என் மலர்tooltip icon

    உலகம்

    • போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.
    • சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.

    காசா:

    காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது.

    அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:-

    இஸ்ரேல் விமான தாக்குதல்களில், 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.

    காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயல்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    • வரலாறு காணாத வறட்சி காரணமாக, அமேசானின் கிளை நதிகள் வறண்டுள்ளன.
    • பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    பிரேசில்:

    பிரேசிலில் மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வறண்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வறட்சி காரணமாக அமேசானின் கிளை நதிகள் வறண்டுள்ளன.

    இதன் காரணமாக அந்த நதிகளின் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    மேலும், நூற்றுக்கணக்கான டால்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

    • பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசா:

    இஸ்ரேல் படையினரின் வான்வழித் தாக்குதலால் காசா மக்கள் திக்கு தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.

    ரபாத் மற்றும் கான்யூனிசில் 3 வீடுகள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலிய விமான தாக்குதலில் ஒரே இரவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

    இஸ்ரேலின் உத்தர வின்படி காசா நகரில் இருந்தும், வடக்கு பகுதிகளில் இருந்தும் வெளியேறி குடும்பங்கள் தான் கொல்லப்பட்டனர்.

    காசாவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ், ரபா, டெல் அல்பலாஹ் ஆகிய பகுதிகளில் கடுமையான குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.

    பாலஸ்தீனர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிவாரண அமைப்பினர் கூறும்போது, 'தெற்கு காசாவில் குடிநீர், உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், மின்சாரம் இல்லாததால் மருத்துவ மனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கண் முன்பே மனித பேரழிவு ஏற்படுகிறது' என்று கூறியுள்ளார்.

    உலக சுகாதார அமைப்பினர் கூறும்போது, 'மொத்தம் 23 லட்சம் மக்கள் கொண்ட காசாவில் தினசரி ஒருவருக்கு ஒரு லிட்டருக்கு குறைவான நீர் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் நிறுத்தபட்டதால் பிறந்த குழந்தைகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் அபாயத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    • வேக கட்டுப்பாட்டை மீறி 3 மடங்கு வேகத்தில் கேரி சென்றார்
    • என் ஒரே அழகான மகளை இழந்து விட்டேன் என்றார் லட்சுமிதாஸ்

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரின் மேற்கில் உள்ள கென்சிங்டன் பகுதியில் ஜேட் முடுவா (22) எனும் இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, ஒரு பெண்ணை கத்தியை காட்டி எவரோ பயமுறுத்துவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததின் பேரில், அப்பெண்ணை காக்க சம்பவ இடத்திற்கு பெருநகர காவல்துறை வாகனத்தில் கேரி விட்கின்சன் (Gary Witkinson) எனும் காவலர் விரைந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த பகுதியில் மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்தும் தனது கடமையை ஆற்ற சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் கேரி சென்று கொண்டிருந்தார்.

    நடந்து வந்து கொண்டிருந்த முடுவா, சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரி, முடுவாவை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால், மிக வேகமாக ஓட்டியதால் அவரால் உடனே நிறுத்த முடியவில்லை. இதனால் துரதிர்ஷ்டவசமாக முடுவா மீது கேரியின் காவல்துறை வாகனம் மோதியது.

    இதையடுத்து உடனடியாக கேரி காரை நிறுத்தினார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முடுவா, பலத்த காயங்களால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்திற்கு காரணமான கேரி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது.

    ஆனால், கேரி காவல்துறையினரின் நடத்தை விதிகளின்படியே செயல்பட்டதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    இதனையடுத்து, மிகுந்த வேதனையடைந்துள்ள முடுவாவின் தந்தை ஜெர்மைன் லட்சுமிதாஸ் (Jermaine Laxmidas), தெரிவித்ததாவது:

    காரால் மோதிய கேரியிடம் கேட்கப்பட்ட போது, "காவல்துறை வாகனங்கள் கடமையை ஆற்ற வேக கட்டுப்பாட்டை தாண்டி 3 மடங்கு அதிகம் செல்லாம்" என கூறியுள்ளார். இது தவறு. இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும். என் ஒரே அழகான மகளை நான் இழந்துள்ளேன். காவலர்களின் வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு லட்சுமிதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    அவரது இழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் அதே நேரம் இவரது தனிப்பட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளத்தில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இஸ்ரேலில் பிரதமர் மோடி மிகவும் விரும்பப்படும் தலைவர்
    • பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார்

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் சிக்கலை தீர்க்க இஸ்ரேல் தற்போது முயலவில்லை. இப்பொழுது புதியதாக எழுந்திருக்கும் தீவிர பிரச்சனையை தீர்க்க போராடுகிறோம். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்தால்தான் மீண்டும் இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.

    இந்தியா மீது இஸ்ரேல் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் மிகவும் விரும்பப்படும் தலைவர். பிற நாடுகளை விட இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் எங்கள் பக்கம் நின்றது. மோடி உடனடியாக கண்டனம் செய்தார். பிற நாட்டினர் உடனடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை; பிறகுதான் தெரிவித்தனர்.

    அமெரிக்கர்கள் எங்களுக்கு துணை நிற்கின்றனர். மேலும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவுடன் தற்போது வலுவான உறவு உள்ளது. நாங்கள் இந்தியாவை நம்புவதால், அவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

    சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். அதில் சுமார் 1000 இந்தியர்கள் மட்டுமே இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பினார்கள்; அவர்களையும் நாங்கள் பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

    இவ்வாறு நவோர் கிலான் தெரிவித்தார்.

    • இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் பெரும்பாலான உடல்கள் வைக்கப்பட்டுள்ளன
    • உயிரிழந்தவர்களின் உடல்களை யூதர்கள் முழுமையாக எரியூட்ட வேண்டும்

    கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமை காலை, இஸ்ரேல் நாட்டிற்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர், அங்குள்ள பொதுமக்கள் மீது பெரும்தாக்குதலை நடத்தி 1400க்கும் மேற்பட்ட பொதுமக்களை பயங்கரமான முறையில் கொன்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக கூறி பாலஸ்தீன காசா பகுதி மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் பட்டியலிடப்பட்டு ஏராளமான ஸ்ட்ரெட்சர்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அந்நாட்டின் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் (National Center of Forensic Medicine) பெரும்பாலான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இது போல் உள்ள மேலும் 4 மையங்களிலும் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.

    உருக்குலைந்த உடல்களை அவர்கள் ஆய்வு செய்த பின் தாங்கள் கண்டறிந்ததாக கூறும் தகவல்கள் மூலமாக ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் பரிதாப நிலை குறித்து அறிய முடிகிறது.




     


    அந்த உண்மைகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது.

    இது குறித்து அந்த தடயவியல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

    பல டிரக்குகளில் இன்னமும் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் மிகவும் அதிகமாக உள்ளது. பல உடல் பாகங்களை ஒன்று சேர்க்கும் மிக சோகமான மற்றும் கடினமான செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

    கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒருவருடன் ஒருவராக கட்டப்பட்டு, கொல்லப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்ட உடல்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமான செயல். அனைத்து உடல்களும் அடையாளம் தெரியாத அளவு எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. யூத நம்பிக்கையின்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக எரியூட்டப்பட வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த முடியாத அளவு அவர்கள் உடல்களை எரியூட்டி கொலை செய்துள்ளனர். குழந்தைகளை தாக்குதலில் இருந்து காக்க இறுகி அணைத்தபடி பலர் உயிர் விட்டுள்ளனர்.



    பெண்கள் கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளன. அவர்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டுள்ளனர். பல உடல்களில் பத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஒரே நேரத்தில் துளைத்திருக்கின்றன. மரபணு மாதிரிகளையும், கைரேகை அடையாளங்களையும், பல்வரிசை குறிப்புகளையும் கொண்டு ஆய்வு செய்து உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயல்கின்றோம்.

    உயிரிழக்கும் போது அந்த மக்கள் எத்தகைய துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை நாங்கள் உலகினருக்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள் நடக்காதவற்றை கூறுவதாக உலகின் சில நாடுகள் கூறின. ஒரு சிலர் நாங்கள் நாய்களின் எலும்புகளை காட்டுவதாக குற்றம் சாட்டினார்கள். எனவே உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம். இதுவரை இப்படியொரு கொடுமையை எங்கள் பணியில் நாங்கள் கண்டதில்லை.

    இவ்வாறு தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காசா நகருக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டது.
    • குண்டு வீச்சை நிறுத்தினால்தான் வெளிநாட்டு பிணை கைதிகளை விடுவிப்போம்.

    காசா:

    பாலஸ்தீனர்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, அடக்குமுறை செய்வதாக கூறி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் படையினர் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் கடல், வான், சாலை வழியாக ஊடுருவிய ஹமாஸ் படையினர் தீவிர தாக்குதல் நடத்தினர்.

    வெளிநாட்டவர் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா தெருக்களில் குண்டு மழை பொழிந்து பெரும்பாலான கட்டிடங்களை தரை மட்டமாக்கியது. காசா நகருக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டது.

    இதற்காக வடக்கு காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. இஸ்ரேல் ராணுவத்தினர் தரைவழி தாக்குதல் எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 லட்சம் பாலஸ்தீனர்கள் கடந்த 4 நாட்களில் தெற்கு காசாவுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலையில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாசின் ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் அபு ஒபேதே ஒரு தொலைக்காட்சியில் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இஸ்ரேலின் தெற்கில் கடந்த 7-ந்தேதி அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு 200 பேரை பிணை கைதிகளாக பிடித்துள்ளோம். பிற இடங்களில் 50 பேரை கைது செய்துள்ளோம்.

    எங்கள் மக்களுக்கு எதிராக தரை வழித் தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் எங்களை பயமுறுத்தவில்லை.

    இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    குண்டு வீச்சை நிறுத்தினால்தான் வெளிநாட்டு பிணை கைதிகளை விடுவிப்போம். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து நாங்கள் பிடித்து வைத்த பிணை கைதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர்.

    இவ்வாறு ஹமாஸ் ராணுவ செய்தி தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இஸ்ரேல் பிரதமருடன் புதின் தொலைபேசியில் விவரமாக பேசியுள்ளார்

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்கள் மறைவிடங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதை முடிவுக்கு கொண்டு வர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

    இது குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    அரசியல் மற்றும் பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அதிபர் விளாடிமிர் புதின் விரும்புகிறார். இது குறித்து அவர் இஸ்ரேல் அதிபர், அரபு நாடுகளின் தலைவர்கள், ஈரான் நாட்டு அதிபர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்று, அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இது மட்டுமின்றி மத்திய தரைகடல் பகுதி தலைவர்களுடனும் அவர் தொடர்பில் உள்ளார். ஈரான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் புதின் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்களை இஸ்ரேல் பிரதமருடன் அவர் பகிர்ந்து கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உள்ள மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்க தற்காலிக போர் நிறுத்தம் தேவை என புதின் கருதுகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இந்த அறிக்கையில் ஐ.நா. கூட்டமைப்பின் பாதுகாப்பு சபை முன் ரஷியா முன்மொழிய கொண்டு வந்த தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இஸ்ரேல் ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருவது நல்லது என்பதால் புதினின் முயற்சியை அரசியல் விமர்சகர்களில் ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஆக்ரமிப்பு மற்றும் அது தொடர்பாக இரு நாடுகளுக்கும் நடைபெறும் போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சீரழிவு குறித்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவும் மற்றுமொரு சாரார் ரஷியாவின் இந்த முயற்சியை பார்க்கின்றனர்.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
    • அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சீனா சென்றுள்ளார்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீவுடன் பேசினார். அப்போது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
    • ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணை வீசி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி. இவர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வரப்படுபவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒசாமா அல் மசினி பலியானார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
    • போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தீர்மானம் கொண்டு வந்தது.

    நியூயார்க்:

    இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தீர்மானம் கொண்டு வந்தது.

    தீர்மானத்தில் ஹமாஸ் குறித்து குறிப்பிடவில்லை. ஹமாஸை முறையாக விமர்சிக்கவில்லை என அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷியாவின் வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில் நிராகரித்துள்ளது.

    • மத்திய பிரசெல்சில் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
    • இந்தச் சம்பவத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    பிரசெல்ஸ்:

    ஐரோப்பா நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேற்று இரவு பெல்ஜியம்-சுவீடன் கால்பந்து அணிகள் மோதிய, யூரோ சாம்பியன்ஷிப் தகுதி சுற்று போட்டி நடந்தது.

    இப்போட்டி நடந்த மைதானத்தில் இருந்து சிறிது தூரத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் சுவீடனைச் சேர்ந்த 2 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பயங்கரவாத தாக்குதல் என்பது தெரிய வந்தது. தாக்குதல் நடத்திய நபர், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, "எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி. நான் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாம் விரும்புகிறோம். நம்மை வெறுப்பவர்களை வெறுக்கிறோம். நான் சுவீடன் நாட்டவரை கொன்றுள்ளேன்" என்று கூறினார்.

    இதனால் பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாத தாக்குதலையடுத்து பெல்ஜியம்-சுவீடன் மோதிய கால்பந்து போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. அப்போது மைதானத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் மைதானத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    சிறிது நேரத்துக்கு பிறகு ரசிகர்கள் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். மேலும் சுவீடன் கால்பந்து அணி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.

    தாக்குதல் நடத்திய நபர், துனிசியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், பிரசெல்சில் வசித்து வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    இதுதொடர்பாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டிகுரூ கூறும்போது, "பிரசெல்சில் நடந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. சுவீடன் குடிமக்கள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து சுவீடன் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும் உயர்மட்ட அமைச்சர்களின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், பிரசெல்சில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர், ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இந்த தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல். இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    ×