என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார்
    • அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் க்ரெய்க் வீட்டிற்கு வாரண்டுடன் சென்றனர்

    அமெரிக்காவின் மேற்கில் உள்ள மாநிலம் உடா. இங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் புலனாய்வு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ வென்ற ஆதரவாளர்களும், இப்போதைய அதிபர் ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடா மாநிலத்தை சேர்ந்த தீவிர ட்ரம்ப் விசுவாசியான க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பவர் முகநூலில் பைடனை குறித்து தீவிரமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

    2022-ல் தனது பதிவு ஒன்றில், "அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா" என குறிப்பிட்டிருந்தார்.

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அதனால் அவரையும் கொல்லப்போவதாக ராபர்ட்ஸன் கூறி வந்தார்.

    இரு தினங்களுக்கு முன், தனது முகநூல் பதிவில் அதிபர் பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் வேளை வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    இது மட்டுமின்றி அவரது முகநூல் கணக்கில் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இதனையடுத்து உடா மாநிலத்தில் உள்ள ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது வாரண்டுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர்.

    அங்கு நடைபெற்ற நடவடிக்கையில் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

    ராபர்ட்ஸன் மீது அச்சுறுத்தல் குற்றம், அதிபருக்கெதிரான மிரட்டல் குற்றம், தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கடமையாற்றும்போது அவர்களை இடைமறித்து கடமையை செய்ய விடாமல் தடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அமெரிக்காவை மீண்டும் பெருமைக்குரியதாக மாற்றுவோம் என பொருள்படும் மாகா (Making America Great Again) முழக்கத்தை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இந்த முழக்கத்தை ஆதரிப்பவராகவும், தன்னை ஒரு டிரம்ப் விசுவாசியாகவும் அறிவித்து கொண்டவர் க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

    க்ரெய்க் சுட்டு கொல்லப்பட்ட சூழ்நிலையின் முழு விவரங்களும் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

    • அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ளது மவுயி தீவு.
    • இந்தத் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் இறந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது.

    வேகமாக வீசி வரும் காற்றினால் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.

    இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன்- ரஷியா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை
    • உக்ரைனில் இருந்து தானியம் ஏற்றுமதி ஆவதற்கு ரஷியா தொடர்ந்து முட்டுக்கட்டை

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஜி-20 மாநாட்டில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதுதான் முக்கிய தலைப்பாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ''எங்களுடைய கூட்டணி நாடுகளுடன் நடைபெறும் உரையாடலில் உக்ரைன் போர் குறித்ததுதான் முக்கிய தலைப்பாக இருக்கும். இனிவரும் உரையாடல்களில் இதற்குதான் முக்கியத்துவம். ஜி-20 மாநாட்டில் இது உண்மையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை'' என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

    ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு ரஷியா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இது உலகளவில் தானிய தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மயக்கம் தெளிந்த பல பெண்களுக்கு என்ன நடந்தது என நினைவில்லை.
    • புகார் அளிக்கப்பட்டதையடுத்து டாக்டர் செங்கை மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.

    அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி புரிந்தவர் 33 வயதான ஜி ஆலன் செங் (Zhi Alan Cheng). இவரது இல்லம் அஸ்டோரியா பகுதியில் உள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், தனது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் டாக்டர் செங். அங்கு அவரை மயக்கமடைய செய்திருக்கிறார்.

    மயக்கம் தெளிந்து அப்பெண்ணுக்கு நினைவு திரும்பியது. ஆனால் தனக்கு என்ன நடந்தது என அவருக்கு நினைவில்லை.

    அங்கு அவருக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதில் டாக்டர் செங் அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருந்தன. இவை மட்டுமின்றி டாக்டர் செங் மேலும் சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் அதில் பதிவாகியிருந்தது.

    இது குறித்து அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து டாக்டர் செங்கை அந்த மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.

    இந்த விசாரணையின் போது டாக்டர் செங்கின் அலைபேசி, லேப்டாப் உள்ளிட்ட உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டாக்டர் செங், தான் வேலை செய்து வந்த மருத்துவமனையிலும், வீட்டிலும் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது பதிவாகியிருந்தது.

    இதனையடுத்து அவரது வீட்டை சோதனை செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஃபென்டனில், கீடமைன், எல்எஸ்டி மற்றும் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உட்பட பல போதை மருந்துகளும் சிக்கின.

    தற்போது அவர் மீது சுமார் 50 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், போதை பொருள் வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோதமாக பிறரை கண்காணிப்பது உட்பட பல பிரிவுகள் அடங்கும்.

    விசாரணையில் டாக்டர் செங் பெண்களை திரவ மயக்க மருந்துகளின் மூலம் மயக்கமடைய செய்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

    வீடியோவில் உள்ள பதிவுகளின்படி சில பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது.

    மருத்துவமனையில் டாக்டர் செங் துன்புறுத்திய ஒரு பெண் உட்பட அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்களை காவல்துறை கண்டறிய முயற்சிப்பதாகவும், தாய்லாந்து, நியூயார்க், லாஸ் வேகாஸ், ஸான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல் அறைகளிலும், வீடுகளிலும் இவரால் பாதிக்கப்பட்ட 5 பேரை காவல்துறை தேடி வருவதாகவும் தெரிகிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டாக்டர் செங் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வரவிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    • நாங்கள் மனித உரிமை மீறல் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் எப்போதும் பேசுகிறோம்

    அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தியாகிகளின் குரல் (Voice of Martyrs) எனும் அமைப்பு, உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை பதிவு செய்து அத்தகைய செயல்கள் நடைபெறும் நாட்டின் அரசாங்கங்களிடம் இவற்றை குறித்து விளக்கங்கள் கேட்க அமெரிக்காவை வலியுறுத்தும்.

    சில நாட்களுக்கு முன், இந்த அமைப்பு, தனது அதிகாரபூர்வ இணையதளமான பெர்ஸிக்யூஷன்.காம் (persecution.com) எனும் தளத்தில் "இந்தியாவில், பிற மதங்களை சேர்ந்தவர்களை தங்கள் மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவர்கள் கடுமையாக துன்புறுத்தப்படுகிறார்கள்" என தகவல் வெளியிட்டிருந்தது.

    3 நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7 அன்று இந்தியாவிற்கு வருகை புரிந்து புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் (Matthew Miller) ஜோ பைடனின் இந்திய வருகை மற்றும் மத துன்புறுத்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் மனித உரிமை மீறல் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பும் பேசியிருக்கிறோம். எதிர்காலத்திலும் பேசுவோம். மத ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து அமெரிக்கா எப்போதும் குரல் கொடுக்க தயங்காது.

    கிறித்துவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா உட்பட உலகின் எந்த பகுதியிலும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இனியும் அவ்வாறே எதிர்த்து குரல் கொடுப்போம்.

    இவ்வாறு மேத்யூ தெரிவித்தார்.

    • நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார்.
    • டிரம்பின் அவதூறு வழக்கை நீதிபதி லூயிஸ் கப்லான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 1990-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார்.

    இது தொடர்பான வழக்கில், கற்பழிப்பு குற்றச்சாட்டை நிராகரித்து கோர்ட்டு, ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக டிரம்ப் பொறுப்பேற்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அறிவித்தது. மேலும் கரோலுக்கு டிரம்ப் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

    ஆனால் அதை திட்டவட்டமாக டிரம்ப் மறுத்தார். மேலும் ஜீன் கரோல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் நடந்தது. இதில் டிரம்பின் அவதூறு வழக்கை நீதிபதி லூயிஸ் கப்லான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிரம்ப் மீதான ஜீன் கரோலின் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கணிசமான உண்மை இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

    • தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
    • தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    புயல் தொடர்பாக தேசிய வானிலை மையம் கூறும்போது, சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    வாஷிங்டன்-பால்டி மோர் பிராந்தியம், புயல் தாக்குதலில் முக்கிய பகுதியாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தது. மேலும் இன்று வரை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும் தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க் வாஷிங்டன், பில்டெல்பியா அட்லாண்டா, பால்டிமோர் விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதை நிறுத்தி வைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.

    2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்தன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    • புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர்
    • இறந்த குழந்தைக்கு எவ்வளவு வயது என்ற தகவல் வெளியிடப்படவில்லை

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது பிரபல மவுண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா.

    இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும் இரைப்பை குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர். மேலும், மவுண்ட் ஸினாய் குயின்ஸ் செண்டரில் நிலைய தலைவராகவும், இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பதவிகள் வகித்தார். இவருக்கு ஒரு குழந்தை உண்டு.

    டாக்டர்.கிரிஸ்டலின் இல்லம் நியூயார்க் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் உள்ளது.

    டாக்டர். கிரிஸ்டலுடன் அவ்வீட்டில் வசிக்கும் ஒருவர், நேற்று முன் தினம் காலை சுமார் 7.00 மணியளவில், குழந்தையின் அறையில் பலத்த சத்தம் ஒன்றை கேட்டார். ஏதோ பெரிய பொருள் விழுந்ததாக நினைத்து அவர் உள்ளே பார்க்க சென்றார். அவர் அறைக்கு செல்லும் முன், அதே போன்று மற்றொரு சத்தமும் கேட்டது.

    அவர் விரைந்து சென்று அந்த அறையில் பார்த்த போது டாக்டர். கிரிஸ்டல் மற்றும் அவரின் குழந்தை இருவரும் துப்பாக்கி சூட்டில் இறந்திருப்பது தெரிந்தது.

    தன் குழந்தையை சுட்டு கொன்று விட்டு, தன்னையும் சுட்டு கொண்டு டாக்டர். கிரிஸ்டல் உயிரிழந்தார்.

    "டாக்டர். கிரிஸ்டல் மற்றும் அவரது குழந்தையின் இழப்பினால் மவுண்ட் ஸினாய் மருத்துவ சமூகம் மிகவும் வேதனை அடைந்துள்ளது. அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என இத்துயர சம்பவம் குறித்து மவுண்ட் ஸினாய் மருத்துவமனை இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    இறந்த குழந்தைக்கு எவ்வளவு வயது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. டாக்டர். கிரிஸ்டல் எதற்காக இத்தகைய முடிவை எடுத்தார் என்றும் தெரியவில்லை.

    ,இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்டவரிடம் போட்டோவை காண்பித்து, அதன்மூலம் கைது நடவடிக்கை
    • கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒரு கர்ப்பிணி என, பாதிக்கப்பட்டவர் குறிப்பிடவில்லை என்பதால் சிக்கல் ஏற்பட்டது

    அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள நகரம் டெட்ராய்ட்.

    கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் சேர்ந்து தனது காரில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு அப்பெண் பலருடன் பேசினார்.

    பிறகு அப்பெண்ணும் ஆணும் வேறொரு இடத்திற்கும் சென்றுள்ளனர். அந்த இடத்திற்கு அந்த பெண்ணுடன் பெட்ரோல் நிலையத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் வந்தனர். அங்கு அவர்களும், அப்பெண்ணும், அந்த ஆணை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடமிருந்த பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடித்தனர்.

    இதனையடுத்து அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

    இதற்கிடையே அந்த நபரின் செல்போன், அந்த பெட்ரோல் நிலையத்தில் 2 நாட்களுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கை லஷான்ஷியா ஆலிவர் (LaShauntia Oliver) எனும் அதிகாரி விசாரித்தார்.

    பெட்ரோல் நிலையத்தில் செல்போனை ஒப்படைத்தது ஒரு பெண் என கண்டறிந்த ஆலிவர், அந்த பெண்ணை கண்டறிய பாதிக்கப்பட்ட நபரிடம், பல பெண்களின் புகைப்படங்களை காண்பித்தார். அதில் அந்த ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காட்டினார்.

    இதனையடுத்து பிப்ரவரி 16 அன்று, 2 குழந்தைகளுக்கு தாயான போர்ச்சா வுட்ரஃப் (32 வயது)  என்ற ஒரு கர்ப்பிணியை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், போர்ச்சா சுமார் ரூ.82 லட்சம் ($1,00,000) ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்த நடவடிக்கையினால் அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும்படி நேர்ந்தது.

    பிறகு மார்ச் 6-ல் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட ஆண், தன்னிடம் கொள்ளையடித்த பெண் ஒரு கர்ப்பிணி என குறிப்பிட்டதாக காவல்துறை அறிக்கையில் இல்லை. எனவே தான் தவறாக கைது செய்யப்பட்டதை உணர்த்த இதுவே போதுமானது என்பதால் அந்த புலனாய்வு அதிகாரி மற்றும் காவல்துறை மீது போர்ச்சா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    "இது மிகவும் கவலைக்குரியது" என இது குறித்து டெட்ராய்ட் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

    ஆனால், புலனாய்வு அதிகாரி ஆலிவர், இது பற்றி கருத்து எதுவும் கூறவில்லை.

    வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்வதற்கு பதிலாக அவர் பெயர் கொண்ட ஒரு அப்பாவி பெண்ணை போலீசார் கைது செய்ததும், நீண்ட அலைக்கழிப்பிற்கு பிறகு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டதும் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோவில் ஒரே ஒரு இளம்பெண் மட்டும் வாலிபரின் மடியில் அமர்ந்திருப்பது போன்று காட்சிகள் உள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் லஸ்டின் இமானுவேல். மசாஜ் ஊழியரான இவருக்கு 28 வயதாகிறது. சமூக ஊடகங்களில் பிரபலமானவராக திகழும் இவர் கடந்த 31-ந்தேதி 10 இளம்பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இந்த திருமண விழாவை அவர் கடற்கரையில் தனது 10 மனைவிகளுடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார். மேலும் இதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர் இன்று, 10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன். அனைவரும் தற்போது என் மனைவிகள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், லஸ்டின் இமானுவேலை 9 இளம்பெண்கள் வெள்ளை நிற ஆடையில் கையில் பூங்கொத்துடன் சுற்றி வருகிறார்கள். ஒரே ஒரு இளம்பெண் மட்டும் அவரது மடியில் அமர்ந்திருப்பது போன்று காட்சிகள் உள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • பேபி ப்ளூஸ் எனும் மனநிலை மாற்றங்களில் அழுகை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் அடங்கும்
    • 7 தாய்மார்களில் ஒருவருக்கு எனும் விகிதத்தில் இது தாக்குகிறது

    பிரசவகாலம் என்பது பெண்களின் வாழ்வின் முக்கியமான பருவம். பிரசவத்திற்கு பிறகு தாயான சந்தோஷ உணர்வும், பிறந்த குழந்தையை குறித்த எண்ணங்களுமே தாய்மார்களின் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும்.

    ஆனால் ஒரு சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு "பேபி ப்ளூஸ்" (baby blues) எனப்படும் சில மன அழுத்த அறிகுறிகள் தோன்றுகின்றன. இதில் மனநிலை மாற்றங்கள், அழுகை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் அடங்கும்.

    பொதுவாக இந்த அறிகுறிகள் பிரசவத்திற்குப் பிறகு முதல் 2 முதல் 3 நாட்களுக்குள் தொடங்கி 2 வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.

    ஆனால் சில பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வு, நீண்டகால மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அரிதாக ஒரு சிலருக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனநோய் எனப்படும் தீவிர மனநிலைக் கோளாறாக இது மாறலாம்.

    ஒவ்வொரு ஆண்டும் 7 தாய்மார்களில் ஒருவருக்கு எனும் விகிதத்தில் இது தாக்குகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை அமெரிக்காவில், மகப்பேற்றுக்கு பிறகான இந்த மனச்சோர்வுக்கான சிகிச்சை, நரம்புவழி ஊசி வடிவில் மட்டுமே கிடைத்து வருகிறது.

    ப்ரெக்ஸனலோன் (Brexanolone) எனப்படும் இந்த ஊசி வடிவிலான சிகிச்சையை பெற தாய்மார்கள், மருத்துவமனையில் தங்க வேண்டும். இதற்கான சிகிச்சை காலம் 60 மணி நேரம் ஆகும். இதற்கான செலவு, ரூ.28 லட்சம் ($34,000) வரை ஆகும்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் பகுதியை சேர்ந்த பயோஜென் அண்ட் ஸேஜ் தெராப்யூடிக்ஸ் நிறுவனம், ஜுர்ஜுவே (Zurzuvae) என பெயரிட்டு முதல்முதலாக ஒரு மாத்திரை வடிவிலான தீர்வை, இந்நோய்க்கு கண்டுபிடித்திருக்கிறது.

    இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகாரம் வழங்கியுள்ளது. கூடிய விரைவில் இது சந்தைக்கு விற்பனைக்கு வரும்.

    ஒரு நாளைக்கு ஒன்று என 14 நாட்கள் எடுத்து கொள்ள வேண்டிய இந்த மாத்திரைக்கான விலை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

    ஊசி வடிவில் கிடைத்த சிகிச்சையால் ஏற்பட்டு வந்த சிரமங்கள் குறையும் என்பதால் பல தாய்மார்களுக்கு இந்த செய்தி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

    • உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின் கால்கள் அருகே அமர்ந்து கொண்டார்
    • மார்க்கின் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    அமெரிக்கவில், மார்க் ஆன்டனி கோன்ஸாலஸ் (26) என்பவர் ஒரு புது வகையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ளது ஸ்டேட்லைன் ரிசார்ட் எனும் குடியிருப்பு பகுதி. இங்கு ஜூலை 1-லிருந்து 3-ம்தேதி வரை அதிகாலை நேரங்களில் பூட்டப்படாத 2 தனித்தனி குடியிருப்புகளுக்குள் மார்க் புகுந்திருக்கிறார்.

    அந்த வெவ்வேறு வீடுகளிலும் ஒரே குற்றத்தை புரிந்திருக்கிறார்.

    முதலில் அவர் பூட்டப்படாத ஒரு வீட்டின் உள்ளே சென்றார். அங்கு உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின் கால்கள் அருகே அமர்ந்து கொண்டார். பிறகு அந்த பெண்ணின் உள்ளங்கால்களை நீண்ட நேரம் தடவினார். கால்களை ஏதோ உரசுவது போன்ற உணர்வில் அப்பெண் உறக்கம் கலைந்து எழுந்தார். கட்டிலுக்கருகே ஒருவன் அமர்ந்திருப்பதை கண்ட அப்பெண் திடுக்கிட்டு கூக்குரலிட்டார். உடனே மார்க் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதேபோன்று அதே குடியிருப்பு பகுதியில் உள்ள மற்றொரு பெண் வீட்டிலும் நுழைந்து மார்க், இவ்வாறு நடந்து கொண்டார்.

    மார்க் பல குற்றங்களுக்காக கலிபோர்னியா காவல்துறையால் முன்பே அறியப்பட்டவர். அவர் மீது பெண்கள் காலணி திருட்டு, அத்துமீறி உள்ளே நுழைதல், மற்றும் அத்துமீறி நுழையும் இடங்களில் பாலியல் ஆசைகளை முறையற்ற வழியில் தீர்க்க முற்படுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

    அவரின் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து ஆகஸ்ட் 1-ந்தேதி, அத்துமீறி உள்ளே நுழைதல் மற்றும் அத்துமீறி பிறரை தீண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக மார்க் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

    இதனையடுத்து மெர்செட் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நிவேடா மாநில டக்ளஸ் கவுன்டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார். "இதுபோன்ற குற்றங்கள் சமூகத்திற்கு ஆபத்தானவை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால்தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்," என இச்சம்பவம் குறித்து டக்ளஸ் கவுன்டி ஷெரீப் டான் கவர்லி கூறினார்.

    ×