என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணியில் அனைத்து வீரர்களும் குடித்தனர்.
    • ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் பிரவீன் குமார். 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய அணி பிரதான பவுலர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவுட் ஸ்விங், இன் ஸ்விங் மூலமாக பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தவர். அவர், 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 112 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ள அவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இந்நிலையில் அவர் எங்கு எப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இருண்ட ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் முதல்முறையாக இந்திய அணியுடன் இணைந்த போது, சில சீனியர் வீரர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி கொள் என்று அறிவுறுத்தியதோடு, மற்ற சில தவறான பழக்கத்தையும் தவிர்த்துவிடு என்று அட்வைஸ் கொடுத்தார்கள். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் குடித்தனர். ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.

    சீனியர் வீரர்கள் பலரும் என்னை இளம் வீரர் என்று சிறப்பாக நடத்தினர். ஆனால் சிலர் மட்டும் என்னை பற்றி தவறான செய்தியை பரப்பினார்கள். கேமராவுக்கு முன்பாக நான் அவரின் பெயரை கூற விரும்பவில்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு ஐபிஎல் அணி ஒன்று என்னை பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட என்னை தேர்வு செய்யவில்லை.

    இவையனைத்திற்கும் நான் குடிப்பது தான் காரணமாக அமைந்தது. நான் ஒருநாளும் மைதானத்திலோ அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இதுவே எனக்கு துயரத்தை கொடுத்தது. எனக்கு ஒருவர் கூட அழைத்து பேசாதது தான் சோகமாக இருந்தது.

    என்று பிரவீன் குமார் கூறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
    • முதல் செட்டை ஸ்ரீகாந்த் 12- 21 என்ற கணக்கில் மோசமாக தோற்றார்.

    மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

    முதல் செட்டை ஸ்ரீகாந்த் 12- 21 என்ற கணக்கில் மோசமாக தோற்றார். இதனையடுத்து நடந்த 2-வது சுற்றை ஸ்ரீகாந்த் 21-18 என தனதாக்கினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 21- 16 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • டோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
    • அனைவரும் அழைப்பது போல டோனி கூலான கேப்டன்.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டித்தொடர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2-வது சீசன் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது.

    இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் வீரருமான பாப் டூப்ளசிஸ் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    இந்நிலையில் எம்.எஸ்.டோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என பாப் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சென்னை அணியில் இளம் வீரராக இருந்தது மகத்தானதாக அமைந்தது. அங்கே எம்.எஸ்.டோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களை போன்ற பெரிய வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

    டோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அனைவரும் அழைப்பது போல டோனி கூலான கேப்டன். அவர் அழுத்தமான நேரங்களிலும் அமைதியாக இருப்பார். பொதுவாகவே நீங்கள் அழுத்தமான நேரங்களில் ரிலாக்ஸாக இருந்து பந்துவீச்சு கூட்டணியில் மாற்றங்களை செய்து பயன்படுத்துவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த வருடம் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்று வரை தகுதி பெற்றது.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
    • கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    புதுடெல்லி:

    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் பெறுகின்றனர்.

    விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

    • ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.
    • ஸ்மித்துக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தால் அவர் 12 மாதங்களுக்குள் நம்பர்-1 டெஸ்ட் தொடக்க வீரராக இருப்பார் என கிளார்க் கூறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்த டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதில் பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களம் இறக்கவும் ஆலோசிக்கிறார்கள்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்கினால் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் ஸ்மித்துக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தால் அவர் 12 மாதங்களுக்குள் நம்பர்-1 டெஸ்ட் தொடக்க வீரராக இருப்பார். அவர் ஒரு சிறந்த வீரர்.

    ஸ்மித் தொடக்க வீரராக விளையாடும் பட்சத்தில் அவர் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த லாராவின் 400 ரன் சாதனையை முறியடித்தால் கூட ஆச்சரியப்பட வேண்டாம். அந்த சாதனையை படைக்க ஸ்மித் தகுதி உள்ளவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்மித், டெஸ்ட் போட்டியில் தற்போது 4-வது வீரராக களம் இறங்கி வருகிறார். 105 போட்டியில் 9514 ரன்கள் எடுத்துள்ளார். 32 சதங்கள், 40 அரை சதங்கள் அடித்துள்ளார்.

    4-வது வரிசையில் களம் இறங்கி 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் எடுத்து உள்ளார். சராசரி 61.51 சதவீதம் ஆகும். 3-வது வரிசையில் 11 முறை களம் இறங்கி 1744 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது.
    • பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர்.

    கோலாலம்பூர்:

    மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. 14-ந்தேதி வரை போட்டி நடக்கிறது.

    பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர். இதில் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.

    ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இன்று இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதுகிறார்.

    நாளைய ஆட்டங்களில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய்,லக்ஷயா சென் காப் இறங்குகிறார்கள்.

    • இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை முதல்முறையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களமிறங்கும்.

    மும்பை:

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

    அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பார்முக்கு திரும்ப வேண்டியது அணிக்கு அவசியமாகும். மொத்தத்தில், ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன் உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை முதல்முறையாக கைப்பற்ற வரிந்து கட்டும்.

    அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பனிப்பொழிவின் தாக்கத்தில் 2-வது பேட்டிங் செய்வது எளிதாக இருப்பதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • எர்வின் 82 ரன்கள் அடிக்க ஜிம்பாப்வே 208 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    • ஜனித் லியானகே 95 ரன்கள் அடிக்க 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி.

    ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று 2-வது போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.4 ஓவரில் 208 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் கிரேக் எர்வின் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் தீக்சனா 4 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் இலங்கை அணி வெற்றிக்காக கடைசி வரை போராட வேண்டியிருந்தது. ஜனித் லியானகே 95 ரன்கள் அடிக்க 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது மற்றும் கடைசி போட்டி நாளைமறுதினம் நடைபெறுகிறது. இதில் இலங்கை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்த நிலையில் உடல் தகுதி பெறாத நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் சமி இடம் பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.மேலும், மற்ற 3 போட்டிகளில் அவர் இடம் பெற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

    • முதல் இன்னிங்சில் ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • 2-வது இன்னிங்சில் அவர் 155 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பையில் ஜனவரி 5ஆம் தேதி துவங்கிய 5-வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சட்டீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சட்டீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் போராடி 327 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும் சாசங் சிங் 82 ரன்களும் எடுத்தனர். அசாம் தரப்பில் ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் அணி சட்டீஸ்கர் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.

    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் 4-வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதிரடியாக விளையாடிய அவர் 56 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பாக கடந்த 2016 ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் 48 பந்துகளில் சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார். அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய ரியான் பராக் 11 பவுண்டரி 12 சிக்சருடன் 155 (87) ரன்களை 178.16 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசாம் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அசாம் அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மீண்டும் சுருட்டிய சட்டீஸ்கர் சார்பில் ஜிவேஷ் புட்டே, வாசுதேவ் பாரேத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 87 ரன்களை துரத்திய சட்டீஸ்கர் அணிக்கு ஏக்நாத் கேர்கர் 31*, ரிசப் திவாரி 48* ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் கேப்டனாக விளையாடிய ரியான் பராக் தன்னுடைய ஐபிஎல் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மாநில அணியை குறைந்தபட்சம் தனி ஒருவனாக இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ் காயம் ஏற்பட்டது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவர் குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் தான் துவங்கும் என்பதனால் அதற்குள் அவர் தயாராகும் வரை கால அவகாசமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது.

    இந்த தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

    ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

    ×