என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டை சந்திக்கிறார்.

    • ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடர் லா லிகா
    • தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.

    உலக அளவில் அதிக பேர் விரும்பி பார்க்கும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். பல்வேறு நாடுகளில் கால்பந்து விளையாட்டிற்கு லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் தமிழ் ரசிகர் ஒருவர் பின்னணி பாடலாக தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    அவரது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில், லியோ படத்தின் 'Badass' பாடலுடன் எடிட் செய்யப்பட்ட வீடியோ பதிவிடப்பட்டதால் தமிழ் கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    ஒலிம்பிக் ஹாக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 1988-ம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிறந்து வளர்ந்த பிஆர் ஸ்ரீஜேஷ், கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் கோல் கீப்பராக இடம் பெற்று விளையாடி வந்துள்ளார்.

    2016 -ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு சில ஆண்டுகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஸ்ரீஜேஷ் உதவியுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. ஹாக்கி இந்தியா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலமாக கேல் ரத்னா விருது பெற்றுள்ளார்.

    ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து ஜூனியர் ஹாக்கி இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீஜேஷ் பகிர்ந்துள்ளார்.

    ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

    இதில் அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

    நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஸ்னெய்டர், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார்.

    • தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 357 ரன்கள் குவித்தது. டோனி டி ஜோர்ஜி 78 ரன்னும், கேப்டன் பவுமா 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். வியான் முல்டர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    கெய்சி கார்டி 42 ரன்னும், ஹோல்டர் 36 ரன்னும், பிராத்வெயிட், மிகைல் லூயிஸ் தலா 35 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாரிக்கன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மகாராஜ் 4 விக்கெட்டும், ரபாடா விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. நான்காம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • நாட்டிலிருந்து எல்லாவிதமான வன்முறைகளையும் விலக்கி ஒன்றாக வாழுவோம் என நான் நம்புகிறேன்.
    • ஏனென்றால் இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது.

    வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இக்கலவரத்தின் போது அந்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்கள் தீக்கிரையாகின. அதிலும் குறிப்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடும் எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

    இந்நிலையில் போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    என் நாட்டு மக்களே, நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சமீப நாள்களாக எனது வீடு எரிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். நானும் எனது குடும்பத்தினரும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளோம். வங்கதேசம் ஒரு வகுப்புவாத நாடு என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

    அதனால் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முழு நாட்டுடனும் எனது தினாஜ்பூர் மக்களுடனும், மற்றவர்களைக் காப்பாற்ற நீங்கள் எழுந்து நின்ற விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நாட்டிலிருந்து எல்லாவிதமான வன்முறைகளையும் விலக்கி ஒன்றாக வாழுவோம் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது.

    இவ்வாறு தாஸ் கூறினா.

    • பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட்டின் அணியின் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஷலகா மேகேஷ்வார் ஆகியோர் ஆகஸ்டு 8-ந் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    30 வயதான ஜிதேஷ் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்களை பதிவிட்டு இதனை தெரிவித்தார். இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

    இந்த நிகழ்வுக்காக பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் காய்க்வாட், மற்றும் சிவம் துபே உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

    ஷலகா மேகேஷ்வார் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தவர் மற்றும் நாக்பூரில் Advent Software Pvt. Ltd-ல் Software Engineer-ஆக பணியாற்றுகிறார்.

    ஜிதேஷ் ஷர்மா இந்தியா சார்பாக 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆனால் சமீபத்திய ஐபிஎல் சீசனில் பெரிதாக ரன் எடுக்கவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பை 2024 அணியில் இடம் பெற முடியவில்லை.

    • இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது
    • இனவெறியுடன் அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரப்படும்

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தொடங்க நிகழ்ச்சியில் நடந்த டிராக் குவீன் நிகழ்ச்சி முதல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் தகுதிநீக்கம் வரை சர்ச்சைகளுக்குக் குறைவில்லாமல் இந்த வருட ஒலிம்பிக்கானது நிறைவடைகிறது. குறிப்பாக அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் -பின் பாலினம் குறித்த சர்ச்சை விவாதங்களுக்கு வழிவகுத்தது.

     

    66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நின்றது. உலகம் முழுவதும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தது.

    இதற்கிடையில் நேற்று முன் தினம் நடந்த இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றார் இமானே கெலிஃப். அனைவரையும் போல் தானும் ஒரு முழுமையான பெண்தான் என்று வெற்றிக்கு பிறகு அவர் தெரிவித்திருந்தார்.

     

    இந்நிலையில், பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்துள்ளார். மேலும் தனது வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை அவர் முன்னெடுக்க உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமானே மீது இனவெறியுடன் பாலின ரீதியான அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதே தங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். 

    • எனது கேரியரில் நான் இன்னும் முன்னேற வேண்டும்.
    • எனது பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது.

    இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்தன. அதிலும் குறிப்பாக இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

    இதனால் இந்திய அணி தேர்வு குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், சதமடித்த பிறகும் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே அணியில் இருந்து ஓரங்கட்டுவதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

    இந்நிலையில் சமீபத்தில் சஞ்சு சாம்சன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம், நீங்கள் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த பிறகும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் டி20 அணியிலும், டி20 உலகக்கோப்பை சமயத்தில் ஒருநாள் அணியிலும் வாய்ப்பினை பெறுகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் இது விவாதமாக மாறிவரும் நிலையில், அணி தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்துள்ள சஞ்சு சாம்சன், "அவர்கள் என்னை விளையாட அழைத்தால், நான் சென்று விளையாடுவேன். இல்லை என்றால் பரவாயில்லை என்று விட்டுவிடுவேன். மேற்கொண்டு அதுபற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. இந்திய அணி தற்போது நன்றாக விளையாடி வருகிறது, அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன் மற்றும் என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    எனது பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். அது எனது விளையாட்டை மேம்படுத்த உதவிவருகிறது. எனது கேரியரில் நான் இன்னும் முன்னேற வேண்டும். அதனால் நான் எனது விளையாட்டை மேம்படுத்துவதிலும், என் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதிலும் தற்சமயம் ஆர்வம் காட்டிவருகிறேன்.

    என்று சாம்சன் கூறினார்,

    • கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
    • 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தது.

    கிறிஸ்டோபர் பெய்லி, வெரோன் நார்வுட், புரூஸ் டெட்மான், ராய் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 54.43 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.

    இதற்கு முன்பு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 2 நிமிடம் 55.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

    போஸ்ட்வானா அணிக்கு வெள்ளியும் (2 நிமிடம் 54.53 வினாடி), இங்கிலாந்து அணிக்கு (2 நிமிடம் 55.83 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அமெரிக்கா தங்கம் வென்றது. அந்த அணி பந்த தூரத்தை 3 நிமிடம் 15.17 வினாடியில் கடந்தது. நெதர்லாந்து 3 நிமிடம் 19.50 வினாடியில் கடந்து வெள்ளியும், இங்கிலாந்து 3 நிமிடம் 19.72 வினடியில் கடந்து வெண்கலமும் பெற்றன.

    பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

    அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51. 29 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 3 நிமிடம் 53.11 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. பெய்த் கிபியெ கான் தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர் தான் உலக சாதனையாளாராகவும் உள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனை வீராங்கனை ஜெசிகா ஹல் 3 நிமிடம் 52.56 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜியா பெல் 3 நிமிடம் 52.61 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.

    ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் இம்மானுவேல் வன்யோனி 1 நிமிடம் 41. 19 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். கனடாவை சேர்ந்த மார்கோ அரோப் 1 நிமிடம் 41.20 வினாடியில் கடந்து வெள்ளியும், அல்ஜீரியா வீரர் டிஜ்மெல் செட் ஜாட்டி 1 நிமிடம் 41.50 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நியூசிலாந்து வீரர் கெர்ஹமிஸ் 2.36 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் ஷெல்பைக்கு வெள்ளியும், கத்தாரை சேர்ந்த பார்சிமுக்கு வெண்கலமும் கிடைத்தன.

    ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நார்வேக்கு தங்கம் கிடைத்து. அந்நாட்டை சேர்ந்த ஜேக்கப் இன்ஜெப்ரிஸ்டன் பந்தய தூரத்தை 13 நிமிடம் 13.66 வினாடியில் கடந்தார். ரொனால்டு கெமோய்க்கு வெள்ளியும் (கென்யா, 13 நிமிடம் 15.04 வினாடி), கிராண்ட் பிஷ்சருக்கு (அமெரிக்கா, 13 நிமிடம் 15.13 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, செக்குடியரசு அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மசாய் ரஸ்சல் 12.33 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

    பிரான்சை சேர்ந்த சைரனா சம்பா வெள்ளி பதக்கமும் (12.34 வினாடி), போர்டோரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கேமாச்சோ (12.36 வினாடி) வெண்கலமும் பெற்றனர்.

    • 1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது.
    • டெல்லி விமான நிலையத்தில் ஹாக்கி அணியினருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக் ஹாக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியினர் பாரீசில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று காலை நாடு திரும்பினர். வானில் பறக்கையில் விமானி தங்களது விமானத்தில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்முடன் பயணிப்பதாக மைக்கில் அறிவித்ததுடன், அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். அப்போது சக பயணிகள் உற்சாகமாக கைதட்டி பாராட்டினர்.


    நிறைவு விழாவில் தேசிய கொடியேந்தும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மற்றும் அமித் ரோஹிதாஸ், ராஜ்குமார் பால், சுக்ஜீத் சிங், சஞ்சய் ஆகியோர் தவிர அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் வந்தனர்.



    டெல்லி விமான நிலையத்தில் இந்திய ஹாக்கி அணியினருக்கு மேள தாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஹாக்கி சம்மேளன நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது இசைக்கப்பட்ட இசைக்கு தகுந்தபடி வீரர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார்.
    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது.

    அதன்படி ஆகஸ்டு 11-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பு 13-ந் தேதித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி நாட்கள் தள்ளிப் போவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×