என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி பவுர்ணமி திதி.
    • சந்திரன் சாபம் நீங்கி பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று உதித்து வருவார்.

    "சோறு கண்ட இடம் சொர்க்கம்" ன்னு ஒரு பழமொழி உண்டு.

    சோற்றை கண்டதும் சொர்க்கம் கிடைக்குமா... சோறு பரிமாறப்படும் இடம் சொர்க்கம் போன்றதா என நிறைய கேள்விகள் மனதில்.

    சோறு கண்டதும் சொர்க்கம் என சொல்லும் சொலவடையின் அர்த்தத்தைத் தேடும் போது தான் உலகிற்கே படியளக்கும் பரமசிவனாரின் மகிமை புரிய ஆரம்பித்தது.


    நம்மில் நிறைய பேர் ஆலயத்திற்கு செல்லும் போது சுவாமிக்கு நடைபெறும் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தைல அபிஷேகம் மற்றும் சந்தனம், விபூதி, மஞ்சள், போன்ற பிற வாசனை பொருட்களால் நடைபெறும் அபிஷேகத்தை பார்த்திருப்போம்.

    சோற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதை நம்மில் வெகு சிலரே பார்த்திருப்போம். ஐப்பசி மாத பவுர்ணமி திதியின் போது சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும்.

    மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவர் என பிரம்மன் நினைத்தார்.

    பிரம்மனின் அகந்தையை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஓர் தலையை சிவபெருமான் கொய்து பிரம்மனை நான்முகன் ஆக ஆக்கினார்.

    சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட பிரம்ம தேவரின் தலையானது சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டு சிவனாருக்கு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.

    சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலம் ஆனது எப்போதும் பசியால் அனத்திக் கொண்டிருந்தது.

    பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்டார் சிவபெருமான்.

    தனக்கு போதும் என்ற அளவுக்கு உணவு கிடைக்கும் போது சிவபெருமானை விட்டு நீங்கி விடுவதாக பிரம்ம தேவரின் கபாலம் சிவனாரிடம் கூறியது.

    சிவபெருமான் கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு பிச்சாடனார் ஆக உருமாறி பூலோகம் வந்தார்.

    அன்னமிட்டு நிறையும் போது மட்டுமே அந்த கபாலம் சிவபெருமானின் கையை விட்டு பிரியும் என்பது சிவனாருக்கு பிரம்மனால் கொடுக்கப்பட்ட சாபம் ஆகும்.

    சிவ பெருமான் காசிக்கு செல்லும் போது அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது.

    இதை அடுத்து சிவபெருமான் கையில் ஒட்டி கொண்டு அவரை படாத பாடுபடுத்திய பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது. சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

    அன்னபூரணி அன்னை சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி மாதம் பவுர்ணமி திதி. இதனால் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்கள் அனைத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது .


    ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் நீங்கி முழு பொலிவுடன் பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று முழு பொலிவுடன் உதித்து வருவார்..

    அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர். இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார்.

    இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்கிறாள். ரோஹிணியின் தந்தை உன் உடல் தேயட்டும்' என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

    சாபம் பெற்றதும் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார். சந்திரன் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார்.

    சிவபெருமான் அருளால் சாபம் நீங்க பெற்று சந்திரன் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று முழுமையாக பிரகாசித்தார். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும்.

    சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானுக்கு அந்த சந்திரன் முழு பொலிவுடன் இருக்கும் நாளான ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடு ஆக பிறை சூடிய பெருமான் ஆன சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை தரிசித்தவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அன்னத்திற்கு குறைவு ஏற்படாது. நெல், அரிசி ஆகிறது. அரிசி, சோறாகிறது. சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது.

    இது போலவே ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம். அரிசி என்ற வார்த்தையிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர்.

    சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் பொருள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்திற்கு சமம்.

    நன்றாக சோற்றுப் பருக்கையை உற்று நோக்கினால் சோற்றுப் பருக்கையானது சிவலிங்க வடிவில் இருப்பதை காணலாம் .

    ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு சாற்றியிருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் நம்மால் சிவலிங்கத்தைக் காண முடியும்.

    ஒரே சமயத்தில் கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவத்தை போக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும் அன்று ஒவ்வொரு சோற்றிலும் ஒரு சிவலிங்கத்தை காணலாம் என ஈஸ்வரன் வரம் கொடுத்து இருப்பதால் அந்த வரத்தின் பயனாக நாம் அன்று கோடி கோடி லிங்கத்தை பார்த்த பலனைப் பெறலாம்.

    சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட அபிஷேக சோற்றை யார் கண்ணார காண்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் விளைவாகவே சோறு கண்ட இடமே சொர்க்கம் என கூறப்பட்டது.

    • விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
    • உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

    உலகியல் மயக்கங்களை கடந்து கடவுளிடம் சரணடைந்தால் மட்டுமே மெய்ஞானம் அடைய முடியும். பொன்னால் பதியப்பட்ட சத்தியம் நிறைந்த பதினெட்டு படிகளைக் கடந்து சென்று ஐயப்பனை தரிசித்தால் மெய்ஞானம் நமக்கு கிட்டும். பதினெட்டு படிகளுக்கும் காரணமும், தத்துவமும் உண்டு.


    காமம்:

    பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது.

    குரோதம்:

    கோபம் குடியை கெடுத்து, கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்து விடும்.

    லோபம்:

    பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய் விடும். பேராசை பெரு நஷ்டம். ஆண்டவனை அடைய முடியாது.

    மதம்:

    யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான். மாத்ஸர்யம், மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்து விடும்.

    டம்பம் (வீண் பெருமை):

    அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது

    அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோக சுமை

    சாத்வீகம்:

    விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

    ராஜஸம்:

    அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது

    தாமஸம்:

    அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது

    ஞானம்:

    எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு

    அஞ்ஞானம்:

    உண்மைப்பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்

    கண்:

    ஆண்டவனை தரிசித்து ஆனந்தம் அடைய வேண்டும்.

    காது:

    ஆண்டவனின் மேலான குணங்களைக்கேட்டு, அந்த ஆனந்த கடலில் மூழ்கவேண்டும்.

    முக்கு:

    ஆண்டவனின் சன்னிதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர வேண்டும்.

    நாக்கு:

    புலால் உணவை தவிர்க்க வேண்டும்.

    வாய்:

    கடுஞ்ச்சொற்கள் பேசக் கூடாது.

    மெய்:

    இரு கரங்களால் இறைவனை கைகூப்பித்தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னிதிக்கு நடந்து செல்லவேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

    இந்த பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால் தான் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும். இதையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டு படிகளும் உணர்த்துகின்றன. 

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-28 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி காலை 8.07 மணி வரை பிறகு சதுர்த்தசி பின்னிரவு 3.52 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு பரணி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் வெண்ணைத் தாழி சேவை. திருமூல நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-விருத்தி

    மிதுனம்-விருப்பம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-ஆதரவு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-வரவு

    தனுசு- லாபம்

    மகரம்-உறுதி

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-கண்ணியம்

    • இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.
    • இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர்.

    தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல், அய்யப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன.

    அவற்றை "அய்யப்பனின் அறுபடை வீடுகள்" என்றே சொல்லலாம்.

    சபரிமலை

    இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்.

    எருமேலி

    இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.

    ஆரியங்காவு

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.

    இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் அய்யப்பன்.

    அச்சன்கோவில்

    செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது.

    பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.

    இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன்.

    இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர்.

    இங்குள்ள அய்யப்பன் "கல்யாண சாஸ்தா" என்று அழைக்கிறார்கள்.

    இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    பந்தளம்

    இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார்.

    அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

    குளத்துப்புழா

    செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது.

    இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் "பால சாஸ்தா" என்று அழைக்கப்படுகிறார்.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

    சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    • மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும்.

    மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு முதலில் 41 நாட்கள் கொண்ட விரதத்தை (கடினமாக தவம்) பக்தர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று ருத்ராக்ஷத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

    அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், பு¬யிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் வார்த்தைகளை தவிர்த்தல் மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க வேண்டும்.

    இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும்.

    தற்பொழுது விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், இருந்தாலும் மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு நல்லெண்ணத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர்.

    நூற்றுக்காணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன் எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் காட்டுப் மலைப் பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் கொண் டது) காலணிகள் அணியாமல் நடந்து செல்வதையே இன்னும் விரும்புகின்றனர்.

    ஆனால் புதிய யாத்திரையை மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து மாற்று வழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர்.

    அதற்கு பிறகு, புனிதயாத்திரை மேற்கொள்ளும் அனைவரும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஏற்றதுடன் கூடிய (நீலிமலை) காட்டு மலைப் பாதையில் ஏறி சபரிமலையை அடைய வேண்டும்.

    ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ஒற்றை வழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சாலையாக இன்று காணப்படுகின்றன.

    • ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம் தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.

    மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி அய்யப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.

    பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐய்யப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது.

    மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.

    மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது.

    சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம்.

    இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம்.

    ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வோறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை.

    மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறுக் கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.

    இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே.

    • இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான்.
    • அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.

    கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது.

    யார் ஒருவர் சபரி மலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு 7 நாட்டு சனி பகவானின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.

    ஏன் என்றால் சனீஸ்வர பகவான் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவர்.

    இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:

    இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான்.

    அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.

    உஷா தேவி விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர்.

    தேவலோக சிற்பி ஆவார். இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம்.

    சூரியன் & உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் ஆண்கள். ஒரு மகள்.

    1. வைவஸ்வத மனு & மகன், 2. யமதர்ம ராஜன் & மகன், 3. யமுனா தேவி என்ற மகள். எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்).

    சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும்.

    "வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்" எனவே உஷா தேவி தன் நிழலை உருவமாக்கி "சாயா தேவி" என்று மாறினாள்.

    "சாயா" என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள்.

    இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள்.

    நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.

    1. சாவர்ணி மனு & மகன், 2. ச்ருத கர்மா & மகன் மற்றுத் பத்ரை என்ற மகளும் பிறந்தனர்.

    தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள்.

    இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான்.

    ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட "சாயா தேவி" தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.

    தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள்.

    தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான். சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார்.

    சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.

    சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார்.

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார்.

    அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.

    இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத் தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய "ச்ருத கர்மா" தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான்.

    பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான்.

    அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத் தில் கிரக நிலையினை அருளினார்.

    அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) "சனீஸ்வரன்" என்ற பெயரும் சூட்டினார்.

    வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள்பாலித்தருளினார்.

    மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று அய்யப்பன் அருள் செய்தார்.

    இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய அய்யப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.

    எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.

    • "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.
    • பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.

    பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர்.

    இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

    அய்யப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள்.

    அவர்களின் வழி பின்பற்றி அய்யப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.

    அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும்.

    அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும்.

    கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.

    • இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
    • அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள் பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் காலை 6 மணிக்கு பிறகு குறைவான எண்ணிக்கையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நின்றனர்.

    பின்னர் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட் டது.

    மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் பக்தர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவான எண்ணிக்கையில் இருந்தது.

    இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை யொட்டி மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் ஐப்பசி மாத பவுர்ணமியில், சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் அதிகளவில் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 16-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது.
    • 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம்.

    சென்னை:

    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம்.

    41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    கார்த்திகை பிறக்க இருப்பதால் இனி 60 நாட்கள் தமிழகத்தில் சரண கோஷம் ஒலிக்க உள்ளது.

    வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தயாராகி வருகின்றனர்.

    பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொள்வார்கள்.

    இந்த முறை கார்த்திகை முதல் தேதியில் கரிநாள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் இடையே அன்று மாலை அணிவதா? வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஆன்மீக பெரியவர்கள், குருசாமிகள் அன்று மாலை அணிவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய தயாராகி வருகிறார்கள்.

    கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவித்தால் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை. பிற நாட்களில் மாலை அணிவிக்கும் போது நல்ல நேரம் பார்த்து மாலை அணிவிக்க வேண்டும்.

    இதுபோல பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

    இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாலை அணிந்த காலத்தில் அனைவரிடமும் மரியாதையாக, சாந்தமாக பேச வேண்டும் என்ற மற்றொரு நியதி உண்டு.

    பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாக பார்க்க வேண்டும் என்பதால் தான் மனைவியை கூட "சாமி" என்று அழைக்க வேண்டும்.

    மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்.

    பக்தர்கள் தங்களுடைய தாய், தந்தை, குருசாமி யார் ஒருவர் மூலமும் மாலையை அணிந்து கொள்ளலாம். குருசாமி இல்லாதோர் கோவிலில் சுவாமி சன்னதியில் மாலையை வைத்து பூஜித்து அர்ச்சகர் மூலமாக மாலையை அணியலாம்.

    மாலை அணிவதற்கு பக்தர்கள் ருத்திராட்ச மணி மாலை, துளசி மாலைகளை பயன்படுத்துவது சிறந்தது. மாலை அணிந்த பக்தர்கள் செருப்பு அணிதல் கூடாது. கருப்பு, நீலம், பச்சை அல்லது காவி நிறத்தில் வேட்டிகள் அணிதல் வேண்டும்.

    மாலை அணியும் பக்தர்கள் முக்கியமாக கோப தாபங்களையும், விரோத மனப்போக்கையும் தவிர்ப்பது அவசியம். அக்கம்பக்கத்தினருடன் விரோதம் கூடாது. மாலையை எக்காரணம் கொண்டு கழற்றுதல் கூடாது.

    விரத நாட்களில் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலர் மாலையை கழற்றி வைத்து விட்டு மது அருந்திவிட்டு குளித்து விட்டு மீண்டும் மாலை அணிந்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம்.

    காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவும், மாலையில் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகும் நீராடி கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ ஐயப்பனை மனதார வேண்டி சரணங்கள் கூறி வணங்குதல் வேண்டும்.

    பிரம்மச்சரிய விரதத்தை முறையாக முழுமையாக கடைபிடித்தல் வேண்டும். அசைவம் உண்ண கூடாது. சபரிமலை யாத்திரை செல்லும் முன் பக்தர்கள் வீடுகளில் பூஜைகள் நடத்தி எளியோருக்கு அன்னதானம் செய்தல் சிறப்பை தரும்.

    முதன் முறையாக மாலை அணியும் கன்னி சாமிகள் மாலை அணியவும் , சபரிமலை செல்லவும் காத்திருகின்றனர். கன்னிசாமிகள் குருசாமி இன்றி மாலை அணியக்கூடாது. ஏனென்றால் அப்போதுதான் அவர் ஐயப்பனுக்கு என்னென்ன விரத முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறுவார்.

    • சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது.
    • கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் தான் கேட்கும்.

    கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் பல இடங்களிலும் ஒலிக்கத் தொடங்கிவிடும். அந்த ஐயப்பனின் புகலிடமான, சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. அதில் சில உங்களுக்காக...


    ஐயப்பன் ஆட்சி செய்யும் சபரிமலையோடு சேர்த்து, அதை சுற்றிலும் 18 மலைகள் இருக்கின்றன. அவற்றில் சபரிமலை பீடம் தான் உயர்ந்தது.

    ராமாயணத்துடன் தொடர்புடைய மலை இது. இந்த பகுதியில் வாழ்ந்த சபரி என்ற மூதாட்டி, ராமபிரானின் தீவிர பக்தை. அந்த மூதாட்டி, ராமரின் தரிசனம் கிடைக்க வேண்டி நாளும் இறைவனைத் தொழுது வந்தார்.

    ராமபிரான் நிச்சயமாக தன்னை சந்திக்க வருவார் என்று அவர் நம்பினார். அப்படி வரும் நேரத்தில் அவருக்கு கொடுப்பதற்காக, வனத்தில் இருந்து கிடைக்கும் பழங்களில் சிறந்தவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

    மேலும் அந்த பழம் இனிப்பாக இருக்கிறதா? என்பதை கடித்து ருசிபார்த்து வைப்பார். இந்த நிலையில் சீதையைத் தேடி செல்லும் வழியில் ராமனும், லட்சுமணனும் சபரியை சந்தித்தனர்.

    அவர்களுக்கு தான் சேகரித்து வைத்திருந்த பழங்களைக் கொடுத்தார். எச்சில் கனியாக இருந்தாலும், தன் மீதுள்ள பக்தியால் அந்த மூதாட்டி அவ்வாறு செய்தது, ராமரை நெகிழச் செய்தது. ராமரின் தரிசனத்திற்குப் பிறகே அந்த மூதாட்டிக்கு முக்தி கிடைத்தது.

    அந்த மூதாட்டியின் பெயரால் வழங்கப்படும் மலையே 'சபரிமலை'. இதில்தான் தற்போது சுவாமி ஐயப்பன் அருளாட்சி செய்து வருகிறார்.

    இந்த அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவமிருந்து வழிபட்டனர்.

    அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், "விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்" என்று மும்மூர்த்திகளும் வேண்டினர்.

    அதன்படியே அவர்களுக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர்.

    அந்த சக்தியே, 'மகா சாஸ்தா'. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று, ஒரே சமயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர்.

    அவர்கள் நினைத்தது நிறைவேற அம்பிகை ஆசி கூறினார். அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.


    புராண காலம் தொட்டு, சபரிமலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை நதிக்கரையில், முனிவர்கள் பலர் குடில் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் பம்பையில் யாகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த தலம் யாக பூமி என்றும் அழைக்கப்படுகிறது.

    இன்றும் கூட இங்கு யாக பூஜை நடைபெறுவதைக் காணலாம். அப்படிப்பட்ட பம்பை நதி, ஒரு பெண்ணாக இருந்தவள். ராமனும், லட்சமணனும் சீதையைத் தேடி பல வனங்களில் சுற்றித் திரிந்தனர்.

    அப்போது மதங்க முனிவர் வாழ்ந்த ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த குடிலில் நீலி என்ற பெண்ணும் இருந்தாள். அவள், முனிவருக்கு பணிவிடை செய்து வருபவள். தாழ்த்தப்பட்ட பெண்ணான தனக்கு இறைவனின் தரிசனம் கிடைக்குமா? என்று ஏங்கித் தவித்த அந்த பெண்ணை, தன் அருகே அழைத்து ஆசீர்வதித்தார்.

    அதோடு "பிறப்பால் எவரும் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் இல்லை. வாழும் வாழ்க்கையில்தான் அவர்கள் உயர்வும், தாழ்வும் இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தனை காலம் சேவையில் கழித்த உன்னைப் போற்றி புகழும் நிலை உனக்கு ஏற்படட்டும்" என்று வாழ்த்தினார்.

    அந்த பெண்ணே, அழகான அருவியாக மாறி, புனித நதியாக பாய்ந்தாள். அதுவே தற்போதைய பம்பை நதி. இதனை 'தட்சிண கங்கை' என்றும் அழைப்பார்கள்.

    சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு முன்பு, பம்பை நதிக்கரையில் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு 'பம்பா உற்சவம்' என்று பெயர்.

    • கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.
    • கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர்.

    சோறு கண்டால் சொர்க்கம் உண்டு என்பார்கள் முன்னோர்களும், சான்றோர்களும் சொல்லி வைத்த பழமொழிகளும், சொல் வழக்குகளும், இன்று அபத்தமான அர்த்தங்களைத் தரும் வகையில் திரிந்து நிற்பதை நாம் உணர முடியும்.

    அவற்றில் ஒன்றுதான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம். சோறு எங்க கிடைக்கிறதோ, அங்கேயே தங்களின் புகலிடமாக மாற்றிக்கொள்பவர்களை, கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.


    உண்மையில் 'சோறு கண்டால் சொர்க்கம் என்பதே பழமொழியின் சரியான வாக்கியம். அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் உள்ள ஒவ்வொரு பருக்கை அன்னமும், ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படும்.

    எனவே அன்றயை தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர். மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் (பிறப்பில்லாத நிலை) கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத் தான் `சோறு கண்டால் சொர்க்கம் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர்.

    ×