என் மலர்tooltip icon

    உலகம்

    • உறவுக்கார ஆணை, அந்த தந்தை துப்பாக்கியால் சுட்டார்
    • அவர் சுட்டதில் காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம்.

    நேற்று அங்குள்ள விட்டேகர் அவென்யு (Whitaker Avenue) 7500 பிளாக்கில் ஒரு வீட்டில் 18 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே ஒரு வீடியோ கேம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் தொடங்கியது. இதில் அவர்களின் ஒரு உறவுக்கார ஆணும் ஈடுபடும்படி ஆனது.

    வாக்குவாதம் சண்டையாக மாறியதில் அந்த 18 வயதிற்கு உட்பட்டவரும், உறவுக்கார ஆணும் வேறு ஒரு அறைக்கு சென்று விட்டனர். தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே அவர்களை தேடி கோபத்துடன் வந்த தந்தை, அந்த உறவுக்கார ஆணை, தன் துப்பாக்கியால் சுட்டு விட்டு அறைக்கு வெளியே சென்றார்.

    உடனடியாக சுடப்பட்ட அந்த ஆணும், அந்த 18 வயதிற்குட்பட்டவரும் அமெரிக்காவின் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ அழைத்தனர்.

    காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதிகாரிகள் வந்த போது, வீட்டின் முன்புறத்தில் இருந்த தந்தை, அதிகாரிகளை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் 2 அதிகாரிகளுக்கு கால்களிலும், ஒருவருக்கு கை விரலிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரை நோக்கி பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவுக்கார ஆண், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

    • 6 மாத காலத்திற்கு $20,793 வாடகைக்கு இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்
    • வேறு இடத்திற்கு செல்ல $1 லட்சம் டாலர் அலெக்ஸாண்டரிடம் எலிஸபெத் கோரினார்

    அமெரிக்காவில் வசித்து வரும் புகழ் பெற்ற பல் மருத்துவர் அலெக்ஸாண்டர் ஜொவனோவிக் (Aleksandar Jovanovic). இவர், தனக்கு சொந்தமான பங்களா ஒன்றை செப்டம்பர் 2021ல் தங்கும் விடுதி போல் குறுகிய காலத்திற்கு வாடகைக்கு விட எண்ணி ஏர்பிஎன்பி (Airbnb) வலைதளத்தில் விளம்பரமும் செய்தார்.

    இதனை கண்டு இவரை தொடர்பு கொண்ட எலிஸபெத் ஹர்ச்ஹார்ன் (Elizabeth Hirschhorn) என்பவருக்கு 6 மாத காலத்திற்கு சுமார் ரூ.17,31,580 ($20,793) வாடகைக்கு விட சம்மதித்தார். இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

    ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு முறை பங்களாவில் ரிப்பேர் வேலை செய்ய அலெக்ஸாண்டர் சென்ற போது, அது சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டார். அதனை மீண்டும் சரி செய்யும் வரை ஒரு ஓட்டலில் தங்குமாறும் அதற்காகும் செலவை கொடுப்பதாகவும் எலிஸபெத்தை அவர் கேட்டு கொண்டார். ஆனால், அதற்கு எலிஸபெத் மறுத்தார்.

    அடுத்ததாக தனது வீட்டில் வந்து தங்குமாறு அலெக்ஸாண்டர் கேட்க, அதற்கும் எலிஸபெத் மறுத்தார்.

    2022 ஏப்ரலில் அவர்களது ஒப்பந்தம் காலாவதியானது. ஆனால், எலிஸபெத் பங்களாவை காலி செய்ய மறுத்தார்.

    வீட்டை மறுசீரமைப்பு செய்ய விரும்பிய அலெக்ஸாண்டர், கட்டிடங்களின் பாதுகாப்பு துறையை அணுகி விண்ணப்பம் செய்து, வீட்டை காலி செய்யுமாறு எலிஸபெத்திற்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

    உடனடியாக அதிகாரிகளை அணுகிய எலிஸபெத் தன்னை அலெக்ஸாண்டர் சட்ட விரோதமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் தான் வெளியேற மறுகுடியிருப்பிற்கான கட்டணமாக சுமார் ரூ.83 லட்சம் ($100,000) அலெக்ஸாண்டர் தர வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

    இதையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகள் பங்களாவை ஆய்வு செய்து அதில் பல கட்டிட வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த வீடு குடியேற்றத்திற்கு தகுதியானதுதான் என நிரூபித்து விட்டுத்தான் அலெக்ஸாண்டர் வெளியேறும் உத்தரவை அனுப்ப முடியும் எனவும் உத்தரவிட்டனர்.

    இதனால் எலிஸபெத் மீது அலெக்ஸாண்டர் வழக்கு தொடர்ந்தார்.

    "அலெக்ஸாண்டர் தனது பங்களாவை வாடகைக்கு விடுவதற்கு முறையான பதிவுகளை பெறாமலேயே வாடகைக்கு விட்டுள்ளார். அதில் அனுமதி பெறாமல் ஒரு ஷவர் வேறு நிறுவி உள்ளார். பதிவு பெறாமல் வாடகைக்கு விட முயன்றது சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் முறையில் அடங்கும். அலெக்ஸாண்டர் முறையான பதிவு பெற முயற்சிக்க வேண்டும். அவர் தவறுகளை சரி செய்து வழிமுறைகளை சீராக்கும் வரை எலிஸபெத் அங்கு வசிக்கலாம்" என வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    இது வீட்டை மிக சுலபமாக வாங்கும் ஒரு வழிமுறை என அலெக்ஸாண்டர் தரப்பில் பலர் விமர்சிக்கின்றனர்.

    வாடகைக்கு வீட்டில் குடியிருப்பவர் வீட்டை காலி செய்ய மறுத்து, காலி செய்ய வேண்டுமென்றால் ஒரு பெரும் தொகையை கேட்பதும், நீதிமன்றத்தில் பல வருடங்கள் வழக்குகள் நடைபெறுவதும், இதுவரை இந்தியாவில் மட்டுமே அதிகம் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவிலும் இது தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • மஸ்க், 2022ல் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார்
    • மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு விளம்பர நிறுவனங்கள் தயங்குகின்றன

    அமெரிக்காவில் 2006ல் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். பயனர்கள் ஒருவருக்கொருவர் உரையாட வழிவகுக்கும் வலைதளமான இதில், அவர்கள் தங்கள் கருத்துக்களை வார்த்தைகள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகள் என பல வடிவங்களில் பதிவிடலாம்.

    உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம், 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார். அந்நிறுவனத்தை முன்னிறுத்த பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வரும் மஸ்க், அதன் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார்.

    அவர் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் எக்ஸ் நிறுவனத்தின் வருமானம், மாதாமாதம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடாந்திர வருமானம் ஆண்டுக்கு 55 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. விளம்பர நிறுவனங்கள் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் சிந்திப்பதால் விளம்பரங்களை தர தயங்குகின்றனர் என தெரிகிறது.

    அமெரிக்காவில் பெறப்படும் விளம்பர வருமானம், 2021 டிசம்பரில் இருந்ததை விட 2022 டிசம்பரில் 78% குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை மொத்த விளம்பர வருமானம் ஆண்டுக்காண்டு 60 சதவீதம் குறைந்துள்ளது.

    விளம்பர வருவாய் குறைந்து வருவதை ஓப்பு கொண்ட எலான் மஸ்க் ஒரு சில சமூக ஆர்வலர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

    தற்போதைய தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோ எக்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற விளம்பர நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் எக்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி விட்டதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து எக்ஸ் லாபம் ஈட்ட தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

    • அப்பணிக்கு தேவையான தகுதி சான்றிதழ்களை பெற்றவர், மேத்யூ
    • லகுனா பீச் பகுதி தம்பதியினர் முதல் முதலாக புகார் அளித்தனர்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது கோஸ்டா மேஸா (Costa Mesa). இப்பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி (Matthew Zakrzewski).

    மேத்யூ, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பல இல்லங்களில் பல்வேறு சமயங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்து வந்தார். இவ்வேலைக்காக பெற்றோர்கள் தேடும் நபர்களில் முக்கியமானவராக இருந்து வந்தவர் மேத்யூ. அவரது அதிகாரபூர்வ வலைதளத்தில் தன்னை "அசல் குழந்தை பராமரிப்பாளர்" (original babysitter) என விளம்பர படுத்தி கொண்ட மேத்யூ, தன்னை குழந்தைகளுக்கு ஆலோசகராகவும், மூத்த சகோதரனாகவும், விடுமுறை காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்பவராகவும் முன்னிலை படுத்தி கொண்டார்.

    அந்த பணிக்கு அந்நாட்டில் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

    2019 மே மாதம் அம்மாநில லகுனா பீச் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, அக்குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டி புகாரளித்தனர்.

    உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மேத்யூ முன்னர் பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளையும் அவர்களின் பெற்றொர்களிடமும் விசாரணையை தீவிரமாக்கிய போது அவர் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும் தெற்கு கலிபோர்னியாவில் பல வீடுகளில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் இக்குற்றத்தை புரிந்திருப்பதையும் கண்டு பிடித்தனர்.

    மேலும், 2014 ஜனவரி 1லிருந்து 2019 மே 17 வரை மேத்யூ 16க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் அளித்த சாட்சியங்களின் பேரில் ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில் அந்நாட்டு ஜூரி அமைப்பு அவர் குற்றத்தை உறுதி செய்துள்ளது.

    குறைந்தபட்சமாக அவருக்கு 690 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்க இருக்கிறது.

    இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர உதவிய காவல்துறையையும், சாட்சியம் அளித்த குழந்தைகளையும், தயக்கமின்றி புகாரளித்த பெற்றோர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
    • முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாகிஸ்தானில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் இருந்து வெளியேற உத்தரவிட்டு உள்ளது.

    தற்போது உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த வாரம் மஸ்தூங் நகரில் நடந்த மத நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 52 பேர் பலியானார்கள். இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தும் தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின.
    • பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தலிபான்கள் ஆட்சி நடக்கின்றது. தற்போதைய ஆட்சியில் மிக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி அதனை பின்பற்றும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்சியாளர்களின் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால் ஆப்கானிஸ்தானை சமூக அரசியல் கொள்கை அங்கீகாரத்தில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கி வைத்தன. அதன்மீது பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின. இதன் காரணமாக பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானை ஆளும் சக்தியாக அங்கீகரிக்க முடியாது. இருப்பினும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை பெற ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் தகுந்த வரைமுறைகளை பின்பற்ற வேண்டும், திறம்பட்ட ஆட்சிக்கு பெண்கள், குடிமக்களை கொண்டு பொருளாதாரத்தை உயர்ந்த வேண்டும். மேலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்" என்றார்.

    • வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா, இம்ரான் கானின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தார்.
    • சிறையில் இம்ரான் கான் மனரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    இஸ்லாமபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'தோஷகானா' ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 70 வயதாகும் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா, அவரை சிறையில் சென்று சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா, இம்ரான் கானின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தார். இம்ரான் கானின் உணவில் விஷம் கலந்து கொடுக்கப்படலாம் என அச்சம் தெரிவித்த அவர், சிறையில் இம்ரான் கான் மனரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    இம்ரான் கானின் நடமாட்டத்தை சிறை அதிகாரிகள் தடுப்பதாகவும், சிறிய அறைக்கு அவரை மாற்றி உள்ளதாகவும் கூறிய நயீம், சிறையிலேயே இம்ரான் கானை கொல்ல சதி நடப்பதாக அவரது மனைவி புஸ்ரா பீவி கவலை தெரிவித்ததாக கூறினார். மேலும் இம்ரான் கானின் நிலை குறித்து இஸ்லாமாபாத் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக நயீம் பஞ்சுதா தெரிவித்தார்.

    • மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பல்கலைக் கழகத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நிலைமை குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.

    • அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 2,71,36,50,08,00,00,000.00
    • ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக மெக்கார்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது

    அமெரிக்காவில் செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் மக்களுக்கான சட்டங்களை இயற்றுகிறது. இதன் உறுப்பினர்கள் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரு கட்சி ஜனநாயக முறையை கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயகத்தில் குடியரசு (Republic) கட்சியும், ஜனநாயக (Democratic) கட்சியும் இரு பெரும் கட்சிகள்.

    அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 271365008,00,00,000.00 ($32.6 ட்ரில்லியன்) எனும் அளவில் இருந்தது. அந்நாட்டில் மத்திய அரசாங்கத்தின் செலவுகளுக்கு கூட பணம் இல்லாத நிலையில், செலவினங்களுக்கான உச்சவரம்பை உயர்த்தினால்தான் அரசாங்கம் இயங்கும் எனும் நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து திவால் நிலையிலிருந்து அமெரிக்காவை காக்க செலவினங்களுக்கான உச்ச வரம்பை உயர்த்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது குடியரசு கட்சியின் ஒப்புதலும் தேவைப்பட்டதால், நீண்ட விவாதங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன் இதற்கான சம்மதம் பெறப்பட்டது.

    இந்த விவாதங்களின் போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy), தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக அவர் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனால் அவருக்கெதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகளுடன் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சபாநாயகருக்கு எதிராக அவர் சார்ந்த கட்சியினரே வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 5 துறைகளிலும் சாதனை புரிந்தவர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகிறது
    • மூவரும் குவான்டம் டாட்ஸ் துறையில் வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவ மற்றும் பவுதிக துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவியலுக்கான ராயல் சுவீடிஷ் அகாடமி இது குறித்து அறிவித்திருப்பதாவது:

    நேனோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான "குவான்டம் டாட்ஸ்" துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு நுகர்வோர் மின்னணு துறையிலும் மருத்துவ துறையிலும் பல்வேறு புரட்சிகள் ஏற்பட வழி வகுத்த அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைகழகத்தை சேர்ந்த அமெரிக்கரான மவுங்கி பவெண்டி (Moungi Bawendi), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த லூயி ப்ரு (Louis Brus) மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் (Alexey Ekimov) ஆகிய மூவருக்கும் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அகாடமி அறிவித்திருக்கிறது.

    இந்த மூவரின் பெயர்களை வேதியியல் துறையில் நோபல் பரிசை பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் ஜோஹன் அக்விஸ்ட் (Johan Aqvist) உறுதிப்படுத்தினார்.

    வழக்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பரிசுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இம்முறை இன்று காலை சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மூவரின் பெயர்கள் முன்னரே கசிந்தது சர்ச்சையை உருவாக்கியது.

    • திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
    • காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    வெனிஸ்:

    இத்தாலி வெனிஸ் நகரின் புறநகர் பகுதியான மெஸ்ட்ரேலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 21 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வெனிஸ் நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரோ மாவட்டத்தில் உள்ள ரெயில் பாதைகளுக்கு அருகில் பஸ் சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • இதே காரணத்திற்காக கடந்த வருடம் மஹ்சா அமினி, அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்
    • அதிகாரிகள் தாக்கியதில் அர்மிடாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர்

    மேற்காசியாவில் உள்ள அரபு நாடான ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடியும், அபராதமும் தண்டனையாக உள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 1 வருடத்திற்கு முன் மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் இள வயது பெண் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக  அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்றது. உலகளவில் பெண் உரிமை ஆர்வலர்கள் ஈரான் அரசின் பழமைவாத கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில் ஈரானின் கெர்மன்ஷா (Kermanshah) பகுதியை சேர்ந்த 16 வயதான அர்மிடா கராவந்த் (Armita Garawand) எனும் சிறுமி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷோஹடா (Shohada) மெட்ரோ ரெயில் நிலைய சுரங்க நடைபாதையில் (subway) தனது நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது உடையை கண்டு, அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க பெண் அதிகாரிகள் அர்மிடா ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டி அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்களால் அர்மிடா விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அச்சிறுமி மயக்கமடைந்து 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அச்சிறுமி டெஹ்ரானின் ஃபாஹர் (Fajr) மருத்துவமனையில் கடும் பாதுகாப்புக்கிடையே சிகிச்சை பெற்று வருகிறாள்.

    அச்சிறுமி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் அச்சிறுமியின் நண்பர்கள் இதனை மறுத்தனர். மத கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அச்சிறுமி கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால் மயங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டை போல் போராட்டம் வெடிப்பதை தடுக்க ஈரான் காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

    ×