என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் 2024-ம் ஆண்டில் உயிரிழந்தார்.
    • அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக விளங்கிய மார்டின் குரோ, நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். 

    மார்டின் குரோ 1992 உலக கோப்பை போட்டிகளில் மிக சிறப்பாக தன் அணியை வழிநடத்தி, தன் அணி அரையிறுதி போட்டிக்கு இடம்பெற செய்தார். அவரின் மரணத்துக்கு உலகில் உள்ள பல விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆன கிரஹாம் தோர்ப் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.



    இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஸ் பாகர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


    அதிகாலையில் ஜோஸ் பாகர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாகருக்கு என்ன நடந்தது என்ற தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உலகின் நட்சத்திர கூட்டைப்பந்து விளையாட்டு வீரராக வளம்வந்தவர் லாக்கர்ஸ் அணியின் கோபி பிரையன்ட் இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மகள் ஜியானாவும் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பிரைன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா பிரைன்ட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.


    இந்தோனிசியாவில் 2 எஃப்.எல்.ஒ. பாண்டுங் மற்றும் எஃப்.பி.ஐ. சுபாங் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில் திடிரென மின்னல் தாக்கி 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்பவர் உயிரிழந்தது.


    இளம் ரக்பி வீரரான கோகில சம்மந்தபெரும (28) கோர விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

    அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.


    இது போன்ற மரணங்கள் அந்தந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு.
    • சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.

    நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான மார்ட்டின் கப்தில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. எனது நாடுக்காக 367 போட்டிகள் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக உணர்கிறேன். வெள்ளி நிறத்திலான பெரணி செடி பதிந்த நியூசிலாந்து அணியின் சீறுடையில் சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.

    எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. குறிப்பாக எனது யு-19 பயிற்சியாளர் மார்க் ஓ'டொன்னெலுக்கு எனது சிறப்பான நன்றி.

    எனது மனைவி லாரா, அழகான குழந்தைகள் ஹார்லி, டெடி அவர்களுக்கும் நன்றி. எனக்காகவும் நமது குடும்பத்துக்காகவும் தியாகம் செய்த மனைவி லாராவுக்கு மிக்க நன்றி. என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு இருந்த மிகப்பெரிய ஆதரவாளர் நீதான். நான் அதற்காக கடமைப்பட்டுள்ளேன். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி.

    38 வயதாகும் மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து அணிக்காக 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 23 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும் டி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர்.
    • ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.

    2024-ம் ஆண்டு முழுவதும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களால் ஏற்பட்ட சில டாப் உணர்ச்சிமிக்க தருணங்களைப் பற்றி பார்ப்போம்.

    2024-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஜாக்பாட் என்று சொல்லலாம், அந்தளவிற்கு அதிகமான பதக்கங்களையும், சாம்பியன் பட்டங்களையும் விளையாட்டு வீரர்கள் வென்றுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி பெருமை சேர்த்தார். 

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ஐன் நகரில் ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயதான ஷர்வானிகா என்ற சிறுமி, யு-8 கிளாசிக்கல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் யு-8 ரேபிட் பிரவு மற்றும் பிளிட்ஸ் பிரிவில் தங்கம் பதக்கமும் பெற்றிருந்தார்.

    இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், மெஹுலி கோஷ் ஜோடி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

    குரோஷியா நாட்டில் நடைபெற்ற ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் அமன் ஷெராவத் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்திருந்தார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தாய்லாந்தை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஹங்கேரியில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளின் அணி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி அதிலும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று சாதித்தார்.

    பாரிஸில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதன் பின்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கம் வென்று சாதித்தனர். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    57 கிலோ மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் போட்டியிட்டு வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் சுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே வெண்கல பதக்கம் வென்று சாதித்தார். இது அவரின் அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும்.

    அதே போல் பாரீசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல்(உயரம் தாண்டுதல்), பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    இதில் தொடர்சியாக பாராலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை மாரியப்பன் தங்கவேல் பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்திருந்தார்.

    பி.சி.சி.ஐ சார்பில் பிளேயர் ஆஃப் தி இயர் விருது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

    இந்தியாவில் விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருதை முகமது ஷமி (கிரிக்கெட்), கிருஷ்ணன் பகதூர் பதக் (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரித்து நெகி (கபடி), நஸ் ரீன் (கோ-கோ), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), ஈஷா சிங் (துப்பாக்கி சுடுதல்), உள்ளிட்ட 27 பேருக்கு சிடைத்தது.

    மேலும் துரோணாச்சார்யா விருதை லலித்குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்) ஆகியோருக்கு கிடைத்தது. துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை மஞ்சுஷா கன்வர் (பாட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    2019-ம் ஆண்டிலிருந்து 2023-ம் ஆண்டுவரை டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முகமது ஷமி, அஸ்வின், பும்ரா, கில், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பெற்றுக்கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு விளையாட்டு துறையில் அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக தெலங்கானா அரசு டி.எஸ்.பி. பொறுப்பு வழங்கியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்.சி.பி. அணி டபள்யூ.பி.எல். கோப்பை தட்டி சென்றனர்.

     பா.ஜ.க. எம்.பி-யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டம் நடத்தியது, 100 கிராம் எடையை காரணம் கூறி பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது, இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு வினேஷ் போகத் தனது ஓய்வை அறிவித்தார். 

    மத்திய அரசு சார்பில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருக்கான பெயர் பட்டியல் அண்மையில் வெளியானது இதில் பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டு முறை வெண்கலம் வென்ற மனு பாக்கர் பெயர் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ஆடவருக்கான யு(Under)-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

    • பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரு முறை பிசிசிஐ யோசிக்க வேண்டும்.
    • விக்கெட்டுகள் எடுப்பது மற்றும் நல்ல உடல் வலிமையுடன் இருப்பதில் அவரது முழு கவனமும் இருக்க வேண்டும்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட்டில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

    அதன்பிறகு 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் 2 போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் அவரது கேப்டஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவரை கேப்டஷிப்-ல் இருந்து நீக்கி பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரு முறை பிசிசிஐ யோசிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரு முறை பிசிசிஐ யோசிக்க வேண்டும். விக்கெட்டுகள் எடுப்பது மற்றும் நல்ல உடல் வலிமையுடன் இருப்பதில் அவரது முழு கவனமும் இருக்க வேண்டும். ஏனென்றால் பும்ரா விக்கெட்டுகள் எடுப்பதிலும் உடல் தகுதியை பேணி காப்பதிலும் தான் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த வேண்டும். இதில் அணியை வழிநடத்தும் பொறுப்பை பும்ராவுக்கு வழங்கினால் அது நிச்சயம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

    முக்கியமான சமயத்தில் கேப்டனாக அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர் கூடுதல் உழைப்பை செலுத்துவதன் மூலம் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பும்ராவின் மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரலாம். எனவே தங்க முட்டை இடும் வாத்தை கொன்று விடாதீர்கள்

    இவ்வாறு முகமது கைப் கூறினார்.

    • அவரிடம் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் என்று கூறினேன்.
    • அவருக்கு எதிராக விளையாடுவதே உண்மையில் எனக்கு கவுரவம்.

    பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதுமே பரபரப்பாக இருந்தாலும 19 வயது இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் களத்திற்கு வந்தபிறகு, தொடரில் பல சம்பவங்கள் நடந்தது. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே பும்ராவிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி சிக்சர்களாக பறக்கவிட்ட சாம் கான்ஸ்டாஸ் அரைசதம் விளாசி அசத்தினார்.

    அதுமட்டுமில்லாமல் பும்ரா ஓவரில் சிக்சர் அடித்த பிறகு ரசிகர்களை சத்தம் எழுப்ப சொல்லி சைகை காட்டியது, விராட் கோலியுடன் தோள்பட்டை மோதல், பும்ரா விக்கெட்டின் போது செலப்ரேஷன், ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும்போது பேசி தொல்லை செய்துகொண்டே இருந்தது. கவாஜாவுக்காக பும்ராவிடம் வார்த்தைகளை பறிமாறிக்கொண்டது என கான்ஸ்டாஸ் ஒரு பரபரப்பான டெஸ்ட் தொடரை ஆடினார்.

    விராட் கோலியுடனான தோள்பட்டை மோதலுக்கு பிறகு சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்ற வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் கோலி மிகவும் எளிமையான மற்றும் அன்பான மனிதர் என்று சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து கான்ஸ்டாஸ் கூறியதாவது:-

    சிறுவயதிலிருந்தே விராட் கோலி தான் என்னுடைய ரோல் மாடல். அவரை என் குடும்பத்திற்கே மிகவும் பிடிக்கும். அந்த மோதலுக்கு பிறகான போட்டியின்போது, நான் அவரை சந்தித்து நிறைய பேசினேன். அவரிடம் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் என்று கூறினேன். அவருக்கு எதிராக விளையாடுவதே உண்மையில் எனக்கு கவுரவம். கோலி மிகவும் எளிமையான மற்றும் அன்பான மனிதர்.

    நான் அவரை முதலில் களத்தில் எதிர்கொண்ட போது, விராட் கோலி என் முன்னே பேட்டிங் செய்கிறார்' என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு அந்தளவு நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. இந்திய மக்கள் களத்தில் அவருக்குப் பின்னால் முழுமையாக இருந்தது. அவரது பெயரைக் கோஷமிட்டது. இது ஒரு நம்பமுடியாத அனுபவம்.

    என்னுடைய இலங்கை தொடருக்கு கோலி எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான், மூன்று வடிவங்களிலும் சிறந்த வீரர். நான் அவரைப்போலவே எதிர்காலத்தில் வர ஆசைப்படுகிறேன்

    என்று அவர் கூறினார்.

    • இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இலங்கை 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஹாமில்டன்:

    இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர்.

    இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 30.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் நியூசிலாந்து 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக காமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 3 விக்கெட், ஜேக்கப் டப்பி 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11-ம் தேதி நடக்கிறது.

    • பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
    • மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோல்வியடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் மற்றும் கனடா வீரர் யாங் மோதினர்.

    இந்த ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. ஸ்டேடியத்தில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டதில் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்தது. இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத்துடன் சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார். இதில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சீன வீரர் நாளை இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ்.பிரணாய் உடன் மோதவுள்ளார்.

    பெண்கள் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோட்டும் மலேசிய வீராங்கனையான கோ ஜின் வெய்-ம் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் மாளவிகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா உள்ளனர்.
    • டாப் 10-ல் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.

    ஆண்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா உள்ளனர்.

    இந்த வரிசையில் 29 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டியிருந்தார்.

    டாப் 10-ல் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா மட்டுமே உள்ளார். அவர் 1 இடம் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளார்.

    • ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ஆப்கன் அணியின் ஆலோசகராக இருந்தார்.
    • டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் ஆலோசகராக இருந்தார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.

    இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஜனவரி 12-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. அணியில் மாற்றம் செய்ய பிப்ரவரி 13-ந்தேதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு ஐசிசி தொடருக்கும் ஒவ்வொரு புதிய ஆலோசகரை நியமிக்கிறது. அந்த வகையில் இந்த முறை யூனிஸ் கானை நியமித்துள்ளது. 

    இதற்கு முன்பு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவும், அமெரிக்கா, மே.இ.தீவுகளில் நடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிராவோவும் ஆப்கனின் ஆலோசகர்களாக செயல்பட்டனர்.


    ஆப்கானிஸ்தான் அணி, ஐசிசி தொடர் நடக்கும் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சிறந்தவர்களை தங்களது கிரிக்கெட் அணியின் ஆலோசகாராக நியமிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.
    • உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை அடுத்து, முன்னணி வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

     


    இது குறித்து பேசிய அவர், "இடைவெளி இருப்பதாக நினைத்தால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு காரணங்களுக்காக விளையாட வேண்டும். ஒன்று நீங்கள் இளம் தலைமுறை வீரர்களுடன் இருக்க முடியும். மற்றொன்று உங்கள் அனுபவங்களை அவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் பங்களிப்பை வழங்க முடியும்," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பாக, நீங்கள் விளையாட நினைப்பதை விட அதிகளவு சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியும். இந்திய அணி போட்டிகளை திரும்பி பார்க்கும் போது, பந்து திரும்பக் கூடிய பிட்ச்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதில்லை. எதிரணியில் திறமைமிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தால், அவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்க முடியும். அவர்கள் இந்திய அணிக்கு தொல்லை கொடுத்துள்ளனர்," என்று தெரிவித்தார். 

    • பும்ரா விளையாடும் பட்சத்தில் துணை கேப்டன் பதவி வழங்கப்படாது.
    • உடல் தகுதி பெற்ற முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது.

    அதை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் ஐந்து 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 22-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை இங்கிலாந்தில் தொடர் நடக்கிறது.

    அதை தொடர்ந்து இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.

    இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 12-ந்தேதி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 பேர் கொண்ட அணியை ஜனவரி 12-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. இதனால் அன்று அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.

    அணியில் மாற்றம் செய்ய பிப்ரவரி 13-ந்தேதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

    முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் பந்து வீசவில்லை. இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவருக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்பு இல்லாததால் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் ஆடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் விளையாடாமல் போனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். 31 வயதான அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டை வீழ்த்தி சாதித்து இருந்தார். பும்ரா 89 ஒருநாள் போட்டியில் 149 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். விராட் கோலியும் இடம்பெறுவார். சாம்பியன்ஸ் டிராபி போட்டி அவர்களது எதிர் காலத்தை நிர்ணயிக்கும்.

    பும்ரா விளையாடும் பட்சத்தில் துணை கேப்டன் பதவி வழங்கப்படாது. ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உடல் தகுதி பெற்ற முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
    • பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    சேலம்:

    தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.

    இதன் விளைவாக டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்' (Natural strong powerlifting federation) சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    ×