என் மலர்
வழிபாடு

பங்குனி உத்திர திருவிழா: பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
- பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
- பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர்.
பழனி:
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி தைப்பூச திருவிழா முடிந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் 4 ரதவீதிகளில் உலா வருவார். 10-ந் தேதி திருக்கல்யாணமும், முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதியும் நடைபெறுகிறது.
2ம் நாளான இன்று பழனி ஸ்ரீ தண்டாயுதம் சுவாமி பக்தர்கள் பேரவை சார்பாக 16-ம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர். பழனி முருகனுக்கு கொடுமுடியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்காவடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று மதியம் ஸ்ரீ சண்முகசுவ மண்டபத்தில் புது அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பழனி ஸ்ரீ தண்டாயுதம் பேரவை பக்தர்கள் பேரவை சார்பாக அழகர் செய்திருந்தார்.
மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். பால், பன்னீர், பறவை காவடி எடுத்துவந்து கிரிவீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.






