என் மலர்
வழிபாடு

குண்டம் திருவிழா தோன்றிய வரலாறு
- குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
- சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதிகளில் காணப்படுகின்றன.
பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழா நெடுங்காலமாக தொடர்ந்து நடைபெறுவதை தமிழ் உலகம் அறியும்.
அவ்விழாவில் பல்வேறு குடிமக்களும் தங்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உரிய சடங்குகளை செய்து வழிபடுகின்றனர். இக்குண்டம் திருவிழாத் தோன்றிய வரலாற்றை நாம் அறிந்து கொள்வோம்.
பழங்காலத்தில், இன்றைய பெருமாநல்லூர் என்ற இத்தலம் அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதியாக இருந்தது. எனினும் இப்பகுதி நீர்வளமும் நிலவளமும் மிக்கதாக இருந்ததால் சிறந்த வயல் நிலங்களை உருவாக்க தகுதியுடையதாக விளங்கியது.
இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் கால்நடைகளை மேய்த்த வண்ணம் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தனர். பொதுவாக கொங்கு நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்கள் அனைவரும் வேட்டையாடுதலையும் கால்நடைகளை மேய்த்தலையும் முதன்மை தொழில்களாக கொண்டிருந்ததால் புதிய மேய்ச்சல் நிலங்களைத்தேடி அடிக்கடி இடம் மாறினர்.
புதிய மேய்ச்சல் நிலங்களை தேடி புறப்படும்போது அவர்கள் முன்பு வாழ்ந்த இடத்தில் சேர்த்து குவித்து வைத்த சாணம், குப்பை ஆகியவற்றை தீ மூட்டி விடுவர். அவை எரிந்து தணிந்து நல்ல தணலாக இருக்கும் போது அவற்றின் மீது ஆடு, மாடுகளை குறுக்கும் நெடுக்குமாக ஓடவிடுவர். அவ்வாறு கால்நடைகள் தீயை மிதித்துச் செல்லுவதால் அவற்றை பற்றியுள்ள நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இதனை அவர்கள் ஓர் இயற்கை மருத்துவ முறையாக கையாண்டனர். இடம்பெயர்ந்த பின்னர் அத்தீயானது சில நாட்கள் நீடித்து நின்று அணைந்து மழை, வெயிலால் மக்கி சாம்பல் மேடுகளாக ஆகிவிடும்.
இத்தகைய சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. சான்றாக கோவில்பாளையத்திற்கு அருகில் சர்க்கார்சாமக்குளம் என்று வழங்கப்படுகின்ற பழமையான சாம்பல் குளத்தை கூறலாம்.
பெருமாநல்லூருக்கும், குன்னத்தூருக்கும் இடையிலும், சுற்றுப்புறத்திலும் சாம்பல் மேடுகள் இருந்தன. கால வளர்ச்சியில் அவர்களின் நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்து நிலையான குடியிருப்புகள் ஆங்காங்கு தோன்றின.
இத்தகைய குடியிருப்புக்கள் பெரும்பாலும் மரத்தடிகளிலேயே அமைந்தன. கொங்கு நாட்டில் உள்ள ஆலத்தூர், ஊஞ்சலூர், புளியம்பட்டி போன்ற ஊர்கள் மரங்களின் கீழ் அமைந்த குடியிருப்புக்களை நினைவூட்டு கின்றன.
அவ்வாறு அமைந்த குடியிருப்புக்களின் மத்தியில் ஒரு பொது இடமாக ஒரு மன்றத்தை ஏற்படுத்தி அங்கு தம் கால்நடைகளை அடைத்து வைத்தனர். 'பட்டி, தொட்டி, தொழுவம்' போன்ற சிறப்பு விகுதி பெற்று பல்வேறு ஊர்கள் இருப்பது தெரிந்ததே.
புதிய, நிலையான குடியிருப்பில் வாழ்ந்த காலத்திலும், அவர்கள் 2 சாணத்திற்கு தீமூட்டி கால்நடைகளை அதன் மீது நடக்க வைத்து மருத்துவம் செய்யும் வழக்கம் தொடர்ந்தது.
அவர்கள் ஏற்படுத்தியிருந்த மன்றத்தில் பெண் தெய்வத்தை முதலில் ஒரு கல்லாகவும், பிற்காலத்தில் துர்க்கை சிலையாகவும் எழுந்தருளச் செய்தனர். காட்டு விலங்குகளாலும், இயற்கை சீற்றங்களாலும் பிற பகைவர்களாலும் ஏற்படும் அச்சத்தை போக்கும் பேராற்றல் மிக்கவள் துர்க்கை என்னும் காளி தேவியே என்று பெரிதும் நம்பினார்கள்.
எனவே, காளிதேவியின் உருவத்தில் கண்டோர் அச்சம் கொள்ளும் வகையில் எட்டுக்கரங்கள் அமைத்து, அக்கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி காட்சி தருபவளாக சிலை வடித்து வணங்கினர்.
காலப் போக்கில் அப்பெண் தெய்வத்தின் முன்னுள்ள மன்றத்தில் ஆடு, மாடுகளைத் தீயில் நடக்க வைத்தது போல தாங்களும் அத்தீயின் மீது நடந்து அதனை தெய்வத்தைப் போற்றும் சமயச்சடங்காக மாற்றிக் கொண்டனர்.
இம்முறையில் தோன்றியதுதான் துர்க்கை கோவிலின் முன்னுள்ள 'குண்டம் மிதித்தல்' என்னும் சமயச்சடங்காகும். கால்நடை மருத்துவம் என்னும் தீ மிதிக்கும் பழக்கம், பிற்காலத்தில் குண்டம் மிதித்தலாகிய சமயச்சடங்காக மாறியது.






