என் மலர்tooltip icon

    வழிபாடு

    • வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
    • ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா.

    திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (1767 – 1848) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். இவர் `தியாக பிரம்மம்' என்று போற்றப்படுபவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர், ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

    இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி, இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர், அரசவைக்கு செல்ல மறுத்து ''நிதிசால சுகமா'' என்ற கல்யாணி ராகக் கிருதியைப் பாடினார். ராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.

    "ஏல நீ தயராது" கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்ய நாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாக தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் இசைவாணர்களால் இன்றளவும் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

    ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா திருவையாறில் எதிர்வரும் 2024 ஜனவரி 26 தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நிறைவுநாள். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாள். இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்துவர்.

    • விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.
    • சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர்.

    ஏழாம் நூற்றாண்டில், கும்பகோணம் – திருப்பனந்தாள் சாலையில் திருவாய் பாடிக்கு வடமேற்கே 1.5 கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் கரையில் உள்ள திருசேங்கனூர் என்ற ஊரில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

    ஒரு முறை சிறுவன் ஒருவன், தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூஜைக்கு பயன்படுத்தினார்.

    இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள். விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிஷேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூஜையை தடுக்கச் சென்றார்.

    கோபத்தால், சிவாபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு, அருகில் இருந்த குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.

    விசாரசருமர் தனது பூஜையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன்தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேஸ்வர பதவியை அளித்தார். அதன்பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.

    இவருடைய காலம் கி.பி.400-1000 என்று கருதப்படுகிறது. சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள், சண்டிகேஸ்வரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. ''சிவன் சொத்து குலநாசம்'' என்பர்.

    அதனால், சிவாலயத்தில் இருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர்.

    இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்துவிடும். அதனால், அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பெரும்பாலும் சண்டிகேஸ்வரர், தன்னுடைய ஆயுதமாக மழுவுடன் காணப்படுகிறார். மழு என்பது சிவபெருமானுடைய ஆயுதமாகும். சிவாலயங்களின் கோமுகி அருகே அமர்ந்த நிலையில் உள்ளார். உற்சவராக இருக்கும் சண்டிகேஸ்வரர் நின்ற நிலையில் உள்ளார்.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.
    • சண்டேசுவர நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, தை 16 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி காலை 7.48 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: உத்திரம் இரவு 8.59 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமாள் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்குத் திருமஞ்சன சேவை. சண்டேசுவர நாயனார் குருபூஜை. வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-மேன்மை

    மிதுனம்-புகழ்

    கடகம்-நட்பு

    சிம்மம்-பெருமை

    கன்னி-களிப்பு

    துலாம்- சாதனை

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- போட்டி

    மகரம்-இன்பம்

    கும்பம்-பயணம்

    மீனம்-இரக்கம்

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 26-ந்தேதி கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இன்று 29-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஊத்துக்குளி நகரம் களை கட்டியுள்ளது. நாளை 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

    • கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.
    • முதல்கால வேள்வி பூஜை இன்று நடக்கிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.

    கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இ்ரவு 7 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை நடக்கிறது. முன்னதாக கடந்த 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடும், கணபதி ஹோமமும் நடந்தது. இதையடுத்து 25-ந்தேதி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்னிலையில் லஷ்மி ஹோமம் ஸ்ரீசூத்தம் ஜபம் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தல காவிரி தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கடந்த சனிக்கிழமை அவிநாசியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் தலைக்காவேரி சென்ற நிலையில் அங்கு தீர்த்தம் எடுத்து இன்று அதிகாலை அவிநாசி வந்தடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் வலம் வரும் ரத வீதிகளின் வழியாக 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தீர்த்தக் கூட ஊர்வலத்துக்கு முன்பு மேளதாளங்கள் முழங்க இசைக்கேற்றவாறு குதிரை நடனமாட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்தடைந்த தீர்த்தர்கள் கும்பாபிஷேகத்தன்று அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச் செய்து தூய்மை செய்தல் பணி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருட்சத்திகளை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளி ஆனந்தம் அருளும் அவினாசியப்பருக்கு முதல்கால வேள்வி பூஜை தொடங்குகிறது. நாளை காலை 9 மணிக்கு 2-ம் காலமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    காலை 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி பூஜை , பேரொளி வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    31-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால வேள்வி, மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வியும், 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும் நடக்கிறது.அன்று காலை 10 மணிக்குள் அவினாசியப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேக பெருவிழாவும், மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.

    வருகிற 2-ந்தேதி காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும், 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    • திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும்.
    • தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ம் தேதி வள்ளிதெய்வானை முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் இரவு வெள்ளி ரதத்தில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய

    நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 25ம் தேதி நடைபெற்றது. மேலும் வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    27-ம் தேதி இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சாமி எழுந்தருளினார். 10ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வள்ளி முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால் தெய்வானை கோபித்துக்கொண்டு செல்ல தூதரான வீரபாகு சென்று சமாதானம் செய்து கோவில் கதவை திறக்கும் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தெப்பகுள மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.

    • காலவர் என்ற மஹரிஷிக்கு ஜோதி வடிவாக விஷ்ணு காட்சி தந்தார்.
    • ஜோதி வடிவமே அரசமர ரூபமாக இன்றும் காட்சி அளிக்கிறது.

    பல யுகங்களுக்கு முன் இந்த ஸ்தலம் தர்பக்காடாக இருந்தது. காலவர் என்ற மஹரிஷிக்கு ஜோதி வடிவாக விஷ்ணு காட்சி தந்தார். பின்னர் அந்த ஜோதி வடிவமே அனைவரும் அறியும் வகையில் அரசமர ரூபமாக இன்றும் காட்சி அளிக்கிறது.

    அதேபோல இந்த ஸ்தலத்தில் தவம் செய்த கண்ணுவர், புல்லர் என்ற மஹரிஷிகளுக்கும் விஷ்ணு ஜெகந்நாதராக நாராயணன் காட்சி அளித்த முதல் தலம் என்பதால் அவர் ஆதிஜெகநாதராக காட்சி தருகிறார். ஸ்தல புராணத்தில் குறிப்பிட்ட அந்த மரம் இன்றும் இருப்பது நாம் காண வேண்டிய அதிசயங்களில் ஒன்று.

    பொதுவாக அரசமரம் மேல் நோக்கி வளரும். ஆலமரம் போல் விழுதுகள் விடுவதோ விழுதுகள் தொடும் இடங்களில் மரம் உண்டாவதோ கிடையாது. ஆனால் திருப்புல்லாணியில் தல விருட்சமாக இருக்கும் இந்த அரச மரமோ மேல் நோக்கி அதிகம் வளராமல் அதன் கிளைகள் தரை நோக்கி வளைந்து தாழ்ந்தே வளர்கின்றன.

    அப்படித் தரையைக் கிளைகள் தொடும் போது, ஏதேனும் ஒரு கிளை தரையில் வேர்விட்டு, புதிய மரம் உண்டாகி, அது பெரிதா னவுடன் தாய் மரம் பட்டுப்போய், பின் புதிய மரத்தின் கிளைகள் தரையைத் தொட்டு புது மரம் உண்டாகி என்று இப்படி இந்த மரம் இடம் விட்டு இடம் மாறுகின்ற அற்புதம் இங்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    மரத்துக்கு கீழே தான் பஞ்சாயத்து நடக்கும், ஆனால் இந்த மரமே ஒரு பஞ்சாயத்தை தீர்த்துவைத்துள்ளது. ஒரு பஞ்ச காலத்தில் தமிழ்நாட்டு அந்தணர்கள் வடக்கே சென்ற போது அங்கே சரஸ்வதி புத்திரன் சாரஸ்வதன் ஓதிய வேதத்துக்கும் இவர்கள் ஓதியதற்கும் முரண்பாடு ஏற்பட அவர்கள் பிரம்மாவிடம் சென்று கேட்க அவரும் குழம்பி அவர் திருமாலையே கேட்போம் என்று சென்றார்கள்.

    விஷ்ணு இந்த மரத்தடியில் யார் வேதம் சொல்லும் போது இலைகள் ஆடாமல் அசங்காமல் இருக்கிறதோ அதுவே சரி என்று சொல்ல. சாரஸ்வதன் சொன்ன போது இலைகள் அசங்காமல் இருக்க அவர் சொல்லும் வேதமே சரி என்பது புராணக் கதை. விஷ்ணுவின் மார்பில் எப்போது லட்சுமி குடிகொண்டு இருப்பது போல அரசமரத்துடன் வேம்பும் இங்கே இணைந்தே இருக்கிறது.

    • 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம்.
    • விபீஷணன் இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

    திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் ஆழ்வார்களில் திருமங்கை யாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம். இந்த கோவில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணப் புகழ் பெற்றும், சரித்திர புகழுடன் சிறந்த திவ்ய தேசமாக விளங்குகிறது.

    விஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் ஜெகநாதனை வணங்கி அவரால் கொடுக்கப் பட்ட வில்லைப் பெற்று ராவண சம்ஹாரம் செய்து சீதா பிராட்டியை மீட்க அனுக்கிரகிக்கப்பட்ட தலமாகவும், ராமபிரானை ராவணன் தம்பி விபீஷணன் சரண் அடைந்து இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

    கடற் கடவுள் தன் பத்தினியோடு ராகவனை சரணடைந்து தன் குற்றம் மன்னிக்கப்பட்ட இடமாகவும், சுகசாரணர்களுக்கு அபயம் அளித்து, புல்லவர், கண்ணுவர் போன்ற முனிவர்கள் ஆதிஜெகநாதரை சரணடைந்து பரமபதம் பெற்ற தலமாகவும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் விளங்குகிறது.

    ஆகவே, இந்த தலம் சரணாகதி தருமத்தை அனுஷ்டிக்கூடிய புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திலுள்ள மூர்த்தியை வணங்கி பகவான் பாதம் அடியில் அர்ச்சாரூபியாய் அமர பாக்கியம் பெற்ற பரிசுத்தமான அரசமர நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்து, நிவேதனம் செய்த பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ஏராளமான தம்பதியர்கள் பெருமாளை தரிசிக்க வரு கின்றனர்.

    இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். தாயாருக்கு புடவை சாத்து தலையும், பெருமாள் சாமிக்கு துளசி மாலை அணிவித்தலையும் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். ராமர் சயன நிலையில் இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம்.

     எங்கும் காண இயலாத விசேஷ அசுவத்தமும் (அரசமரம்), நாகத்தின் மீது நடமாடும் சந்தானக்கண்ணனும், சிற்பக்கலையின் களஞ்சியமாக கிரீடம், பட்டாக்கத்தியுடன் காட்சியளிக்கும் தர்ப்பசயணன் ராமனும், ரசாயண சத்துக்கள் நிரம்பிய சக்கர தீர்த்தமும் இத்தலத்தின் மாபெரும் சிறப்புக்கு சான்றுகளாய் திகழ்கின்றன.

    • தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோவிலில் உள்ளது.
    • பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும்.

    கோசலை நாட்டை ஆண்ட தசரச சக்கரவர்த்தி தான் மணம் முடித்த கோசலை மூலம் சாந்தா என்ற மகளை பெற்றெடுத்தார். பின்னர் அந்த மகளை அதே நாட்டு மன்னருக்கு தத்துக்கொடுத்து விட்டார். அதன் பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திர வேள்வியின் மூலமாக தசரதனுக்கு கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி ஆகிய மூன்று மனைவிகளுக்கு முறையே ராமன், பரதன், லட்சுமணன் மற்றும் சத்துருக்கணன் ஆகிய 4 பிள்ளைகள் பிறந்தனர்.

    முன்னதாக தசரதன் மகப்பேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60 ஆயிரம் மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று மனமுருகி வேண்டினார். அப்போது அவருக்கு காட்சி அளித்த ஆதி ஜெகநாதபெருமாள் ஒரு மந்திரத்தை சொல்ல பாராயணம் செய்யுமாறு அருளினார்.

    பின்பு தசரதன் இத்தலத்தில் நாக பிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ரகமோஷ்டி யாகம் செய்ய பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை, தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்தபின், தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோவிலில் உள்ளது.

    இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கண வனும், மனைவியும் உபவாசம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி நாக பிரதிஷ்டை செய்து வருகிறார்கள். ஏராளமானோர் குழந்தை வரம் பெற்று தம்பதி சமேதராக மீண்டும் கோவிலுக்கு பிள்ளைகளுடன் வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.

    • ஆதி ஜெகநாதர் கோவிலில் ராமர் சயன நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும்.
    • இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது.

    திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவர்கள் வழிபடும் கடவுளாக போற்றப்படுகிறார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலை குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சங்க காலத்திற்கு பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியார்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு தழைத்தோங்கியது.

    அந்த வகையில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 105-வது தலம் இந்த ஆதி ஜெகநாதர் கோவிலாகும். அனைத்து கோவில்களிலும் ராமபிரான் நின்ற கோலத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    சயனநிலையில் ராமர்

    சயனநிலையில் ராமர்

     ஆனால் ஆதி ஜெகநாதர் கோவிலில் ராமர் சயன நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும். திருமங்கை–யாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இதுதவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி பாடியுள்ளனர்.

    பஞ்ச தரிசனம் பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகநாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

    ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

    இதுபோன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை தாங்கி நிற்கும் கோவில் சிறப்புகளை அறியவும், பல்வேறு வடிவங்களில் காட்சி தந்து அருள்புரியும் பெருமாளை தரிசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ஆதி ஜெகநாதர் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

    • திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில்.
    • மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில். புராண காலத்தில் இந்த ஊரின் பெயர் திருப்புல்லாணை என்று இருந்துள்ளது. இங்கு மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவராக கல்யாண ஜெகநாதரும், அம்பாளாக கல்யாணவல்லி, பத்மாசனியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவில் தல விருட்சமாக அரசமரம் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் இந்த ஆதி ஜெகநாதர் கோவில் 105-வது திருத்தலமாக போற்றப்படுகிறது.

    ஜெகநாதப் பெருமாள், புவனேஸ்வர் (புரி) தலத்தில் உத்தர ஜெகநாதராகவும், திருமழிசை தலத்தில் மத்திய ஜெகநாதராகவும், திருப்புல்லாணியில் தட்சிண ஜெகநாதராகவும் காட்சி தருகிறார் என்பர். அந்த அளவில் மிகச்சிறப்பு வாய்ந்தது மட்டுமன்றி, ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாவதால் புராதன புண்ணியத் தலமாகவும் திகழ்கிறது இந்த கோவில்.

    முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப்பட்டனர்.

    தங்களை காக்க வேண்டும் என்ற மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாதர் கோவில்.

     பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    ×