search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கர்ணனுக்கு கண்ணன் வழங்கிய அறிவுரை
    X

    கர்ணனுக்கு கண்ணன் வழங்கிய அறிவுரை

    • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன.
    • மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது.

    மகாபாரத யுத்ததின் போது, கர்ணன் தன் நண்பன் துரியோதனனின், பக்கம் நின்று போரிட்டான். ஆனால் கர்ணனை, பாண்டவர்களின் பக்கம் வந்து விடும்படி கண்ணன் உள்பட பலரும் அழைத்தனர். ஆனாலும் அவன் செல்லவில்லை.

    ஒரு கட்டத்தில், தான் துரியோதனனின் பக்கம் நிற்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற எண்ணம் அவன் ஆழ்மனதை துளைத்தது. தன்னுடைய இறுதி கட்டத்தில், நெஞ்சில் அம்பு பாய்ந்து, தன் முன் கிருஷ்ணன் விஸ்வரூபமாக காட்சி தருகையில், தன்னுடைய ஆழ்மனதை துளைத்த கேள்விகளை, கண்ணனிடமே கேட்டான், கர்ணன்.

    `கண்ணா.. என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறைதவறிப் பிறந்த குழந்தை என்ற அவப்பெயருக்கு ஆளானேன். இது என் தவறா?. நான் சத்ரியன் அல்ல என்று கூறி, துரோணாச்சாரியார் எனக்கு கல்வி கற்றுத்தரவில்லை. இது என் தவறா? பரசுராமர் எனக்கு அனைத்தும் கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் பிராமணன் இல்லை. சத்ரியன் என்று தெரியவந்ததும், நான் படித்த அனைத்தும் மறந்து போகும் என்று சாபமிட்டுவிட்டார். இது என் தவறா?

    ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரவுபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டேன். என் தாயாரான குந்தி கூட, இறுதியில் தன்னுடைய மற்ற மகன்களை காப்பாற்றும் நோக்கத்தில்தான் என்னைத்தேடி வந்தார்.

    இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் நான் வஞ்சிக்கப்பட்டபோது, துரியோதனன் ஒருவன்தான் என்னிடம் அன்பு காட்டினான். அவனால் தான் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது. அதனால் அவன் பக்கம் நான் நின்றதில் என்ன தவறு இருக்கிறது?" என்றான், கர்ணன்.

    அதற்கு பதில் அளித்த கிருஷ்ணர், `கர்ணா நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதில் இருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலைக் கேட்டு வளர்ந்தாய். நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல்களுக்கிடையே வளர்ந்தேன்.

    நடக்க ஆரம்பிக்கும் முன்பே, என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை, பயிற்சி இல்லை, ஆனால் எல்லோரும் இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நான்தான் காரணம் என்கிறார்கள்.

    நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது, நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில்தான், ரிஷி சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்தேன்.

    நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ, விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை, கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

    ஜராசந்த்திடம் இருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையில் இருந்து தூரமாக என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டி இருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை.

    துரியோதனனுடன் போரிட்ட நீ வெற்றிபெற்றிருந்தால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை, கவுரவம் கிடைத்திருக்கும். ஆனால் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து யுத்தம் செய்ததால், எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.

    கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது. எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியம்.

    நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள், நம்மை தவறான பாதையில் செலுத்துவதற்கான உரிமையை பெற்றுத் தருவதில்லை. நம் வாழ்க்கையில் கரடுமுரடான பாதை இருக்கலாம். அவற்றை காயப்படமல் கடப்பது பாதுகைகளால் அல்ல. நாம் கவனமாக எடுத்து வைக்கும் அடிகளால் மட்டுமே.' என்றார். கண்ணன்.

    Next Story
    ×