என் மலர்
உலகம்
- ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது.
- சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன.
uவாஷிங்டன்:
அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்திலும் சில பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாகவே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இரு தலைவர்கள் இடையே நேரடி சந்திப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் ஜோ பைடன்-ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங்கை தான் சந்திக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் சந்திப்பு குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அந்த சந்திப்பு நடைபெற சாத்தியம் உள்ளது" என்றார்.
வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியுபெங்யு கூறும்போது, "சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன. இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட வேண்டும். உறுதியான நடவடிக்கை களுடன் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும். பேச்சுவார்த்தையை மேம்படுத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றார். ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் ஜோபைடன்-ஜின்பிங் சந்திப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
- பக்ஸீ'ஸ் பெட்ரோல் நிலையங்களின் ஒப்பனை அறைகளின் தூய்மை பிரபலமானது
- சைபர் செக்யூரிட்டி துறை அதிகாரிக்கு ப்ளக் பாயின்டில் ஏதோ வித்தியாசமாக இருப்பது தெரிந்தது
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள க்ளூட் (Clute) நகரில் 1982ல் தொடங்கப்பட்டு பல மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி நிறுவனம், புகழ் பெற்ற பக்ஸீ'ஸ் (Buc-ee's). இந்நிறுவனம் மின்சார வாகன சார்ஜர்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகை கடைகள், குளியலறை சாதனங்கள், உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் என பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பக்ஸீ'ஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள ஒப்பனை அறைகளின் சுத்தமும், பராமரிக்கப்படும் முறையும், தூய்மையும் உலக புகழ் வாய்ந்தது. இதன் நிறுவனர் ஆர்ச் ஆப்லின் (Arch Aplin).
இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் டான் வாசெக் (Don Wasek). இவரது மகன், 28 வயதான மிட்செல் வாசெக் (Mitchell Wasek).
டான் வாசெக்கிற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் ட்ராவிஸ் எனும் ஏரிக்கரையில் மிக பெரிய பங்களா உள்ளது. அங்கு ஒரு அழைப்பின் பேரில் ஆண்கள் பெண்கள் நிறைந்த ஒரு குழு சென்றது. அவர்களை மிட்செல் வாசெக் உபசரித்தார். அவர்கள் அங்கு பல இடங்களை சுற்றி பார்த்தனர்.
அக்குழுவில் ராணுவத்தில் சைபர் செக்யூரிட்டி துறையில் பணிபுரியும் ஒருவரும் உடனிருந்தார். தனது செல்போனை சார்ஜ் செய்ய ப்ளக் பாய்ன்ட்டுகளை தேடிய அவருக்கு அதில் வித்தியாசமாக ஏதோ ஒன்று தெரிந்தது. அவர் அதனை ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தார். அதன் வழியாக குளியலறையில் ஒரு கேமிரா மறைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதனையடுத்து அவர், அந்த கேமிராவை யாருக்கும் தெரியாமல் தன்னுடன் எடுத்து சென்றார். அதனை வெளியில் சென்று ஆய்வகத்தில் பரிசோதனை செய்த போது அதில் மைக்ரோ கார்டு எனப்படும் வீடியோக்களை பதிவு செய்து சேமித்து வைக்கும் சாதனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஆய்வு செய்ததில் அவரும் அவருடன் வந்த பெண் உட்பட அந்த இல்லத்திலும், டல்லாஸ் நகரில் மிட்செல்லின் வீட்டிலும் எடுக்கப்பட்ட 13க்கும் மேற்பட்ட விருந்தினர்களின் குளியலறை, படுக்கையறை மற்றும் ஒப்பனை அறை நடவடிக்கைகள் குறித்த காட்சிகள் இருந்தன.
இதையடுத்து, டல்லாஸ் நகர காவல்துறையிடம் இது குறித்து புகார அளிக்கப்பட்டது. அவர்கள் கேமிரா மற்றும் மைக்ரோகார்டு ஆகியவற்றை மீண்டும் ஆய்வு செய்தனர். அதில் 2021லிருந்து பல முறை இத்தகைய சம்பவங்களை மிட்செல் படம் பிடித்து பதிவு செய்துள்ளார் என தெரிய வந்தது.
இதனையடுத்து, மிட்செல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது அந்நாட்டு சட்டப்படி 28 குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூய்மைக்கு பெயர் பெற்ற நிறுவனத்தின் அதிபரின் மகன் ஈடுபட்ட கீழ்தரமான செயல் டெக்ஸாஸில் பரபரப்பாக விமர்சிக்கப்படுகிறது.
- ஈரானை சேர்ந்த 51 வயதான மொகமதி ஒரு பவுதிக பட்டதாரி
- மொகமதிக்கு பலமுறை சிறை தண்டனை விதிக்கப்பட்டது
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியானவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், வேதியியல் மற்றும் இலக்கிய துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரானிய பெண்கள் உரிமை பிரச்சாரகரும், மனித உரிமை போராளியுமான 51 வயதான நர்கெஸ் சஃபி மொகமதி (Narges Safie Mohammadi) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பவுதிக பட்டதாரியான மொகமதி, ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த போராட்டங்களுக்காகவும் கவுரவிக்கப்படுகிறார் என நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் பரிசு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மொகமதி பல முறை சிறைவாசம், கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட நீண்ட போராட்ட வரலாறு கொண்டவர்.
5 முறை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 13 முறை ஈரான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட மொகமதி, தண்டனையாக 154 முறை கசையடிகளும் வாங்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று ஒஸ்லோ நகர மண்டபத்தில் ஒரு விழாவில் மொகமதிக்கு இப்பரிசு வழங்கப்படும்.
- பிரையன்னாவிற்கு ஊதியமாக ரூ.35 லட்சம் ($42,000) வரை கிடைத்து வந்தது
- ஆசிரியைகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார் பிரையன்னா
அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் உள்ளது செயின்ட் க்ளேர் உயர்நிலை பள்ளி (St. Clair High School). இங்கு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிந்தவர் பிரையன்னா கோப்பேஜ் (Brianna Coppage).
முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியையான பிரையன்னா, ஊதியமாக ரூ.35 லட்சம் ($42,000) வரை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு இருந்த கல்வி கடன் மற்றும் சில பொருளாதார சிக்கல்களால் அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.
நிலைமையை சமாளிக்க அவர் கணவருடன் சேர்ந்து ஆபாச படங்களில் நடித்து, அவற்றை லண்டனை சேர்ந்த ஒரு பிரபல வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இதன் மூலம் பல ரசிகர்கள் அவரை இணையத்தில் பின்தொடர்ந்தனர். இதில் அவரது வருவாய் அதிகரித்தது.
பிரையன்னாவிற்கு மாதாமாதம் சுமார் ரூ.6 லட்சம் ($8000) அதிகப்படியாக கிடைத்து வந்தது.
இந்நிலையில், ஒரு பள்ளி ஆசிரியையான அவரை வீடியோவில் அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், அம்மாவட்ட பள்ளி கல்வித்துறையிடம் இது குறித்து புகாரளித்தார். இதனையடுத்து, அவரை அத்துறையும், அவர் பணிபுரிந்த பள்ளி நிர்வாகமும் விசாரணை செய்தது.
இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் ஆலோசித்து வந்தது.
ஆனால், பிரையன்னா தற்போது தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது முடிவை குறித்து அவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் உணர்ச்சிமயமாக விவாதிக்கப்படுகிறது.
பிரையன்னா அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
நான் கல்வி கற்று கொடுத்த மாணவர்கள் இச்செய்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். என்னால் பள்ளிக்கு கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியை பணிக்கு நான் திரும்பினால் அனைத்தும் முன்பு போல் இருக்காது என நான் அறிவேன். ஒரு மதிப்பு வாய்ந்த முன்னுதாரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நான் மாணவர்களுக்கு பாட திட்டத்தில் உள்ளதை மட்டுமே பயிற்றுவித்தேன். என்னுடைய சித்தாந்தங்கள் எதையும் அவர்களிடம் புகுத்தவில்லை. என்னை குறித்த மக்களின் எண்ணங்களை நான் கட்டுப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன், மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தில் ஒரு பெண் காவல் அதிகாரி அதிக வருமானத்திற்காக இதே போன்று வலைதளத்தில் மாடலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அவரை பணி நீக்கம் செய்ய மக்கள் கோருவதும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- ரஷிய உக்ரைன் போர் 590 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
- மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவி அந்நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்றார் புதின்
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமாக சேதங்களும் உயிரிழப்புகளும் நடைபெற்றும் போர் 590 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவிற்கு உள்ள கடன் ரூ. 2,74,63,90,35,00,00,000 (33 டிரில்லியன் அமெரிக்க டாலர்) எனும் அளவை தொட்டு விட்டதால், அந்நாட்டில் செலவினங்களை குறைக்க கோரி பெரும் விவாதங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இந்த விவாதங்களில் ரஷிய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவி தடைபடும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.
இப்பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஒரு சந்திப்பில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. உதவி நின்றால், ஒரு வாரத்தில் அனைத்தும் நின்று விடும். நிதியுதவி மட்டுமல்ல; ராணுவ தளவாட உதவிகளும் நிற்க தொடங்கினால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும். தற்போது வரை ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், உக்ரைன் 90 ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, "அமெரிக்காவை போன்று நிதியுதவியோ ராணுவ உதவியோ உக்ரைனுக்கு நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியாது," என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.
புதின் கூறியவாறு அமெரிக்க உதவி தடைபட்டு, போர் ரஷியாவிற்கு சாதகமாக சென்றால் அதனால் எற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
- டிரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
ஹோம்சில்:
உலக நாடுகளின் போர்க்களமாக சிரியா திகழ்ந்து வருகிறது. அங்குள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்சில் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய டிரோன்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 100 பேர் வரை கொல்லப்பட்டதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பலியானவர்கள் உடல்கள் சிதறி கிடந்தன.
இந்த டிரோன் தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிரியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி கலந்து கொண்டார். விழா முடிந்து அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவரது உயிருக்கு குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார்.
- 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைலு. 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார். முகத்தில் முகமூடி அணிந்த நிலையில் ஊடுருவிய அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்புபடை வீரர்கள் மடக்கி பிடித்தனர்
விசாரணையில் ஜஸ்வந்த் சிங் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில் வந்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இங்கிலாந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் சைலுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங் சைலுவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு கூறினார்.
- இந்தியாவின் உயர் தொழில் நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
- ஆசிய நாடுகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புதின் இந்தியாவை பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆசிய நாடுகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவின் உயர் தொழில் நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் மிகவும் வலிமையான நாடாக மாறி வருகிறது. மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க கண்மூடித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பலர் உறங்கி விட்டனர்
- தற்போது வரை அப்பெண்ணால் சரி வர பயமின்றி உறங்க முடியவில்லை
கடந்த 2020 பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் ஓஹியோ (Ohio) மாநில க்ளீவ்லேண்டு (Cleveland) நகரிலிருந்து கலிபோர்னியா (California) மாநில லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகருக்கு ஒரு பெண் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மூவர் அடுத்தடுத்து அமரும் இருக்கைகளில் நடுவில் உள்ள இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டதால், அதில் அமர்ந்து வந்த அவர் பயணத்திற்கு இடையே உறங்கி விட்டார். சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பல பயணிகள் உறங்கி கொண்டிருந்தனர். மேலும், விமானத்தில் இருக்கைகளின் முதுகுப்பகுதி உயரமாக வடிவமைக்கப்படுவதால் முன் வரிசையிலோ பின் வரிசையிலோ என்ன நடக்கிறது என்பது சக பயணிகளுக்கு தெரிவதில்லை.
அப்பெண்ணிற்கு அடுத்த இருக்கையில், 50 வயதான மொஹம்மத் ஜாவத் அன்சாரி என்பவர் அமர்ந்திருந்தார். அப்பெண் ஆழ்ந்து உறங்குவதை கண்ட அன்சாரி, அப்பெண்ணின் ஆடைகளின் வழியாக அவரது கால்களின் மேற்பகுதியை தொட்டு தகாத செயல்களில் ஈடுபட்டார்.
உடனடியாக விழித்து கொண்ட அப்பெண் ஆடைகளை சரி செய்து கொண்டு, அன்சாரியின் கையை தள்ளி விட்டு, அந்த இருக்கையில் இருந்து வேறு இடத்திற்கு மாறி சென்றார். மேலும், இது குறித்து உடனே விமான ஊழியர்களிடம் புகாரளித்தார்.
விமானம் தரையிறங்கியதும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த அத்துமீறலால் அப்பெண் அதிர்ச்சியடைந்து பயந்து விட்டார். அந்த விமான பயணம் முழுவதும் அவர் அழுது கொண்டே வந்தார். இதனை பயணத்தில் இருந்த பல பயணிகள் நேரில் கண்டு சாட்சியமும் அளித்தனர். அன்சாரியின் இந்த செயலால் தற்போது வரை அந்த பெண்ணிற்கு சரிவர உறங்க முடியவில்லை.
ஆனால், அன்சாரி, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்சாரிக்கு சுமார் ரூ. 35 லட்சம் ($40,000) அபராதமும், 21 மாத சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
- ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்.
- மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.
உக்ரைன், கார்கிவின் கிழக்குப் பகுதியில் உள்ள மளிகைக் கடை மற்றும் ஓட்டல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 வயது சிறுவன் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "சாதாரண மளிகைக் கடையை ராக்கெட் மூலம் தாக்கிய கொடூரமான ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்" என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் உடல் அருகே பெண் ஒருவர் மண்டியிட்டுக் கிடப்பதைப் போன்ற ஒரு படத்தை ஜெலென்ஸ்கி வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அந்த பெண்ணை சுற்றி சடலங்கள் சிதறிக்கிடப்பதை காணமுடிகிறது. மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கார்கிவ் பிராந்தியத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ் கூறுகையில், "க்ரோசா கிராமத்தில் இன்று மதியம் 1:15 மணியளவில் ஒரு ஓட்டல் மற்றும் கடையில் ராக்கெட் தாக்கியது.
இந்த கிராமம் ஒரு முன்னணி நகரமான குபியன்ஸ்கிற்கு மேற்கே 30 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்) தொலைவில் உள்ளது. மேலும், இங்கு, போருக்கு முந்தைய மக்கள் தொகை சுமார் 500 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
- சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.
"தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.
"மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.
1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.
- உறவுக்கார ஆணை, அந்த தந்தை துப்பாக்கியால் சுட்டார்
- அவர் சுட்டதில் காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம்.
நேற்று அங்குள்ள விட்டேகர் அவென்யு (Whitaker Avenue) 7500 பிளாக்கில் ஒரு வீட்டில் 18 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே ஒரு வீடியோ கேம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் தொடங்கியது. இதில் அவர்களின் ஒரு உறவுக்கார ஆணும் ஈடுபடும்படி ஆனது.
வாக்குவாதம் சண்டையாக மாறியதில் அந்த 18 வயதிற்கு உட்பட்டவரும், உறவுக்கார ஆணும் வேறு ஒரு அறைக்கு சென்று விட்டனர். தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே அவர்களை தேடி கோபத்துடன் வந்த தந்தை, அந்த உறவுக்கார ஆணை, தன் துப்பாக்கியால் சுட்டு விட்டு அறைக்கு வெளியே சென்றார்.
உடனடியாக சுடப்பட்ட அந்த ஆணும், அந்த 18 வயதிற்குட்பட்டவரும் அமெரிக்காவின் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ அழைத்தனர்.
காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதிகாரிகள் வந்த போது, வீட்டின் முன்புறத்தில் இருந்த தந்தை, அதிகாரிகளை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் 2 அதிகாரிகளுக்கு கால்களிலும், ஒருவருக்கு கை விரலிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரை நோக்கி பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவுக்கார ஆண், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.






