search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? கடைசி டெஸ்ட் தர்மசாலாவில் நாளை தொடக்கம்
    X

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? கடைசி டெஸ்ட் தர்மசாலாவில் நாளை தொடக்கம்

    • கடந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.
    • ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதத்துடன் இந்த தொடரில் 655 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    தர்மசாலா:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (7-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் அதிரடி இந்த டெஸ்டிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் தடுமாற்றத்துடன் வெற்றி கிடைத்தது . சுப்மன் கில்-ஜூரல் ஜோடி தோல்வியில் இருந்து மீட்டு அணியை வெற்றி பெற வைத்தது. காயம் காரணமாக கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. அவர் முதல் டெஸ்டில் மட்டுமே விளையாடினார். கடந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

    பேட்டிங்கில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு இரட்டை சதத்துடன் இந்த தொடரில் 655 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். சுப்மன் கில் (342 ரன்), ரோகித் சர்மா (297) ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். புதுமுக வீரர் துருவ் ஜுரல் கடந்த 2 டெஸ்டிலும் (175) தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    பும்ரா, அஸ்வின் (17விக்கெட்) குல்தீப் யாதவ் (12), முகமது சிராஜ் ஆகியோர் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார். அவர் 6 இன்னிங்சில் ஒரு சதத்துடன் 217 ரன் எடுத்துள்ளார். 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழற்பந்து கூட்டணியே அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

    ஆகாஷ் தீப் இடத்தில் பும்ரா இடம் பெறுவார். மோசமாக விளையாடி வரும் ரஜத் படிதார் நீக்கப்பட்டால் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலாவது வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கிராவ்லி ( 328 ரன்) , டக்கெட் ( 314), ஆலி போப் ( 285), ஜோ ரூட் ( 210), ஹார்ட்லே ( 20 விக்கெட்), ரேகான் அகமது (11), ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணியும் நாளை மோதுவது 136-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 135 போட்டியில் இந்தியா 34-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×