என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
    • அதிவேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்கியது. இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 100-வது போட்டியாகும்.

    இதனையொட்டி அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் மைதானத்திற்குள் அழைத்துச் சென்றார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அஸ்வினுக்கு 100-வது போட்டியில் விளையாடுவதையொட்டி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 100 என எழுத்தப்பட்ட இந்திய அணிக்கான தொப்பியை வழங்கினார்.

    பின்னர் அஸ்வின் மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்கும்போது, இரண்டு பக்கமும் வரிசையாக நின்று சக வீரர்கள் கவுரவித்தனர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு 37 வயதாகிறது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி இலங்கை அணிக்கெதிராக முதன்முறையாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். டி20 அணியில் ஜூன் 12-ந்தேதி ஜிம்பாப்வே அணிக்கெதிராக களம் இறங்கினார்.

    2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி டெல்லியில் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 116 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 156 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 35 முறை ஐந்து விக்கெட்டுகளும், 8 முறை 10 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந்தேதியும், டி20-யில் 2022-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதியும் கடைசியாக விளையாடியுள்ளார்.

    10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். அதிவேகமாக 350 (66 போட்டிகள்) விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றவர்.

    • ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் பிவி சிந்து

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    • பெண்கள் பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியர்ஸ் வீராங்கனை எல்.பி.டபிள்யூ மூலம் அவுட்.
    • பந்து லெக்சைடு செல்வது தெளிவாக தெரிந்த போதிலும், ஆஃப் ஸ்டம்பை தாக்கியதால் விமர்சனம்.

    பிசிசிஐ-யின் பெண்கள் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந்தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய ஆர்சிபி 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் முன்னணி வீராங்கனையான சமரி அட்டப்பட்டுக்கு அவுட் கொடுத்த விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்சிபி அணியின் வலது கை லெக் ஸ்பின்னரான வரேஹாம், வீசிய பந்தை இடது கைது பேட்டரான சமரி அட்டப்பட்டு எதிர்கொள்வார். டாஸ்அப்-ஆக தூக்கிப்போட்ட பந்தை சமரி அட்டப்பட்டு முன்னாள் முட்டி போட்டு அடிக்க முயற்சிப்பார். அப்போது பந்து அவரின் வலது கால் ஷூவில் படும்.

    ஆர்சிபி வீராங்கனைகள் நடுவரிடம் அவுட் கேட்க, அவர் மறுத்து விடுவார். இதனால் ரிவியூ கேட்பார் ஆர்சிபி கேப்டன் மந்தனா.

    அப்போது வரேஹாம் லெக்சைடு பந்து நன்றாக சுழன்று செல்லும்படி பந்தை சுழற்றி விடுவார். பந்து லெக்சைடு ஸ்டம்புக்கு வெளியில் பிட்ச் ஆவது போல் இருக்கும். ஆனால் HawkEye ரீ-பிளேயில் பந்தை லைக் ஸ்டம்புக்கு நேராக பிட்ச் ஆகும்.

    பிட்ச் ஆன பிறகு லெக் ஸ்டம்பிற்கு வெளியில் செல்வது போல்தான் இருக்கும். ஆனால் ஹூக்ளி பந்து போன்று பிட்ச் ஆன பிறகு ஆஃப்சைடு திரும்பி லெக்ஸ்டம்ப் மற்றும் மிடில் ஸ்டம்பிற்கு இடையில் தாக்குவதுபோல் HawkEye காட்டும். இதனால் 3-வது நடுவர் விக்கெட் கொடுத்துவிடுவார்.

    இதை சமரி அட்டப்பட்டு சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்னங்க இது... என தனது பேட் மூலம் சைகை காட்டுவார். அதன்பின் பரிதாபமாக வெளியேறுவார். இதை உ.பி. வாரியர்ஸ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெளிவாக லெக் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்து எப்படி ஸ்டம்பை தாக்கும் என விமர்சனம் செய்தனர். ஒரு ரசிகர் இது பெண்கள் பிரீமியர் லீக்கின் லைவ் பிக்சிங் என தெரிவித்துள்ளார்.

    எல்.பி.டபிள்யூ விவகாரத்தில் ஏற்கனவே டிஆர்எஸ் சிஸ்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது இந்த விமர்சனமும் இணைந்துள்ளது.

    • இரு கைகளும் இல்லாத அமீர் தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்தினார்.
    • சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர்.

    இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், அணியின் உரிமையாளர்களான சூர்யா, அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ராம் சரண் மற்றும் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் கலந்து கொண்டு முதல் சீசனை தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ வைரலானது.

    இந்த நிலையில் தான் இந்த தொடக்க விழாவில் அமீர் ஹூசைன் லோனி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் உள்ள வகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனி. தற்போது 34 வயதாகும் அமீர் ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரது அசாத்திய திறமை என்னவென்றால், இரண்டு கையும் இல்லை, ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை கிரிக்கெட் விளையாட தூண்டியது. எப்படி என்றால், தனது கழுத்தை பயன்படுத்தி கிரிக்கெட் பேட்டை பிடித்து அதனைக் கொண்டு பேட்டிங் செய்து வருகிறார்.

    இந்த போட்டியில் சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர். நேற்று நடந்த சிறப்பு போட்டியில் கில்லாடி 11 மற்றும் மாஸ்டர்ஸ் 11 அணிகள் விளையாடின.

    இதில், சச்சின், அமீர், முனாப் படேல், யூசுப் பதான் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாஸ்டர் அணிக்காக விளையாடினர். இதே போன்று அக்ஷய் குமார், நடிகர் சூர்யா, பிரவீன் குமார், ராபின் உத்தப்பா, இர்பான் பதான் ஆகியோர் கில்லாடி 11 அணிக்காக விளையாடினர்.

    முதலில் பேட்டிங் செய்த மாஸ்டர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக சச்சின் - அமீர் களமிறங்கினர். மேலும் இரு கைகளும் இல்லாத அமீர் தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்தினார். மேலும் சச்சின் ஓவரில் கீப்பர் பின்னாடி அடிக்கப்பட்ட ஒரு பந்தை வேகமாக துரத்தி பிடித்தார். இந்த செயலை பார்த்த சச்சின் உள்பட பல வீரர்கள் அவரை பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மற்றொரு வீடியோவில் பேட்டிங் செய்த நடிகர் சூர்யாவிற்கு சச்சின் பவுலிங் செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜாக் கிராலி 71 பந்தில் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
    • குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் அறிமுகம் ஆனார். பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    ஜாக் கிராலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி பும்ரா- சிராஜ் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தது. இதனால் இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக இருக்கும்போது பென் டக்கெட் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஒல்லி போப் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. அவரை 11 ரன்னில் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். அத்துடன் முதல் நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 25.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.

    இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் கிராலி பாஸ்பால் ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 64 பந்தில் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். தற்போது 71 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    • இந்திய அணியில் பும்ரா, தேவ்தத் படிக்கல் இடம் பிடித்துள்ளனர்.
    • ஆகாஷ் தீப், ரஜத் படிதார் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ராபின்சன் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

     இந்திய அணியில் பும்ரா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரஜத் படிதார் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

    • ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • விக்கெட் வீழ்த்திய நாளில், உடனடியாக சென்னை திரும்பினார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

    ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் 2-வது நாள் ஆட்டத்தின்போது தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றினார். அனில் கும்ப்ளேவிற்குப் பிறகு 500 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    அந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் நீண்ட நேரம் தங்கவில்லை. உடனடியாக அவர் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக அஸ்வின் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

    அதன்பின் அதேடெஸ்டில் அஸ்வின் மீண்டும் இணைந்து விக்கெட் கைப்பற்றினார். ஆனால், தான் எதற்காக அவசரமாக சொந்த ஊர் சென்றேன் என அஸ்வின் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இது தொடர்பாக அஸ்வின் மனைவி பிரீத்தி வெளியிட்டுள்ள தகவல் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரையாக வெளியாகியுள்ளது.

    அதில் அஸ்வின் மனைவி ப்ரீத்தி கூறியிருப்பதாவது:-

    தனது கணவர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதும், செல்போனில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு குழந்தைகளுடன் பதில் அளித்துக் கொண்டிருந்தோம்.

    அப்போது திடீரென மாமியாரின் அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் நிலைகுலைந்து கிழே விழுந்தார். சிறிது நேரத்தில் நாங்கள் மருத்துமனையில் இருந்தோம். அந்த நேரத்தில் நாங்கள் அஸ்வினுக்கு சொல்ல வேண்டாம் என நினைத்தோம். ஏனென்றால், சென்னை- ராஜ்கோட் இடையிலான சிறந்த முறையிலான விமான சேவை கிடையாது.

    ஆகவே, நான் புஜாராவுக்கு போன் செய்தேன். அவருடைய குடும்பம் மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. அஸ்வின் விரைவாக சென்னை திரும்புவதற்கான ஒரு வழியை கண்டுபிடித்த உடன், நான் அஸ்வினுக்கு போன் செய்தேன். ஏனென்றால், ஸ்கேன் பரிசோதனை முடிந்த பிறகு அவரது மகன் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். போனில் பேசும்போது அவர் உடைந்து போனார்.

    அஸ்வின் சென்னைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், அணியின் உள்ள மற்ற அனைவருக்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைய தினம் நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் தாயாரை அவர் பார்த்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். அவரது தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததும், நாங்கள் அவரை அணியில் இணைந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். அவர் ஒருபோதும் இதுபோன்ற போட்டியை விட்டுவிட விரும்பமாட்டார். அவருடைய அணிக்கு அவர் வெற்றியை தேடிக்கொடுக்காவிடில், தீவிர குற்ற உணர்வை கொண்டிருப்பார்.

    அந்த இரண்டு நாட்களில், பெற்றோருடன் அதிக நேரம் இருப்பதற்கான அவரது ஏக்கம் இப்போது அதிகமாக இருப்பதையும், அது வயது மற்றும் முதிர்ச்சி காரணமாக வருகிறது என்பதையும் உணர்ந்தேன்.

    இவ்வாறு பரீத்தி அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.
    • ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதத்துடன் இந்த தொடரில் 655 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    தர்மசாலா:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (7-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் அதிரடி இந்த டெஸ்டிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் தடுமாற்றத்துடன் வெற்றி கிடைத்தது . சுப்மன் கில்-ஜூரல் ஜோடி தோல்வியில் இருந்து மீட்டு அணியை வெற்றி பெற வைத்தது. காயம் காரணமாக கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. அவர் முதல் டெஸ்டில் மட்டுமே விளையாடினார். கடந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

    பேட்டிங்கில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு இரட்டை சதத்துடன் இந்த தொடரில் 655 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். சுப்மன் கில் (342 ரன்), ரோகித் சர்மா (297) ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். புதுமுக வீரர் துருவ் ஜுரல் கடந்த 2 டெஸ்டிலும் (175) தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    பும்ரா, அஸ்வின் (17விக்கெட்) குல்தீப் யாதவ் (12), முகமது சிராஜ் ஆகியோர் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார். அவர் 6 இன்னிங்சில் ஒரு சதத்துடன் 217 ரன் எடுத்துள்ளார். 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழற்பந்து கூட்டணியே அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

    ஆகாஷ் தீப் இடத்தில் பும்ரா இடம் பெறுவார். மோசமாக விளையாடி வரும் ரஜத் படிதார் நீக்கப்பட்டால் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலாவது வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கிராவ்லி ( 328 ரன்) , டக்கெட் ( 314), ஆலி போப் ( 285), ஜோ ரூட் ( 210), ஹார்ட்லே ( 20 விக்கெட்), ரேகான் அகமது (11), ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணியும் நாளை மோதுவது 136-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 135 போட்டியில் இந்தியா 34-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.
    • ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

    சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் டி10 தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தபடுகிறது. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.

    மார்ச் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.

    இந்த தொடரின் முதல் போட்டியில் அமிதாப் பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதுகின்றனர். இதன் தொடக்க விழாவில் சச்சின், ராம் சரண், சூர்யா, அக்ஷய் குமார் ஆகியோர் உலக அளவில் பிரபலமான நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 11-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் 2-ம் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். டாப் 10 2 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 10-ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். விராட் கோலி 1 இடம் முன்னேறி 8-வது இடத்தையும் ரோகித் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் இரு இடங்களை தக்கவைத்துள்ளனர். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசில்வுட் 4-ம் இடத்திற்கும், நாதன் லையன் 6-ம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    மேலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.

    • இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
    • இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தர்மசாலா:

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

    இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
    • முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும். 

    இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர். 

    ×