் மாவட்ட பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. திப்பம்பட்டி, அத்திப்பட்டி, குள்ளம்பட்டி, முத்தானூர், சூரியூர், குரால் நத்தம் உள்பட எட்டுப்பட்டி கிராம மக்களின் காவல் தெய்வமாக திகழும் இந்த பிடாரி அம்மன் பனமரத்துப்பட்டி ஏரிக்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மக்களை மட்டுமின்றி இந்த ஏரியையும் பிடாரி அம்மனே காவல் செய்வதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கை உள்ளது.
இக்கோவிலில் மூலவர் அம்மன் சிலை அருகே தல விருட்சமாக ஆச்சா மரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோவில் வளாகத்தில் கன்னிமார், முனியப்பன், கருப்பனார் என காவல் தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த தலத்திற்கு வந்தவுடன் நம் கண்ணில் படுவது ஆங்காங்கே நேர்த்திக்கடனாக வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்கள்தான். அவற்றில் சில தலைகீழாகவும் வைக்கப்பட்டிருந்தன.
தொலைந்து போன தங்கள் பொருட்கள் திரும்ப கிடைக்க வேண்டி சூலாயுதத்தை இந்தக் கோவிலில் நட்டு வைக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி சூலத்தை நட்டு வைப்பதால், அந்தப் பொருள் கிடைக்கும் அல்லது அதை எடுத்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது.
சூலாயுதத்தை தலைகீழாக நடுவதை 'ஈடுபோடுதல்' என்று கூறுகிறார்கள். இக்கோவிலில் ஈடு போட்டால் நிச்சயம் பொருள் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்தக் கோவில் தல விருட்சமான ஆச்சா மரத்திலும், அம்மன் தாலாட்டு நடைபெறும். கோவில் முன்புள்ள தொட்டில் பகுதியிலும் ஏராளமான மஞ்சள், தாலிக் கயிறுகளும், தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. திருமணத் தடை விலகி திருமணம் நடைபெற தாலிக்கயிறும், குழந்தைப் பேறு உண்டாக தொட்டில் கட்டியும் வழிபாடு செய்கிறார்கள்.
தல வரலாறு
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள், குடிநீர் தேவைக்காக பனமரத்துப்பட்டி ஏரியை உருவாக்கினார்கள். அதற்காக அங்கு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த மக்கள் அருகே உள்ள 8 ஊர்களில் குடியேறினர்.
அவர்களால் அமைக்கப்பட்டதே ஏரிக்கரையில் உள்ள பிடாரி அம்மன் திருத்தலம். இரவு நேரங்களில் இத்தல அம்மன், ஊரை வலம் வருவதாக கிராம மக்கள் நம்பு கின்றனர்.
இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலின் முத்தாய்ப்பான விழா என்றால் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருவிழாதான்.
அமைவிடம்
சேலத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பனமரத்துப்பட்டியை அடுத்து குரால்நத்தம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுகின்றன.

காவு சோறு சாப்பிடும் கருப்பனார்
ஐப்பசி மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை பிடாரி அம்மன் கோவில் பூச்சாட்டுதல் நடைபெற்று, அடுத்த 15-வது நாள் திருவிழா நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக விவசாயிகள், தாங்கள் விளைவித்த நிலக்கடலை, மிளகாய், அவரைக்காய், வாழைப்பழம், அரளி உள்ளிட்டவை சக்தி அழைப்பு நிகழ்ச்சியில் சூறையிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த விழாவின் போது, வேண்டுதல் நிறைவேறிய பலர் ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இவ்விழாவில் முத்தாய்ப்பாக கருப்பனாருக்கு ரத்த சோறு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் வெளியேறிவிடுவர். பின்னர் கோவில் பூசாரி பொங்கல் வைத்து, கிடா வெட்டி அதன் ரத்தத்தை சோற்றில் கலந்து கருப்பனார் சுவாமிக்கு படையல் போடுவார். படையல் சோற்றை புதிய மண் சட்டியில் எடுத்துச் சென்று, ஆச்சா மரத்தின் மேலே வீசி விட்டு, பூசாரி திரும்பி பார்க்காமல் வந்து விடுவது வழக்கம் இருக்கிறது. ஆச்சா மரத்தில் இருக்கும் கருப்பனார் சாமி ரத்தம் கலந்த காவு சோற்றை பிடித்துக்கொள்வதாக ஐதீகம்.
- மகாகூட தூண் கல்வெட்டு, சமஸ்கிருதம் மற்றும் கன்னட எழுத்து முறையில் உள்ளது.
- மகாகுடா' என்பதற்கு 'பெரிய குழு' என்று பொருள்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது, மகாகூடம் என்ற கிராமம். இங்கு கி.பி. 6 மற்றும் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கியமான சைவ சமய வழிபாட்டுத் தலங்கள் அமையப் பெற்றுள்ளன. இதனை 'மகாகூடக் கோவில்கள் என்று அழைக்கிறார்கள்.
பாதாமி நகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த இந்த வழிபாட்டு தலத்தை, சாளுக்கிய வம்சத்தின் ஆரம்ப கால மன்னர்கள் கட்டியதாக கல்வெட்டு சான்றுகள் குறிட்பிடுகின்றன.
இந்த கோவில் வளாகத்தில் காணப்படும் இரண்டு கல்வெட்டுக்கள், முக்கியத்துவம்வாய்ந்ததாக உள்ளன. கி.பி. 595-ம் ஆண்டுக்கும் கி.பி.602-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 'மகாகூட தூண் கல்வெட்டு, சமஸ்கிருதம் மற்றும் கன்னடஎழுத்து முறையில் உள்ளது.

கி.பி.696-733-க்கு இடைப்பட்ட கல்வெட்டு, விஜயாதித்தன் என்ற மன்னனின் காதலியைப் பற்றி கன்னட மொழியில் காணப்படுகிறது. 'மகாகுடா' என்பதற்கு 'பெரிய குழு' என்று பொருள். இந்த வளாகத்தில் ஏராளமான சிவன் கோவில்கள் இருப்பதால் இந்த இடத்திற்கு இந்த பெயர் வழங்கப்பட்டது. மகாகுடா என்பதே தற்போது 'மகாகூடா' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவாலயங்களில்
மகாகுடேசுவரர் கோவில், மல்லிகார்ச்சுனர் கோவில் ஆகியவை மிகப்பெரியவை. இவை திராவிட பாணியில் கட்டப்பட்ட ஆலயங்களாகும்.
இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் மன்னன் ஒருவன் மகாகுடேசுவரர் கோவிலுக்கு மாணிக்கங்களையும், வெள்ளிக் குடையையும் வழங்கியிருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மகாகூட ஆலயங்களில் மல்லிகார்ச்சுனர் கோவில் முக்கியமானது.

இந்த ஆலயத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். லிங்கம் மகா குடேசுவரர் கோவிலில் வளைந்த கோபுரத்தின் மேல் சிவலிங்கம் உள்ளது. முன் பக்கத்தில் உள்ள நந்தி கோவிலைப் போலவே, இந்த பிரதான கோவிலைச்சுற்றிலும், ஏராளமான சிறிய கோவில்கள் காணப்படுகின்றன.
இவ்வாலய சுவர்கள், சிவபெருமானின் அற்புதமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த இங்குள்ள பல ஆலயங்கள், முதலாம் புலிகேசி மன்னன் சாளுக்கியரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இயற்கை மலை நீரூற்று, விஷ்ணு புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு 'விஷ்ணுவின் தாமரைக்குளம்' என்று பெயர். பாபவிநாச தீர்த்தம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

இந்த தீர்த்தக் குளத்தைச் சுற்றிலும் 12-க்கும் அதிகமாக சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. இந்த தீர்த்தக்குளத்தின் மையத்தில் ஒரு சிறிய சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதிக்குள், ஒரு சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இந்த சிவலிங்கமானது பஞ்சமுக லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த லிங்கத்தின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களும், மேல் நோக்கிய பகுதியில் ஒரு முகமும் அமைந்திருப்பதால், இதற்கு 'பஞ்சமுக லிங்கம்' என்று பெயர்.
- ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன.
- மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது.
மகாபாரத யுத்ததின் போது, கர்ணன் தன் நண்பன் துரியோதனனின், பக்கம் நின்று போரிட்டான். ஆனால் கர்ணனை, பாண்டவர்களின் பக்கம் வந்து விடும்படி கண்ணன் உள்பட பலரும் அழைத்தனர். ஆனாலும் அவன் செல்லவில்லை.
ஒரு கட்டத்தில், தான் துரியோதனனின் பக்கம் நிற்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற எண்ணம் அவன் ஆழ்மனதை துளைத்தது. தன்னுடைய இறுதி கட்டத்தில், நெஞ்சில் அம்பு பாய்ந்து, தன் முன் கிருஷ்ணன் விஸ்வரூபமாக காட்சி தருகையில், தன்னுடைய ஆழ்மனதை துளைத்த கேள்விகளை, கண்ணனிடமே கேட்டான், கர்ணன்.
`கண்ணா.. என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறைதவறிப் பிறந்த குழந்தை என்ற அவப்பெயருக்கு ஆளானேன். இது என் தவறா?. நான் சத்ரியன் அல்ல என்று கூறி, துரோணாச்சாரியார் எனக்கு கல்வி கற்றுத்தரவில்லை. இது என் தவறா? பரசுராமர் எனக்கு அனைத்தும் கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் பிராமணன் இல்லை. சத்ரியன் என்று தெரியவந்ததும், நான் படித்த அனைத்தும் மறந்து போகும் என்று சாபமிட்டுவிட்டார். இது என் தவறா?
ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரவுபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டேன். என் தாயாரான குந்தி கூட, இறுதியில் தன்னுடைய மற்ற மகன்களை காப்பாற்றும் நோக்கத்தில்தான் என்னைத்தேடி வந்தார்.
இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் நான் வஞ்சிக்கப்பட்டபோது, துரியோதனன் ஒருவன்தான் என்னிடம் அன்பு காட்டினான். அவனால் தான் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது. அதனால் அவன் பக்கம் நான் நின்றதில் என்ன தவறு இருக்கிறது?" என்றான், கர்ணன்.
அதற்கு பதில் அளித்த கிருஷ்ணர், `கர்ணா நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதில் இருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலைக் கேட்டு வளர்ந்தாய். நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல்களுக்கிடையே வளர்ந்தேன்.
நடக்க ஆரம்பிக்கும் முன்பே, என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை, பயிற்சி இல்லை, ஆனால் எல்லோரும் இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நான்தான் காரணம் என்கிறார்கள்.
நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது, நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில்தான், ரிஷி சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்தேன்.
நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ, விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை, கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.
ஜராசந்த்திடம் இருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையில் இருந்து தூரமாக என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டி இருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை.
துரியோதனனுடன் போரிட்ட நீ வெற்றிபெற்றிருந்தால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை, கவுரவம் கிடைத்திருக்கும். ஆனால் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து யுத்தம் செய்ததால், எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.
கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது. எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியம்.
நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள், நம்மை தவறான பாதையில் செலுத்துவதற்கான உரிமையை பெற்றுத் தருவதில்லை. நம் வாழ்க்கையில் கரடுமுரடான பாதை இருக்கலாம். அவற்றை காயப்படமல் கடப்பது பாதுகைகளால் அல்ல. நாம் கவனமாக எடுத்து வைக்கும் அடிகளால் மட்டுமே.' என்றார். கண்ணன்.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 18 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி காலை 11.24 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: சித்திரை பின்னிரவு 2.25 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஒழுக்கம்
ரிஷபம்-உற்சாகம்
மிதுனம்-உவகை
கடகம்-ஜெயம்
சிம்மம்-வரவு
கன்னி-செலவு
துலாம்- இரக்கம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- சலனம்
மகரம்-வெற்றி
கும்பம்-பயிற்சி
மீனம்-கடமை
- மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
- அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும்.
இன்று நம்மில் பலர், பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, குர்ஆன் ஓதுவது, ஹஜ்ஜை நிறைவேற்றுவது போன்ற கடமைகளை செய்தாலே போதும், சுவனம் சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், சக மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து, அன்பு, நேர்மை, நீதி ஆகிய நற்பண்புகளை வளர்த்து, போட்டி, பொறாமை, புறம், நம்பிக்கை துரோகம், சூழ்ச்சி போன்ற அல்லாஹ் வெறுக்கக்கூடிய செயல்களை வெறுத்து வாழ்ந்து, தங்கள் குழந்தைகளுக்கும் அதனையே கற்றுக்கொடுப்பதே சிறந்தது.
மற்ற மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறைக்கு அல்லாஹ்விடம் கேள்வி, கணக்கு கடுமையாக இருக்கும். ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் `வறியவர் யார்?' என்று கேட்கப்பட்டபோது, `இம்மையில் மூட்டை, மூட்டையாக நன்மைகளை சேர்த்து விசாரணைக்காக ஒருவர் வருவார். அவருடைய நன்மைகளில் இருந்து அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்கப்படும்.
அதாவது இம்மையில் மற்றவர்களை திட்டி இருப்பார், அவதூறு கூறியிருப்பார், உரிமைகளைப் பறித்திருப்பார், அல்லது அநீதம் இழைத்திருப்பார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி கொடுக்க நன்மைகள் எதுவும் இல்லை எனும் நிலை வரும்போது அவர்களின் பாவங்கள் அந்த நபர் மீது சுமத்தப்படும். அவரது ஈடேற்றத்திற்கு ஒன்றுமே இருக்காது. இறுதியில் அவர் நரகில் தூக்கி வீசப்படுவார்', இவர்தான் வறியவர் என்று கூறினார்கள்.
அண்டை வீட்டினர் அந்நியராக இருந்தாலும் அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்லும் மார்க்கமாக இருக்கும் இஸ்லாம், அநீதி இழைக்கும் மக்களைப் பற்றியும், அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நிலைமை பற்றியும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'நான் அநீதியை என் மீது ஹராமாக்கிக் கொண்டேன். எனவே நீங்களும் உங்களுக்குள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும். அப்பொழுது ஈடேற்றம் பெறுவதற்கான வழியே இருக்காது'.
ஒருவரை ஆளுநராக நியமித்து அனுப்பும் பொழுது, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி இவ்வாறு அறிவுரை பகர்வார்கள், 'அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவிற்கும், இறைவனுக்கும் எந்த வித தடையும் இருப்பதில்லை'.
'அநீதி இழைக்கப்பட்டவர் பாவியாக இருந்தாலும் அவரின் துஆ அவசியம் ஏற்கப்படும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள், 'எவருடைய நாவின் தீங்கிலிருந்தும், கரங்களின் தீங்கிலிருந்தும் பிற மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே முஸ்லிம்'. நாம் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர, நம்மால் மற்றவர்களுக்கு தொந்தரவோ, கெடுதலோ, அநியாயமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அநியாயம் என்று தெரிந்தும், அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகளே.
`முஃமின்கள் யார்' என்று கேட்கப்பட்டது. `யாரைப் பார்த்து பிறர் பயமற்று இருக்கிறார்களோ அவர்கள் தான் முஃமின்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இன்று போகிற போக்கில் தங்கள் சொல்லாலும், செயலாலும் பிறருக்கு துன்பத்தைத் தரக்கூடிய மக்களை நாம் பார்க்கிறோம்.
சரி, இறைவன் வெறுக்கக்கூடிய காரியங்களில் இருந்து நம்மை முழுவதுமாக விலக்கிக் கொள்வது எப்படி?
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே என்றால், நிச்சயம் நமது செயல்கள் எல்லாம் நற்செயல்களே.
இரண்டாவதாக நம்முடைய வணக்க வழிபாடுகளில் உள்ளத்தூய்மையும், இறைவன் எனக்கு மிகச் சமீபமாக இருந்து என்னுடைய அத்தனை செயல்களையும் உற்று நோக்குகிறான் என்ற அச்சமும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட அச்சம் என்றால், இறைவனைக் குறித்தான பயத்தில் தானாகவே கண்ணீர் வர வேண்டும். தொழுகையில் மட்டுமல்ல, பகலிலும், இரவிலும், குர் ஆன் ஓதும் பொழுதும், ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாலும், சும்மா இருந்தாலும் உள்ளச்சத்ததோடு உங்களைப் படைத்த இறைவனை நினைவு கூருங்கள்.
இறைவன் நம்முடைய வணக்க வழிபாடுகளையும், மற்ற நற்குணங்களையும் பொருந்திக் கொள்வானாக. நம்முடைய பாவங்களையும் மன்னித்து, குடும்பம், குடும்பமாக சுவனத்தில் நுழையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி, அவனின் திருமுகத்தைப் பார்க்கக் கூடிய பெரும் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!
- கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதை முதலாவது உணர வேண்டும்.
- கர்த்தரிடம் திரும்புவதற்கு ஏதுவாக இயேசுவை பிரசங்கிக்க வேண்டும்.
கிறிஸ்துவானவர் பிறப்பதற்கு 1800 வருடங்களுக்கு முன் எகிப்தின் மன்னனாக பார்வோன் இருந்தான். இவன் யோசேப்பிடம், 'எகிப்து தேசத்தின் நன்மையை தருவேன், எகிப்து தேசம் எங்கும் உள்ள நன்மை உங்களுடையது. எனவே தகப்பனையும், சகோதரர்களையும் குடும்பத்தோடு எகிப்தில் குடியேற வரச்சொல்' என்று சொன்னான்.
இஸ்ரவேலையும், அவன் மக்களையும் (66 பேர் மற்றும் அவரின் குடும்பம்) கானான் தேசத்தில் இருந்து அழைத்துவர எகிப்தில் இருந்து வண்டிகளை அனுப்ப ஏற்பாடு செய்தான் (ஆதி:45:16-28). அந்நாட்களில் இஸ்ரவேலருடைய வாகனங்கள் கழுதைகள் தான்.
மகன் யோசேப்பு தனக்காக சொல்லி அனுப்பிய வார்த்தைகளை கேட்டு, அவன் அனுப்பின வண்டிகளையும் பார்த்ததும் இஸ்ரவேல் மகிழ்ந்தான். பெயர்சபாவுக்கு போய் கர்த்தரை தொழுது கொண்டு கர்த்தரிடம் தரிசனம் பெற்று, தன்னை திடப்படுத்திக் கொண்டபின் எகிப்துக்கு புறப்பட்டான் (ஆதியாகமம் 46:1-27).
350 வருடங்கள் எகிப்தில் வசித்த பின், அவனுடைய குமாரரில் லேவி குடும்பத்தில் பிறந்தவன் தான் மோசே. தன்னுடைய எண்பதாவது வயதில், மோசே 6 லட்சம் புருஷர் மற்றும் குடும்பங்களை கானான் தேசத்திற்கு 40 வருடங்களாக கர்த்தரின் கிருபையால் வழிநடத்திச்சென்றான் (யாத்திராகமம் 2:1-10).
கி.மு. 1800-ம் ஆண்டு யோசேப்பை சந்தித்த இஸ்ரவேலின் மகிழ்ச்சிக்கு எல்லை தான் உண்டோ. மரித்துப்போன மகன் என்று எண்ணின யோசேப்பை உயிரோடு எகிப்தின் அதிகாரியாக பார்க்கும்போது, எப்படி மகிழ்ந்து இருப்பான். பாவத்திற்கு மரித்து விடாமல், நாம் கிறிஸ்துவின் நெருக்கம் கிடைத்து சேரும்போது, தகப்பனாகிய அவர் அடையும் மகிழ்ச்சி பெரிது தானே. (ஆதியாகமம் 46:29,30).
கிறிஸ்துவுக்கு முன் 1450-ம் ஆண்டில் எகிப்து நாட்டில் நதியின் ஓரத்திலே நாணல் பெட்டிக்குள் இருந்த 3 மாத குழந்தையான மோசேயை கண்ட பார்வோனுடைய மகள், மோசேயை தன்னுடைய மகனாகவே எடுத்துக்கொண்டாள். எபிரேய பிள்ளை என தெரிந்தும் தைரியமாக இந்த செயலை செய்தாள்.
கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க சித்தம் கொண்டு, அவனை தேர்ந்தெடுத்து பக்குவப்படுத்தி ஆயத்தப்படுத்தினார். பார்வோனிடம் செல்லவேண்டிய வழிமுறைகளை கர்த்தர் அவனுக்கு கற்றுக்கொடுத்தார். அவனை சிறு குழந்தையாக இருக்கும்போதே பிரித்தெடுக்க பார்வோனுடைய குமாரத்தியின் இரக்க குணம் வழி வகுத்தது (யாத்திராகமம் 2:6).
'நீங்கள் போகும் வழியில் சண்டை பண்ணிக் கொள்ளாதீர்கள்", என்று யோசேப்பு தன் சகோதரருக்கு சொல்லி அனுப்பினான். சமாதானமாக வாழ நாமும் நம் சகோதரரிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் (ஆதியாகமம் 45:24).
கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் வருடத்தில் சகரியாவின் வீட்டில் மரியாள் எலிசபெத்தை வாழ்த்தும் போது பரிசுத்த ஆவியானவர், எலிசபெத்தை அபிஷேகம் பண்ணினார். அச்சமயம் வாழ்த்துதல் சத்தம் கேட்டு எலிசபெத்தின் வயிற்றிலிருந்த (யோவான்ஸ்நானன்) குழந்தை களிப்பாய் துள்ளிற்று. பரிசுத்த ஆவியானவரை நாம் நம்மில் வாசம் செய்ய அனுமதித்தால் நமக்கு களிப்பு உண்டாகும் (லூக்கா 1:42-44).
கிறிஸ்துவுக்குப் பின் முப்பத்து ஏழாம் வருடத்தில் தமஸ்குவில் உள்ள ஜெப ஆலயங்களில் கர்த்தராகிய இயேசுவை பின்பற்றின சீடர்களை கொலை செய்ய புறப்பட்டு (அப்போஸ்தலர் 8:3,9:1,2) வழியிலே, கர்த்தரால் சந்திக்கப்பட்டான் சவுல். பின்னர் பார்வை இழந்து (அப்போஸ்தலர் 9:3-9), மூன்று நாட்கள் கழித்து கர்த்தரின் கட்டளையின் பெயரில் அனனியா போய் ஜெபிக்க, பார்வை அடைந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டான்.
ஞானஸ்நானம் பெற்ற பின் சவுல், பவுலாக மாறினான். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நம்மில் எத்தனை பேர் விசுவாச வீரர்களாக நம் இறுதி மூச்சு வரை கர்த்தருக்காக வாழப்போகிறோம்? (அப்போஸ்தலர் 9:10-18).
கிறிஸ்துவின் வருகை என்பதே நம்பிக்கை விசுவாசம், மகிழ்ச்சி, இரக்கம், சமாதானம் இவைகளை முழு உலகத்திற்கும் கொண்டு செல்வதுதான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.
கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதை முதலாவது உணர வேண்டும். சுவிசேஷம் நம்மிடம் கேட்பவர்கள் விசுவாசித்து கர்த்தரிடம் திரும்புவதற்கு ஏதுவாக கர்த்தராகிய இயேசுவை பிரசங்கிக்க வேண்டும். கர்த்தரிடத்தில் மன நிர்ணயமாய் நிலைத்து இருக்கும் படி எல்லாருக்கும் புத்தி சொல்ல வேண்டும். திருச்சபையில் இருந்து ஊழியர்களை சுவிசேஷம் அறிவிக்க அனுப்ப வேண்டும்.
அப்போதுதான், `என் ஆவி என் ரட்சகராகிய தேவனில் களிகூறுகிறது', என்று மரியாள் பாடினது போல நாமும் நற்செய்தியை கொண்டாட முடியும்.
- தன்நிகர் இல்லாதவர் என்ற பெருமையைக் கொண்டவர் ஆஞ்சநேயர்.
- ராமநாமத்தை யார் உச்சரித்தாலும் ஆஞ்சநேயர் கேட்டு மகிழ்வார்.
ஆலயத் தோற்றம்
ராமநாமத்தை பக்தியோடு யார் உச்சரித்தாலும், அவர்களின் அருகில் அமர்ந்து ஆஞ்சநேயர் கேட்டு மகிழ்வார் என்பது ஐதீகம். ஞானம், பக்தி, வீரம் ஆகிய மூன்றிலும் தன்நிகர் இல்லாதவர் என்ற பெருமையைக் கொண்டவர் ஆஞ்சநேயர். தலை சிறந்த ராம பக்தனான இவா், தன்னை மனப்பூர்வமாக வழிபடுபவர்களை உடனிருந்து காப்பார்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில்களில் ஆஞ்சநேயர், பொதுவாக பக்த ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் போன்ற திருக்கோலங்களில் காட்சி தருவார்.
செங்கல்பட்டில் `கணையாழி ஆஞ்சநேயர்' என்ற பெயரிலும், காஞ்சியில் `சதுர்புஜ ஆஞ்சநேயர்' என்ற பெயரிலும் கோவில் கொண்டு அருளாசி வழங்குகிறார். அந்த வகையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கு இடையில் அமைந்திருக்கிறது, மேல்பெருமாள்சேரி என்ற கிராமம். இங்குள்ள ஆஞ்சநேயர் `பக்த ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர்களைக் காத்தருள்கிறார்.
இவ்வாலய கருவறையில் இருக்கும் பக்த ஆஞ்சநேயர், தனக்கு எதிரே இருக்கும் ராமபிரானின் பாதத்தை தரிசித்த நிலையில் நின்று கிழக்கு திசை நோக்கி அருள்மழை பொழிகிறார். இந்த சிறிய கோவிலுக்கு வெளிப்புறத்தில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் 27 அடி உயரத்தில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம் தந்து காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

இந்த ஆலயத்தின் கருவறையின் வெளிப்புறத்தில் விநாயகப் பெருமான் `நீதி வழங்கும் விநாயகர்' என்ற திருநாமம் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த திருக்கோவிலில் தட்சிணாமூர்த்தி தம்பதி சமேதரராய் தெற்கு திசையில் அமர்ந்து அருள்புரிவது தனிப்பெரும் சிறப்பாகும். யோக ஆஞ்சநேயர் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
யோகத்தினால் தன்னையும், பிறரையும் தன்வசப்படுத்த முடியும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்த யோக ஆஞ்சநேயராக இங்கே எழுந்தருளியுள்ளார். வாழ்வில் வெற்றிபெற குருவின் அருளாசி ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை உணர்த்த, குரு பகவானின் பின்புறம் இவர் தியானத்தில் மூழ்கியபடி இருக்கிறார்.
இவ்வாலயத்தின் தல விருட்சம், அரசமரம் ஆகும். கருவறையின் முன்பாக உள்ள மண்டபத்தின் முகப்பில், சங்கு, சக்கரமும், நடுவில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரின் சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. சனீஸ்வரரால் விநாயகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரை மட்டும் பிடிக்க இயலவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தின் ஒரு பக்கத்தில் ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர் ஆகிய மூவரும் நின்ற திருக் கோலத்தில் இருக்க, அவர்களை வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் இருக்கும் சுதைச்சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கருவறை விமானத்தின் மூன்று புறங்களிலும் ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் சுதைச்சிற்பமாக காட்சி அளிக்கிறார்.

மிதக்கும் கற்கள்
இந்த கோவிலில் ராமேசுவரத்தில் உள்ளது போலவே மிதக்கும் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக கல்லானது தண்ணீரில் போட்டால் மூழ்கும் தன்மை உடையவை. ஆனால் இங்கே காணப்படும் மிகுந்த எடையுடைய பெரிய கற்களை, நீரில் போட்டால் மேலே வந்து தண்ணீரில் மிதக்கின்றன. இத்தகைய மிதக்கும் கற்களைக் கொண்டுதான், ஆஞ்சநேயர் தனது வானரப்படையினரோடு ராமர் பாலத்தைக் கட்டி முடித்தார் என்பதை ராமாயணக் காவியம் எடுத்துரைக்கிறது.
இவ்வாலயத்தில் வருடந்தோறும் மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கும் இடையில் மேல்பெருமாள்சேரி கிராமம் அமைந்துள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து ஷேர்ஆட்டோக்கள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த வழியாகச் செல்லுகின்றன.
- கலியுகத்தில் ராம நாமத்தின் சிறப்பை தியாகராஜ சுவாமிகள் வெளிப்படுத்தினார்.
- காக்கர் லா வம்சத்தில் ராம பிரம்மம் என்ற மகான் பிறந்தார்.
`நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென்
றிரண்டெழுத்தினால்'
கம்பர் இவ்வாறு ராமனின் பெருமையை, ராம நாமத்தின் சிறப்பினைக் கூறுகிறார். கலியுகத்தில் ராம நாமத்தின் சிறப்பை, மும்முர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் எனப்படும் தியாகராஜ சுவாமிகள் வெளிப்படுத்தினார்.
ஒரு சமயம் ஒரு தீட்சிதர், தியாகராஜ சுவாமிகளை பார்த்து `பஜனை, நாத, உபாசனை சாமானியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அந்தணர்கள் அனைவரும் யாகங்களும், பூஜைகளும் செய்துதான் மோட்சத்தை அடைய வேண்டும்' என்று கூறினார்.
அதைக் கேட்ட தியாக பிரம்மமோ நாம சங்கீர்த்தனமே மோட்சத்தை தரும் என்ற வகையில், `யக்ஞாதுலு ஸுகமனு வாரிகி ஸமுலக்ஞானுலு கலரா-ஓ மனஸா' என்று கூறினார். அதாவது, `ராம பஜனையை தவிர்த்து விட்டு, யாகம் முதலியவைகளே சிறந்ததென்று சொல்கிறவர்களுக்கு சமமான அஞ்ஞானிகளும் உலகில் உண்டோ' என்பது இதன் பொருள்.

தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த இல்லம்
தியாகராஜர் அவதாரம்
ஒரு சமயம் ஆந்திர தேசத்தில் இருந்து பல குடும்பங்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தன. அந்த குடும்பத்தில் காக்கர் லா வம்சத்தில் ராம பிரம்மம் என்ற மகான் பிறந்தார். அவர் சிறந்த ஞானியாகவும், வைராக்கியம் மற்றும் ராம பக்தி உள்ளவராகவும் திகழ்ந்தார். இவர் பாகவத சம்பிரதாயத்தில் விருப்பம் உள்ளவராக திகழ்ந்த ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சுவாமிகள் என்ற பெரிய மகானிடம், ராம நாம உபதேசம் பெற்று, தாரக நாமத்தை ஜெபம் செய்து வந்தார்.
ராம பிரம்மத்திற்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன. மூத்தவன் ஜப்பியேசன். மூன்றாவது குழந்தையான தியாகராஜர், 1767-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி, சர்வஜித் வருடம் சித்திரை மாதம் பூச நட்சத்திரம் கடக ராசியில் அவதரித்தார். நடுவில் உள்ள பிள்ளையை பற்றிய தகவல் இல்லை. தியாகராஜருக்கு அவரது அன்னை, புரந்தரதாசரின் கீர்த்தனங்களை சொல்லிக் கொடுத்தார். மகான் தியாகராஜர் வேதாந்த சாஸ்திரத்திலும், வியாகரணத் திலும் பண்டிதராக திகழ்ந்தார்.
மண வாழ்க்கை
தியாக பிரம்மம் தன் தகப்பனார், தாயார் சொல்படி பார்வதி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில வருடத்தில் பார்வதி அம்மாள் கடும் நோய்க்கு ஆளானார். அந்த நேரத்தில் மனைவி இறந்து விடுவாள் என்பதை அறிந்துகொண்ட தியாக பிரம்மம், தன் மனைவியின் இறப்புக்குப் பின் சன்னியாசம் பெற்றுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்.
ஆனால் அவரது எண்ணத்தை அறிந்த பார்வதி அம்மாள், "நான் விரைவில் இறந்துவிடுவேன். தங்களை ஒரு வால்மீகிபோல் பார்க்கிறேன். நான் உங்களுடன் வாழ்ந்தது ஐந்து வருட காலமே. தாங்கள் தனியாக இருக்க வேண்டாம். சன்னியாசியாக வேண்டாம். என் சகோதரி கமலாம்பாளை திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பார்வதி அம்மாள் இறந்த பிறகு அவரது சகோதரியான கமலாம்பாளை, தியாக பிரம்மம் திருமணம் செய்து கொண்டார்.
ராமர் தரிசனம்
தியாக பிரம்மம், ராமபிரான் மீது பல கீர்த்தனைகள் பாடி ஆனந்தமாக இருந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தர் என்ற ஒரு மகா சன்னியாசி, தியாக பிரம்மத்தை தேடி வந்தார். அவரை தன் இல்லத்திலேயே உணவருந்தும்படி தியாக பிரம்மம் வேண்டிக் கொண்டார். சன்னியாசியும் அதற்கு ஒப்புக்கொண்டு `தங்களுக்கு இவ்வளவு ராம பக்தி இருக்கிறதே, ராமபிரானின் மந்திரம் உபதேசம் ஏதாவது தங்களுக்கு உள்ளதா?" எனக் கேட்டார்.
அதற்கு தியாகராஜர், `என் தகப்பனாரிடம் நான் பெற்ற ராம நாம ஜபம் தவிர, வேறு மந்திர உபதேசம் என்று இதுவரை யாரும் எனக்கு செய்யவில்லை' என்றார். அதற்கு சன்னியாசி `ராம தரிசனம் செய்யக்கூடிய ஒரு அற்புதமான 'ராம ஷடாட்சரி' மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன்" என கூறி, தியாக பிரம்மத்திற்கு மந்திர உபதேசம் செய்து வைத்தார்.
பின்னர், "இதை பக்தி சிரத்தையுடன் 96 கோடி முறை ஜெபம் செய். அப்போது உனக்கு ராம தரிசனம் கிட்டும்' எனக் கூறி சென்றுவிட்டார்.
தியாகராஜர், ராம ஷடாட்சரி மந்திரத்தை தினமும் பல லட்சங்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் 'இவ்வளவு ராம நாமத்தை ஜெபித்தும் ராம தரிசனம் கிடைக்கவில்லையே' என வருந்தினார். அப்போதுதான் அவருக்கு, 96 கோடி ஜபம் முடிந்திருந்தது. ஆனால் தியாக பிரம்மம் இதை அறியவில்லை. அன்று இரவு அவரது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்க்கையில், ராம -லட்சுமணர் தரிசனம் கிடைத்தது.
உள்ளம் சிலிர்க்க பக்தி பரவசமானார். ராமபிரான் அவரிடம் 'என்ன வரம் வேண்டும்' என கேட்க, 'இதுவரை நீ செய்த அனுக்கிரகமே பெரியது. அதற்கே நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை' எனக் கூறி 'வராலாந்து கொம்மனி நாயந்து வஞ்சனஸேய நியாயமா, ஸுராஸுரவினுத ராம நாமன ஸுஸுபக்தினி கோரி யுண்டகனனு' என்னும் கீர்த்தனையைப் பாடினார்.
இப்படி தன் வாழ்நாளில் மூன்று முறை தியாகராஜர், ராமபிரானின் தரிசனத்தைப் பெற்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஸ்ரீராமபிரான், தியாகராஜரின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இவர் எவ்வளவோ மந்திர சித்திகள் பெற்றும், கடைசிவரை உஞ்சவிருத்தி மூலமாகவே வாழ்க்கை நடத்தி வந்தார். ராம நாமத்தை பாடியபடி தெருக்களில் நடந்து செல்வார். அப்போது மற்றவர்கள் கொடுக்கும் அரிசியை வாங்கிக்கொள்வார். பணம், பொன், பொருள் கொடுத்தால் அதை ஏற்க மாட்டார்.

ஜீவசமாதி
தியாக பிரம்மம் ராம பக்தியில் திளைத்து வாழ்ந்த காலத்தில், அவரது இறுதி முடிவை அவர் அறிந்தார். அப்போது ராமன் அவர் கனவில் வந்து, சன்னியாசம் ஏற்றுக்கொள்ளச் சொன்னதாக சொல்கிறார்கள். தியாகராஜர் ஒரு ஏகாதசி அன்று அனைவரையும் கூப்பிட்டு "இன்னும் பத்து நாட்களில் நான் ஜீவசமாதி அடையப்போகிறேன்" என்றார்.
இவருக்கு பரமஹம்சர் நந்தேந்திர சுவாமிகள் என்பவர், சன்னியாச தீட்சை அளித்தார். `நாத ப்ரம்மானந்தர்' என்ற பெயரையும் தியாகராஜருக்கு சூட்டினார். 6.1.1847 அன்று புஷ்ய பகுள பஞ்சமி நாளில், தியாக பிரம்மம் தன் சிரசில் கபாலம் வெடித்து ஜீவசமாதி அடைந்தார். கலியுகத்தில் கபால மோட்சம் அடைந்தவர்கள், மிக மிக அரிது. இவர், "நான் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, என் பெருமையை உலகம் அறியும்" என்று கூறி மறைந்தார்.
அதன்படி 1907-ம் ஆண்டு முதல், தியாகராஜ ஆராதனை விழா சிறப்பாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். இவர் ஜீவ சமாதி அடைந்த தினத்தை ஆராதனையாக வருடா வருடம் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். திருவையாறில் இன்றும் இவரது ஆராதனை விழா அன்று, ஏராளமான சங்கீத வித்வான்கள் கூடி, பாடல்கள் பாடி, பலவிதமான இசைக் கருவிகளுடன் கர்நாடக சங்கீதத்தை இசைத்து ஆனந்தமாக கொண்டாடி வருகிறார்கள்.
வால்மீகி முனிவரே, தியாகராஜராக அவதரித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. வால்மீகி முனிவர் 2,400 சுலோகங்களில் ராமாயணத்தை இயற்றினார். அதே போல் தியாகராஜரும், 2,400 கீர்த்தனைகளில் ராமாயணத்தை பாடியிருப்பதாக கூறப்படுகிறது. தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி, இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர்.
- ஞானத்திலும் நற்பண்பிலும் நினைவாற்றலிலும் தலைசிறந்தவர்.
- நல்ல குணங்கள் அவருக்கு அழகூட்டும் அணிகலன்களாக இருந்தன.
கூரேசர் எனப்படும் கூரத்தாழ்வார், காஞ்சிக்கு வடமேற்கே சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ள கூரம் என்னும் ஊரில், ஹாரீதகோத்ரம், வடமான் குலத்தைச் சேர்ந்த அனந்தர், பெருந்தேவி நாயகி தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், தைத்திங்கள், அஸ்த நட்சத்திரம், தேய்பிறை, பஞ்சமி திதி, வியாழனன்று அவதரித்தார்.
கூரேசர், ஞானத்திலும் நற்பண்பிலும் நினைவாற்றலிலும் தலைசிறந்தவர். இல்லறப் பற்றற்ற இவர் தமது திருமாளிகையில் இரவுபகலாக அன்னதான சத்திரம் நடத்தியதால், அதன் கதவு "அடையா நெடுங்கதவு" என்று அறியப்பட்டது.
கூரேசரோடு ஒப்பிட்டுச் சொல்ல முன்னும் பின்னும் பக்தர்கள் எவரும் இலர். பகவத் பக்தி, பாகவத பக்தி, ஆச்சாரிய அபிமானம், பௌதிகப் பொருட்களிலும் இல்வாழ்விலும் பற்றின்மை, ஒளிவிடும் புலமை, ஒப்பற்ற நினைவாற்றல், அன்பு, அடக்கம், கருணை போன்ற பல நல்ல குணங்கள் அவருக்கு அழகூட்டும் அணிகலன்களாக இருந்தன.
கூரத்தாழ்வார் திருமாலிருஞ்சோலைச் செல்லும் வழியில், ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதி மானுஷ ஸ்தவம் ஆகிய சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட அரிய நூல்களை அருளினார். மேலும், ஸ்ரீஸ்தவம், ஸ்ரீ-சுந்தர பாஹு ஸ்தவம், காஞ்சி வரதரை பிரார்த்தித்து ஸ்ரீவரதராஜ ஸ்தவம் ஆகிய நூல்களையும் அருளினார்.
இந்த ஐந்து நூல்களும் பஞ்ச ஸ்தவங்கள் என்று புகழ்பெற்றன. அவை மட்டுமின்றி, அபிக மனஸாரம், புருஷ-ஷுக்த பாஷ்யம், ஸாரீரக ஸாரம் ஆகிய நூல்களையும் அருளி கூரத்தாழ்வார் வைஷ்ணவ உலகிற்குத் தொண்டாற்றினார். அவர் அவதார நாள் இன்று.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 17 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 9.46 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 11.16 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி புறப்பாடு. கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-சிந்தனை
மிதுனம்-நிம்மதி
கடகம்-பயணம்
சிம்மம்-உயர்வு
கன்னி-வரவு
துலாம்- கீர்த்தி
விருச்சிகம்-இன்பம்
தனுசு- லாபம்
மகரம்-உவகை
கும்பம்-சிறப்பு
மீனம்-மாற்றம்
- வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
- இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.






