என் மலர்
அமெரிக்கா
- 4 மாணவர்களை கீழே தள்ளி விட்டனர்; ஒருவரை முகத்தில் குத்தினர்
- பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது ஆபர்ன் ரிவர்சைடு (Auburn Riverside) உயர்நிலை பள்ளி.
கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 01:00 மணியளவில் 6 முகமூடி அணிந்த நபர்கள், அப்பள்ளியின் பக்கவாட்டில் உள்ள கதவுகளின் வழியாக அப்பள்ளிக்குள் திடீரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் வேக வேகமாக அப்பள்ளியின் பல இடங்களுக்கு ஓடி, பல பள்ளி மாணவர்களை தாக்க தொடங்கினர்.
4 மாணவர்களை கீழே தள்ளிய அவர்கள், ஒரு மாணவனின் முகத்தில் குத்து விட்டனர். இதையடுத்து அங்குள்ள மாணவர்கள் பயத்தில் அங்குமிங்கும் ஓட தொடங்கினர்.
இதை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அந்த முகமூடி மனிதர்களை துரத்த தொடங்கினர். அவர்களை கண்டதும் அந்த முகமூடிகள் பின்வாங்கி பள்ளியை விட்டு ஓடி விட்டனர்.
அவர்கள் சென்றதும் உடனடியாக அந்த பள்ளியின் அனைத்து கதவுகளும் அடைத்து பூட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
அன்றிலிருந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மனதளவில் பாதிப்படைந்துள்ள அவர்களில் பெரும்பாலானோர் ஒட்டு மொத்தமாக வகுப்பிற்கு வரவில்லை.
செவ்வாய்கிழமையிலிருந்து மொத்தம் 532 மாணவ மாணவியர் பள்ளியிலிருந்து விடுப்பில் உள்ளதாக அம்மாவட்ட கல்வி துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.
மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்த முகமூடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார் அந்த முகமூடி அணிந்து வந்த நபர்கள் என்பதும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.
- பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தாக்குதலை தாமதப்படுத்த ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியானது
- ஜோ பைடன் கேள்வியை சரியாக கேட்கவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம்
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில் பலரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
பிணைக்கைதிகளின் நிலைமை என்ன? என்ற நிலையில், நேற்று பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பெண்களை ஹமாஸ் விடுவித்தது.
இதற்கிடையே, காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதலை தொடரலாம்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இரண்டு பேரை விடுவித்த நிலையில், மேலும் பலரை விடுவிக்கும்வரை தாக்குதலை சற்று தாமதப்படுத்துங்கள் என இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானது.
இதனால் காசாவில குண்டுமழை சத்தம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜோ பைடன் அவ்வாறு கேட்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ''ஜோ பைடன் முழு கேள்வியையும் கேட்கவில்லை. மேலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பார்க்கிறீர்களா? என்பதுபோல்தான் அவருக்கு கேட்டது. அவர் எதுகுறித்தும் பதில் சொல்லவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிருபர் ஒருவர், காசா மீதான தாக்குதலை குறைக்க இஸ்ரேலிடம் வலியுறுத்துவீர்களா? என்று கேட்க, ஜோ பைடன் ஆம் என்று பதில் அளித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- 41 தூதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றது
- சர்வதேச சட்ட விதியை இந்தியா மீறியதாக கனடா விமர்சனம்
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா- கனடா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வு அமைப்பிற்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்த கனடா, உயர் அதிகாரியை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. இந்தியாவும் பதிலடியாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்ற காலக்கெடு விதித்தது.
இந்த நிலையில் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுளளது. இதுபோன்று முன்னதாக நடந்தது இல்லை எனத் தெரிவித்த கனடா, சர்வதேச சட்டத்தை இந்தியா மீறியதாகவும் தெரிவித்தது.
அதேவேளையில் இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த நிலையில் கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில் ''இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டது எங்களுக்கு கவலை அளிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ''இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் 41 தூதரக அதிகாரிகள் வெளியேறியுள்ளதால் இந்தியாவின் பல நகரங்களில், கனடா தூதரகம் இயங்காமல் உள்ளது.
இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள் ''இந்தியாவுடடான உறவை அமெரிக்கா, இங்கிலாந்து மோசமடைய விரும்பாது. ஏனென்னால் ஆசிய கண்டனத்தில் முக்கிய எதிரியாக திகழும் சீனாவிற்கு பதிலடிகொடுக்க இந்தியா அவர்களுக்கு முக்கியமான நாடாக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர்.
- இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என்பதில் ஜோ பைடன் உறுதியாக உள்ளார்
- பயங்கரவாதம், சர்வாதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து கடுமையான வகையில் பேச்சு
ரஷியா- உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனுக்கும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் இஸ்ரேலுக்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போரை நிறுத்துவதற்கு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இஸ்ரேலுக்கு துணை நிற்போம் எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது, உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க தலைமை உலகத்தை ஒன்றிணைத்து வைத்துள்ளது. இரண்டு முற்றிலும் மாறுபட்ட, கணிக்க முடியாத, ரத்தக்களரி போர்களுக்கு மத்தியில் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
பயங்கரவாதிகள் அவர்களுடைய தாக்குதலுக்கு விலை கொடுக்காதபோது, சர்வாதிகாரிகள், அவர்களுடைய ஆக்கிரமிப்புகளுக்கு விலை கொடுக்காத போது, அவர்கள் மேலும் குழப்பத்தையும், உயிரிழப்புகளையும், இன்னும் அதிகமான அழிவுகளையும் ஏற்படுத்துவார்கள் என்பதை வரலாறு நமக்கு கற்றுத்தந்துள்ளது.
அவர்கள் தொடர்ந்து செல்கிறார்கள். அதன் விளைவு மற்றும் அச்சுறுத்தல் அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிகரித்து கொண்டிருக்கிறது'' என்றார்.
மேலும், பாராளுமன்றத்தில் 105 பில்லியன் அமெரிக்க டாலர் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் 14 பில்லியன் டாலர் இஸ்ரேலுக்கும், 10 பில்லியன் குறிப்பிடப்படாத மனிதாபிமான உதவிக்கும், 14 பில்லியன் அமெரிக்கா- மெக்சிகோ எல்லையை நிர்வகிக்கவும், 60 பில்லியன் டாலர் அளவில் உக்ரைனுக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை மீண்டும் நிரப்பவும், 7 பில்லியன் டாலர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போரை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றனர்.
- அமெரிக்க பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் அமைப்புக்கும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது.
தாக்குதல்களை நிறுத்தக் கோரி பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்குள்ள கேனான் ரோட்குண்டா பகுதியை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போரை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றனர்.
இதையடுத்து பாராளுமன்ற நுழை வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரதான நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பாதைகளுக்கு பதிலாக சுரங்கப் பாதைகளை பயன்படுத்துமாறு பாராளுமன்ற ஊழியர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி சென்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 300 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.
காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக யூத அமைப்பு உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்கள் பாராளுமன்ற கேனான் கட்டிடத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க அதிபர் ஜோபைடன் பாராளுமன்றத்துக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
அமெரிக்க பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- சாலை விதிமீறல் அமெரிக்காவில் குற்றமாக கருதப்படுகிறது
- சிகப்பு விளக்கு எரிவதை கண்டும் சாலையை அப்பெண் கடந்தார்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பினெல்லஸ் கவுன்டி (Pinellas County) பகுதியில் உள்ளது க்ளியர்வாட்டர் (Clearwater) நகரம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ள ஒரு டிராபிக் சிக்னல் அருகே 32 வயதான ஒரு பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதசாரிகள் சாலையை கடக்க முயல்வதை தடுக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பெண் அதை பொருட்படுத்தாமல் சாலையை கடக்க முயற்சித்தார்.
சாலை விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை தீவிரமாக வலியுறுத்தும் அமெரிக்காவில் இந்த விதிமீறல் குற்றமாக கருதப்படுவதால், அங்குள்ள டிராபிக் காவல் அதிகாரி நிகோலஸ் பலோமா (29) அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.
அப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிகோலஸ், அப்பெண்ணை தனது காரில் ஏற சொன்னார். தயங்கிய அப்பெண்ணிடம், சாலை விதிமீறலுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க தனது பாலியல் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்கி கொண்ட அப்பெண்ணை தனது காரில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டார். பிறகு அப்பெண் தங்கியிருந்த ஓட்டலில் அவரை இறக்கி விட்டு சென்று விட்டார். குற்றம் செய்தவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அப்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் அப்பெண்ணுக்கும் அவரது நண்பருக்கும் இடையே நடந்த ஒரு மோதலை தீர்க்க காவல்துறையினர் சென்றிருந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.
தங்கள் துறையை சேர்ந்த ஒருவரே பெருங்குற்றம் புரிந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நிகோலஸை வலைவீசி தேடி வந்தனர்.
இறுதியாக நேற்று அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே 3-வயது மகள் உள்ளார்
- இதற்கு சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்று அல்லது 20 கோடியில் ஒன்று
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் வசித்து வருபவர்கள் ஹேலி கோர்டாரோ மற்றும் மேத்யூ கோர்டாரோ தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 3-வயது மகள் உள்ளார்.
மீண்டும் கர்ப்பமடைந்திருந்த ஹேலி அம்மாநிலத்தின் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் உள்ள தெற்கு வில்லிஸ்-நைட்டன் பெண்கள் உடல்நல மையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
ஹேலி கர்ப்பமுற்று 31 வாரங்கள் கடந்திருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையில் பிரசவம் நடைபெற்றது. அவருக்கு ஒரே நேரத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. இதில் கோர்டாரோ தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குழந்தைகளை அந்த மருத்துவமனையின் டாக்டர். ஜெரால்டு பிரென்ட் விட்டன் கண்காணித்து வருகிறார்.
இது போன்ற கருத்தரிப்புகள் "தன்னிச்சையான கருத்தரிப்பு" (spontaneous triplets) என மருத்துவ மொழியில் அழைக்கப்படுகிறது. இத்தகைய கருத்தரித்தல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்றாகவோ அல்லது 20 கோடியில் ஒன்றாகவோதான் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
க்ளேர், எல்லா மற்றும் லில்லி என பெயரிடப்பட்டுள்ள அந்த 3 பெண் குழந்தைகளும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.
- ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்ஐ5 தலைவர் உரையாற்றினார்
- உலகையே மாற்றும் கண்டுபிடிப்புகளை சொந்தமாக்கி கொள்ள முயல்கின்றனர்
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு, ஐந்து கண்கள் எனப்படும் "ஃபை ஐஸ்" (Five Eyes).
இந்த 5 நாடுகளில் உள்ள பெருவணிக நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள், தொழில் ரகசியங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மென்பொருள் தரவுகளை சீனா மறைமுகமாக கைப்பற்றி வருவதாக "ஃபை ஐஸ்" குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) நடைபெற்ற ஒரு சந்திப்பில் இங்கிலாந்தின் உளவு பிரிவான எம்ஐ5 (MI5) அமைப்பின் தலைவர் கென் மெக்கல்லம் (Ken McCallum) உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
மிக பரந்த அளவில் மிக மிக முக்கிய தொழில்நுட்பங்கள் களவாடப்படுகின்றன. அரசாங்கத்தின் ரகசியங்களை உளவாளிகள் கைப்பற்றுவதுதான் இதுவரை நடந்து வந்தது. ஆனால் தற்போது சிறு மற்றும் "ஸ்டார்ட் அப்" நிறுவனங்கள் மற்றும் பெரும் பல்கலைகழகங்கள் ஆகியவை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் திருடப்படுகின்றன. சமூக வலைதளங்களில் இங்கிலாந்தில் உள்ள மக்களை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன உளவாளிகள் குறி வைத்து அவர்களிடம் நட்பை வளர்த்து செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நுட்பமான நுண்ணிய முக்கிய தகவல்களை கேட்டு பெறுகிறார்கள். கண்டறிய கடினமான முறையில் தங்கள் செயல்பாட்டை மறைத்து கொண்டு சீனர்கள் செயல்படுகின்றனர். உலகையே மாற்றும் சாத்தியம் உள்ள இத்தகைய கண்டுபிடிப்புகளை தங்களுக்கே சொந்தமாக்கி கொள்ள மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் பெறும் தகவல்களை கொண்டு நாடுகளுக்கு இடையேயான அரசியல்களிலும் ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் அவர்கள் விரும்பும் அழிவை கொண்டு வரவும் முடியும்.
இவ்வாறு கென் தெரிவித்தார்.
ஃபை ஐஸ் அமைப்பின் மற்ற தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
- ஜோர்டானில் பேச்சவார்த்தை ரத்து செய்யப்பட்ட போதிலும் இஸ்ரேல் சென்றுள்ளார்
- இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. மேலும், 100-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
காசாவை ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் இருப்பதால், இது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
அரபு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக ஜோர்டானில் இன்று அரபு நாட்டு தலைவர்களுடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார்.
இஸ்ரேல் சென்று, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பின், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அரபு நாட்டு தலைவர்கள் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்ற செய்தி வெளியானது. எங்களால் போரை முடிவுக்கு கொண்டுவர இயலாது என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக ஜோர்டான் தெரிவித்தது.
இருந்தாலும், திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்துள்ளார். அவரை பெஞ்சமின் நேதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார்.
ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.
என்றபோதிலும், இஸ்ரேலிடம் காசா மீதான கண்மூடித்தனமான தாக்குதலை குறைக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியை ஊக்குவிக்கவும் பைடன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- ஜிம் ஜோர்டான் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.
- தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டான் சந்தித்து பேசினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி பெரும்பான்மையுடன் உள்ளது. இதற்கிடையே பாராளுமன்ற சபாநாயகராக இருந்த குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்திக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.
ஆளுங்கட்சியுடன் இணைக்கமாக இருப்பதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை குடியரசு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இதில் குடியரசு கட்சி சார்பில் ஜிம் ஜோர்டன் களம் இறங்கினார். ஆனால் அவருக்கும் சொந்த கட்சி உறுப்பினர்களிடம் எதிர்ப்பு இருந்தது.
இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று ஓட்டெடுப்பு நடந்தது. சபாநாயகர் பதவியை பெற 217 வாக்குகள் பெற வேண்டும்.
இதில் ஜிம் ஜோர்டன் 200 வாக்குகளை பெற்றார். அவருக்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிக்க மறுத்து விட்டனர்.
ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹக்கீம் ஜெப்ரிஸ் 212 வாக்குகளை பெற்றார். ஆனால் அக்கட்சி பிரதிநிதிகள் சபையில் சிறுபான்மை கட்சியாகும். எனவே அந்த வாக்குகள் போதுமானதாக இல்லை. இதனால் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.
ஜிம் ஜோர்டன் தனக்கு 221 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தார். 4 வாக்குகள் மட்டுமே இழக்கலாம் என்று கருதினார். ஆனால் அவருக்கு எதிராக 20 வாக்குகள் விழுந்துள்ளது.
தனக்கு எதிராக வாக்களித்த சில குடியரசு கட்சி உறுப்பினர்களை ஜிம் ஜோர்டன் சந்தித்து பேசினார். ஆனாலும் ஜிம் ஜோர்டனுக்கு எதிரான நிலைப்பாட்டில் சில உறுப்பினர்கள் தீவிரமாகவே உள்ளனர். அவருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கவில்லை. இதையொட்டி அடுத்த சபாநாயகர் வேட்பாளராக டாம் எம்மர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது சுற்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
- காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
- காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம் என்றார் இஸ்ரேல் பிரதமர்.
வாஷிங்டன்:
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அல் அக்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம். அவர்கள் வீசிய ராக்கெட்கள் குறிதவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், காசா மருத்துவமனை தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். இந்த செய்தியைக் கேட்டவுடன் ஜோர்டான் மன்னர் 2-ம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரிடம் பேசினேன். என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்கும்படி தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெடிவிபத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற அப்பாவிகளுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
- இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
- போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தீர்மானம் கொண்டு வந்தது.
நியூயார்க்:
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தீர்மானம் கொண்டு வந்தது.
தீர்மானத்தில் ஹமாஸ் குறித்து குறிப்பிடவில்லை. ஹமாஸை முறையாக விமர்சிக்கவில்லை என அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷியாவின் வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில் நிராகரித்துள்ளது.






