என் மலர்
உலகம்
- ஷேக் ஹசீனா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஷேக் ஹசீனா மீதான ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஷேக் ஹசீனாவின் இல்லமான சுதாசதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
- டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
- இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை சுமார் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பான அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அறிவித்துள்ளது. மேலும், ரஷியாவுடன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு சமீபத்தில் நிறுத்தப்பட்ட ராணுவ உதவிகளை மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து, ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பு அதிகாரிகள், வான் வழி மற்றும் கடல் வழி தாக்குதல்களில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர். மறுப்பக்கம் அமெரிக்கா சார்பில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.
"போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனிடம் இன்று வலியுறுத்தினோம், அவர்கள் தரப்பில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். தற்போது பந்து அவர்களிடம் தான் உள்ளது."
"அவர்கள் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில், துரதிர்ஷ்டவசமாக இங்கு அமைதி திரும்ப என்ன தடையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாங்கள் முயற்சிப்போம்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகள் உடனடியாக மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சந்தித்தனர். அப்போது, ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இதன் பிறகு தான், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்தார். அப்போது "அடுத்த சில நாட்களில் நடக்கும் என்று நம்புகிறேன், நான் அதை பார்க்க விரும்புகிறேன். நாளை ரஷியாவுடன் எங்களுக்கு ஒரு பெரிய பேச்சுவார்த்தை இருக்கிறது. சுமூகமான உரையாடலாக அது இருக்கும் என்று நம்புகிறேன்," என தெரிவித்தார்.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
- சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் வழிமறித்தனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறும் போது, "பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) - ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
ரெயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரிண்ட் கூறியுள்ளார்.
- இந்திய வருகை அவரின் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக இருக்கும்.
- ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸூம் இந்தியா வரவுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் ஊடக நிறுவனமான பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில், அமெரிக்காவின் துணை அதிபராக அவர் மேற்கொள்ள இருக்கும் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக அவரது இந்திய வருகை இருக்கும்.
முதல் சர்வதேச பயணத்தின் போது துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். உரையின் போது சட்டவிரோத குடியேற்றம், மத சுதந்திரம் மற்றும் தேர்தல் விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார். இவரது உரை உலகளவில் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அமெரிக்க அரசுடன் நட்புறவு கொண்ட நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த உஷா வான்ஸ், தான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு முதல் முறையாக அமெரிக்காவின் 'Second Lady'-ஆக வருகை தரவுள்ளார்.
- மொரிஷியஸின் பல குடும்பங்கள் கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
- அவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் கவலைப்பட்டேன் என தெரிவித்தார்.
போர்ட் லூயிஸ்:
மொரிஷியசில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா மற்றும் மொரிஷியஸ் உறவுகளில் இனிமை அதிகரித்துள்ளது. மொரிஷியஸ் குடிமக்களுக்கு அவர்களின் தேசிய தின வாழ்த்துக்கள்.
மொரிஷியஸைச் சேர்ந்த பல குடும்பங்கள் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டன. சுமார் 65 முதல் 66 கோடி மக்கள் கலந்துகொண்ட உலகின் மிகப்பெரிய கூட்டத்தைக் கண்டு உலகம் ஆச்சரியப்படுகிறது.
மொரிஷியஸின் பல குடும்பங்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் கவலைப்பட்டேன்.
எனவே, மகா கும்பமேளாவின்போது சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்தேன். இந்தப் புனித நீர் நாளை கங்கை தாலாப்பில் இணைக்கப்படும்.
கங்கை அன்னையின் அருளால் மொரிஷியஸ் புதிய செழிப்பை அடைய பிரார்த்திக்கிறேன்.
மொரிஷியஸ் இந்தியாவிற்கும் உலகளாவிய தெற்கிற்கும் இடையே பாலமாக உள்ளது என தெரிவித்தார்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
- மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
2016-22 காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த ரோட்ரிகோ டுட்டெர்டே, நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ரோட்ரிகோ டுட்டெர்டே, மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிலிப்பைன்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- பாராளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறினார்.
- இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒட்டாவா:
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை பிரதமராக ட்ரூடோ தொடருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ இன்று சந்தித்தார். இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தினர்.
தனது பதவிக்காலம் முடிவடைவதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜஸ்டின் ட்ரூடோ, பாராளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார்.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கனடாவில் எம்.பி.யாக இருந்தவர் பதவி விலகியதும் தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொண்டு செல்லலாம் என்பது நடைமுறை ஆகும்.
- ரெயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ரெயிலை நிறுத்தச்செய்து உள்ளே ஏறியுள்ளனர்.
- பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றுள்ளது.
பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா(Quetta) பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றுள்ளது.

பி.எல்.ஏ பயங்கரவாதிகள், ரெயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ரெயிலை நிறுத்தச்செய்து உள்ளே ஏறியுள்ளனர். 6 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற அவர்கள், ரெயிலின் 9 பெட்டிகளில் 400 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் 100 பேரை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பி.எல்.ஏ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், அனைத்து பணயக்கைதிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இதற்கான முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தான் விழும்" என்று கூறப்பட்டுள்ளது.

- அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டுச் சென்றார்.
- பெண்கள், குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
போர்ட் லூயிஸ்:
மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தினவிழா நாளை (மார்ச் 12ம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் சென்றுள்ளார்.
மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், இன்று மாலை மொரிஷியஸ் அதிபர் தரம் கோகூலின் மனைவிக்கு சடேலி பெட்டியில் பனாரசி பட்டுப் புடவையை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார்.
வாரணாசியில் இருந்து வந்த பனாரசி புடவை, ஆடம்பர மற்றும் கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாகும். அதன் நேர்த்தியான பட்டு ஆடம்பரமான ஜரிகை வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.
இந்த நேர்த்தியான புடவை வெள்ளி ஜரிகை மையக்கருக்கள், ஒரு பரந்த ஜரிகை பார்டர் மற்றும் ஒரு விரிவான பல்லு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
இந்தப் புடவைக்கு துணையாக குஜராத்தில் இருந்து வந்த சடேலி பெட்டி உள்ளது. இது விலைமதிப்பற்ற புடவைகள், நகைகள் அல்லது நினைவுப் பொருட்களை சேமிக்க வடிவமைக்கப்பட்ட சிக்கலான உள் வேலைப்பாடுகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளில் பாகிஸ்தானும் இடம் பிடித்துள்ளது.
- உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதல் இடம் பிடித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியூ.ஏர்-ன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது.
அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்கு சென்றுள்ளது. இதன்படி உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியது. குறிப்பாக பஞ்சாபில் நிலைமை பேரிடர் என அறிவிக்கப்பட்டு, சுமார் 2 மில்லியன் மக்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
மாசுபாட்டை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்தல் மற்றும் பள்ளிகளை மூடுதல் ஆகியவை அடங்கும்.
சர்வதேச நுண்ணறிவு நிறுவனமான இப்சோஸின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் 10 பேரில் ஏழு பேர் புகைமூட்டம் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளது.
- தென் ஆப்பிரிக்காவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
- இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜோகன்னஸ்பர்க் கிழக்கே உள்ள டவுன்ஷிப் அல்லது கேட்லெஹாங்கிலிருந்து மக்களை ஏற்றிச் சென்றது. அப்போது திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அவசர சேவை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டாம்போ சர்வதேச விமானநிலையம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 9 ஆண்களும், 3 பெண்களும் இறந்தனர். இன்னும் 2 உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இரண்டு விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஷியா மீது உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று காலை தலைநகர் மாஸ்கோ உள்பட 10 பிராந்தியங்களில் தாக்குதல் நடத்த டிரோன்கள் பறந்து வந்தன. அவற்றை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மாஸ்கோவை குறிவைத்து இயக்கப்பட்ட உக்ரைனின் சுமார் 70 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷியாவின் 10 பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக குர்ஸ்க் பகுதியில் 126 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. டிரோன் தாக்குதலை தொடர்ந்து இரண்டு விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இன்று சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.






