என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமலைநம்பி கோவில்"

    • திருமலைநம்பி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
    • மருத்துவ குணம் கொண்ட இந்த நதியில் நீராட, நோய்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கை.

    வைணவ கோவில்களில் புராணங்களால் போற்றப்படும் முக்கியமான மலை, நம்பிமலை. பசுமைக்காடாக காட்சியளிக்கும் இம்மலை சித்தர்களின் சொர்க்கபுரியாகும். மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக் கூட்டத்துக்கு நடுவில் 'நம்பினோரை கைவிடேன்' என்று கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார். 'தங்கள் கஷ்டங்களை எல்லாம் நீக்கி வைப்பார்' என்ற நம்பிக்கையில் கரடு முரடான பாதையையும் கடந்து குழந்தைகளை தோளில் சுமந்தவாறு வரும் பக்தர்கள், நம்பியாற்றில் குளித்துவிட்டு நம்பியாண்டவரை தரிசிக்கிறார்கள்.

    திருமலைநம்பி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இதனருகே ஓடிவரும் நம்பியாறு, மகேந்திரகிரி மலையில் மாயவன் பரப்பு என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்றுகிறது. பின், கடையார் பள்ளம் வழியாக தாய்பாதம் தொட்டு, நம்பிகோவில் வந்துசேருகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த நதியில் நீராட, நோய்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு

    திருக்குறுங்குடியில் பாணர் குல பக்தன் ஒருவன் நம்பியின்மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தான். யாழை மீட்டி, பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாளை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புவான். இதுபோல் ஒருமுறை நம்பிபெருமானை மனதில் தியானித்துக்கொண்டே அடர்ந்த காடுகளில் பயணித்தான்.

    அப்போது, நடுவழியில் அவனை வழிமறித்த அரக்கன் ஒருவன், தனக்கு உணவாக வேண்டும் என்று மிரட்டினான். பாணன், "நான் இன்று ஏகாதசி விரதம் இருக்கிறேன். நம்பியை வணங்கிய பின்பு நானாக வந்து உனக்கு உணவாவேன்" என்றான். அரக்கனோ சந்தேகத்தோடு பார்த்தான். "சந்தேகப்படாதே. நான் வணங்கும் எம்பெருமானின்மீது ஆணையாக வந்துவிடுவேன்" என்றான், பாணன். அரக்கனும் சம்மதித்தான்.

    பாணன் அங்கிருந்து புறப்பட்டு, திருக்குறுங்குடி நம்பி கோவிலின் வாசலில் வந்து நின்றான். வைகுந்தனை இதயத்தில் நிறுத்தி, யாழை மெல்ல இசைக்கத் தொடங்கினான். அந்த காடு முழுவதுமே யாழிசை கேட்டு மயங்கியது. அரக்கனும் மெல்ல தன்னை இழந்தான். பாணன், 'கைசிகம்' எனும் உயர்ந்த பண்ணைப் பாடினான். இசையால் நம்பியைக் கரைத்தான்.

    கண் திறந்து பார்த்தால் பல நாழிகைகள் கடந்திருந்தது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே என்று காட்டிற்குள் நுழைந்தான். அப்போது வயோதிகராக காட்டில் தோன்றிய திருமலைநம்பி, பாணனின் முன் சென்று "யாரைத் தேடுகிறாய்?" என்று வினவினார். பாணன், "என்னை சாப்பிட வேண்டுமென்று ஒருவர் இங்கு காத்திருந்தார். அவரைத்தான் தேடுகிறேன்" என்றான்.

    "அவனோ அரக்கன். நீயோ கைசிகப் பண்பாடுபவன். அவனிடம் போய் மாட்டிக்கொள்ளாதே. எப்படியாவது தப்பித்துக் கொள்" என்று புத்தி கூறினார், வயோதிக வைகுந்தன். "எம்பெருமான் நம்பியின் பெயரால் வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் அதை நான் காப்பாற்றத்தான் செய்வேன்" என்ற பாணன் முன்னே சென்றான். வயோதிகரும் பின்தொடர்ந்தார்.

    ஒரு மரத்தடியில் நின்றிருந்த அரக்கனைக் கண்டவுடன் பாணன் முகம் மலர்ந்தான். ஆனால், அரக்கனோ பாணனின் முக ஒளியில் தன்னை மறந்தான். "உங்களைக் கண்டவுடன் என்னுள் இருக்கும் அரக்க குணங்கள் அழிந்து போய்விட்டது. நீங்கள் நம்பி கோவில்முன்பு நின்று கைசிகம் பாடியதை காதுகுளிரக் கேட்டேன். உங்களை மிரட்டியதற்காக வெட்கப்படுகிறேன். எனவே நான் பசியாற உங்கள் உடல் வேண்டாம். ஆனால், கைசிகப் பண் இசைத்த பலனை மட்டும் எனக்கு தாருங்கள்" என்று கெஞ்சினான்.

    ஆனால், ''வாக்களித்த மாதிரியே என்னை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று அரக்கனை நெருங்கினான், பாணன். அப்போது, பாணனை தடுத்த வயோதிகர், திடீரென நின்ற கோலத்தில் நம்பியாக விஸ்வரூபம் காட்டினார். அதேநேரத்தில், அரக்கனாக இருந்தவனும் மானிட உருபெற்று, தான் சோமசர்மா என்ற அந்தணனாக வாழ்ந்ததையும், வேள்விகளைத் தவறாகப் புரிந்ததற்காக அரக்கனாக மாறிவிட்டதையும், பாணனாகிய பரம பாகவதரின் தரிசனத்தால் சாபம் நிவர்த்தி அடைந்ததாகவும் கூறினான். வியப்பில் மயங்கி சாய்ந்த பாணனை, நம்பி தன்னருளால் அணைத்தார். அவனுக்கு 'நம்பாடுவான்' என்ற நாமமும் சூட்டினார்.

    இந்தச் சம்பவம் கார்த்திகை வளர்பிறை ஏகாதசி அன்று நடந்தது. ஆகவே, இந்த நன்னாளுக்கு 'கைசிக ஏகாதசி' என்று பெயர் வந்தது.

    சிறப்புகள்

    பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாசுரம் பாடப்பெற்ற சிறப்புடையது இக்கோவில். திருக்குறுங்குடியில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, அமர்ந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி என்ற நான்கு நம்பிகளுடன், மலைமேல் திருமலைநம்பி என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் நம்பி. ஒரே ஊரில் ஐந்து கோலத்தில் நம்பிகள் தரிசனம் கிடைப்பது அரிது.

    பெரும்பாலும் மலைக்கோவில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். அதுபோலவே மகேந்திரகிரி மலையும் மிகவும் சிறப்புப் பெற்றது. அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு நித்யவாசம் செய்வதாக நம்புகின்றனர்.

    மலைமேல் நடுக்காட்டுக்குள் இருக்கும் நம்பியை தரிசிக்க வரும் பக்தர்களையும், கோவிலையும் காவல் காக்கிறார், சங்கிலிபூதத்தார். கருடசேவை நடைபெறும் போது, சாமியாடும் சங்கிலிபூதத்தாரின் பக்தர்கள் சங்கிலியால் தங்களது உடலில் அடித்துக் கொள்வதைக் கண்டு பக்தர்கள் பரவசப்படுகின்றனர். வருடந்தோறும் 'கைசிக விருத்தாந்தம்' எனும் புராண நிகழ்ச்சி திருக்குறுங்குடி தலத்தில் நடந்து வருகிறது.

    கோவில் முன்பாக உள்ள பாலத்தினைக் கடந்ததும், இடப்புறம் உயரத்தில் திருமலைநம்பி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அதன்கீழே அடிவாரத்தில் ஒருபுற்று உள்ளது. அந்தப் புற்றை மக்கள் வணங்கி வருகிறார்கள். இதில் 201 சித்தர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தினமும் ஒருவர் வீதம் 201 சித்தர்களும் நம்பிக்கு பூஜை செய்த பிறகு அர்ச்சகர்கள் பூஜையைத் தொடர்வார்களாம்.

    திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள். திருப்பதிக்கு ஏழு ஏற்றம் இருப்பது போலவே திருமலைநம்பி கோவிலுக்கு செல்லவும் ஏழு ஏற்றம் இருக்கிறது. எனவே இவரை நம்பி, மலை மீது ஏறினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    விழாக்கள்

    வைணவக் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால், திருமலை நம்பிகோவிலில் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கருடசேவை நடக்கிறது. இந்நிகழ்வு எந்த கோவிலிலும் நடைபெறாத அற்புத நிகழ்வாகும். அதுபோல, ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆனால் நம்பிமலையில் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமை தான் உறியடி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இங்கு வரும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு மலை மீது ஏறுவார்கள். நம்பியாற்றில் குளித்து, நம்பி ஆண்டவரை தரிசித்துவிட்டு, ஊறியடி விழாவை காண காத்துகிடப்பார்கள். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள்.

    தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். சனிக்கிழமை தோறும் கருட சேவை நடைபெறுவதால் அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை நடை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் - களக்காடு சாலையில் திருக்குறுங்குடி உள்ளது. அங்கிருந்து ஆட்டோ மூலம் மலை அடிவாரத்துக்கு சென்று, அங்கிருந்து மலை ஏற வேண்டும். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து திருக்குறுங்குடிக்கு பஸ் வசதி உண்டு. திருக்குறுங்குடியில் இருந்து மலைக்கு ஜீப் மூலமாக ஏறியும் கோவிலுக்கு செல்லலாம்.

    காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணை, திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் களக்காடு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் உத்தரவின் பேரில் தலையணைக்கு செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணைக்கு செல்லும் வாயில் மூடப்பட்டு, வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல 2-வது நாளாக இன்று தடைவிதித்தனர்.

    மேலும் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு-நாகர்கோவில் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் நாங்குநேரியான் கால்வாயில் செல்லும் தண்ணீர் உப்பாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    களக்காடு தாமரை குளத்தின் நடுமடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொதுப் பணித்துறையினர் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×