என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
    • மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    பக்தி மணம் வீசும் மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. அதுவும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் கார்த்திகை பிறந்ததால் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. இனி 60 நாட்கள் தமிழகத்தில் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஒலிக்க உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக மாலை அணிந்து செல்கிறார்கள். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் இன்று முதல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளர். தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர்.

    மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள். முதல் முறையாக சபரிமலைக்கு செல்பவர்கள் கன்னி சாமியாக கருதப்படுவார்கள். கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமானவர்கள் முதல் முறையாக மாலை அணிந்தனர்.

    மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கும், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி, மாலை அணிந்து செல்வதற்கு ஐயப்பன் கோவில்களில் தனி வரிசைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர், மாதவரம், மூலக்கடை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அதனைத்தொடர்ந்து கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதம் முழுவதும் பஜனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, விரதத்துக்கான பூஜை பொருட்கள் விற்பனை சென்னையில் நேற்று களைகட்டியது. துளசி, சந்தன, மணி மாலைகளை ஐயப்ப பக்தர்கள் வாங்கி சென்றனர். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் மற்றும் இருமுடிக்கான பை விற்பனையும் அமோகமாக இருந்தது.

    ஐயப்பன் உருவம் பொறித்த டாலர்கள், சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, நீலம், காவி போன்ற வண்ண வேட்டிகளின் விற்பனையும் களைகட்டியது. சென்னை மயிலாப்பூர், புரசைவாக்கம், தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் ஏராளமானவர்கள் பூஜைக்குரிய பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

    • இன்று கார்த்திகை விரதம்.
    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-1 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை நள்ளிரவு 1.38 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.30 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா. மாயவரம் முடவன் முழுக்கு, குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மூலவர் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்க டேசப் பெருமாள், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவில்களில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-அமைதி

    சிம்மம்-சுகம்

    கன்னி-நட்பு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஆதரவு

    மகரம்-வெற்றி

    கும்பம்-நிறைவு

    மீனம்-செலவு

    • மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
    • அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது.
    • இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜை காலங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை (16-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மேல் சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார்.

    பின்பு இரவு 7 மணிக்கு சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களின் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கிறார்கள்.


    சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரியும், மாளிகை புரம் கோவில் மேல் சாந்தி யாக வாசுதேவன் நம்பூதிரியும் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    அதன் பிறகு நாளை (16-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ப தத்தன் ஆகியோர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    கோவிலின் நடை திறக்கப்பட்டதும் நிர்மால்ய தரிசனமும், அதிகாலை 3:30 மணிக்கு கணபதி ஹோமமும் நடைபெறும்.

    அவை முடிந்ததும் அதிகாலை 3:30 மணிக்கு நெய் அபிஷேகம் தொடங்குகிறது. தொடர்ந்து காலை 7 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நடைபெறுகிறது. அது முடிந்ததும் காலை 8:30 மணி முதல் 11 மணி வரை மீண்டும் நெய் அபிஷேகம் நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 11:30 மணி வரை அஷ்டாபி ஷேகமும், பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜையும் நடைபெறும். அதன் பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும்.

    மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாரா தனையும், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபி ஷேகமும், இரவு 9:30 மணி முதல் அத்தாள பூஜையும் நடைபெறும். பின்பு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    மண்டல பூஜை காலத்தில் இந்த பூஜைகள் அனைத்தும் தினமும் நடைபெறும். அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகின்றனர்.


    ஸ்பாட் புக்கிங் மூலம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போட்டும் அவர்கள் கொண்டுவரலாம்.

    ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்குவதற்காக பம்பையில் 7 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் எரிமேலி மற்றும் வண்டி பெரியாரிலும் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படுகின்றன.

    பக்தர்கள் வரக்கூடிய வாகனங்களை நிறுத்த நிலக்கல், பம்பை மலை உச்சி, சக்குபள்ளம் ஆகிய 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இந்த ஆண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    பம்பையில் பக்தர்கள் வரக்கூடிய கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வருவதற்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சங்கிலி தொடர் போன்று பஸ்கள் தொடர்ச்சி யாக இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பம்பை வரை சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.

    மேலும் பக்தர்கள் தங்கு வதற்காக பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் நடைப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பம்பையில் 7 ஆயிரம் பேர் தங்கும் வகை யில் 9 நடை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சன்னிதானத் தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும், நிலக் கல்லில் 8 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும் நடை பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின் றன.

    அது மட்டுமின்றி சபரி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு யாத்திரை செல்லக்கூடிய பக்தர்களுக்கு வழங்கு வதற்காக 3 ஆயிரம் இரும்பு தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்களுக்கு தண்ணீர் நிரப்பி விநியோகிக்கப்படும்.

    பத்தர்கள் மலையில் இருந்து இறங்கும்போது அந்த பாட்டிலை திருப்பி கொடுத்து விட வேண்டும். இதேபோல் பக்தர்களுக்கு சுக்கு தண்ணீர் வழங்குவ தற்காக சரங்குத்தி முதல் சன்னிதானம் வரை 60 கவுண்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்க பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலான மலை பாதையில் பல இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் இருக் கின்றன. மேலும் பக்தர்கள் அமருவதற்காக ஆயிரத் துக்கும் மேற்பட்ட இரும்பு நாற்காலிகள் வைக்கப்பட் டுள்ளன.

    இந்தநிலையில் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முடிந்துவிட்டது. அடுத்த மாதத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ஆன்லைன் முன்பதிவு செய்த நாளில் வர முடியாத பக்தர்கள், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    மண்டல பூஜை நாளை தொடங்குவதை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் இன்றே வரத்தொடங்கினர். இதனால் எரிமேலி மற்றும் பம்பையில் பக்தர்கள் கூட்ட மாகவே காணப்பட்டது. மதியம் ஒரு மணி முதல் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு மலை யேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக் கப்பட்டார்கள்.

    பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்புதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சபரிமலையில் பணியமர்த்தப்பட்டு உள்ள னர். மேலும் அதிவிரைவு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி கமாண்டோ வீரர்களும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன.
    • 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    கோவில் தோற்றம்

    ராமாயண காலத்தோடு தொடர்புடைய ஆலயங்கள் இங்கே உண்டு. ராமரால் பூஜிக்கப்பட்ட சிவ தலங்களும் உண்டு. அவற்றில் ராமேஸ்வரம் போன்ற புகழ்பெற்ற திருத்தலங்கள் நமக்குத் தெரியும்.

    ஆனால் குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.


    கடலூர் மாவட்டம் பின்னலூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் ராமலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ராமர் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ராமர் சென்றபோது, பின்னலூர் என்ற கிராமத்தில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

    குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சி காலத்தில் 72 மாடக் கோவில்கள் கட்டியதாகவும், அதில் ஒன்று இக்கோவில் என்றும் கூறப்படுகிறது.

    குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்த காலத்தில் மக்கள் விவசாய பணிக்காக பள்ளம் தோண்டும்போது, பூமிக்கு அடியில் இருந்து சிவலிங்கம் ஒன்றை வெளியே எடுத்தனர். இதுபற்றி மக்கள் அனைவரும் குலோத்துங்கனிடம் விபரத்தைக் கூறினர்.

    இதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற குலோத்துங்கச் சோழன், சிவபெருமானுக்கு அங்கே ஒரு ஆலயத்தை அமைக்க முடிவு செய்தார். அந்த ஆலயத்தை மாடக்கோவிலாக அமைத்ததாகக் கூறப்படுகிறது.

    வடலூர் அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரை நமக்குத் தெரியும். ஆனால் அவருக்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணம், இந்த ராமலிங்கேஸ்வரர் ஆலயம் தான் என்று சொல்லப்படுகிறது.

    அருட்பிரகாச வள்ளலாரின் தந்தை ராமையாப்பிள்ளை, தில்லை நடராஜரை தரிசிக்க வடலூரில் இருந்து பின்னலூர் வழியாக செல்வது வழக்கம். அப்பொழுது தினமும் ஊரில் இருக்கும் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தரிசனம் செய்து தனக்கு புத்திர பாக்கியம் இல்லாத குறையை மகேசனிடம் மனதார வேண்டி இருக்கிறார்.

    அவர் வேண்டுதல் பலித்து ராமலிங்கேஸ்வரர் அருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தைக்கு இக்கோவிலில் வைத்து, 'ராமலிங்கம்' என்று பெயர் சூட்டியதாக கூறுகிறார்கள். இப்படி பல சிறப்புகள் வாய்ந்தது இந்த ஆலயம்.


    இந்த கோவில் அமைப்பு படி முன் மண்டபத்தின் மேல் பகுதியில் நடுநாயகமாக சிவன்- பார்வதி ரிஷப வாகனத்தில் சுதைச் சிற்பகமாக வீற்றிருக்கின்றனர். அவர்களின் இருபுறமும் வள்ளி-தெய்வானை உடனாய சுப்பிரமணியர், விநாயகர், அனுமன், ராமர், சீதை, நந்தி ஆகியவை உள்ளன.

    அடுத்தது அலங்கார மண்டபம், அங்கே நந்தி, பலிபீடம், விநாயகர் மற்றும் நால்வர் சன்னிதி அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தெற்கு நோக்கி அற்புதமாய் காட்சி தருகிறாள். அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு நோக்கிய கருவறையில் ராமலிங்கேஸ்வரர், வட்ட பீடத்தில் பாண லிங்கமாக காட்சி தருகிறார். அவரை வணங்கி விட்டு கோஷ்டத்திற்கு வந்தால், தெற்குமுகம் பார்த்து ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சிவ துர்க்கையை வணங்கலாம்.

    பிரகாரத்தில் விநாயகர், ஸ்ரீதேவி - பூ தேவி சமேதராக சீனிவாசப் பெருமாள், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய அனைவரும் தனித்தனி சன்னிதியில் அற்புமாக காட்சி தருகின்றனர்.

    இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புமிகு பிரார்த்தனைகள் பல இருக்கின்றன. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வது விசேஷமானதாகும். தொடர்ச்சியாக 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    ஜாதகத்தில் கிரக தோஷங்களால் தள்ளிப் போகும் திருமணங்கள் நல்ல படியாக நடைபெற, மூலவர் ராமலிங்கேஸ்வரருக்கு வில்வ மாலை மற்றும் சரக்கொன்றை மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

    முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு தோஷ பூஜையை இங்கே செய்யலாம். அமாவாசை அன்று தர்ப்பணமும், மற்ற எல்லா நாட்களிலும் முன்னோர்கள் வழிபாடும் செய்யலாம். இதுவும் ஒரு நித்திய அமாவாசை ஷேத்திரம்.


    மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமைய, ஆடிப்பூரம் அன்று கன்னிப்பெண்கள் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு வளையல் அணிவித்து பிரார்த்தனை செய்தால் மனம் போல் வாழ்க்கை அமையும்.

    கடன் பிரச்சனை நீங்க, குடும்ப நிம்மதி கிடைக்க தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடுகிறார்கள். அன்றைய தினம் 11 நெய் தீபம் ஏற்றி, 11 முறை வலம் வர வேண்டும்.

    இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது, சிவராத்திரி. அன்றைய தினம் நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

    தில்லை நடராஜர் கோவிலில் நடைபெறுவதுபோல், இந்த ஆலயத்திலும் ஆண்டுக்கு 6 நடராஜர் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று இங்குள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்து பல விதமான மோதக கொழுக்கட்டைகள் பிரசாதமாக நைவேத்தியம் செய்யப்படும்.

    கந்த சஷ்டி ஆறு நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறும். பர்வதவர்த்தினி தாயாரிடம் முருகன் வேல் வாங்கி ஆலயத்தின் உள்ளே பிரகாரத்தில் சூரசம் ஹாரம் செய்யும் வைபவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய் வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் கோவில்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது.
    • எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை.

    சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள்.

    சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.


    எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும் போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படுகிறது.

    நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர்.

    அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.

    மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக்கோலம் கலைவதாக நம்பிக்கை.

    அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள்.

    இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி, பக்தி அதிர்வை ஏற்படுத்தும்.

    இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும்.
    • குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.

    சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு குரு சாமி துணை வேண்டும். சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள், 'குருசாமி' என்ற தகுதியை பெறுகிறார்கள்.


    18-ம் வருடம் சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது.

    18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டு கட்டி, 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.



    18-ம் வருடம் சபரிமலை யாத்திரையின்போது, சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள். இதை கண்டதும் குருசாமி என்று மற்ற ஐயப்ப பக்தர்கள் புரிந்துகொண்டு, அவரிடம் ஆசி வாங்குவார்கள்.

    இதனால் தான் 18-ம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர். இந்த குருசாமி, அடுத்த முறை கார்த்திகை மாதத்தில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்கு, தன் கையால் மாலை அணிவிக்கலாம்.

    • இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.


    திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

    மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.

    • இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம்.
    • திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-29 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பரணி இரவு 10.45 மணி வரை. பிறகு கார்த்திகை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால்அபிஷேகம். திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம். மாயவரம் ஸ்ரீகவுரிமாயூரநாதர் கடைமுக உற்சவ தீர்த்தவாரி, விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. நெடுமாற நாயனார் குருபூஜை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-அமைதி

    கடகம்-தனம்

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-பணிவு

    துலாம்- பண்பு

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- ஆசை

    மகரம்-நிறைவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-பயணம்

    ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

    வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

    சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்

    சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

    குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

    சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்

    சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்

    சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:

    மாலை கழற்றும் மந்திரம்

    அபூர்வ சாலரோஹ & திவ்ய தரிசன காரினே

    சாஸ்த்ரு ணித்ராத் மகாதேவ

    தேஹமே விரத விமோசனம்

    • மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.
    • மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

    பதினெட்டாம் படியின் வடதிசையில் மஞ்சமாதா கோவில் உள்ளது. சாஸ்தா சந்நிதியில் இருந்து கீழே இறங்காமல் மேம்பாலம் வழியாகவே அம்பாள் கோவிலுக்குச் சென்று விடலாம்.

    திருநடை திறக்கப்படாத சமயங்களில் திரிசூலம் விளக்கு இவைகளை தரிசிக்கலாம்.

    மஞ்சள்பொடி நிறைந்த தட்டில் எரியும் ஊதுபத்தி, கற்பூரம் சகிதமாக பன்னீரை பக்தர்கள் மீது தெளித்தவாறே மஞ்சள் மாதா தரிசனம் பெறச்செய்வார்கள்.

    மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.

    மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

    அம்மன் காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பதும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் கண்கூடாகக் கண்ட உண்மை.

    அம்மன் கோவிலின் தென்மேற்குப் புறத்தில் மணி மண்டபம் உள்ளது. இங்கு தேவி எபாசனை, அர்ச்சனை, பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.

    • டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
    • ஜனவரி 10-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 9-ந்தேதி மோகினி அலங்காரமும், 10-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 16-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது.

    அதுசமயம் முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×