search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய பெண்கள் அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
    X

    இந்திய பெண்கள் அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

    • இந்திய பெண்கள் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • இதன் மூலம் 3 போட்டிகள் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    இதன்படி குழுமியிருந்த 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷபாலி வர்மாவும் (26 ரன்), துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் மிடில் வரிசையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (3 ரன்) சொதப்பியதால் உத்வேகம் தடைபட்டது. ஹர்மன்பிரீத் கவுர் நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் ஒன்றில் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அதன் பிறகு தீப்தி ஷர்மாவும் (14 ரன்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் (34 ரன், 28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.

    20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அமன்ஜோத் கவுர் (17 ரன்), பூஜா வஸ்ட்ராகர் (7 ரன்) களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சுதர்லாண்ட், வேர்ஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஒரு விக்கெட் எடுத்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட்டின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான பாகிஸ்தானின் நிதா தர்ரை (130 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார்.

    அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 3 விக்கெடடுக்கு 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகளான கேப்டன் அலிசா ஹீலி (55 ரன், 38 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), பெத் மூனி (52 ரன், நாட்-அவுட்) அரைசதம் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன.

    முன்னதாக ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த சுற்றுப்பயணத்தில் அந்த அணி ஒரே டெஸ்ட் போட்டியில் மட்டும் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.

    Next Story
    ×