என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழா - 7 வாகனங்களில் ஏழுமலையான் உற்சவம்
    X

    திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழா - 7 வாகனங்களில் ஏழுமலையான் உற்சவம்

    • கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
    • பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனும் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக நடந்தது.

    கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    ரதசப்தமி முன்னிட்டு இன்று ஏழுமலையான் ஒரே நாளில் 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

    9 முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை தங்க கருட வாகனத்திலும், 1 முதல் 2 மணிவரை அனுமந்த வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார்.

    மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் விண்ணதிர கோஷம் எழுப்பினர். கற்பூரத்தை ஏற்றி தீபாரதனை செய்தனர்.

    மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடக்கிறது. தீர்த்த வாரிக்குப் பிறகு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவர்.

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    ரத சப்தமி விழாவை காண நேற்று முதல் பக்தர்கள் திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 5 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு 4 லட்சம் லட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் கூடுதலாக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி விழாவை முன்னிட்டு நேர ஒதுக்கீட்டு தரிசனம் மற்றும் வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.

    திருப்பதியில் நேற்று 76, 654 பேர் தரிசனம் செய்தனர். 34. 080 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.81 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×