என் மலர்
வழிபாடு
- தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது.
- 7 எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம்.
அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள்.

காசியப முனிவருக்கு பல மனைவிகள் உண்டு. அவர்களில் ஒருவர், அதிதி. ஒரு முறை அவர் தன் கணவரான காசியபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் யாசகம் கேட்டு ஒரு அந்தணர் வந்து நின்றார். அப்போது அதிதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மெதுவாக நடந்து சென்று அந்தணருக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது யாசகம் கேட்டு வந்த அந்தணர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? நீ என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றார்.
பயந்து போன அதிதி, இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். காசியபரோ, "நீ வருந்த வேண்டாம். தேவர் உலகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று கூறினார்.
அதன்படியே பிரகாசமான ஒளியுடன் சூரியன், அதிதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினமே 'ரத சப்தமி' ஆகும். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது புராணங்கள்.
தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது. ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும்.
ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுங்கள். சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும்.
நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த இலை அடுக்கை, தலை மீது வைத்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக, மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.
சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.
இப்படி தினமும் அதிகாலை நீராடி சூரியனை வழிபடுவதன் மூலமாக செல்வந்தராக உயரும் வாய்ப்பு கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
- இன்று சந்திர தரிசனம்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-17 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை இரவு 6.06 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: திருவோணம் காலை 8.59 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருநாங்கூரில் பதினொறு கருட சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்திய மூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பாசம்
மிதுனம்-தாமதம்
கடகம்-நட்பு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-அமைதி
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-சுபம்
தனுசு- உயர்வு
மகரம்-போட்டி
கும்பம்-பொறுமை
மீனம்-ஆக்கம்
- கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
- பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமா வாசை, மஹாளாய அமா வாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது. மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறு கிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.

அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணற்பரப்பில் அமர்ந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையையொட்டி ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 740 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்தக் கடல், கோவில் பகுதிகளை சுற்றி
லும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிபெ ருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை திரிவேணி சங்கமம் பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்களுக்காக பலிகர்ம பூஜை மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஏராமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அங்கு தொடங்கி நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிகள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறைகள், கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்பு கார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரை யோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மதுரையில் வைகை கரை யோர பகுதிகள், சோழவந் தான் அருகேயுள்ள திருவே டகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந் துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
- நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
- அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்னரே வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கத்தை அவர்கள் இந்த ஆண்டும் கடைபிடித்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கடந்த ஆண்டு மாட்டு வண்டிகளை கிரி வீதியில் நிறுத்த அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாக தனியார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ரூ.400 கட்டணத்துக்கு மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன வசதி இல்லாத காலத்தில் இருந்து எங்கள் முன்னோர்கள் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
மேலும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும், சிரமம் இன்றியும் மலைக்கோவிலுக்கு செல்லவும், பின்னர் அங்கிருந்து அடிவாரம் வந்தடையவும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 1 மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
தற்போது தைப்பூச திருவிழா நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (30-ந் தேதி) ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதை, யானைப்பாதை வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
- ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.
ஒகேனக்கல்:
தை அமாவாசையை யொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்ற வற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம்.
மகாளய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வந்து காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இதைத்தொடர்ந்து தை மகாளய அமாவாசையான இன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.
பின்னர் அவர்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்
திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஏரளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்று இன்று தை அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு தென்பாணை ஆற்றங்கரையில் காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்து புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாக ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் முன்பு ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பொதுமக்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி காய்கறி அகத்திக்கீரை, வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபட்டனர்.
- ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.
- 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.
இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.
- பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் பவானி, காவிரி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகாரத் தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
மேலும் இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்பட ஒவ்வொரு மாத த்தில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் குடும்ப த்தில் இறந்த முன்னோ ர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.
இதனால் பவானி கூடுதுறைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், உள்ளூர், வெளியூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பல்வேறு பரிகாரங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநில பக்தர்கள் ஏராளமான வர்கள் வந்து புனித நீராடி பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தை மாத அமாவாசை தினத்தை யொட்டி பவானி சங்கமே ஸ்வரர் கோவில் கூடுதுறை பின்பகுதியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம்,நாமக்கல், கரூர், கோவை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காலை முதலே பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பல்வேறு பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனி த்தனியாக குளித்து விட்டு பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சங்கமேஸ்வரரை வழிபாடு செய்து விட்டு சென்றனர்.
தை அமாவாசை தின த்தை முன்னிட்டு அங்கு தற்காலிக இரும்பு தகர செட் அமைக்கப்பட்ட இடங்களில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.
பவானி போலீசார் சிசி டிவி கேமராக்கள் பொரு த்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பாது காப்பு பணியில் பவானி மற்றும் சித்தோடு, அம்மா பேட்டை, அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வரு கிறார்கள்.

இதேபோல் அம்மாபேட்டை காவிரி படித்துறையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் திருமணம் ஆகாத இளம் பெண்கள், வாலிபர்கள் அதிகளவில் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். மேலும் பலர் பல்வேறு பரிகாரங்களையும் செய்து விட்டு சென்றனர்.
இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் நகரின் பல பகுதிகளைில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் முன்னோ ர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர்.
- மாதத்தின் மத்தியில் வரும் திதியாக அமாவாசை உள்ளது.
- 3 விதங்களில் முன்னோர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்குரிய நாளாகும். அமாவாசை என்பது முன்னோர்கள் ஒன்று சேர்ந்து பூமிக்கு வரும் நாள் என்கின்றனர்.
மாதத்தின் மத்தியில் வரும் திதியாக அமாவாசை உள்ளது. தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமாக வரும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் ஏற்ற அமாவாசை நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது.
பித்ரு தோஷம் நீங்கி, ஆரோக்கியம், செல்வம், வெற்றி, மகிழ்ச்சி, அமைதி ஆகியவை கிடைப்பதற்கு வழிபட வேண்டிய நாளாகவும் தை அமாவாசை கருதப்படுகிறது.
மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மற்ற அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறி இருந்தாலும், இந்த மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டினை முறையாக மேற்கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது.

மற்ற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூஜை (திதி) செய்வர்.
தை அமாவாசை என்பது தை மாதம் தொடங்கி, ஆனி மாதம் வரையிலான உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும். பித்ருதோஷம், பித்ரு சாபம் நீங்க வேண்டும் என்பவர்கள் தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டினை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மாவானது உடலில் இருந்து பிரிந்து, பரலோக பயணத்தை தொடங்குகிறது. அப்படி செல்லும் ஆன்மா, முதலில் முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை அடையும். அவர்களின் கர்மாவிற்கு ஏற்ப அடுத்த பிறவியை எடுக்கும் வரை பித்ருலோகத்திலேயே தங்கி இருக்கும். இதற்கிடையில் பித்ருலோகத்தில் இருக்கும் போது ஆன்மாக்களுக்கு பசி, தாகம் ஏற்படும்.
ஆனால் உடல் இல்லாத நிலையில் இருப்பதால் அவர்களால் எதையும் சாப்பிட முடியாது. இதனால் தங்களுக்கு தேவையான உணவுகளை பெறுவதற்காக அவர்கள் முந்தைய வாழ்விடமான பூமிக்கு வருகிறார்கள்.

இங்கு அவர்களின் சந்ததிகள் முறையாக மந்திரங்கள் உச்சரித்து, சடங்குகளை செய்வது எள்ளும் தண்ணீரும் இறைப்பதன் மூலம் முன்னோர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் கிடைத்து அவர்களின் பசி நீங்கி, திருப்தி அடைகிறார்கள். இதனால் மனம் மகிழ்ந்து தங்களின் சந்ததிகளை அந்த ஆத்மாக்கள் வாழ்த்தி செல்கின்றன.
தை அமாவாசையில் மொத்தம் 3 விதங்களில் முன்னோர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தர்ப்பணம், திலா ஹோமம், பிண்ட தர்ப்பணம் ஆகியவை செய்யப்படுகின்றன. இவைகள் இறந்த போது செய்யப்படும் சிரார்த்த காரியங்களை போல் மிகவும் புனிதமானதாகும். நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் புனித தலங்களில் இவற்றை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
- தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள்.
- நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள். இந்த நாளில் தானம் செய்வது மற்ற நாட்களை விட பல மடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.
இந்த நாளில் முன்னோரை நினைத்து உணவுப் பொட்டலம் தானம் செய்தால், நம் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறும். தனம், தானியம் பெருகும். கடன் பிரச்சனையில் இருந்து மீளலாம்.

வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், நம் ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயெல்லாம் தீரும். வாழையடி வாழையென நம் சந்ததி செழித்தோங்கும்.
தேன் வழங்கி நமஸ்கரித்து பிரார்த்தனைகள் செய்தாலும் மிகப்பெரிய புண்ணியம். சந்தான பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
தீபம் மற்றும் விளக்கு தானமாக வழங்கினால், நம்மிடம் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்ணில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அரிசியை தானமாகத் தந்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும். எவருக்கேனும் நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
பால் தானமாக வழங்கினால், துக்கமெல்லாம் தீரும். நம் மனதில் இதுவரை இருந்த மனக்குழப்பமும் வருத்தமும் மறையும்.
தயிர் தானமாகக் கொடுத்தால், இந்திரிய முதலான சுகங்களைப் பெறலாம். இல்லத்தில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் நீடிக்கும்.
பழங்கள் தானமாக வழங்கினால் புத்தியில் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் அகலும்.

தங்கம் தானமாக வழங்கினால் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களிடமும் உள்ள தோஷங்களும் திருஷ்டிகளும் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
வெள்ளி தானமாகக் கொடுத்தால், மனதில் நீண்டகாலத் துயரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ஞானமும் யோகமும் கிடைப்பது உறுதி.
தேங்காய் தானமாக வழங்கினால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
- இன்று தை அமாவாசை. திருவோண விரதம்.
- திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-16 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை இரவு 7.21 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.20 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று தை அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று) திருவோண விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடம் சாற்றியருளல். திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேம். திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபால கர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-தாமதம்
கடகம்-தெளிவு
சிம்மம்-பக்தி
கன்னி-நிம்மதி
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- போட்டி
மகரம்-இயல்பு
கும்பம்-கவனம்
மீனம்-ஆக்கம்
- பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது.
- பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. முன்னதாக கோவிலில் ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.
தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு உண்டனர். சில நாட்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு பயணமாக செல்ல உள்ளனர்.
- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.
- ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.
வடவள்ளி:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி, மருதமலை அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை வைக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 2,400 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகன் கோவில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.
பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட 7 முருகன் கோவில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மருதமலை கோவிலில் நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை அமைக்கப்பட உள்ளது. இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முதலமைச்சரின் அனுமதியுடன் தமிழ்கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 11 கோவில்களில் முழு நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 கோவில்களில் ஒரு நேர அன்னதானத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.
தைப்பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






