என் மலர்
உலகம்
- மத்திய பிரசெல்சில் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
- இந்தச் சம்பவத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.
பிரசெல்ஸ்:
ஐரோப்பா நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேற்று இரவு பெல்ஜியம்-சுவீடன் கால்பந்து அணிகள் மோதிய, யூரோ சாம்பியன்ஷிப் தகுதி சுற்று போட்டி நடந்தது.
இப்போட்டி நடந்த மைதானத்தில் இருந்து சிறிது தூரத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சுவீடனைச் சேர்ந்த 2 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பயங்கரவாத தாக்குதல் என்பது தெரிய வந்தது. தாக்குதல் நடத்திய நபர், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, "எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி. நான் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாம் விரும்புகிறோம். நம்மை வெறுப்பவர்களை வெறுக்கிறோம். நான் சுவீடன் நாட்டவரை கொன்றுள்ளேன்" என்று கூறினார்.
இதனால் பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத தாக்குதலையடுத்து பெல்ஜியம்-சுவீடன் மோதிய கால்பந்து போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. அப்போது மைதானத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் மைதானத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு ரசிகர்கள் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். மேலும் சுவீடன் கால்பந்து அணி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.
தாக்குதல் நடத்திய நபர், துனிசியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், பிரசெல்சில் வசித்து வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டிகுரூ கூறும்போது, "பிரசெல்சில் நடந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. சுவீடன் குடிமக்கள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து சுவீடன் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும் உயர்மட்ட அமைச்சர்களின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரசெல்சில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இந்த தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல். இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
- காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
- இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. தனது 2 போர் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது.
மேலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன்-ஜீன்-பியர் கூறும்போது, "இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் ஜோ பைடன், ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்று அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் பக்தா எல்-சிசி, பாலஸ்தீனிய மேற்கு கரை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை சந்திக்கிறார்.
அப்போது பாலஸ்தீன மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை வலியுறுத்துவார். மேலும் காசாவில் உள்ள பொதுமக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து விவாதிப்பார் என்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசுகிறார். ஹமாஸ் அமைப்பு மீதான தாக்குதல் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள்.
ஏற்கனவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், இஸ்ரேலுக்குச் சென்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசி இருந்தார். இதற்கிடையே ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் குறித்து ஆன்டனி பிளிங்கன் கூறும்போது, இஸ்ரேலுடன் அமெரிக்காவின் ஒற்றுமையை ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்துவார். ஹமாஸ் பிடித்த பணயக் கைதிகளை விடுவிக்கவும் அவர் முயற்சி செய்வார்.
ஹமாசுக்கு பயனளிக்க கூடிய வகையிலும், பொது மக்களின் உயிரிழப்புகளை குறைக்கும் மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையிலும் இஸ்ரேல் எவ்வாறு தனது நடவடிக்ைக களை மேற்கொள்ளும் என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்பார் என்றார்.
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் காசா மீது இஸ்ரேலின் முப்படைகளும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- சுதந்திரப் போர் முடிவடையவில்லை.
- ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.
ஜெருசலேம்:
ஹமாசுக்கு எதிராக நடைபெற்று வரும் போர், மனிதகுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "ஒளியின் சக்திகளுக்கும்", விலங்குகளை உள்ளடக்கிய "இருளின் சக்திகளுக்கும்" இடையேயான யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "75 ஆண்டுகள் கடந்தும் கூட, சுதந்திரப் போர் முடிவடையவில்லை. ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,, "ஹமாஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தப் போர் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குமான போரும் கூட. இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இது இந்த பிராந்தியத்தில் எங்களின் இருப்பைப் பற்றியது.
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் ஹமாஸ். இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளை படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இப்போது, இஸ்ரேல் யாரை எதிர்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பலர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஹமாஸ் நாஜிக்களின் புதிய வெர்ஷன். நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்சை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் ஒன்றுபட வேண்டும். ஈரானும், ஹிஸ்புல்லாவும் எங்களை சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் இந்த முறை நீங்கள் செலுத்தும் விலை மிக அதிகமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
- அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் ஹமாஸ் 1400க்கும் மேற்பட்டவர்களை கொன்றது
- எங்கள் கவனத்தை திசை திருப்ப ஈரான் முயல்கிறது என இஸ்ரேல் கூறியுள்ளது
லெபனான் நாட்டை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பு, ஹிஸ்புல்லா (Hezbollah).
1992ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு இருந்து வருகிறது. அந்நாட்டில் அது ஒரு அரசியல் கட்சியாகவும் தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தீவிரமாக எதிர்த்து வரும் இந்த அமைப்பு, மத்திய தரைகடல் பகுதியில் அந்த இரு நாடுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க போராடி வருகிறது.
கடந்த அக்டோபர் 7 அன்று தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி 1400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று, 150க்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்து சென்ற ஹமாஸ் அமைப்பின் மீது போர் அறிவித்த இஸ்ரேல், அந்த அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ளது. இஸ்ரேலி ராணுவ படையினர் (IDF) பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல், மும்முரமாக போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதை எதிர் கொண்டு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் வந்தால் எதிர் கொள்ளவும் தயார் நிலையில் உள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் (Rear Admiral) டேனியல் ஹகரி (Daniel Hagari) கருத்து தெரிவித்தார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
நாங்கள் காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போரிட்டு வருகிறோம். எங்கள் கவனத்தை திசை திருப்ப லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் துப்பாக்கி சூட்டை நடத்தி வருகின்றனர். இது ஈரான் நாட்டின் தூண்டுதலால் ஈரானின் துணையுடன் நடைபெறுகிறது.
இவ்வாறு ரியர் அட்மிரல் குற்றம் சாட்டி பேசினார்.
- இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
- குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள்.
டெல்அவிவ்:
இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று (திங்கட்கிழமை) 10-வது நாளை எட்டி உள்ளது.
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் தெற்கு பகுதியில் திடீர் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் படையினர் தொடர்ந்து நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஹமாஸ் படையினரை முற்றிலுமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் ஆட்சி நடத்தி வரும் காசா பகுதிக்குள் தரை வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் உத்தரவிட்டது.
அந்த கெடு முடிந்த நிலையில் காசா மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அவர்கள் காசாவின் தெற்கு பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காசாவின் தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசுவதால் அங்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் காசா பகுதி மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதையடுத்து எகிப்து நாட்டுக்குள் காசா மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் எகிப்து எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதற்கிடையே காசா மீது நேற்று இரவும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசின. 250 இடங்களை குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டதாக இன்று காலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டது. என்றாலும் ஹமாஸ் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா. சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தரை வழி தாக்குதலை தொடங்குவதற்கு நேற்று முதல் இஸ்ரேல் தயாராகி வருகிறது. தரை வழி தாக்குதலுக்காக சுமார் 4 லட்சம் வீரர்களை இஸ்ரேல் தயாராக வைத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடனும், பாலஸ்தீன பிரதமருடனும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜோ பைடன் பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து அமெரிக்கா சார்பில் திடீர் எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "போரை இரு தரப்பினரும் மேலும் நீடிக்க விடாமல் தடுப்பது பற்றி ஜோ பைடன் பேசியுள்ளார். காசா மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு இஸ்ரேல் மனிதாபிமானத்துடன் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு இரு நாடுகளும் சாதகமான பதில் அளித்துள்ளன" என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜோ பைடன் நேற்று இரவு பேட்டியளித்தார். அப்போது அவர் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து தரைவழி தாக்குதல் பற்றி இஸ்ரேல் பிரதமர் உடனடி ஆலோசனை நடத்தினார்.
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹமாஸ் படை மீது தரை வழி தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது. அமெரிக்கா, ஈரான் உள்பட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் முனைப்புடன் உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசா மக்களுக்கு விடுத்திருந்த கெடு முடிந்த நிலையில் திட்டமிட்டபடி தரை வழி தாக்குதலை இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்வது போல இன்று காசா அருகே தனது படைகளை இஸ்ரேல் மேலும் நகர்த்தியது.
இன்று அதிகாலை முதல் காசா எல்லை அருகே நிறைய வீரர்களை இஸ்ரேல் விமானங்கள் தரைஇறக்கி வருகின்றன. எனவே எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்ற நிலை நிலவுகிறது.
ஏற்கனவே குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் தங்கள் மீது குண்டு வீசப்படலாம் என்று அவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
நேற்று இரவு காசா தெற்கு பகுதியில் 250 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் அழித்துள்ளன. இதில் ஹமாஸ் படையின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே இன்று காலை 9 மணிக்கு எகிப்து தனது எல்லையை கடந்தது. இதனால் காசா மக்கள் அந்த வழியாக அகதிகளாக வெளியேற தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவ ஐ.நா. சபை குழுக்களை அனுப்பி உள்ளது.
மேலும் பிணை கைதிகளாக இருப்பவர்களை ஹமாஸ் படையினர் விடுவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இன்று இந்தியாவின் 5-வது விமானம் டெல்அவ்வில் இருந்து புறப்பட்டு உள்ளது.
இன்று மதியம் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "காசாவின் அனைத்து முனைகளிலும் இஸ்ரேல் தரைப்படை தயார் நிலையில் உள்ளது. மிகப்பெரிய போரை நடத்தப் போகிறோம்" என்று அறிவித்துள்ளது.
இதனால் இஸ்ரேல் ராணுவம் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தினால் காசாவில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
- 2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு." என்பதாகும்
- அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளுடன் சிலர் இருக்கிறார்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு (Food And Agricultural Organization) தொடங்கபட்ட அக்டோபர் 16, ஒவ்வொரு வருடமும் "உலக உணவு தினம்" (World Food Day) என இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
உலக மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைப்பதில் உள்ள தடைகளை கண்டறிந்து, அவற்றை நீக்குவதற்கான சரியான வழிமுறைகளை கடைபிடிக்க உலக நாடுகளை வலியுறுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நிலையான விவசாயம், உணவு வீணடித்தல் தடுப்பு, சத்தான உணவு கிடைக்க செய்தல், மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை இந்த வழிமுறைகளின் முக்கிய அம்சங்கள்.
1981லிருந்து உலக உணவு தின கொண்டாட்டத்தில், ஒவ்வொரு வருடமும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு "தீம்" வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு. எவரும் விடுபட கூடாது" என்பதாகும்.
பசியால் தவிப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும், காச நோய், மலேரியா மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களால் இறந்தவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களே அதிகம் என்றும் 10 பேரில் ஒருவர் எப்போதும் உணவின்றி தவிக்கிறார் என்றும் தெரிவிக்கும் புள்ளி விவரங்கள், அதே வேளையில் உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் அதிக எடையுடையவர்கள் என குறிப்பிடுகிறது.
பலர் உணவின்றி வாடும் நிலையில், ஒரு சிலர் அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளால் தவிப்பது ஒரு பெரும் முரண்பாடாக பார்க்கப்படுகிறது.
வறுமை, போர், இயற்கை சீற்றம் மற்றும் இயற்கை பேரழிவு உட்பட பல காரணங்களால் உலக மக்களில் பலர் உணவின்றி தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை மாற்றும் வகையில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலக தமிழர்களின் பண்டைய நூலான திருக்குறள் இச்சிக்கலை தீர்க்க வழி சொல்கிறது.
"பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது" - (திருக்குறள் 227)
பொருள்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை, பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுவது கிடையாது
- பாதுகாப்பு அதிகாரி சுடும் காட்சிகளும், ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுருண்டு விழுந்து மரணம் அடையும் காட்சிகளும் வீடியோவில் முழுமையாக பதிவாகி உள்ளது.
- முழு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினர் முதலில் இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட போது ஹமாஸ் படையை சேர்ந்தவரின் கேமரா அவரது மரணத்தையே வீடியோ எடுத்தது. அந்த வீடியோவில் ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் அவர் வைத்திருந்த கேமராவிலேயே பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ கடந்த 7-ந்தேதி எடுக்கப்பட்டு உள்ளது. ஹமாஸ் படையை சேர்ந்த அவர் தெற்கு இஸ்ரேலில் உள்ள கிப்புட்ஸ் சூர்பா பகுதியில் உடையில் செல்போன் கேமராவை பொருத்தியபடி தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த கேமரா இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலை படம் பிடித்தது.
அவரது முன்னால் ஹமாஸ் படையை சேர்ந்த மற்றொருவர் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி சென்று கொண்டிருந்தார். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவானது. தாக்குதல் காட்சிகளை அவர் படம் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது.
அப்போது வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஹமாஸ் படையை சேர்ந்த அவர் திடீரென்று வலியால் துடித்தபடி தரையில் சுருண்டு விழுந்தார். அந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டன. அவரை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அந்த அதிகாரி சுடும் காட்சிகளும், ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுருண்டு விழுந்து மரணம் அடையும் காட்சிகளும் வீடியோவில் முழுமையாக பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த முழு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
- கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
சிகாகோ:
அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார். திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார் . 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.
இதைபார்த்த அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் தனது கணவருக்கும் செல்போனில் தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மருத்துவ பரிசோதனையில் அவனது உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. அந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்ற ஜோசப் சுபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் நில உரிமையாளராக இருந்து வருகிறார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
- ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது
- உலகம் கண்டிராத ஒரு மனித குல பேரழிவு நடப்பதாக அந்த முகமை தெரிவித்தது
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுத்து விட்டது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒரு வழித்தடம் அமைத்து தரவேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட பல மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலிடம் வைத்த கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.
வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்க இருப்பதாகவும், அதனால் காசா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கெடு விதித்திருந்தது. இஸ்ரேல் விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டனர்.
இதற்கிடையே, கிழக்கு ஜெருசேலம் பகுதியில் ஐ.நா. கூட்டமைப்பின் நிவாரண பணி முகமை (UN Relief And Works Agency) அமைப்பின் தலைவர் பிலிப் லசாரினி (Philippe Lazzarini) காசா பொதுமக்களின் துயரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உலகம் மனிதாபிமானத்தை இழந்து விட்டது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் எந்த மனிதாபிமான உதவிகளையும் காசா மக்களுக்கு வழங்க முடியவில்லை. காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்தான் 'உயிர்' - ஆனால் காசாவில் குடிநீர் இல்லை; ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை. காசாவின் 'உயிர்' பிரிந்து கொண்டிருக்கிறது. விரைவில் உணவு மற்றும் மருந்து ஆகியவையும் கிடைப்பது நின்று விடும். கடந்த 8 நாட்களாக காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை. அங்கு இதுவரை உலகம் கண்டிராத ஒரு மனிதகுல பேரழிவு நடந்து வருகிறது. பாதுகாப்பான இடம் என அங்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று (அக்டோபர் 16) உலகம் முழுவதும் "உலக உணவு தினம்" கொண்டாடப்படும் வேளையில், லட்சக்கணக்கான காசா மக்களுக்கு உணவு, வசிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது கவலை தரும் நிகழ்வு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெஹ்ரான்:
ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.
இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை ஏற்று கொள்ள பல அரபு நாடுகள் தயங்குகின்றன
- கத்தார், லெபனான், ஜோர்டான், ஈரான், எகிப்து என்ன செய்கின்றன என நிக்கி கேட்டார்
கடந்த அக்டோபர் 7 அன்று, தனது நாட்டின் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை தேடி பழி வாங்கி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர் 10-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ஏற்கனெவே அறிவித்திருந்தது.
ஆனால், அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க பல அரபு நாடுகள் தயங்குகின்றன.
அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் நிக்கி ஹாலே, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி, தனக்கு ஆதரவை தேடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். ஆனால் தனது நாட்டை விட்டு ஓடி செல்லும் சூழலில் பரிதாபமாக உள்ள காசா பொதுமக்களுக்கு, அரபு நாடுகள் தங்கள் நாட்டின் கதவுகளை திறந்து அவர்களை உள்ளே அனுமதிக்க ஏன் தயங்குகின்றன? அரபு நாடுகள் என்ன செய்கின்றன? கத்தார், லெபனான், ஜோர்டான், ஈரான், எகிப்து ஆகிய நாடுகள் ஏன் அந்த அப்பாவி பொதுமக்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதித்து பாதுகாப்பு அளிக்க மறுக்கின்றன?
எகிப்திற்கு ஒவ்வொரு வருடமும் $1 பில்லியனுக்கும் மேல் அமெரிக்கா வழங்கி வருகிறது. அப்படியிருந்தும் பாலஸ்தீனர்களை ஏன் அவர்கள் தங்கள் நாட்டு மக்களோடு மக்களாக வாழ அனுமதிக்க மறுக்கிறார்கள்? பாலஸ்தீன மக்களை தங்கள் அருகாமையில் வைத்து கொள்ள அந்த நாடுகளே விரும்பவில்லை. அவ்வாறு இருக்கும் போது இஸ்ரேல் எப்படி தங்கள் அருகாமையில் தங்க வைத்து கொள்ள விரும்பும்? நாம் இந்த பிரச்சனையை நேர்மையான பார்வையுடன் அணுக வேண்டும். பாலஸ்தீனர்களின் நலனுக்காக அரபு நாடுகள் எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.
ஹமாஸ் அமைப்பினர் தற்போது செய்து வருவதை நிறுத்த சொல்லி உடனே தடுக்க அரபு நாடுகளால் முடியும்; ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
இறுதியாக அவர்கள் இஸ்ரேலையும் அமெரிக்காவையும்தான் குறை சொல்வார்கள்.
இவ்வாறு நிக்கி ஹாலே கூறினார்.
- கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
- ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எல்சால்வடார்:
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.
72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.
இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.






