search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நற்செய்தியை கொண்டாடுவோம்...!
    X

    நற்செய்தியை கொண்டாடுவோம்...!

    • கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதை முதலாவது உணர வேண்டும்.
    • கர்த்தரிடம் திரும்புவதற்கு ஏதுவாக இயேசுவை பிரசங்கிக்க வேண்டும்.

    கிறிஸ்துவானவர் பிறப்பதற்கு 1800 வருடங்களுக்கு முன் எகிப்தின் மன்னனாக பார்வோன் இருந்தான். இவன் யோசேப்பிடம், 'எகிப்து தேசத்தின் நன்மையை தருவேன், எகிப்து தேசம் எங்கும் உள்ள நன்மை உங்களுடையது. எனவே தகப்பனையும், சகோதரர்களையும் குடும்பத்தோடு எகிப்தில் குடியேற வரச்சொல்' என்று சொன்னான்.

    இஸ்ரவேலையும், அவன் மக்களையும் (66 பேர் மற்றும் அவரின் குடும்பம்) கானான் தேசத்தில் இருந்து அழைத்துவர எகிப்தில் இருந்து வண்டிகளை அனுப்ப ஏற்பாடு செய்தான் (ஆதி:45:16-28). அந்நாட்களில் இஸ்ரவேலருடைய வாகனங்கள் கழுதைகள் தான்.

    மகன் யோசேப்பு தனக்காக சொல்லி அனுப்பிய வார்த்தைகளை கேட்டு, அவன் அனுப்பின வண்டிகளையும் பார்த்ததும் இஸ்ரவேல் மகிழ்ந்தான். பெயர்சபாவுக்கு போய் கர்த்தரை தொழுது கொண்டு கர்த்தரிடம் தரிசனம் பெற்று, தன்னை திடப்படுத்திக் கொண்டபின் எகிப்துக்கு புறப்பட்டான் (ஆதியாகமம் 46:1-27).

    350 வருடங்கள் எகிப்தில் வசித்த பின், அவனுடைய குமாரரில் லேவி குடும்பத்தில் பிறந்தவன் தான் மோசே. தன்னுடைய எண்பதாவது வயதில், மோசே 6 லட்சம் புருஷர் மற்றும் குடும்பங்களை கானான் தேசத்திற்கு 40 வருடங்களாக கர்த்தரின் கிருபையால் வழிநடத்திச்சென்றான் (யாத்திராகமம் 2:1-10).

    கி.மு. 1800-ம் ஆண்டு யோசேப்பை சந்தித்த இஸ்ரவேலின் மகிழ்ச்சிக்கு எல்லை தான் உண்டோ. மரித்துப்போன மகன் என்று எண்ணின யோசேப்பை உயிரோடு எகிப்தின் அதிகாரியாக பார்க்கும்போது, எப்படி மகிழ்ந்து இருப்பான். பாவத்திற்கு மரித்து விடாமல், நாம் கிறிஸ்துவின் நெருக்கம் கிடைத்து சேரும்போது, தகப்பனாகிய அவர் அடையும் மகிழ்ச்சி பெரிது தானே. (ஆதியாகமம் 46:29,30).

    கிறிஸ்துவுக்கு முன் 1450-ம் ஆண்டில் எகிப்து நாட்டில் நதியின் ஓரத்திலே நாணல் பெட்டிக்குள் இருந்த 3 மாத குழந்தையான மோசேயை கண்ட பார்வோனுடைய மகள், மோசேயை தன்னுடைய மகனாகவே எடுத்துக்கொண்டாள். எபிரேய பிள்ளை என தெரிந்தும் தைரியமாக இந்த செயலை செய்தாள்.

    கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க சித்தம் கொண்டு, அவனை தேர்ந்தெடுத்து பக்குவப்படுத்தி ஆயத்தப்படுத்தினார். பார்வோனிடம் செல்லவேண்டிய வழிமுறைகளை கர்த்தர் அவனுக்கு கற்றுக்கொடுத்தார். அவனை சிறு குழந்தையாக இருக்கும்போதே பிரித்தெடுக்க பார்வோனுடைய குமாரத்தியின் இரக்க குணம் வழி வகுத்தது (யாத்திராகமம் 2:6).

    'நீங்கள் போகும் வழியில் சண்டை பண்ணிக் கொள்ளாதீர்கள்", என்று யோசேப்பு தன் சகோதரருக்கு சொல்லி அனுப்பினான். சமாதானமாக வாழ நாமும் நம் சகோதரரிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் (ஆதியாகமம் 45:24).

    கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் வருடத்தில் சகரியாவின் வீட்டில் மரியாள் எலிசபெத்தை வாழ்த்தும் போது பரிசுத்த ஆவியானவர், எலிசபெத்தை அபிஷேகம் பண்ணினார். அச்சமயம் வாழ்த்துதல் சத்தம் கேட்டு எலிசபெத்தின் வயிற்றிலிருந்த (யோவான்ஸ்நானன்) குழந்தை களிப்பாய் துள்ளிற்று. பரிசுத்த ஆவியானவரை நாம் நம்மில் வாசம் செய்ய அனுமதித்தால் நமக்கு களிப்பு உண்டாகும் (லூக்கா 1:42-44).

    கிறிஸ்துவுக்குப் பின் முப்பத்து ஏழாம் வருடத்தில் தமஸ்குவில் உள்ள ஜெப ஆலயங்களில் கர்த்தராகிய இயேசுவை பின்பற்றின சீடர்களை கொலை செய்ய புறப்பட்டு (அப்போஸ்தலர் 8:3,9:1,2) வழியிலே, கர்த்தரால் சந்திக்கப்பட்டான் சவுல். பின்னர் பார்வை இழந்து (அப்போஸ்தலர் 9:3-9), மூன்று நாட்கள் கழித்து கர்த்தரின் கட்டளையின் பெயரில் அனனியா போய் ஜெபிக்க, பார்வை அடைந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டான்.

    ஞானஸ்நானம் பெற்ற பின் சவுல், பவுலாக மாறினான். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நம்மில் எத்தனை பேர் விசுவாச வீரர்களாக நம் இறுதி மூச்சு வரை கர்த்தருக்காக வாழப்போகிறோம்? (அப்போஸ்தலர் 9:10-18).

    கிறிஸ்துவின் வருகை என்பதே நம்பிக்கை விசுவாசம், மகிழ்ச்சி, இரக்கம், சமாதானம் இவைகளை முழு உலகத்திற்கும் கொண்டு செல்வதுதான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.

    கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதை முதலாவது உணர வேண்டும். சுவிசேஷம் நம்மிடம் கேட்பவர்கள் விசுவாசித்து கர்த்தரிடம் திரும்புவதற்கு ஏதுவாக கர்த்தராகிய இயேசுவை பிரசங்கிக்க வேண்டும். கர்த்தரிடத்தில் மன நிர்ணயமாய் நிலைத்து இருக்கும் படி எல்லாருக்கும் புத்தி சொல்ல வேண்டும். திருச்சபையில் இருந்து ஊழியர்களை சுவிசேஷம் அறிவிக்க அனுப்ப வேண்டும்.

    அப்போதுதான், `என் ஆவி என் ரட்சகராகிய தேவனில் களிகூறுகிறது', என்று மரியாள் பாடினது போல நாமும் நற்செய்தியை கொண்டாட முடியும்.

    Next Story
    ×