என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
    ஆமதாபாத்:

    7-வது புரோ கபடி லீக் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி அணிகள் ஆமதாபாத்தில் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.

    லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த தபாங் டெல்லி அணி அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை 44-38 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அரையிறுதியில் 15 டேக்கிள்ஸ் புள்ளி எடுத்ததும், ஒரு முறை கூட ஆல்-அவுட் ஆகாததும் அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ரைடர் நவீன்குமார் அந்த அணியின் ஆணிவேராக விளங்குகிறார். ‘சூப்பர்10’ எனப்படும் 10 புள்ளிகளுக்கு மேலாக தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் எடுத்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் அவர் ரைடு மூலம் மட்டும் 283 புள்ளிகள் குவித்து இருக்கிறார். கேப்டன் ஜோகிந்தர் நர்வால், சந்திரன் ரஞ்சித், விஜய், ரவீந்தர் பஹால் ஆகியோரும் அந்த அணிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

    புள்ளி பட்டியலில் 2-வது இடம் பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணி அரையிறுதியில் மும்பை அணியை 37-35 என்ற புள்ளி கணக்கில் போராடி சாய்த்தது. காயம் காரணமாக கேப்டன் மனீந்தர்சிங் அரையிறுதியில் ஆடாத போதும், கூட்டு முயற்சி வெற்றியை தேடித்தந்தது. மனீந்தர் சிங் இறுதிப்போட்டியில் விளையாடினால் அது பெங்கால் அணிக்கு மேலும் வலுசேர்க்கும். சுகேஷ் ஹெக்டே, பிரபஞ்சன், நபிபாக்‌ஷ், ரிங்கு நர்வால் உள்ளிட்டோர் பெங்கால் அணியில் நட்சத்திர வீரர்களாக மின்னுகிறார்கள்.

    இந்த சீசனில் இவ்விரு அணிகளும் சந்தித்த இரண்டு லீக்கில் ஒரு ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இன்னொரு ஆட்டத்தில் பெங்கால் 42-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் தங்களது முதல் பட்டத்துக்காக மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

    போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ராஞ்சியில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருந்தார்.

    ராஞ்சியில் நாளை தொடங்கும் 3-வது மற்றும் கடைசி போட்டிக்காக இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது தோள்பட்டையில் வலி இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாபாஸ் நதீம் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் முதல் தர கிரிக்கெட்டில் 424 விக்கெட்டுக்களும், லிஸ்ட் ஏ போட்டியில் 145 விக்கெட்டுக்களும், டி20-யில் 98 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இன்று அக்டோபர் 18-ந்தேதி என்பதால் சரியாக ஒரு வருடம் இருப்பதால், உலகக்கோப்பை குறித்து ஐசிசி-க்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார்.

    அப்போது சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம் செலுத்த இருக்கிறோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை மீது நாங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த இருக்கிறோம். அடுத்த 12 மாதங்கள் முடிந்த அளவிற்கு மிகப்பெரிய தொடருக்கான வீரர்களை தயார் செய்வது முக்கியமானது.

    டி20 கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் பெறும்போது, அவர்களுடைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற வேண்டும் என்ற உத்வேகம் எங்கள் வீரர்களிடம் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது சரியாக அமைந்துள்ள காம்பினேசன் அணியுடன் செல்ல விரும்புகிறோம்.

    அறிமுகம் செய்யப்பட்ட வருடத்தில் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. அப்போது டி20-யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என் சற்று தெரியாமல் இருந்தது. அதன்பின் மிகப்பெரிய கிரிக்கெட்டாக உருவெடுத்தது.

    டி20 உலகக்கோப்பையை வென்ற 2-வது இந்திய கேப்டன் என்பது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். அடுத்த வருடம் நடைபெறும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையையும் இந்தியா வெல்லும் என நம்புகிறேன்’’ என்றார்.
    ஆசியக் கண்டத்தில் தொடர்ச்சியாக 9 முறை டாஸ் தோற்ற விரக்தியில், நாளைய போட்டியின்போது மாற்று வீரரை டாஸ் கேட்க அனுப்புகிறாராம் டு பிளிசிஸ்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    ஆசிய கண்டத்தில் விளையாடும்போது டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்லது மிகமிக முக்கியமானது. டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெற்றியை எளிதாக்கி விடலாம். ஆனால், இந்தியாவிற்கு எதிராக டு பிளிசிஸ் இரண்டு போட்டிகளிலும் டாஸ் தோற்றார்.

    ஆசிய கண்டத்தில் அவரது டாஸ் தோல்வி புனே டெஸ்டுடன் ஒன்பதாகும். நாளைய ராஞ்சி டெஸ்டிலும் தோற்றாலம் பத்தாகிவிடும். தனக்கு அதிர்ஷ்டம் கைக்கூடவில்லை. அதனால் டாஸ் கேட்க மாற்று வீரரை அனுப்பி வைக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    டு பிளிசிஸ், விராட் கோலி

    இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘அநேகமாக டாஸ் கேட்ட  நான் வேறு யாரையாவது ஒருவரை அனுப்புவேன். ஏனென்றால், ஆசியக் கண்டத்தில் டாஸ் ஜெயிப்பதில் எனக்கு சிறப்பான ரெகார்டு இல்லை. டாஸ் வென்று முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்து விட்டால், 2-வது இன்னிங்ஸ் அதன் வழியேச் செல்லும்’’ என்றார்.
    ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மசாஜ் தெரபிஸ்ட்-ஆக நவ்நிதா கவுதம் என்ற பெண்ணை நியமித்துள்ளது.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும் தலைமை பயிற்சியாளர், பந்து வீச்சு பேட்டிங் பயிற்சியாளர்கள் என நியமிப்பது உண்டு. இவர்களுடன் போட்டியை ஆராய்வது, பிசியோ போன்றவைக்கும் நிபுணர்களை பணிக்கு அமர்த்துவார்கள். இவர்களை சப்போர்ட் ஸ்டாஃப் என்று அழைப்பது உண்டு.

    இந்த வகையில் 2020 சீசனுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மசாஜ் தெரபிஸ்ட்-ஆக நவ்நிதா கவுதம் என்ற பெண் நிபுணரை நியமித்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் முதன்முறையாக பெண் ஒருவரை சப்போர்ட் ஸ்டாஃப் ஆக நியமிப்பது ஆர்சிபி-தான். இதன் மூலம் பெருமைப்படுவதாக அந்த அணி டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
    மேரி கோம் உடன் சண்டையிட ஏற்பாடு செய்யுங்கள் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவிடம் முறையிட்ட குத்துச் சண்டை வீராங்கனைக்கு, ஆதரவான பதில் கிடைக்கவில்லை.
    இந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரர் மேரி கோம். 51 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு விளையாடி வரும் இவர் 8 முறை உலகசாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    இதே பிரிவில் விளையாடும் மற்றொரு இளம் வீராங்கனை நிகத் ஜரீன். மேரி கோம் விளையாடுவதால் முக்கியமான தொடரில் இந்தியா சார்பிவில் விளையாட 23 வயதாகும் நிகத் ஜரீனுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

    ஒரு பிரிவில் இரண்டு பேர் இருந்தால் அவர்களுக்கு இடையில் டிரையல் வைத்து அதில் வெற்றி பெறும் நபர் முக்கிய தொடருக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், மேரி கோமுக்கு தனிச்சிறப்பு முறையில் டிரையலில் பங்கேற்காமலேயே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் விரக்தியடைந்த நிகத் ஜரீன் கடிதம் ஒன்றை டுவிட்டர் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு அனுப்பியிருந்தார்.

    அதற்கு கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். அதில் ‘‘இந்தியாவுக்கு சிறப்பு சேர்ப்பதை மனதில் வைத்து இதுகுறித்து சிறந்த முடிவை எடுங்கள் என்று பாக்சிங் இந்தியாவுக்கு உறுதியாக தெரிவிப்பேன். மேலும், வீரர்கள் தேர்வு குறித்த விவகாரத்தில் மந்திரிகளில் தலையிடக்கூடாது. பெடரேசன்கள் தன்னாட்சி பெற்ற ஒலிம்பிக் சங்கத்திற்கு கீழ் செயல்பட்டு வருகின்றன’’ என தெரிவித்துள்ளார்.

    இதனால் பாக்சிங் இந்தியா எடுக்கும் முடிவுக்கு நிகத் ஜரீன் கட்டுப்பட்டாக வேண்டும்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியை பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 1500 ரசிகர்கள் மட்டுமே டிக்கெட்டுக்கள் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் அமைந்துள்ள ஸ்வாங்க் மைதானத்தில் நடக்கிறது. முதன்முதலாக 2017-ல் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற்றது.

    அதன்பின் தற்போது 2-வது டெஸ்ட் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியை காண அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வரை 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளார்.

    டிக்கெட்டின் விலை ரூ. 200-ல் இருந்து ரூ. 2000 வரையும், சீசன் டிக்கெட் 1000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் போலீசார்களுக்கு ஐந்தாயிரம் டிக்கெட்டுக்கள் இலவசமாக வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருவதை இந்த புள்ளிவிவரம் தெளிவுப்படுத்தியுள்ளது.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றன. நேற்றுடன் முடிவடைந்த இதில் மொத்தம் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எலைட் குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் இருந்து கர்நாடகா, பஞ்சாப், டெல்லி, சத்தீஷ்கர், மும்பை அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    எலைட் குரூப் ‘சி’ பிரிவில் இருந்து தமிழ்நாடு, குஜராத் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. பிளேட் பிரிவில் இருந்து புதுச்சேரி அணி காலிறுதிக்கு முன்னேறியது.

    20-ந்தேதி நடைபெற்றும் காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா - புதுச்சேரி அணிகளும், டெல்லி - குஜராத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    21-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் பஞ்சாப் - தமிழ்நாடு அணிகளும், சத்தீஷ்கர் - மும்பை அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    தற்போதைய இந்தியாவின் வேகப்பந்து வீச்சு 1980 மற்றும் 1990-களில் வெஸ்ட் இண்டீஸ் எவ்வாறு இருந்ததோ, அப்படி இருந்தது என லாரா தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு தாக்குதல் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது.

    மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு தாக்குதல் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது இதை பார்த்தேன். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் தற்போது ஓய்வில் இருக்கும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தரம் வாய்ந்த பவுலர்களாக திகழ்கிறார்கள். 1980, 90-களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான். அதை இந்திய பந்து வீச்சு எனக்கு கொஞ்சம் நினைவூட்டுகிறது.

    இவர்போல் ஒரு கேப்டன் இல்லை என்று சொல்லும் அளவுக்கு விராட் கோலி அருமையாக செயல்படுகிறார். களத்திலும் சரி, வெளியிலும் சரி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். டோனி அமைத்து தந்த அடித்தளம், அவருக்கு பின்புலமாக இருந்தது. அதில் இருந்து அவர் எழுச்சி பெற்று, தனது கேப்டன்ஷிப்பை வித்தியாசமான முறைகளில் செயல்படுத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் பயணிப்பதாக நினைக்கிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் பொல்லார்ட் அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு சக வீரர்களின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அவர் உலகம் முழுவதும் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதனால் வெற்றிகரமாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து வைத்திருப்பார். எனவே அவரது நியமனம் நல்ல முடிவுதான். அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நீண்ட காலம் விளையாடினால், அணி சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும்.

    இவ்வாறு லாரா கூறினார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் மயங்க் அகர்வால் (330 ரன், 2 சதம்), ரோகித் சர்மா (317 ரன், 2 சதம்), விராட் கோலி (305 ரன், ஒரு இரட்டை சதம்), புஜாரா (145 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா 161 ரன் எடுத்துள்ளார்.

    பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர். இதில் அஸ்வின் 14 விக்கெட்டும், ஜடேஜா 10 விக்கெட்டும் கைப்பற்றி அணிக்கு முதுகெலும்பாக உள்ளனர். அவர்களது பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் திணறி வருகிறார்கள்.

    இதனால் கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    டு பிளிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங், பந்து வீச்சில் திணறி வருகிறது. பேட்டிங்கில் டீன் எல்கர் (216 ரன்), டி காக் (147 ரன்), டு பிளிசிஸ் (137 ரன்) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி வருகிறார்கள். கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் தாக்கு பிடித்து விளையாடிய மகராஜ் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    தொடக்க வீரர் மார்கிராம், புரூயின் ஆகியோரின் சொதப்பல், பந்து வீச்சில் ரபடா, பிலாண்டர் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தாதது தென்ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவாக உள்ளது. இதில் மார்கிராம் காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறது.

    இரு டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா போராடாமல் தோல்வியை சந்தித்தது. இதனால் கடைசி டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால் அதற்கு பேட்டிங், பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய டெஸ்ட் அணி


    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விஹாரி, விருத்திமான் சஹா, ஜடேஜா, அஸ்வின், முகமது‌ ஷமி, இஷாந்த், சர்மா, குல்தீப் யாதவ், ரி‌ஷப் பந்த், உமேஷ் யாதவ், ஷுப்மான் கில்.

    தென்ஆப்பிரிக்கா: டு பிளிசிஸ் (கேப்டன்), எல்கர், பவுமா, புரூயின், குயிண்டன் டி காக், செனுரான் முத்துசாமி, பிலாண்டர், டானே பீயட், ரபாடா, கிளாசன், நிகிடி, ஆன்ரிச் நோட்ஜே, சுபையர் ஹம்சா.
    வங்காளதேச அணி இந்தியா வந்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. அதற்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி நவம்பர் 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

    இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நீடிக்கிறார். தமிம் இக்பால், சவுமியா சர்கார், அராபத் சன்னி, அல்-அமீன் ஹூசைன் ஆகியார் அணிக்கு திரும்பி உள்ளனர்.

    சபிர் ரஹ்மான், தைஜுல் இஸ்லாம், ரூபெல் ஹூசைன், நஜ்முல் ஹூசைன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அணி விவரம் வருமாறு:-

    ஷாகிப் அல்ஹசன் (கேப் டன்), தமிம் இக்பால், லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார், முகமத் நமீம், முஷ்பிகுர் ரகீம், மெஹ்முதுல்லா, அலிப் ஹூசைன், மொசாடக் ஹசன், அமிதுல் இஸ்லாம், அராபத் சன்னி, முகமத் செய்புதீன், அல்அமீன் ஹன், முஸடாபிஜூர் ரகுமான், ‌ஷமில் இஸ்லாம்.
    புரோ கபடி லீக்கில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக டெல்லி - பெங்கள் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
    7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்தது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் 132 ‘லீக்’ போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

    உ.பி.யோதா, யு மும்பை, அரியானா ஸ்டீலர்ஸ, பெங்களூர் புல்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே 3 முதல் 6 இடங்கள் பிடித்து அரைஇறுதிக்கான ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்சுன் ஜெயின்ட்ஸ், புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ்தலைவாஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன. அரைஇறுதிக்கான ‘பிளேஆப்’பில் முதல் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி உ.பி. யோத்தாவையும், 2-வது வெளியேற்றுதல் சுற்றில் யு மும்பை அணி அரியானாவையும் தோற்கடித்தன.

    இதன்மூலம் அரை இறுதிக்கு பெங்களூரு புல்ஸ், யு மும்பை தகுதி பெற்றன. முதல் அரைஇறுதியில் பெங்களூருவை தபாங் டெல்லியும், 2-வது அரைஇறுதியில் யு மும்பையை பெங்கால் வாரியர்சும் வீழ்த்தின.

    சாம்பியன் மகுடத்துக்கான இறுதிப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    ஜோகீந்தர் நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணியில் நவீன்குமார் (285 புள்ளி), சந்திரன் ரஞ்சித் (123 புள்ளி), ரவீந்தர் பாஹல் நீரஜ் போன்ற வீரர்கள் உள்ளனர். அந்த அணி ‘லீக்’ ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியதால் நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்கால் வாரியர்ஸ் அணியில் கேப்டன் மணீந்தர்சிங் 205 புள்ளிகள் எடுத்துள்ளார். அவர் காயம் காரணமாக அரை இறுதியில் ஆடவில்லை. இறுதிப்போட்டியில் ஆடுவதும் சந்தேகமே. சுகேஷ் ஹெக்டே, முகமது இஸ்மாயில் நபிபக்ஷா, பிரபஞ்சன், பல்தேவ்சிங் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    புரோ கபடி லீக்

    சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோதுவதால் இறுதிப்போட்டி விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் ஆகஸ்ட் 17-ந்தேதி மோதிய ‘லீக்’ ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது. செப்டம்பர் 30-ந்தேதி நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 42-33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்தது.

    இதுவரை பாட்னா பைரேட்ஸ் மூன்று முறையும் (2016-ம் ஆண்டு இரண்டு தடவை, 2017), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (2014), யு மும்பை (2015), பெங்களூரு புல்ஸ் (2018) தலா ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளன.
    ×