என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
- கேமரூன் கிரீன் 4-வது வரிசையில் விளையாடுகிறார். மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதனால் அவர் இடத்தில் தொடக்க வீரராக யார் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் விளையாடுகிறார்.
வெஸ்ட்இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவரில் விளையாட ஆஸ்திரேலியா சென்று உள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 24-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது.
இந்த டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக ஆடுவார் என்று ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதிப்படுத்தியுள்ளார். வார்னர் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் தொடக்க வீரராக விளையாட ஸ்டீவ் ஸ்மித் விருப்பம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது கனவு நனவாகுகிறது.
கேமரூன் கிரீன் 4-வது வரிசையில் விளையாடுகிறார். மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், லபுஷேன், மிச்சேல் மார்ஷ், டிரெவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ரென்ஷா, ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்டு, ஹாசல்வுட்.
- நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்.
- இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.
நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.
அப்படி ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்தார். அவர் விழுந்ததை கண்ட விக்கெட் கீப்பர் அவரை நோக்கி ஓடினார். மற்ற வீரர்களும் உதவிக்கு விரைந்தனர்.
பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இன்ஜினியர் மாரடைப்பால் மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- இந்த போட்டியில் இந்தியா வென்ற 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
ஜகர்த்தா:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்தை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பட்டீல், மெகுலி கோஷ் இணை 16-10 என்ற புள்ளி கணக்கில் சென் யுபான்-ஜூ மிங்ஷூய் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா-ரிதம் சங்வான் கூட்டணி 11-17 என்ற புள்ளி கணக்கில் வியட்நாமின் து வின் டிரின்க்-குயாங் ஹூய் பாம் இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
இரண்டாவது நாள் முடிவில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் உள்ளது.
- இந்திய பெண்கள் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 3 போட்டிகள் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
மும்பை:
இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதன்படி குழுமியிருந்த 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷபாலி வர்மாவும் (26 ரன்), துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் மிடில் வரிசையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (3 ரன்) சொதப்பியதால் உத்வேகம் தடைபட்டது. ஹர்மன்பிரீத் கவுர் நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் ஒன்றில் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அதன் பிறகு தீப்தி ஷர்மாவும் (14 ரன்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் (34 ரன், 28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.
20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அமன்ஜோத் கவுர் (17 ரன்), பூஜா வஸ்ட்ராகர் (7 ரன்) களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சுதர்லாண்ட், வேர்ஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஒரு விக்கெட் எடுத்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட்டின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான பாகிஸ்தானின் நிதா தர்ரை (130 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார்.
அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 3 விக்கெடடுக்கு 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகளான கேப்டன் அலிசா ஹீலி (55 ரன், 38 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), பெத் மூனி (52 ரன், நாட்-அவுட்) அரைசதம் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன.
முன்னதாக ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த சுற்றுப்பயணத்தில் அந்த அணி ஒரே டெஸ்ட் போட்டியில் மட்டும் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.
- கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன்.
- எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக கடந்த நவம்பர் 19-ந் தேதி முடிந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. முகமது ஷமி தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உடல் தகுதியை பொறுத்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர் அணியில் இருந்து விலகினார்.
இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பும் நோக்குடன் முகமது ஷமி உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இது குறித்து முகமது ஷமி கூறுகையில், 'கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன். எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணுக்காலில் லேசான விறைப்பு இருக்கிறது. ஆனாலும் நன்றாகவே உள்ளேன். பயிற்சியையும் தொடங்கி விட்டேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன். சவாலான போட்டிக்கு முடிந்த அளவுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.
- தென் ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
- 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
கெபேஹா:
தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஈஸ்டன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்.ஐ. கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
கெபேஹாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஈஸ்டன் கேப் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது.
- மொத்தமாக 33 விக்கெட்டுகள் வீழ்ந்தது.
கேப்டவுன்:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 3-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2-வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டி 2 நாட்கள் முழுவதும் முடியும் முன்னரே முடிவடைந்தது.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டது. மொத்தமாக 33 விக்கெட்டுகள் வீழ்ந்தது.
இந்த பிட்ச் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா -இந்தியா மோதிய 2-வது டெஸ்ட் போட்டி நடந்த மைதான பிட்ச் திருப்தியற்றது என ஐசிசி நிர்ணயம் செய்துள்ளது. ஐசிசி-யின் பிட்ச் மற்றும் அவுட் பீல்ட் கண்காணிப்பு செயல்முறைகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை இன்று ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம் வரவிருக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), இந்தியாவில் நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை இன்று ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது.
அதன்படி நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் வரவிருக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது. இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி 11-ந் தேதி தொடங்குகிறது.
- உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரராக திகழ்ந்த சாதனையாளர் டைகர் உட்ஸ்
- நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் உட்ஸ்
"பணக்காரர்களுக்கான விளையாட்டு" என கருதப்படும் கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், அமெரிக்காவை சேர்ந்த டைகர் உட்ஸ் (48). இவரது இயற்பெயர் எல்ட்ரிக் டான்ட் உட்ஸ் (Eldrick Tont Woods).
1999 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2004 செப்டம்பர் வரை தொடர்ச்சியாக 264 வாரங்களும், மீண்டும் 2005 ஜூன் மாதம் முதல் 2010 அக்டோபர் வரை தொடர்ச்சியாக 281 வாரங்களும், உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரர் எனும் முதலிடத்திலேயே திகழ்ந்தவர் உட்ஸ்.
இக்கால கட்டங்களில் உட்ஸ், 13 முக்கிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தொழில்முறை கோல்ஃப் விளையாட்டில் தனது 20-வது வயதிலேயே பங்கு பெற தொடங்கிய உட்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு உயர்ரக காலணிகள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான "நைக்" (Nike) உடன் அதன் பிராண்ட் தூதராக (brand ambassador) 1996ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
27 வருடங்களாக தொடர்ந்த "உட்ஸ்-நைக்" கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் உட்ஸ் தெரிவித்திருப்பதாவது:
27 வருடங்களுக்கு முன் உலகின் தலைசிறந்த ஒரு பிராண்டுடன் அதிர்ஷ்டவசமாக இணைந்தேன். அந்த இணைப்பினால், அன்றிலிருந்து இன்று வரை சிறந்த தருணங்களால் என் நினைவுகள் நிரம்புகிறது. நான் அவற்றை கூற தொடங்கினால், அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதற்கு காரணமாக இருந்த ஃபில் நைட் (Phil Knight) எனது நன்றிக்குரியவர்.
நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இந்த இணைப்பின் வழியாக பல பிரமிப்பூட்டும் தடகள விளையாட்டு வீரர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
மக்கள், இது போல் மீண்டும் ஒரு அத்தியாயம் உருவாகுமா என கேட்பார்கள். நிச்சயமாக மற்றொரு அத்தியாயம் உருவாகும்.
இவ்வாறு டைகர் உட்ஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த பிரிவை குறித்து நைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "27 வருடங்களாக, உலகின் ஒப்பற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான டைகருடன் இணையும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. அவர் கோல்ஃப் விளையாட்டை மாற்றியது மட்டுமில்லாமல், அதில் இருந்த பல தடைகற்களை தகர்த்து எறிந்தார். அவர் எதிர்காலம் சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளது.
2016லிருந்தே நைக் நிறுவனம், கோல்ஃப் விளையாட்டிற்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலிலிருந்து விலகி கொண்டது குறிப்பிடத்தக்கது.
- ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- முன்னோக்கி செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே என தலைப்பிட்டிருந்தார்.
ஒருநாள் உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடியது. இதில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 என்று டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து வரலாறு படைத்தது.
தென் ஆப்பிரிக்கா தொடரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் அவர் இடம் பெறவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்றனர். ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்னோக்கி செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே என தலைப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள், இப்படியே போனால் ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பையிலும் கேப்டன் பதவி கிடைக்காமல் போய்விடும் என பயந்து இந்த வீடியோவை வெளியீட்டுள்ளதாகவும் இதனால் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
- அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது.
- இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
சுழலும் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்வார்கள். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் பயமின்றி விளையாடுவார்கள். குறிப்பாக இந்திய அணிக்கு ரோகித் சர்மா ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருப்பார். சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார்.
அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.
ஒருவேளை ரோகித்தை இங்கிலாந்து அதிரடியாக விளையாடவிடாமல் வைத்திருந்தாலும் இந்தியா பிளான் பி வைத்து விளையாடுவார்கள். அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்க வேண்டும். இது தான் உங்களுடைய வெற்றிக்கான வழியாக இருக்கும்.
இவ்வாறு பனேசர் கூறினார்.
- இந்திய அணியில் அனைத்து வீரர்களும் குடித்தனர்.
- ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் பிரவீன் குமார். 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய அணி பிரதான பவுலர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவுட் ஸ்விங், இன் ஸ்விங் மூலமாக பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தவர். அவர், 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 112 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ள அவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் அவர் எங்கு எப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இருண்ட ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் முதல்முறையாக இந்திய அணியுடன் இணைந்த போது, சில சீனியர் வீரர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி கொள் என்று அறிவுறுத்தியதோடு, மற்ற சில தவறான பழக்கத்தையும் தவிர்த்துவிடு என்று அட்வைஸ் கொடுத்தார்கள். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் குடித்தனர். ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.
சீனியர் வீரர்கள் பலரும் என்னை இளம் வீரர் என்று சிறப்பாக நடத்தினர். ஆனால் சிலர் மட்டும் என்னை பற்றி தவறான செய்தியை பரப்பினார்கள். கேமராவுக்கு முன்பாக நான் அவரின் பெயரை கூற விரும்பவில்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு ஐபிஎல் அணி ஒன்று என்னை பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட என்னை தேர்வு செய்யவில்லை.
இவையனைத்திற்கும் நான் குடிப்பது தான் காரணமாக அமைந்தது. நான் ஒருநாளும் மைதானத்திலோ அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இதுவே எனக்கு துயரத்தை கொடுத்தது. எனக்கு ஒருவர் கூட அழைத்து பேசாதது தான் சோகமாக இருந்தது.
என்று பிரவீன் குமார் கூறினார்.






