search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டு பிளிசிஸ் ஆட்டமிழந்த காட்சி
    X
    டு பிளிசிஸ் ஆட்டமிழந்த காட்சி

    தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?: ராஞ்சியில் நாளை கடைசி டெஸ்ட் தொடக்கம்

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் மயங்க் அகர்வால் (330 ரன், 2 சதம்), ரோகித் சர்மா (317 ரன், 2 சதம்), விராட் கோலி (305 ரன், ஒரு இரட்டை சதம்), புஜாரா (145 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா 161 ரன் எடுத்துள்ளார்.

    பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர். இதில் அஸ்வின் 14 விக்கெட்டும், ஜடேஜா 10 விக்கெட்டும் கைப்பற்றி அணிக்கு முதுகெலும்பாக உள்ளனர். அவர்களது பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் திணறி வருகிறார்கள்.

    இதனால் கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    டு பிளிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங், பந்து வீச்சில் திணறி வருகிறது. பேட்டிங்கில் டீன் எல்கர் (216 ரன்), டி காக் (147 ரன்), டு பிளிசிஸ் (137 ரன்) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி வருகிறார்கள். கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் தாக்கு பிடித்து விளையாடிய மகராஜ் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    தொடக்க வீரர் மார்கிராம், புரூயின் ஆகியோரின் சொதப்பல், பந்து வீச்சில் ரபடா, பிலாண்டர் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தாதது தென்ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவாக உள்ளது. இதில் மார்கிராம் காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறது.

    இரு டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா போராடாமல் தோல்வியை சந்தித்தது. இதனால் கடைசி டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். ஆனால் அதற்கு பேட்டிங், பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய டெஸ்ட் அணி


    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விஹாரி, விருத்திமான் சஹா, ஜடேஜா, அஸ்வின், முகமது‌ ஷமி, இஷாந்த், சர்மா, குல்தீப் யாதவ், ரி‌ஷப் பந்த், உமேஷ் யாதவ், ஷுப்மான் கில்.

    தென்ஆப்பிரிக்கா: டு பிளிசிஸ் (கேப்டன்), எல்கர், பவுமா, புரூயின், குயிண்டன் டி காக், செனுரான் முத்துசாமி, பிலாண்டர், டானே பீயட், ரபாடா, கிளாசன், நிகிடி, ஆன்ரிச் நோட்ஜே, சுபையர் ஹம்சா.
    Next Story
    ×