என் மலர்
ஆன்மிகம்
- நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு.
- வருகிற 1-ந்தேதி 10-ம் திருநாளன்று தைப்பூச மண்டபத்தில் இறங்கி சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி வேத பட்டர்கள் வீதி, வீதியாக சென்று நெல் சேகரித்தனர். அந்த நெல், நெல்லையப்பர் கோவில் சன்னதி முன்பு வைக்கப்பட்டது.
அங்கு பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் அதாவது நெல் இருந்த இடத்தை சுற்றி மழை பெய்ததற்கு அடையாளமாக தண்ணீர் தெளிக்கப்பட்டது.
நெல் இருந்த மேடையில் மட்டும் தண்ணீர் படாமல் இருந்தது. அப்போது அந்த நெல் மேடைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் பேஸ்கார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் பட்டர்கள் வீடு, வீடாக சென்று நெல் யாசகமாக பெற்றனர்.
அந்த நெல்லை, நெல்லையப்பர் கோவில் முன்பு காய வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென்று பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் பதறிய பட்டர்கள் தாங்கள் காயவைத்த நெல் மழையில் நனைந்து தங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய்விடுமோ என்ற மனவேதனையுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
தங்கள் காயவைத்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அதை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக புராண வரலாறுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவு படுத்தும் வகையில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 1-ந்தேதி 10-ம் திருநாளன்று தைப்பூச மண்டபத்தில் இறங்கி சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் (2-ந்தேதி) சந்தி விநாயகர் கோவில் அருகே திருக்காட்சி வைபவமும், வருகிற 3-ந்தேதி நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
- தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் முதன்மையானதாகும்.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வதுதான். அதன்படி இந்த வருடத்துக்கான தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கொடிக்கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துக்கான விழா தொடங்கியது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு இன்று இரவு புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை வெள்ளித் தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெறும். மணக்கோலத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாளில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்வும், மாலை 4 மணிக்கு திருத்தேரேற்றம் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது.
4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்ரவரி 2-ந் தேதி இரவு 8 மணிக்கு தங்க குதிரை வாகனத்திலும், மறுநாள் 3-ந் தேதி இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். பிப்ரவரி 4-ந் தேதி தெப்பத்தேர் திருவிழாவுடன் கொடி இறக்கம் நடைபெற்று தைப்பூசத்திருவிழா நிறைவுபெறும்.
தைப்பூசத்தை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த நிலையிலும் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் 30-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் நடைபெறும் தங்கரத புறப்பாடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ந் தேதி முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமலைநம்பி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
- மருத்துவ குணம் கொண்ட இந்த நதியில் நீராட, நோய்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கை.
வைணவ கோவில்களில் புராணங்களால் போற்றப்படும் முக்கியமான மலை, நம்பிமலை. பசுமைக்காடாக காட்சியளிக்கும் இம்மலை சித்தர்களின் சொர்க்கபுரியாகும். மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக் கூட்டத்துக்கு நடுவில் 'நம்பினோரை கைவிடேன்' என்று கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார். 'தங்கள் கஷ்டங்களை எல்லாம் நீக்கி வைப்பார்' என்ற நம்பிக்கையில் கரடு முரடான பாதையையும் கடந்து குழந்தைகளை தோளில் சுமந்தவாறு வரும் பக்தர்கள், நம்பியாற்றில் குளித்துவிட்டு நம்பியாண்டவரை தரிசிக்கிறார்கள்.
திருமலைநம்பி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இதனருகே ஓடிவரும் நம்பியாறு, மகேந்திரகிரி மலையில் மாயவன் பரப்பு என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்றுகிறது. பின், கடையார் பள்ளம் வழியாக தாய்பாதம் தொட்டு, நம்பிகோவில் வந்துசேருகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த நதியில் நீராட, நோய்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு
திருக்குறுங்குடியில் பாணர் குல பக்தன் ஒருவன் நம்பியின்மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தான். யாழை மீட்டி, பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாளை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புவான். இதுபோல் ஒருமுறை நம்பிபெருமானை மனதில் தியானித்துக்கொண்டே அடர்ந்த காடுகளில் பயணித்தான்.
அப்போது, நடுவழியில் அவனை வழிமறித்த அரக்கன் ஒருவன், தனக்கு உணவாக வேண்டும் என்று மிரட்டினான். பாணன், "நான் இன்று ஏகாதசி விரதம் இருக்கிறேன். நம்பியை வணங்கிய பின்பு நானாக வந்து உனக்கு உணவாவேன்" என்றான். அரக்கனோ சந்தேகத்தோடு பார்த்தான். "சந்தேகப்படாதே. நான் வணங்கும் எம்பெருமானின்மீது ஆணையாக வந்துவிடுவேன்" என்றான், பாணன். அரக்கனும் சம்மதித்தான்.
பாணன் அங்கிருந்து புறப்பட்டு, திருக்குறுங்குடி நம்பி கோவிலின் வாசலில் வந்து நின்றான். வைகுந்தனை இதயத்தில் நிறுத்தி, யாழை மெல்ல இசைக்கத் தொடங்கினான். அந்த காடு முழுவதுமே யாழிசை கேட்டு மயங்கியது. அரக்கனும் மெல்ல தன்னை இழந்தான். பாணன், 'கைசிகம்' எனும் உயர்ந்த பண்ணைப் பாடினான். இசையால் நம்பியைக் கரைத்தான்.
கண் திறந்து பார்த்தால் பல நாழிகைகள் கடந்திருந்தது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே என்று காட்டிற்குள் நுழைந்தான். அப்போது வயோதிகராக காட்டில் தோன்றிய திருமலைநம்பி, பாணனின் முன் சென்று "யாரைத் தேடுகிறாய்?" என்று வினவினார். பாணன், "என்னை சாப்பிட வேண்டுமென்று ஒருவர் இங்கு காத்திருந்தார். அவரைத்தான் தேடுகிறேன்" என்றான்.
"அவனோ அரக்கன். நீயோ கைசிகப் பண்பாடுபவன். அவனிடம் போய் மாட்டிக்கொள்ளாதே. எப்படியாவது தப்பித்துக் கொள்" என்று புத்தி கூறினார், வயோதிக வைகுந்தன். "எம்பெருமான் நம்பியின் பெயரால் வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் அதை நான் காப்பாற்றத்தான் செய்வேன்" என்ற பாணன் முன்னே சென்றான். வயோதிகரும் பின்தொடர்ந்தார்.
ஒரு மரத்தடியில் நின்றிருந்த அரக்கனைக் கண்டவுடன் பாணன் முகம் மலர்ந்தான். ஆனால், அரக்கனோ பாணனின் முக ஒளியில் தன்னை மறந்தான். "உங்களைக் கண்டவுடன் என்னுள் இருக்கும் அரக்க குணங்கள் அழிந்து போய்விட்டது. நீங்கள் நம்பி கோவில்முன்பு நின்று கைசிகம் பாடியதை காதுகுளிரக் கேட்டேன். உங்களை மிரட்டியதற்காக வெட்கப்படுகிறேன். எனவே நான் பசியாற உங்கள் உடல் வேண்டாம். ஆனால், கைசிகப் பண் இசைத்த பலனை மட்டும் எனக்கு தாருங்கள்" என்று கெஞ்சினான்.
ஆனால், ''வாக்களித்த மாதிரியே என்னை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று அரக்கனை நெருங்கினான், பாணன். அப்போது, பாணனை தடுத்த வயோதிகர், திடீரென நின்ற கோலத்தில் நம்பியாக விஸ்வரூபம் காட்டினார். அதேநேரத்தில், அரக்கனாக இருந்தவனும் மானிட உருபெற்று, தான் சோமசர்மா என்ற அந்தணனாக வாழ்ந்ததையும், வேள்விகளைத் தவறாகப் புரிந்ததற்காக அரக்கனாக மாறிவிட்டதையும், பாணனாகிய பரம பாகவதரின் தரிசனத்தால் சாபம் நிவர்த்தி அடைந்ததாகவும் கூறினான். வியப்பில் மயங்கி சாய்ந்த பாணனை, நம்பி தன்னருளால் அணைத்தார். அவனுக்கு 'நம்பாடுவான்' என்ற நாமமும் சூட்டினார்.
இந்தச் சம்பவம் கார்த்திகை வளர்பிறை ஏகாதசி அன்று நடந்தது. ஆகவே, இந்த நன்னாளுக்கு 'கைசிக ஏகாதசி' என்று பெயர் வந்தது.
சிறப்புகள்
பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாசுரம் பாடப்பெற்ற சிறப்புடையது இக்கோவில். திருக்குறுங்குடியில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, அமர்ந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி என்ற நான்கு நம்பிகளுடன், மலைமேல் திருமலைநம்பி என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் நம்பி. ஒரே ஊரில் ஐந்து கோலத்தில் நம்பிகள் தரிசனம் கிடைப்பது அரிது.
பெரும்பாலும் மலைக்கோவில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். அதுபோலவே மகேந்திரகிரி மலையும் மிகவும் சிறப்புப் பெற்றது. அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு நித்யவாசம் செய்வதாக நம்புகின்றனர்.
மலைமேல் நடுக்காட்டுக்குள் இருக்கும் நம்பியை தரிசிக்க வரும் பக்தர்களையும், கோவிலையும் காவல் காக்கிறார், சங்கிலிபூதத்தார். கருடசேவை நடைபெறும் போது, சாமியாடும் சங்கிலிபூதத்தாரின் பக்தர்கள் சங்கிலியால் தங்களது உடலில் அடித்துக் கொள்வதைக் கண்டு பக்தர்கள் பரவசப்படுகின்றனர். வருடந்தோறும் 'கைசிக விருத்தாந்தம்' எனும் புராண நிகழ்ச்சி திருக்குறுங்குடி தலத்தில் நடந்து வருகிறது.
கோவில் முன்பாக உள்ள பாலத்தினைக் கடந்ததும், இடப்புறம் உயரத்தில் திருமலைநம்பி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அதன்கீழே அடிவாரத்தில் ஒருபுற்று உள்ளது. அந்தப் புற்றை மக்கள் வணங்கி வருகிறார்கள். இதில் 201 சித்தர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தினமும் ஒருவர் வீதம் 201 சித்தர்களும் நம்பிக்கு பூஜை செய்த பிறகு அர்ச்சகர்கள் பூஜையைத் தொடர்வார்களாம்.
திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள். திருப்பதிக்கு ஏழு ஏற்றம் இருப்பது போலவே திருமலைநம்பி கோவிலுக்கு செல்லவும் ஏழு ஏற்றம் இருக்கிறது. எனவே இவரை நம்பி, மலை மீது ஏறினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விழாக்கள்
வைணவக் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால், திருமலை நம்பிகோவிலில் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கருடசேவை நடக்கிறது. இந்நிகழ்வு எந்த கோவிலிலும் நடைபெறாத அற்புத நிகழ்வாகும். அதுபோல, ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆனால் நம்பிமலையில் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமை தான் உறியடி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இங்கு வரும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு மலை மீது ஏறுவார்கள். நம்பியாற்றில் குளித்து, நம்பி ஆண்டவரை தரிசித்துவிட்டு, ஊறியடி விழாவை காண காத்துகிடப்பார்கள். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள்.
தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். சனிக்கிழமை தோறும் கருட சேவை நடைபெறுவதால் அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் - களக்காடு சாலையில் திருக்குறுங்குடி உள்ளது. அங்கிருந்து ஆட்டோ மூலம் மலை அடிவாரத்துக்கு சென்று, அங்கிருந்து மலை ஏற வேண்டும். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து திருக்குறுங்குடிக்கு பஸ் வசதி உண்டு. திருக்குறுங்குடியில் இருந்து மலைக்கு ஜீப் மூலமாக ஏறியும் கோவிலுக்கு செல்லலாம்.
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-12 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி இரவு 7.10 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : அசுவினி காலை 10.50 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
வேலூர், கதிராமங்கலம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்
இன்று பீஷ்மதர்ப்பணம். வாஸ்துநாள் (காலை 0.41 மணி முதல் 11.17 மணி வரை வாஸ்து செய்ய நன்று) பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம்.
திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்க்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-தனம்
கடகம்-பரிசு
சிம்மம்-உதவி
கன்னி-போட்டி
துலாம்- தெளிவு
விருச்சிகம்-முயற்சி
தனுசு- ஆர்வம்
மகரம்-பாராட்டு
கும்பம்-களிப்பு
மீனம்-ஆதாயம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடி வரும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக முடியும்.
ரிஷபம்
மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் நட்பால் மகிழும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
சிம்மம்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
கன்னி
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விடிகாலையிலேயே விரயம் உண்டு. பொது இடத்தில் சிலர் பேச்சு உங்களை மன சங்கடத்தில் ஆழ்த்தலாம்.
துலாம்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தர பணியாக மாறும்.
விருச்சிகம்
தேசப்பற்றும், தெய்வப் பற்றும் அதிகரிக்கும் நாள். நட்பால் நன்மை கிட்டும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தி வந்து சேரும்.
தனுசு
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். பூமி யோகம் உண்டு.
மகரம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். அரசியல். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மீனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் தேவையான உதவி செய்வர். தொழில் வளர்ச்சி உண்டு.
- கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை பீஷ்மருக்கு காட்டி அருளினார்.
- ஸ்ரீகிருஷ்ணன் கூறியதை கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார்.
பின்னர், பீஷ்மர் மகாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டார். அருகில் இருந்த கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை பீஷ்மருக்கு காட்டி அருளினார். அந்த சமயத்தில் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே 'ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம்' எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பாகும்.
அனைவரையுமே அந்த மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், பாண்டவர்களின் கடைசி சகோதரனான சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின. ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான அவன், எத்தனையோ சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். இருந்தாலும், விஷ்ணு சகஸ்ர நாமத்தின் வரிகள் அவனது மனதில் நிற்கவில்லை. அதற்கு ஸ்ரீகிருஷ்ணன். 'சகாதேவா! பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்!''என்றார்.
ஸ்ரீகிருஷ்ணன் கூறியதை கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது. பீஷ்மரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் கூறியது போன்று, பீஷ்மரின் ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்கி, ஏடுகளாக்கி உலகுக்கு அளித்தான்.
அதனால்தான் இன்றும் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்பவர்களும் ஸ்படிக மணிகளை மாலையாக அணிகிறார்கள்.
- பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர்.
- சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.
பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது அஷ்டமி. தை மாத அமாவாசைக்கு பின்னர் 8-ம் நாளில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமானது. இதனை பீஷ்மருக்கு உகந்தது என்கின்றனர்.
மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை. அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறற்கரிய பேறு பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.
யாரும் பெறா வரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின் சூழ்ச்சியால் கவுரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது விதி. இதன் பலனாக போரில் அம்புகளினால் வீழ்த்தப்பட்டார்.
போரில் யுத்தகளத்தில் அர்ஜூனன் தொடுத்த அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில் பீஷ்மர் அம்பு படுக்கை மீது கிடந்தார். அவர் தன் தந்தையிடம் இருந்து தான் விரும்பியபடி இறக்கும் வரத்தை பெற்றிருந்தார். தான் பெற்ற வரத்தினால் மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி அம்பு படுக்கையில் காத்திருந்தார். அவரை சுற்றி கவுரவர்களும், பாண்டவர்களும் வணங்கி நின்றனர்.
முள் படுக்கையில் அவருடைய உடல் வேதனையில் துடித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம் "நான் செய்த பாவம் என்ன? எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? நான் விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம் என்ற என் தந்தையின் வரத்தின் படி நான் நினைத்தபோது என்னால் மரணிக்க முடியாதபடி இந்த வேதனை என்னை அச்சுறுத்துகிறதே" என்று பீஷ்மர் கேட்டார்.
அதற்கு வியாசர் "பீஷ்மா ஒருவர் தன் மனதாலும், உடலாலும் ஒருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி இல்லை . நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும்போது அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். நீ அனுபவிக்கும் வேதனை அப்படிப்பட்ட ஒரு தண்டனைக்குரியதுதான்" என்றார்.
அப்போதுதான் பீஷ்மருக்கு புரிந்தது, துரியோதன சபையில் பாஞ்சாலிக்கு அநீதி நிகழ்ந்தபோது அதனை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவு இது என்று. உடனே வியாசரிடம் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று கேட்டார்.
"யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ, அப்போதே அந்த பாவம் அகன்று விடும் என்கிறது வேதம் . நீ எப்போது வருந்தினாயோ அப்போதே அந்த பாவம் அகன்று விட்டது. ஆனாலும் துரியோதனன் அவையில் பாஞ்சாலி காப்பாற்றும்படி கதறியபோது கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடம் அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பது விதி. அதைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார் வியாசர்.
பின்னர் "உன்னுடைய வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை என்று கூறிய வியாசர் தன்னிடம் இருந்த எருக்க இலைகளை கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதனால் அவரது வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தியான நிலையிலே முக்தி அடைந்தார்.
அவர் மரணித்த தினம் ரதசப்தமி என்றும், அதற்கு அடுத்த நாளான அஷ்டமி திதி 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. "பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்? "என்று தருமர் வருந்தினார்.
அப்போது வியாசர் "ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும், பித்ருக்கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர் சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்" என்றார் .
அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மருக்கு எல்லா மக்களும் தர்ப்பணம் செய்கிறார்கள். அதுவே பீஷ்மாஷ்டமி.
பிதாமகன் என்று போற்றப்படும் பீஷ்மர் இறந்த திதி நாளே பீஷ்டாஷ்டமி. எனவே சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.
இது நம் பித்ருக்கள் அனைவருக்கும் செய்யப்படுகிற தர்ப்பணம். பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம். இதன் மூலம் ஒட்டுமொத்த குருமார்களின் ஆசியையும் பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்.
இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் நீராடி விட்டு, பித்தளை அல்லது செம்பு குவளையில் பால் கலந்த நீரை இடது கையில் எடுத்து கொள்ளவும். வலது கையில் அட்சதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் முதலியவற்றை வைத்து கொள்ளவும்.
கீழே தாம்பாளம் வைத்து மூன்று முறை "பீஷ்மாய நமக" என பீஷ்மர் நாமம் உச்சரித்தபடி இடக்கையில் உள்ள நீரை வலக்கையில் இருந்து தாம்பாளத்தில் விடவும். அவ்வளவு தான். பீஷ்மாஷ்டமி அன்று புனித நீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், மற்றும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாக கிடைக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.
- மகாபாரத யுத்த களத்தில் அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில், அம்பு படுக்கை மீது இருந்தார், பீஷ்மர்.
- ஒருவர், தான் செய்த பாவத்தை உணர்ந்து வருந்தும் போதே அந்தப் பாவம் அகன்றுவிடும்.
மகாபாரத யுத்த களத்தில் அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில், அம்பு படுக்கை மீது இருந்தார், பீஷ்மர். அவர் தன் தந்தையிடம் இருந்து, விரும்பும் சமயத்தில் மரணிக்கும் வரத்தைப் பெற்றிருந்தார். இருப்பினும் அவருடைய உடல் வேதனையில் துடித்தது.
அப்போது அங்கு வந்த வியாசரிடம், "நான் செய்த பாவம் என்ன? எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? என்று கேட்டார்.
அதற்கு வியாசர், "ஒருவர் தீமை செய்யாவிட்டாலும், தன் முன்பாக நடக்கும் தீமையை தடுக்காமல் இருப்பதும் பாவம் தான். அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆகவேண்டும்" என்றார். இப்போது பீஷ்மருக்கு புரிந்துவிட்டது.
துரியோதனன் சபையில் பாஞ்சாலிக்கு அநீதி நிகழ்ந்தபோது, அதனை தடுக்காததன் விளைவுதான் இது என்பதை உணர்ந்தார்.
பின்னர் வியாசரிடம், "இதற்கு என்ன பிராயச்சித்தம்?" என்று கேட்டார்.
"ஒருவர், தான் செய்த பாவத்தை உணர்ந்து வருந்தும் போதே அந்தப் பாவம் அகன்றுவிடும். ஆனால், பாஞ்சாலி காப்பாற்றும்படி கதறியபோது, கண்டும் கண்டு கொள்ளாதபடி இருந்த உன்னுடைய கண்கள், செவி, வாய், தோள், கைகள் ஆகியவற்றிற்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பது விதி. அதைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார் வியாசர்.
பின்னர் "வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை" என்று கூறிய வியாசர், தன்னிடம் இருந்த எருக்கம் இலைகளைக் கொண்டு, பீஷ்மரின் அங்கங்களை அலங்கரித்தார். இதனால் வேதனை குறைந்து, மன அமைதி அடைந்த பீஷ்மர் முக்தியை அடைந்தார். அவர் மரணித்த தினமே 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது.
"ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரியான பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும்" என்றார், வியாசர்.
அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, புனிதநீர் நிலைகளுக்குச் சென்று, தர்ப்பணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த ஆண்டு பீஷ்மாஷ்டமி தினம் நாளை (திங்கட்கிழமை) வருகிறது. இந்த நாளில் பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிச்சயம் அமையும் என்பது ஐதீகம்.
- கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனும் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக நடந்தது.
கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ரதசப்தமி முன்னிட்டு இன்று ஏழுமலையான் ஒரே நாளில் 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
9 முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை தங்க கருட வாகனத்திலும், 1 முதல் 2 மணிவரை அனுமந்த வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார்.
மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் விண்ணதிர கோஷம் எழுப்பினர். கற்பூரத்தை ஏற்றி தீபாரதனை செய்தனர்.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடக்கிறது. தீர்த்த வாரிக்குப் பிறகு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவர்.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ரத சப்தமி விழாவை காண நேற்று முதல் பக்தர்கள் திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 5 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு 4 லட்சம் லட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் கூடுதலாக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி விழாவை முன்னிட்டு நேர ஒதுக்கீட்டு தரிசனம் மற்றும் வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதியில் நேற்று 76, 654 பேர் தரிசனம் செய்தனர். 34. 080 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.81 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மிதுனம் காரிய சித்தி உண்டாகும் வாரம்.
- சிம்மம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.
மேஷம்
தொழில் மாற்ற சிந்தனை ஏற்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இழுபறியாக இருந்த முயற்சிகள் இப்பொழுது நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும். உடலும், மனமும் பொலிவு பெறும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவர் அவரின் வயதிற்கும், தேவைக்கும் ஏற்ற மாற்றம் உண்டாகும்.
தொழிலை மேம்படுத்த அல்லது தொழில் மாற்றம் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். ஏழரைச் சனி உள்ளதால் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது. உத்தியோகம் சம்பந்தமான பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் பாவங்கள் விலகும்.
ரிஷபம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை சந்தித்த அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் விலகும். புதிய முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும். கொடுத்த வாக்கையும் நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும். பணியில் கவுரவம் நிலைத்திருக்கும். அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோர்கள் மீண்டும் சேருவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தால் குடும்பத்துடன் இணைந்து வாழ்வார்கள். சகோதர, சகோதரிகள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தில் சீராகும். உயர் கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். மறைந்த புதன் நிறைந்த பலனை வழங்குவார். வாக்கு உண்மை உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். உங்கள் செயல்பாட்டில் மற்றவர்களின் குறுக்கீடு இருக்காது. குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும். தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். கடன் சுமை குறையும்.பொருளாதார நிலை உயரும். முன்னோர்களின் சொத்து பாகப் பிரிவினையில் முறையான பங்கீடு கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடைபெறும். எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் கைகூடும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் அகலும்.
கடகம்
முட்டுக்கட்டைகள் அகலும் வாரம். ராசிக்கு சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. ஆன்ம பலம் உண்டாகும். மனப் போராட்டம் அகலும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள். பல நல்ல மாற்றங்கள் வரலாம். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சீராகும். உறவுகளின் பகை மறையும். சிலர் பார்க்கும் வேலையில் நிலவும் அசவுகரியத்தால் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். சுப காரியங்கள் கைகூடும். வாழ்க்கை துணைக்கு தாய் வீட்டுச் சீதனமாக மதிப்பான சொத்துக்கள் கிடைக்கும். கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் குறைய துவங்கும். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் மனக்குறைகள் அகலும்.
சிம்மம்
உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம். லாப ஸ்தானத்தில் 5,8ம் அதிபதியான குரு சஞ்சரிப்பதால் திட்டமிட்ட காரியங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் பெண்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு, கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசு உத்தியோகம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருப்தியான நல்ல வருமானம் கிடைக்கும்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்கும். ஒரு பெரும் பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஆரோக்கிய தொல்லை அகன்று மருத்துவ செலவு குறையும். 25.1.2026 அன்று பகல் 1.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கிடைக்கிறது என்பதற்காக தொழிலில் அதிக முதலீடு செய்யக் கூடாது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலும் ஆன்மாவும் உள்ளமும் குளிரும்.
கன்னி
சுப விரயம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். அதிக முதலீட்டுடன் புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். வீடு வாங்கும் முயற்சியில் இருந்த குழப்பங்கள் அகலும். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு செய்து மகிழ்வீர்கள். வீடு வாகனத்தை புதுப்பிப்பீர்கள். சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும்.
அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று மன நிம்மதியை அதிகரிப்பீர்கள். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். 25.1.2026 அன்று பகல் 1.36 மணி முதல் 27.1.2026 அன்று மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர் விசயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். ரதசப்தமி அன்று சூரிய நமஸ்காரம் செய்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
தடைகள் விலகும் வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. அனுபவ அறிவு வெளிப்படும். கடினமான வேலையும் எளிமையாக முடிக்கும் திறமை மேலோங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பாக்கிய ஸ்தானமும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பலம் பெறுகிறது. பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் அதிகரிக்கும். குல தெய்வ அருளால் பூர்வீகம் சம்பந்தமான விசயங்கள், வழக்குகள் முடிவிற்கு வரும்.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நிலவிய சங்கடங்கள் மறையும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அதற்குத் தேவையான நிதி உதவி கிடைக்கும். 27.1.2026 அன்று மாலை 4.45 மணி முதல் 29.1.2026 அன்று மாலை 6.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும்.மனக் குழப்பங்கள் கூடும். விரயங்கள் அதிகமாக இருக்கும். தினமும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்தால் பித்ருக்கள் தோஷம் குறையும்.
விருச்சிகம்
மாற்றங்கள் நிறைந்த வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இதனால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். தாய், தந்தை வழி ஆதரவு உண்டு. பொருளாதாரம் உயரும். கடன்களை படிப்படியாக குறைப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
அனைத்து விதமான எதிர்பார்ப்புகளும் ஈடேறும். உடல் நலன்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். புதுவிதமான பொருட்களை வாங்க வேண்டும் என்கின்ற ஆசை அதிகமாக உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். புத்திர பிராப்த்தம் கிடைக்கும். 29.1.2026 அன்று மாலை 6.39 மணி முதல் 31.1.2026 அன்று இரவு 8.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பொறுமையும், நிதானமும் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் தன்னம்பிக்கை கூடும்.
தனுசு
செயல்திறன் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நல்ல சம்பவங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், களத்திரம் மூலம் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.
பொருளாதாரம் மேம்படும். பற்றாக்குறை பட்ஜெட் என்ற பேச்சிற்கே இடமில்லை. அக்கம், பக்கம் உள்ளவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். பூர்வீகச் சொத்திற்கு நல்ல விலை கிடைக்கும். சுப விரயங்கள் உண்டாகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். குடும்பத்துடன் ஆடம்பர விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் துன்பங்கள் விட்டு விலகும்.
மகரம்
லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறும் வாரம். ராசியில் ராசிக்கு 9ம் அதிபதியான புதனும் 10ம் அதிபதியான சுக்கிரனும் சேர்ந்து நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். விலகிச் சென்ற உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். உறவினர் பகை அகலும். தைரியம், தெம்பு அதிகமாகும். பூர்வீகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகும். திருமணத் தடை அகலும். புத்திர பிராப்தம் உண்டாகும். உடல் நிலை தேறும்.
அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடப்பெயர்ச்சி கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் முன்னேற்றங்கள் அதிகமாக இருக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு வீடு மாற்றம் செய்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பணத்திற்காக பிறரை அண்டிப் பிழைத்த நிலைமாறும். குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான சுற்றுப் பயணம் செய்வீர்கள். புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்
யோகமான பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி சனி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். பங்குச் சந்தை ஆதாயம் அதிகரிக்கும். இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து மோதல்கள் அகலும். பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். உங்கள் திறமையால் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். பெண்களுக்கு உடன் பிறப்புகளின் உதவியும் தாய் வழி ஆதரவும் கிடைக்கும். வேறு வேறு ஊர்களில் பணிபுரிந்த தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடப்பெயர்ச்சி நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஆர்வத்தில் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.
மீனம்
லாபகரமான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் சேர்ப்பது லாப ஸ்தானமாகும். அந்த வகையில் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை உள்ளது. முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். இதுவரை எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். அடிப்படை வசதி பெருகும். மதிப்பும், மரியாதையும் உயரும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை குறையும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும்.சொத்துப் பிரச்சினை சுமூகமாகும். உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள். இனிமை தரும் இடமாற்றங்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிய சிலர் மீண்டும் சொந்த மண்ணில் குடியேறும் வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் காரிய தடை அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூரிய பிரபையிலும், ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-11 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி இரவு 9.19 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : ரேவதி நண்பகல் 12.10 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், அம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்
இன்று ரத சப்தமி. ஸ்ரீ நமசிவாய மூர்த்தி நாயனார் குரு பூஜை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூரிய பிரபையிலும், ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலமாய் காட்சி. கோவை ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கானா முகத்தான் ஸ்ரீ சிவபெருமானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செய்தி
ரிஷபம்-பரிசு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-மேன்மை
சிம்மம்-இன்பம்
கன்னி-உழைப்பு
துலாம்- தனம்
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- பாசம்
மகரம்-பக்தி
கும்பம்-செலவு
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பணம் வந்து பையை நிரப்பும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.
ரிஷபம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறைமுக எதிர்ப்பு உண்டு. விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குணமறிந்து செயல்படுவது நல்லது.
மிதுனம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
சிம்மம்
விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். திட்டமிட்ட காரியத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.
கன்னி
இல்லம் தேடி நல்ல தகவல் கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் வெற்றியை தரும்.
துலாம்
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். இடமாற்றம் இனிமை தரும். வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
தனுசு
கல்யாண முயற்சி கைகூடும் நாள். மனக்குழப்பம் அகலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
மகரம்
யோகமான நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.
கும்பம்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு, வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.






