search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டு கொலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டு கொலை

    • அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார்
    • அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் க்ரெய்க் வீட்டிற்கு வாரண்டுடன் சென்றனர்

    அமெரிக்காவின் மேற்கில் உள்ள மாநிலம் உடா. இங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் புலனாய்வு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ வென்ற ஆதரவாளர்களும், இப்போதைய அதிபர் ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடா மாநிலத்தை சேர்ந்த தீவிர ட்ரம்ப் விசுவாசியான க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பவர் முகநூலில் பைடனை குறித்து தீவிரமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

    2022-ல் தனது பதிவு ஒன்றில், "அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா" என குறிப்பிட்டிருந்தார்.

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அதனால் அவரையும் கொல்லப்போவதாக ராபர்ட்ஸன் கூறி வந்தார்.

    இரு தினங்களுக்கு முன், தனது முகநூல் பதிவில் அதிபர் பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் வேளை வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    இது மட்டுமின்றி அவரது முகநூல் கணக்கில் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இதனையடுத்து உடா மாநிலத்தில் உள்ள ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது வாரண்டுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர்.

    அங்கு நடைபெற்ற நடவடிக்கையில் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

    ராபர்ட்ஸன் மீது அச்சுறுத்தல் குற்றம், அதிபருக்கெதிரான மிரட்டல் குற்றம், தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கடமையாற்றும்போது அவர்களை இடைமறித்து கடமையை செய்ய விடாமல் தடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அமெரிக்காவை மீண்டும் பெருமைக்குரியதாக மாற்றுவோம் என பொருள்படும் மாகா (Making America Great Again) முழக்கத்தை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இந்த முழக்கத்தை ஆதரிப்பவராகவும், தன்னை ஒரு டிரம்ப் விசுவாசியாகவும் அறிவித்து கொண்டவர் க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

    க்ரெய்க் சுட்டு கொல்லப்பட்ட சூழ்நிலையின் முழு விவரங்களும் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

    Next Story
    ×