என் மலர்
விளையாட்டு
- 10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
- முதல் 2 இடங்களில் உள்ள ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.
கொல்கத்தா:
10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பல்தான் (81 புள்ளி), தபாங் டெல்லி (69 புள்ளி), குஜராத் ஜெயன்ட்ஸ் (65 புள்ளி) ஆகிய 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெங்களூரு புல்ஸ், தமிழ் தலைவாஸ், யு மும்பா, உ.பி.யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகள் வாய்ப்பை இழந்தன.
பிளே ஆப் சுற்றில் நுழைய எஞ்சிய 2 இடத்துக்கு பாட்னா பைரேட்ஸ் (63 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (60 புள்ளி), பெங்கால் வாரியர்ஸ் (54 புள்ளி) ஆகிய 3 அணிகள் போட்டியில் உள்ளன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 119-வது 'லீக்' ஆட்டத்தில் பாட்னா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 வெற்றி, 7 தோல்வி, 3 டையுடன் இருக்கும் பாட்னா அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி ஏற்கனவே 50-28 என்று கணக்கில் அந்த அணியை வீழ்த்தி இருந்தது. தெலுங்கு டைட்டன்ஸ் பதிலடி கொடுத்து 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
முதல் 2 இடங்களில் உள்ள ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.
- இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல.
- கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.
மேற்கு ஜாவா:
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்று நடந்தது.
அப்போது, விளையாட்டின் நடுவே சுபாங் நகரை சேர்ந்த செப்டேன் ரஹார்ஜா (வயது 35) என்ற வீரர் மீது மின்னல் ஒன்று கடுமையாக தாக்கியது. எனினும், அப்போது அவர் மூச்சு விட்டபடியே காணப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதில், செப்டேனை சரியாக மின்னல் தாக்கும் காட்சிகளும், உடனே அவர் விளையாட்டு களத்தில் சுருண்டு விழும் காட்சிகளும் உள்ளன.
அந்த மின்னல் ஸ்டேடியத்திற்கு 300 மீட்டர் உயரத்தில் இருந்தே தாக்கியுள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பகுப்பாய்வு தெரிவித்து உள்ளது.
இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.
இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை நடந்த 20 நிமிடங்களுக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பினார்.
- இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சில இந்திய வீரர்கள் தனித்துவமான திறமையை வெளிக்காட்டி கவனத்தை ஈர்த்தனர்.
- ஒவ்வொரு ஜூனியர் உலகக் கோப்பை போட்டி முடிவிலும் சில வீரர்கள் ஐ.பி.எல். அல்லது இந்திய அணிக்குள் நுழைவார்கள்.
பெனோனி:
தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஜூனியர் உலக் கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இறுதி சுற்றுக்கு முன்பு வரை எல்லா ஆட்டங்களிலும் பிரமாதமாக விளையாடி வெற்றிகளை குவித்த இந்தியா கிளைமாக்சில் கோட்டை விட்டு விட்டது. என்றாலும் கேப்டன் உதய் சாஹரன் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 397 ரன்), முஷீர் கான் (2 சதம் உள்பட 360 ரன்) சச்சின் தாஸ் (303 ரன்), சுழற்பந்து வீச்சாளர் சாமி பாண்டே (18 விக்கெட்) உள்ளிட்டோரின் செயல்பாடு பாராட்டும்படி இருந்தது.
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு இந்திய ஜூனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் அளித்த பேட்டியில், 'இறுதி ஆட்டத்தில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதை எதிர்நோக்கி இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அசத்தியதால் வெற்றியாளராக இருக்கிறது. டாஸ் ஒரு பிரச்சினை இல்லை. ஏனெனில் ஆடுகளத்தன்மை நன்றாகவே இருந்தது. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் அதிகமாக போராடி இருக்கலாம்' என்றார்.
மேலும் கனித்கர் கூறுகையில், 'கிரிக்கெட்டில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சில இந்திய வீரர்கள் தனித்துவமான திறமையை வெளிக்காட்டி கவனத்தை ஈர்த்தனர். கடினமான சூழலில் அவர்கள் வெளிப்படுத்திய முதிர்ச்சியமான ஆட்டம், இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும். ஒவ்வொரு ஜூனியர் உலகக் கோப்பை போட்டி முடிவிலும் சில வீரர்கள் ஐ.பி.எல். அல்லது இந்திய அணிக்குள் நுழைவார்கள். நிச்சயம் இரு வீரருக்காவது இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் தாயகம் திரும்பியதும் அதற்குரிய மிகச்சிறந்த போட்டி காத்திருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி தொடர்ந்து முன்னெடுத்து செல்வது?, உயரிய கிரிக்கெட் போட்டிக்கு தங்களை எப்படி தயார்படுத்துவது? என்பதை இந்த தொடரில் இருந்து கற்றுள்ளனர்' என்றார்.
விராட் கோலி, யுவராஜ்சிங், முகமது கைப், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் ஜூனியர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி தான் இந்திய அணிக்குள் கால்பதித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
- சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளர் பலியானார்கள்.
- கெல்வின் கிப்தும் மறைவு கென்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நைரோபி:
கென்யாவை சேர்ந்த பிரபல நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சிகாகோ (அமெரிக்கா) மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை (42.195 கிலோ மீட்டர்) 2 மணி 35 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2022-ம் ஆண்டு நடந்த வலென்சியா (ஸ்பெயின்) மற்றும் கடந்த ஆண்டு நடந்த லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதித்த 24 வயதான கெல்வின் வருகிற ஜூலை, ஆகஸ்டு மாதம் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் அவர் 2 மணி நேரத்துக்குள் பந்தய இலக்கை கடக்கும் நோக்குடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மேற்கு கென்யாவில் நேற்று முன்தினம் இரவு பயிற்சியைமுடித்து மாரத்தான் வீரர் கெல்வின் கிப்தும் தனது பயிற்சியாளர் கெர்வாஸ் ஹகிசிமானா (ருவாண்டா) மற்றும் ஒரு இளம் பெண்ணுடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி கால்வாயில் இறங்கி பிறகு அருகில் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுக்கியது. சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளர் பலியானார்கள். படுகாயம் அடைந்த இளம்பெண் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கெல்வின் கிப்தும் மறைவு கென்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அந்த நாட்டு அதிபர் வில்லியம் ருடோ, உலக தடகள சங்க தலைவர் செபாஸ்டியன் கோ உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- ரேகான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
- விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரங்கள் விசாரணை நடத்தினர்.
ராஜ்கோட்:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற நிலை இருக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
2-வது டெஸ்ட் கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த போட்டிக்கு 2 வாரங்கள் இருந்ததால் இங்கிலாந்து அணி 2-வது டெஸ்ட் முடிந்தவுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு சென்றது.
அபுதாபியில் 10 தினங்களில் ஓய்வு எடுத்த பிறகு இங்கிலாந்து அணி நேற்று மாலை இந்தியா திரும்பியது. அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இங்கிலாந்து வீரர்கள் ராஜ்கோட் வந்தனர்.
அப்போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீரர் ரேகான் அகமது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரங்கள் விசாரணை நடத்தினர்.
ரேகான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே இந்தியா வந்து சென்றிருந்தார். தற்போது 10 தினங்களுக்குள் மீண்டும் வந்ததால் விசா பிரச்சினையில் விசாரிக்கப்பட்டார். நிலமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு 2 நாள் விசா வழங்கினார்கள்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அடுத்த 2 தினங்களுக்குள் விசாவை மீண்டும் செயல்படுத்த இங்கிலாந்து அணிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேகான் அகமது மற்ற வீரர்களுடன் நுழைய அனுமதிக்கப்பட்டார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த சோயிப் பஷீர் விசா பிரச்சினையில் சிக்கி இருந்தார். இதனால் அவரால் முதல் போட்டியில் ஆட முடியாமல் போனது.
- முதல் போட்டியின்போது கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில், கடைசி 3 போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பு.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது
இதனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நூறு சதவீதம் உடல் தகுதி பெறவில்லை என்பதால் முழுமையாக குணமடைவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
23 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஆன தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. தேவ்தத் படிக்கல் பஞ்சாப் அணிக்கெதிராக 193 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்சில் 105, 65, 21 என ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி, 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
- அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடந்த ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தியஅணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் அணியின் வீரர்களை எண்ணி நான் பெருமை அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தேவையற்ற சில ஷாட்களை இறுதிப் போட்டியில் ஆடினோம். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி திட்டங்களை வகுத்து இருந்தோம்.
ஆனால் எங்களால் சரியான முறையில் செயல்படுத்த முடியவில்லை. இந்ததொடர் முழுவதும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு உள்ளோம்.
அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏலத்தில் அவர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார்.
- சி.எஸ்.கே. ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக 18 வயதாகும் ஆரவல்லி அவனிஷ் ராவ் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்.
ஐ.பி.எல். தொடரில் 5 கோப்பைகளை வென்ற எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஏலத்தில் அவர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார்.
இந்நிலையில் விரைவில் சென்னை அணிக்காக விளையாடி எம்.எஸ். தோனி மற்றும் சி.எஸ்.கே. ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
சென்னை அணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை நான் புரிந்து கொள்வதற்கு நீண்ட நேரமானது. நான் தோனி சார் மற்றும் சி.எஸ்.கே. குடும்பத்தை பெருமையடைய வைக்க விரும்புகிறேன். தோனி தலைமையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்.
தோனி அவர்களிடமிருந்து, கடினமான சூழ்நிலையில் எப்படி அசத்துவது என்பதை பற்றி கற்றுக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் விளையாடிய இன்னிங்ஸ்போல அவரிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா ஒரு வலிமையான அணியாகும்.
- மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆட வில்லை.
இந்த நிலையில் கே.எல்.ராகுல், ஜடேஜா வருகையால் இந்திய அணி வலிமை பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா ஒரு வலிமையான அணியாகும். அவர்களுக்கு திறமையான கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். காயத்தில் இருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரும் இந்திய அணியை வலிமைப்படுத்துவார்கள்.
ஆனால் விராட்கோலி எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்பது இந்திய அணிக்கு இழப்பே. தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் திறமையை மிகைப்படுத்தி மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறனை அதிகமாக மதிப்பிட கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார்.
மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- அல்ஜாரி ஜோசப் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 34 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த இன்னிங்சின் 19-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட அல்ஜாரி ஜோசப் பந்தை கவர்ஸ் திசையில் அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார்.
அப்போது அந்த திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பீல்டர் பந்தை எடுத்து வேகமாக ஜான்சனிடம் வீசினார். அவரும் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடித்தார். ஆனால், பந்துவீச்சாளர் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் அதற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து இந்த காட்சி மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.
அப்போது ஜான்சன் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடிக்கும் போது ஜோசப் கிரிஸிற்குள் வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவர் ரன் அவுட் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கள நடுவர் ஜோசப்பிற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த ரன் அவுட்டிற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் கிரிக்கெட் விதிமுறைகளின் படி அல்ஜாரி ஜோசப்பிற்கு ரன் அவுட் கொடுக்கவில்லை என நடுவர் தெரித்தார். இதையடுத்து தொடர்ந்து பேட்டிங் ஆடிய அல்ஜாரி ஜோசப் 5 பந்தில் 2 ரன்கள் அடித்தார்.
கிரிக்கெட் விதிமுறைகளின் படி ஒரு பீல்டரால் மேல்முறையீடு செய்யப்படும் வரை, எதிரணி வீரர் சட்டத்தின் கீழ் அவுட்டாக இருந்தாலும், எந்த நடுவரும் பேட்ஸ்மேனையும் நடுவர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
- முதலில் இருந்தே தடுமாறிய இந்திய அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் விளாசினார்.
இதனையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் விளையாடி வந்த ஆதர்ஷ் சிங் 47 ரன்னிலும் முருகன் அபிஷேகம் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே நம்பிக்கையாக இருந்த அவர்கள் அவுட் ஆனதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் ஆஸ்திரேலியாவிடம் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஐசிசி கோப்பையை தவறவிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. அதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
அந்த நிலையை ஜூனியர் இந்திய அணி மாற்றும் என்ற நம்பிக்கையும் பொய்யானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்ததை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசி கோப்பை கனவு எட்டா கனியாகவே இந்திய அணிக்கு உள்ளது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணியிடம் ஐசிசி கோப்பையை தவறவிடும். அந்த நிலையை மாற்றுமா? பதிலடி கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






