என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டில் அக்கறை காட்டும் நாள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    திறமைகள் பளிச்சிடும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

    மிதுனம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. புதிய நட்பால் பொருள் விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கடகம்

    தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர். உத்தியோகத்தில் இடமாற்ற சிந்தனைகள் உருவாகும்.

    சிம்மம்

    புதிய பாதை புலப்படும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    கன்னி

    யோகமான நாள். சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.

    துலாம்

    பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை தருவர்.

    விருச்சிகம்

    நல்லது நடக்கும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை தருவர். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    தனுசு

    தடைகள் அகலும் நாள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    மகரம்

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மீனம்

    ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-13 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : திருவோணம் பிற்பகல் 2.56 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை சாற்று வைபவம், ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் ஆராட்டு விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சிக்கல் ஸ்ரீசிங்கார வேலவர் விடையாற்று உற்சவம். பொய்கையாழ்வார் திருநட்சத்திர வைபவம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-பயணம்

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-அன்பு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பரிவு

    மகரம்-நட்பு

    கும்பம்-உவகை

    மீனம்-வாழ்வு

    • பொம்மை பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் உயிர்பெற்றது.
    • பிரம்மசாரி இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி.

    திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த மிளகு பிள்ளையார் கோவில். பருவமழை பொய்க்கும் பொழுது, இங்குள்ள விநாயகருக்கு மிளகு அரைத்து, அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில், கேரளாவை ஆண்ட மன்னனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஒரு நாள் மன்னன் கனவில், ''முன்ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி உள்ளது. இதற்கு பரிகாரமாக, உன் உருவ அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து, அதை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் உன்னுடைய முன்ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும்'' என்று தெய்வீக குரல் கேட்டது.

    மன்னனும் அதன்படியே பொம்மையைச் செய்து, அதை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடினான். ஆனால் அதை தானமாக பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனும், பாவமும் தங்களை வந்து சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன்வரவில்லை. இதனால் மன்னன், தானம் பெறும் அந்தணருக்கு பொன்னும், பொருளும் பரிசாகத் தருவதாக அறிவித்தான். இதை அறிந்த கர்நாடகாவை சேர்ந்த பிரம்மசாரி அந்தண இளைஞன் ஒருவன், மன்னனிடம் இருந்து அந்த பொம்மையை பெற்றுக்கொண்டான். இதனால் மன்னனை பிடித்திருந்த முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கியது. மன்னனும் தான் அறிவித்தபடி பொன், பரிசுகளை கொடுத்தான்.

    அந்த பொம்மை பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் உயிர்பெற்றது. அந்த பொம்மை, பிரம்மசாரி செய்திருந்த பூஜையின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி கொடுத்துவிட்டால் வியாதி நெருங்காது என்றும் சொன்னது. இதைக்கேட்ட அந்த பிரம்மசாரி, பூஜை பலனில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டான்.

     

    கோவில் தோற்றம்

    ஆனால், கொடுத்த பின்புதான் அவனது மனம் வேதனை அடைந்தது. ''வியாதி ஏற்பட்டு அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக பூஜையின் பலனை தானம் செய்து விட்டோமே'' என்று கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்புமிக்க பொருட்களை பொதுநலன் கருதி செலவழிப்பது என்று முடிவெடுத்தான். ஆனால், என்ன செய்வது என்ற குழப்பத்துடன், பொதிகை மலையில் வசித்து வரும் தன் குருவான அகத்திய முனிவரிடம் சென்றான்.

    அகத்தியர், ''தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம் தான். மலையில் இருந்து நீ திரும்பி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அது போகும் வழியில் ஒரு கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து, மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு'' என்றார்.

    அதன்படி, அந்த பிரம்மசாரி இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்த இளைஞன், கடைசியாக பசு மறைந்த பிராஞ்சேரி என்ற ஊரில் மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும். இத்தகைய சேவையை செய்த அந்த பிரம்மசாரி இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. எனவே, அந்த கால்வாய் அவனது மொழியின் பெயரில் 'கன்னடியன் கால்வாய்' என்று அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் ஆண்டு முழுவதும் மழை பெய்யாமல் கால்வாய் வறண்டு காணப்பட்டது. இதனால் மனம் வருந்திய பிரம்மசாரி இளைஞன், உடனே ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்தான். மேலும், அந்த அபிஷேக நீர் கால்வாயில் விழும்படி செய்தான். உடனே, ஆச்சரியப்படும் விதமாக மழை பெய்தது. இதையடுத்து மழை பெய்யாத காலங்களில் விநாயகருக்கு மிளகு அரைத்து அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மழையில்லா காலங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

    ரிஷபம்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    விரயங்கள் ஏற்படும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

    சிம்மம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.

    துலாம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உறவினர்கள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    விருச்சிகம்

    அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறும். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.

    தனுசு

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.

    மகரம்

    மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.

    கும்பம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    மீனம்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-12 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி மறுநாள் விடியற்காலை 5.32 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : உத்திராடம் பிற்பகல் 2.18 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம்

    இன்று திருவோண விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் புறப்பாடு. உத்திரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் ஏகசிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம்.

    கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நற்செயல்

    மிதுனம்-இனிமை

    கடகம்-கவனம்

    சிம்மம்-பரிசு

    கன்னி-நலம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-வரவு

    தனுசு- உறுதி

    மகரம்-திடம்

    கும்பம்-பக்தி

    மீனம்-பணிவு

    • சிக்கல் சிங்காரவேலர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் புறப்பாடு.
    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    இந்த வார விசேஷங்கள்

    28-ந் தேதி (செவ்வாய்)

    * திருச்செந்தூர், குமாரவயலூர், திருமாலிருஞ்சோலை, அலைமாக நிலங்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்.

    * வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரத உற்சவம்.

    * திருவனந்தபுரம், திருவட்டாறு சிவபெருமான் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    29-ந் தேதி (புதன்)

    * சிக்கல் சிங்காரவேலர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் புறப்பாடு.

    * திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (வியாழன்)

    * சிரவண விரதம்.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    31-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவல்லி தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.

    1-ந் தேதி (சனி)

    * சுமார்த்த ஏகாதசி.

    * மதுரை கூடலழகர் பெருமாள் புறப்பாடு.

    * திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    2-ந் தேதி (ஞாயிறு)

    * வைஷ்ணவ ஏகாதசி.

    * வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் நூபுர கங்கைக்கு எழுந்தருளிய காட்சி.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    3-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * பிரதோஷம்.

    * நாங்குநேரி உலகநாயகி அம்மன் வருஷாபிஷேகம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    • விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது காப்புகளை கழற்றி விரதத்தை முடித்துக்கொண்டனர்.
    • காய்கறிகள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து, பாவாடை தரிசனம் நடைபெறுகிறது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 22-ந்தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் மேற்கொண்டு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன.

    விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும் மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. இதனை காண உள்ளூர், வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சொக்கநாதர் கோவில் முன்பு சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்றது. கந்த சஷ்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்ட தேரில் எழுந்தருளினார்.

    இதில் காப்பு கட்டி சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தேரை ரத வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து தேர் நிலைக்கு வந்தவுடன் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மயிலுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    அப்போது விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது காப்புகளை கழற்றி விரதத்தை முடித்துக்கொண்டனர். மாலை 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 108 படி அரிசியினால் தயிர் சாதம் படைக்கப்பட்டு, அதன் மேல் காய்கறிகள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து, பாவாடை தரிசனம் நடைபெறுகிறது.

    இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வம், பொம்மதேவன், ராமையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொடர்கதையாய் வந்த கடன்சுமை குறையும். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ரிஷபம்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் செலவுகள் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மிதுனம்

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். தொழில் சீராக நடைபெறும்.

    கடகம்

    பக்குவமாகப்பேசி பாராட்டு பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கன்னி

    நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும் நாள். சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக மாற்றம் உண்டு. நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

    துலாம்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்தபடியே வரவு வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். நாடாளும் நபர்களால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

    கும்பம்

    தொழில் வளர்ச்சி ஏற்படும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் யோசனைகளை ஏற்றுக் கொள்வர்.

    மீனம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாகப்பிரிவினைகள் சமூகமாக முடியும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

    • திருச்செந்தூர், குமார வயலூர் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணம்.
    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-11 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி மறுநாள் விடியற்காலை 5.22 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : பூராடம் நண்பகல் 1.08 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் உள்பட முருகன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று வாஸ்து நாள் (காலை 7.44 மணிக்கு மேல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று) திருச்செந்தூர், குமார வயலூர் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணம். திருவனந்தபுரம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. திருக்குருகை பிரான் சேனை முதலியார் திருநட்சத்திர வைபவம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-வரவு

    கடகம்-அமைதி

    சிம்மம்-பரிசு

    கன்னி-கவனம்

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- பாராட்டு

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-தெளிவு

    மீனம்-பணிவு

    • முருகனை திருமணம் செய்வதற்காக தெய்வானை தவம் இருக்கிறாள்.
    • 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.

    கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான, சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாணம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது.

    மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.

    • ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன.
    • அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார்.

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் தலமாக இருப்பது பழனியும், திருச்செந்தூர் திருத்தலமும் தான். பழனி தலத்திற்கு சென்று வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் திருச்செந்தூர் சென்று வழிபட்டால், முருகனின் ஆறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு மும்மூர்த்திகளின் வடிவமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். அதிசயங்கள் பல நடக்கும் முருகன் கோவிலாக சித்தர்கள் பலராலும் பாராட்டப்பட்ட கோவில் என்றால் அது பழனியும், திருச்செந்தூரும் தான்.

    உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. இருந்தாலும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் தலம் திருச்செந்தூர் தலம் தான். இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் நடக்கும் உற்சவங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றி பலரும் அறியாத விஷயங்களை உள்ளது.

    மாப்பிள்ளை சுவாமி

    கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் முருகன் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின் போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதே போல் சூரசம்ஹாரத்தின் போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார். இந்த நான்கு உற்சவர்களையும் தரிசித்து, வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

    12 நாள் சஷ்டி விழா

    முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா 6 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்துடன் சஷ்டி திருவிழா நிறைவடையும். சில தலங்களில் மட்டும் 7 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடையும். ஆனால் திருச்செந்துாரில் மட்டும் மொத்தம் 12 நாட்கள் சஷ்டி விழா நடைபெறும். முதல் ஆறு நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும். ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடக்கும்.

    சந்தன மலை

    ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோவிலே. கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, கந்தமாதன பர்வதம் என்பர். தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம். அதே போல் ஆறுபடை வீடுகளில் முருகன் சன்னதி தரை மட்டத்திற்கு கீழ் இருப்பதும், முருகப் பெருமான் கடலை பார்த்தவாறு அமர்ந்திருப்பதும், சிவ பூஜை செய்த நிலையில் கையில் பூ உடன் இருப்பதும் திருச்செந்தூரில் மட்டுமே.

    தோஷம் போக்கும் ஞானகுரு

    அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால், குருதோஷம் மறையும். ஏனெனில் திருச்செந்துாரில் ஞான குருநாதராக முருகன் அருள்புரிகிறார்.

    வெற்றிக்களிப்பில் முருகன்

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) வருவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக் களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

    • சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான்.
    • 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களை பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.

    அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களை பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான்.

    இதைத்தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுஉருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த 4 பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

    காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கி சென்று சிவபெருமானை நோக்கி தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களை பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களை பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், என கேட்டான்.

    பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தை பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மை போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்த கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது 6 நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றில் இருந்து தோன்றிய 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் 6 குழந்தைகளாக தோன்றின. அந்த 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் 6 குணங்களை குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப்பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த 6 குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு 6 முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினர்.

    இத்திருவுருவை பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த 6 குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன். முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார்.

    திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும்போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் 5 நாட்களில் அழித்தார். 6-ம் நாள் எஞ்சியவன் சூரபத்மன் தான்.

    தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல.

    ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த 7 பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான்.

    மிகப்பெரிய அலைகளுடன் முருகனை பயமுறுத்திப் பார்த்தான். உடனே 100 அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனை கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

    முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.

    சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகா

    ருண்ய மூர்த்தியான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வை

    தாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

    கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

    ×