என் மலர்
வழிபாடு
- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.
- ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.
வடவள்ளி:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி, மருதமலை அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை வைக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 2,400 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகன் கோவில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.
பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட 7 முருகன் கோவில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மருதமலை கோவிலில் நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை அமைக்கப்பட உள்ளது. இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முதலமைச்சரின் அனுமதியுடன் தமிழ்கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 11 கோவில்களில் முழு நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 கோவில்களில் ஒரு நேர அன்னதானத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.
தைப்பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- கொடியேற்றத்துக்காக 75 அடி உயர மூங்கில் மரம் வெட்டி எடுத்து வரப்பட்டது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவி மரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி நாளை காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடக்கிறது.
அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் முன்புள்ள கொடிக்க ம்பத்தில் குண்டம் திருவிழாவுக்கான கொடியேற்றப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 1 மணிக்கு மயான பூஜையும், 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30க்கு மகா பூஜை நடக்கிறது.
13-ந் தேதி(வியாழன்) காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை 6.30 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்து இழுத்தல், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திரு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர்.
15-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடி இறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.
முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி, மாசாணியம்மன் கோவிலில் கொடியேற்றுவதற்காக, சர்க்கார்பதி வனத்தில் இருந்து கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
100-க்கும் மேற்பட்டோர் வனத்திற்கு சென்று 75 அடி உயர மூங்கில் மரத்தை வெட்டி சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
- மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது.
- போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
கோவை:
கோவையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை பூண்டியில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகளை கடந்து அங்கு சுயம்புவடிவில் காட்சி தரும் சிவனை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரையிலும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.
மேலும் மகாசிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து, 7 மலைகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, வனத்துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இதில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரையிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே அதுபோன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வெள்ளியங்கிரி கோவில் மற்றும் மலையேறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
- 29-ந்தேதி தை அமாவாசை.
- 2-ந்தேதி சதுர்த்தி விரதம்.
28-ந்தேதி (செவ்வாய்)
* மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலையில் நாச்சியார் திருக்கோலக் காட்சி, இரவு யானை வாகனத்தில் புறப்பாடு.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (புதன்)
* தை அமாவாசை.
* மதுரை மீனாட்சி அம்மன், வைர கிரீடம் சாற்றியருளிய காட்சி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திரு விழா தொடக்கம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக் கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (வியாழன்)
* திருவாவடுதுறை, திருமொச்சியூர் தலங்களில் சிவபெருமான் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
31-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்ப உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
1-ந்தேதி (சனி)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி,
* சூரியனார்கோவிலில் சிவபெருமான் திருவீதி உலா.
* திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சதுர்த்தி விரதம்.
* கழுகுமலை முருகப்பெருமான், திருவிடைமருதூர் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் விழா தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.
3-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருப்புடைமருதூர் சிவபெருமான் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத் திலும் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வீதி உலா.
* சமநோக்கு நாள்.
- கன்னி தெய்வங்களை வழிபட்டால், சுமங்கலிகளின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
- தை மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
தென் மாவட்டங்களில் கன்னி தெய்வங்களை வணங்கும் வழக்கம், தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பெண் குழந்தை, பூப்புனித நீராட்டுக்கு முன்போ அல்லது திருமணத்துக்கு முன்போ கன்னியாக மறைந்தால், அவரை குடும்பத்தினர் வழிபடும் பண்பாடு நெடுங்காலமாக உள்ளது.
குடும்ப தலைவரின் உடன்பிறந்த சகோதரியாகவோ அல்லது மகளாகவோ பிறந்து மறைந்த கன்னிப்பெண்களை தலைமுறை தலைமுறையாக வழிபடுகின்றனர்.

கன்னி தெய்வங்களை வழிபட்டால், சுமங்கலிகளின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக கன்னி தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
அதிலும் அந்த மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமை, கன்னி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாட்களாக சொல்லப் படுகிறது. அந்த நாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி கன்னி தெய்வத்தை வழிபடுவது வழக்கம்.
வீட்டின் கன்னி மூலையான தென்மேற்கு திசையில், கன்னி தெய்வ வழிபாடு நடத்தப்படுகிறது. இறந்த கன்னிப் பெண்ணின் வயதுக்கு ஏற்ப அவருக்கான ஆடையை எடுத்து வைக்கின்றனர்.
சிறுமி என்றால் அதற்கு ஏற்ற ஆடைகளும், இளம்பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், திருமண வயதுடைய பெண்ணுக்கு சேலை, சட்டையும் வாங்கி வைத்து வணங்குகின்றனர்.
இரவு நேரத்தில் கன்னி தெய்வத்தை வணங்கத் தொடங்குகிறார்கள். இளநார் பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள்.
இந்த நார்பெட்டிக்கு 'கன்னிப்பெட்டி' என்று பெயர். கன்னிப்பெட்டியை வைத்தவுடன் அந்த குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர்.
தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடம் இருந்து அருள்வாக்கு கிடைக்கும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார் பெட்டியை வைத்துவிடுவார்கள்.
கன்னி தெய்வ வழிபாடு குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்ய வேண்டும். பணியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம், கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
எனவே படையலில் பணியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம் பெறும். அதன்பிறகு வடை - பாயசத்துடன், அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறி விட்டு, தானும் ஒரு இடத்தில் இலையைப் போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார். இந்த சமபந்தி விருந்து, கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்த்து விடுகிறாள், கன்னி தெய்வம்.
அந்த தெய்வமானவள், 'தன் வீட்டில் அண்ணன்- தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும்' என ஆசைப்படுவாள். அப்படி வணங்கும்போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டிய வரம் கொடுப்பாள்.

ஒரு வீட்டில் கன்னி தெய்வம் துடியாக இருக்கிறாள் என்றால், அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கிவிடும். பேய் - பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும்.
தற்போது சில குடும்பத்தினர், கன்னி தெய்வத்துக்கு கோவில் கட்டியும் வழிபாடு நடத்தி வருகிறார்கள். கன்னி வழிபாடு செய்ய முடியாத சிலர், கேரள மாநிலம் திரு வனந்தபுரத்தில் உள்ள பரசுராமர் கோவிலில் இருக்கும் கன்னி தெய்வத்தை வழிபடுகின்றனர். அங்குள்ள நெல்லி மரத்தை வணங்கிய பின்னர், கன்னியின் வயதுடையவர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.
- பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும்.
- தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில், முன்னோர்களை வழிபடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனாலும் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நம்முடைய முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, நாம் படைக்கும் உணவுகளையும், நாம் கொடுக்கும் தர்ப்பணத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக ஐதீகம். அதனால்தான் ஆடி, மகாளயம், தை அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தை அமாவாசை அன்று, பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே அன்றைய தினமும் நீர்நிலைகளில், நம்முடைய முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள்.
'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தை யுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அவை உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக நம்பிக்கை நிலவுகிறது.

இந்த தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும் என்கிறார்கள். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார்.
அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா் என்கிறது புராணங்கள்.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும்.
படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- இன்று போதாயன அமாவாசை.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-15 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 8.09 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: பூராடம் காலை 9.20 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று போதாயன அமாவாசை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரதோற்சவம். திருமொச்சியூர் சூரிய நயினார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திரு நறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத் தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உதவி
மிதுனம்-உவகை
கடகம்-ஜெயம்
சிம்மம்-குழப்பம்
கன்னி-பரிசு
துலாம்- பரிசு
விருச்சிகம்-புகழ்
தனுசு- அமைதி
மகரம்-ஓய்வு
கும்பம்-கவனம்
மீனம்-உழைப்பு
- தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
- ரூ.46 லட்சத்தில் புதிய தேர் சீரமைக்கப்பட்டுள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதிகளிலும், தைப்பூசத் தேரோட்டம் ரத வீதிகளிலும் நடைபெறும்.
இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள்.
தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினத்தோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை பெரிய தேரிலும், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தேர்கள் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்கு பயன்படும் தேர் பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்பதால் சேதமடைந்து இருந்தது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ரூ.46 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (27-ந் தேதி) வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புதிய தேரில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வெள்ளோட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய தேர் ரத வீதிகளில் உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் அதனை கண்டு பரவசமடைந்தனர்.
வருகிற தைப்பூசத் தேரோட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தேர் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன.
- தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
தை அமாவாசை இந்த ஆண்டு ஜனவரி மாதமே வருகிறது. ஜனவரி 29-ந் தேதி, புதன் கிழமை அன்று தை அமாவாசை திதி வருகிறது.
திதி தொடங்கும் நேரம்: ஜனவரி 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.09.
திதி முடியும் நேரம்: ஜனவரி 29-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.21 மணி.
ஜனவரி மாதம் 29- ந் தேதி அன்று காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் அமாவாசை திதி இருக்கிறது மற்றும் இரவு வரை நீடிக்கிறது என்பதால், ஜனவரி 29 அன்று தை அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தை அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் அல்லது நீர் நிலைகளில் நீராடி, பிண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆசிகளை பெறலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை , மகாளய அமாவாசை . இந்த 3 அமாவாசை நாட்களில் நம் முன்னோருக்கு தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
இதில் தை அமாவாசை மிகவும் விசேஷமானது. இந்த நாள் நாம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாளாகும்.
ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசை அன்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த நாட்களில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகத்தை தீர்க்க வேண்டும்.

இப்படி செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது ஜதீகம். நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டு பக்கம் வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் அன்றைய தினம் காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமாகும்.
இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.
- நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது.
- லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.
அமாவாசை அன்று தாமிரபரணி பாயும் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயல் பகுதி வரை பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்த முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி, தண்ணீர் இறைத்து, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்துவார்கள்.

குறிப்பாக பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை மாநகரின் பகுதிகளான குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், முறப்பநாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவார்கள்.
தாமிபரணி, காசி நதிக்கு ஒப்பாக கருதப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர்.
இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி அருவிக்கரை பகுதியில் வரிசையாக அமர்ந்திருந்து அர்ச்சகர்கள் முன்னிலையில் எள்ளையும், தண்ணீரையும் ஆற்றில் விட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலின் நாகசுனை தெப்பக்குளத்தில் தர்ப்பணம் செய்வார்கள். தை அமாசாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா 12 நாள்கள் நடைபெறும்.

நிறைவு நாளான 12-ம் திருநாள் அன்று தீா்த்தவாரி, பொருநை நதியில் திருத்துறையில் நீராடல் செய்தால் சகல நோய் தீரும் என்பது ஐதீகம். அதனைத் தொடர்ந்து அன்னதானமும், ஆலிலை சயன அலங்காரமும், அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.
தை அமாவாசை தினத்தன்று நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது. இதில் பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது.

பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை அன்று மாலை 6 மணி முதல் 9 வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.

பித்ருகர்மா என்னும் நீத்தார் கடன்களை சரிவர நிறைவேற்றாதவர்கள் நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகும் என்பது ஐதீகம்.
- முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
- கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது.
ஆடி, மகாளய மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றாக கன்னியாகுமரி விளங்குகிறது.

நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது. இதனால் மறைந்த நமது முன்னோர்களுக்கு கன்னியாகுமரியில் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது என்று பலரும் கருதுகின்றனர்.
அதற்கு காரணம் இங்கு முக்கடல்கள் சங்கமிப்பது தான். இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் இங்கு தான் சங்கமிக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மற்ற அமாவாசை நாட்களை விட தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையின் போது ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இவர்கள் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் கோவில் கொடைவிழா, கும்பாபிஷேகம், வருஷாபிசேகம் போன்றவற்றுக்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது.
அத்தகைய புனிதம் நிறைந்த கன்னியாகுமரியில் தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். இதற்காக அவர்கள் முந்தைய நாளிலேயே கன்னியாகுமரிக்கு வந்து விடுவார்கள்.

பின்பு தை அமாவாசை தினத்தில் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். மேலும் பலிகர்ம பூஜை நடத்துவார்கள்.
அமாவாசை நாளில் இங்கு தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள், கடலில் நீராடிவிட்டு, ஈரத் துணியுடன் கடற்கரையில் உள்ள 16 கால் மண்டபத்தை சுற்றி இருக்கும் வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்ம பூஜையில் ஈடுபடுவார்கள்.

வாழை இலையில் பச்சரிசி, எள், உதிரிப்பூக்கள், தர்ப்பப் புல் மற்றும் மாவு பிண்டம் கொண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் இலையுடன் சேர்த்து அவற்றை எடுத்துக் கொண்டு கடலில் சென்று பின்னோக்கி போட்டுவிட்டு கடலில் குளித்து கரையேறுவார்கள்.
கன்னியாகுமரியில் அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் தை அமாவாசை தர்ப்பண வழிபாடுகள் மதியம் வரை நடந்தபடி இருக்கும்.
- இன்று பிரதோஷம், மாத சிவராத்திரி.
- ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-14 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: திரயோதசி இரவு 8.29 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: மூலம் காலை 8.55 மணி வரை. பிறகு பூராடம்.
யோகம்: அமிர்த, சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பிரதோஷம், மாத சிவராத்திரி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் இரவு பட்டாபிஷேகம், புஷ்ப சப்பரத்தில் வீதியுலா. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீசிவபெருமான் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் காலையில் சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-அசதி
மிதுனம்-களிப்பு
கடகம்-பரிவு
சிம்மம்-பாசம்
கன்னி-உண்மை
துலாம்- நன்மை
விருச்சிகம்-லாபம்
தனுசு- வரவு
மகரம்-இயல்பு
கும்பம்-பக்தி
மீனம்- பணிவு






