என் மலர்
வழிபாடு

சண்டேசுவர நாயனார் குரு பூஜை இன்று
- விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.
- சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர்.
ஏழாம் நூற்றாண்டில், கும்பகோணம் – திருப்பனந்தாள் சாலையில் திருவாய் பாடிக்கு வடமேற்கே 1.5 கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் கரையில் உள்ள திருசேங்கனூர் என்ற ஊரில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.
ஒரு முறை சிறுவன் ஒருவன், தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூஜைக்கு பயன்படுத்தினார்.
இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள். விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிஷேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூஜையை தடுக்கச் சென்றார்.
கோபத்தால், சிவாபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு, அருகில் இருந்த குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.
விசாரசருமர் தனது பூஜையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன்தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேஸ்வர பதவியை அளித்தார். அதன்பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.
இவருடைய காலம் கி.பி.400-1000 என்று கருதப்படுகிறது. சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள், சண்டிகேஸ்வரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. ''சிவன் சொத்து குலநாசம்'' என்பர்.
அதனால், சிவாலயத்தில் இருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர்.
இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்துவிடும். அதனால், அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பெரும்பாலும் சண்டிகேஸ்வரர், தன்னுடைய ஆயுதமாக மழுவுடன் காணப்படுகிறார். மழு என்பது சிவபெருமானுடைய ஆயுதமாகும். சிவாலயங்களின் கோமுகி அருகே அமர்ந்த நிலையில் உள்ளார். உற்சவராக இருக்கும் சண்டிகேஸ்வரர் நின்ற நிலையில் உள்ளார்.






