என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- தென்ஆப்பிரிக்கா தொடரில் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- பேட்டர்கள் வரிசையில் சுப்மன் கில், ரோகித் சர்மா தங்களுடைய இடத்தை இழக்கவில்லை.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 16 இடங்களில் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் அவருடைய சிறந்த இடமாகும்.
தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் முதல் இடத்திலும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய சுழந்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா 2 இடங்கள் பின்தங்கி 10 இடத்தை பிடித்துள்ளார்.
பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. விராட் கோலி 4ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்திலும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஜோ ரூட் 5 இடங்களில் முன்னேறி 19ஆவது இடத்தில் உள்ளார்.
- அதிகபட்சமாக ஒரு டிக்கெட் விலை 257,815 ரூபாய் ஆகும்.
- குறைந்தபட்ச விலை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.
கிரிக்கெட் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் முதன்மையாக இருப்பது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியாகும். இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடாமல் உள்ளதால் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எங்கு நடைபெற்றாலும், அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு டிக்கெட் விற்பனை தொடங்கிய உடன், அனைத்து டிக்கெட்டுகளும் மளமளவென விற்று தீர்ந்து விடும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் முழுமையாக விற்பனையாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
VIP Suites East பகுதிக்கான டிக்கெட் (இரண்டு) விலை 257,815 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டிற்கு அளவில்லா உணவு மற்றும் டிரிங்ஸ், ஓய்வறை வசதி, தனி நுழைவாயில், பிரத்யேக கழிப்பறைகள் போன்ற வசதிகள் உண்டு.
அடுத்து Royal Box பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 2,30,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.
Sky Box East பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 167,851 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Platinum டிக்கெட் 75,659 ரூபாயாகவும், Grand Lounge டிக்கெட் 41,153 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. General East-க்கான டிக்கெட்தான் மிகவும் குறைந்த விலையாகும். இதன் விலை 10 ஆயிரம் ரூபாயாகும். இது விற்று தீரும் நிலையில் உள்ளது.
டிக்கெட் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக, தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி துபாயில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா, ஓமன் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் குறித்து ஓமன் அணியின் சாமேய் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
மற்ற எல்லா கிரிக்கெட் வீரர்களையும் போல இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் அது சாத்தியமாகவில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சுவாரசியமாக இருக்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது தானே ஒரு பெரிய விஷயமாக இருக்கும். எங்கள் முழு அணியும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவும், நல்ல போட்டியை கொடுக்கவும் தயாராக இருக்கும் என தெரிவித்தார்.
- டிரிங்ஸ் பார்ட்டியின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
- தகராறின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரித்வி ஷா மீது குற்றச்சாட்டு.
இந்திய அணிக்காக விளையாடியவர் மும்பை கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டபோது இவருக்கும், சப்னா கில் என்ற பெண்ணின் நண்பருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
சப்னா கில்லின் நண்பர், பிரித்வி ஷாவுடன் செல்பி எடுக்க கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தில் இருந்து வெளியேறும்போது, தகராறு முற்றி அடிதடியில் முடிவடைந்துள்ளது. பிரித்வி ஷா காயமின்றி தப்பினார். ஆனால், சப்னா கில் நண்பன் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சப்னா கில் மற்றும் அவருடன் மேலும் சிலர் பிரித்வி ஷாவின் நண்பரை பின்தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனடிப்படையில் புகார் அளிக்க சப்னா கில்லை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் பிரித்வி ஷா தனக்கு உடல் ரீதியாக பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக சப்னா கில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்கப்பதிவு செய்தனர். ஆனால் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் சப்னா கில் முறையீடு செய்தார்.
சப்னா கில் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க மும்பை செசன்ஸ் கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் பிரித்வி ஷா பதில் அளிக்காமல் இருந்தார். கடந்த விசாரணையின்போது இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படி இருந்தும் பிரித்வி ஷா விளக்கம் அளிக்கவில்லை.
இதனால் நீதிமன்றம் பிரித்வி ஷாவுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், அடுத்த விசாரணையின்போது கண்டிப்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
- துபாயில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இன்று மோதுகிறது.
- இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம்.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
போட்டியின் 2-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது. அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வசீம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எல்லா அணிகளும் சிறப்பாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம். அதனால எல்லா போட்டிகளும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
ஆனால் எங்கள் திட்டப்படி கடின உழைப்பை செலுத்துவோம். நாம் என்ன கற்றுக்கொண்டோமோ அதன்படி செல்வோம். முடிவு ஆட்டத்தைப் பொறுத்தது.
நாங்க இங்க நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் இங்க நிறைய விளையாடுதுன்னு சொல்லலாம். ஆனா இது எங்க சொந்த மைதானம். அதனால நாங்க முடிந்தவரை நல்ல கிரிக்கெட் விளையாட முயற்சிப்போம்.
என கூறினார்.
- இத்தாலி அணி முதல் முறையாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
- இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.
புதுடெல்லி:
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.
இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
- ஆசிய கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
- சூர்ய குமார் யாதவ் மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.
அபுதாபி:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்பட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது.
தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 94 ரன் வித்தியாசத்தில் ஆங்காங்கை வீழ்த்தியது.
முன்னதாக இந்தப் போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
நிருபர்கள் சந்திப்புக்கு பிறகு ஒவ்வொரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்ள வேண்டும். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்கல் வரை காத்திருக்காமல் வெளியேறினார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கை குலுக்காமல் சென்ற வீடியோ வெளியானது.
இந்தப் போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதும் ஆட்டம் துபாயில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. எல்லையில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்துக்கு பிறகு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்றது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.
அதே நேரத்தில் சூர்ய குமார் யாதவ் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான் உள்ளிட்ட மற்ற அணிகளின் கேப்டன்களுடன் கை குலுக்கி கட்டி பிடித்தார்.

பின்னர் தான் சல்மான் ஆகா கை குலுக்காமல் சென்ற தவறை உணர்ந்தார். இதை தொடர்ந்து அவர் சூர்யகுமார் யாதவிடம் சென்று கை குலுக்கி கொண்டார். இந்த புதிய வீடியோவும் வெளியானது. இதேபோல சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியுடன் கை குலுக்கி கொண்டார்.
- ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் உமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அபுதாபி:
8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா உமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனையை அஸ்மதுல்லா உமர்சாய் படைத்துள்ளார்.
மேலும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் அதிகவேக அரை சதம் விளாசிய இந்தியாவின் சூர்யகுமார் மற்றும் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் சாதனையையும் உமர்சாய் முறியடித்துள்ளார். 2022-ம் ஆண்டு ஹாங் காங்குக்கு எதிராக சூர்யகுமார் 22 பந்திலும் இலங்கைக்கு எதிராக குர்பாஸ் 22 பந்திலும் அரை சதம் அடித்திருந்தனர். அவர்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் உமர்சாய்.
- ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகிய மூவரும் இணைந்து 1,750 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் இவர்கள் மூன்று பேரும் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு தூண்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் இருந்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 15 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் இவர்கள் மூவரும் இணைந்து மொத்தம் 1,750 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளனர். 30 வயதை கடந்து விட்ட இவர்கள் அடிக்கடி காயத்தில் சிக்குகிறார்கள்.
இந்த நிலையில் நவம்பர் 21-ந் தேதி பெர்த்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் இவர்கள் மூன்று பேரும் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனை 34 வயதான ஹேசில்வுட் மறுத்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் 'தற்போதைய நிலைமையில் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒருவேளை தொடர் முடிந்த பிறகு உட்கார்ந்து இது குறித்து சிந்திக்கலாம். நாங்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. ஆஷஸ் மட்டுமின்றி, அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டிகளும் இருப்பதால் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இன்னும் ஆர்வமாக இருக்கிறது. எங்களிடம் இன்னும் சில ஆண்டுக்கான கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சி இருப்பதாக நினைக்கிறேன்' என்றார்.
- 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும்.
- இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
போட்டியின் 2-வது நாளான இன்று (புதன்கிழமை) துபாயில் நடக்கும் 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கும், சரியான லெவன் அணியை கண்டறிவதற்கும் இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியது. முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது போன்ற சலசலப்புகளை மறந்து விட்டு இந்திய வீரர்கள் போட்டிக்கு முழுவீச்சில் ஆயத்தமாகியுள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் ஷர்மாவுடன், சுப்மன் கில் இறங்க வாய்ப்புள்ளதால் அனேகமாக சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்காது என தெரிகிறது. மற்றபடி சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் இரு போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் அணிக்கு திரும்பியிருப்பது இந்தியாவுக்கு பலமாகும். அமீரகம் குட்டி அணி என்பதால் இந்தியா வெற்றியோடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரக அணி முகமது வாசீம் தலைமையில் களம் காணுகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் நொறுக்கியவர் (114 சிக்சர்) என்ற பெருமைக்குரியவர் வாசீம். அவர் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடந்த 2-3 மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறோம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி சரியாக செயல்பட்டு முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்க முடியும். ஓமனை நாங்கள் வீழ்த்தி விடுவோம். மற்ற இரு அணிகளில் ஒன்றை வீழ்த்தி சூப்பர்4 சுற்றை எட்டுவதே எங்களது இலக்கு' என்றார். சாதகமான உள்ளூர் சூழல் மட்டுமின்றி, அந்த அணிக்கு இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் அனுகூலமாகும்.
இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது. அனைத்திலும் இந்திய அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
ஐக்கிய அரபு அமீரகம்: முகமது வாசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ராகுல் சோப்ரா, ஆசிப் கான், முகமது பரூக், ஹர்ஷித் கவுசிக், முகமது சோகைப், முகமது ஜவாதுல்லா அல்லது சாகிர் கான், ஹைதர் அலி, ஜூனைத் சித்திக், முகமது ரோகித்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகள் உள்ளன.
- இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
வரும் 28-ந்தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேற்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஹாங் காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.
இதன் பின் பேட்டிங் இறங்கிய ஹாங் காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்ய முடிந்தது. இதனால் முதல் நாள் போட்டியில் சீனாவின் ஹாங்காங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.
வரும் நாட்களில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
- சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தொடக்க வீரர் சஞ்சு சாம்சனா?, சுப்மன் கில்லா? என கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. நாளை இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் களம் இறங்குவது உறுதியாக உள்ளது. அவர் தொடக்க வீரராக களம் இறங்கக் கூடியவர். இதனால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சூர்யகுமார் யாதவ் "Sir, ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை உங்களுக்கு மெசேஜ் செய்வேன். உண்மையிலேயே அவரை நாங்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறோம். கவலைப்பட வேண்டாம். நாளை நாங்கள் சரியான முடிவை எடுப்போம்" என்றார்.
சஞ்சு சாம்சனும், சுப்மன் கில்லும் அணியில் இடம் பிடித்தால் யார் தொடக்க வீரராக களம் இறங்குவது? என்பதிலும் சிக்கல் நீடிக்கும்.






