என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேட்பன் உள்பட 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    பெங்களுர்:

    கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கர்நாடக பிரீமியர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. 

    இதுவரை 8 சீசன்களாக நடைபெற்றுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடரின் இறுதி போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

    இந்த போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேபடன் சிஎம் கௌதம் 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டனின் மந்தமான ஆட்டமே தோல்விக்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. 

    கைது செய்யப்பட்ட சிஎம் கௌதம் மற்றும் அபர் காசி

    இதையடுத்து இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து பெங்களுர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

    இந்நிலையில், கர்நாடாக பிரீமியர் லீக் தொடரில் மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கௌதம் மற்றும் அபர் காசி ஆகிய இரு வீரர்களை குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    சூதாட்டப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிஎம் கௌதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை, பெங்களுர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே பல்வேறு அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    வங்காளதேச அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ராஜ்கோட்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    வங்காளதேசத்திடம் முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் தோற்றதால் இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மோசமான பீல்டிங், டி.ஆர்.எஸ். முறையை கையாண்ட விதம் ஆகியவற்றால் இந்தியாவின் வெற்றி பாதிக்கப்பட்டது. இதேபோல பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை.

    இதனால் இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிது. ரன்களை அள்ளிக்கொடுத்த வேகப்பந்து வீரர் கலீல் அகமதுக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூர் இடம் பெறலாம். இதே போல பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் இடத்தில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    ஷிரேயாஸ் அய்யர், சாம்சன், ரோகித்சர்மா


    முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    கேப்டன் ரோகித்சர்மா புதிய சாதனையை படைக்கிறார். 100-வது 20 ஓவர் போட்டியில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். சர்வதேச அளவில் 2-வது வீரர் ஆவார். பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 20 ஓவர் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.

    முதல் போட்டியில் அதிர்ச்சி கொடுத்தது போல் 2-வது ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் வங்காளதேசம் இருக்கிறது.

    வெற்றி பெற்ற வங்காளதேச வீரர்கள்


    அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்பிகுர் ரகீம் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்.

    ‘மகா’ புயல் காரணமாக இந்த போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-

    ரோகித்சர்மா (கேப்டன்), தவான், சாம்சன், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பந்த், சிவம் துபே, குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர்.
    மழை மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்றிரவு நடக்கிறது.
    ராஜ்கோட்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    ஷகிப் அல்-ஹசன், தமிம் இக்பால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் வங்காளதேசம் பலவீனமாகி விட்டது என்று வர்ணிக்கப்பட்ட நிலையில் எழுச்சி பெற்ற அந்த அணி முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது.

    இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக விளையாடிய எட்டு 20 ஓவர் ஆட்டங்களிலும் தோற்று இருந்த வங்காளதேசம் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

    தொடக்க ஆட்டத்தை பொறுத்தவரை இந்தியாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. நீண்ட நேரம் களத்தில் நின்ற ஷிகர் தவான் மற்றும் ரிஷாப் பண்டுவின் பேட்டிங் மந்தமாக காணப்பட்டது. இதனால் தான் 150 ரன்களை கூட தொட முடியாமல் போனது.

    பந்து வீச்சில் 17 ஓவர்கள் வரை இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. முஷ்பிகுர் ரஹிமுக்கு 38 ரன்னில் நழுவ விட்ட கேட்ச்சும், அதற்கு முன்பாக எல்.பி.டபிள்யூ. அப்பீலின் போது டி.ஆர்.எஸ். கேட்காததும் தோல்விக்கு காரணியாக அமைந்தது. ரிஷாப் பண்டுவின் விக்கெட் கீப்பிங் பணி தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வந்தாலும், அவரை கழற்றி விட வாய்ப்பில்லை. கடந்த ஆட்டத்தில் அறிமுக வீராக இறங்கிய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஜொலிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதே சமயம் 4 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவுக்கு பதலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்படலாம். மொத்தத்தில் வங்காளதேசத்துக்கு சுடச்சுட பதிலடி கொடுக்க ஒருங்கிணைந்த ஆட்டம் அவசியமாகும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய வீரர்கள் முழுவீச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

    வீரர்களின் போராட்டம், ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு தடை என்று பல சிக்கல்களை கடந்து இந்தியாவுக்கு பயணித்த வங்காளதேச அணிக்கு முதலாவது வெற்றி உற்சாகமும், நம்பிக்கையும் அளித்துள்ளது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்கள் விளாசி ஹீரோவாக மின்னினார். இந்த ஆட்டத்திலும் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    கேப்டன் மக்முதுல்லா, முந்தைய ஆட்டத்தில் 8 பவுலர்களை பயன்படுத்தி இந்தியாவின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். அவரது வித்தியாசமான யுக்திகள் இன்றைய ஆட்டத்திலும் பலன் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மக்முதுல்லா கூறுகையில், ‘இந்த தொடரை கைப்பற்றினால் அது வங்காளதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிப்பதாக இருக்கும். உள்நாட்டில் இந்தியா வலுவான அணி என்பதை அறிவோம். அந்த அணியை வீழ்த்த முதல் பந்தில் இருந்தே உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ராஜ்கோட் ஆடுகளம் பேட்டிங்குக்கு உதவிகரமாக இருக்கும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் 170 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என்று நம்புகிறேன். சீதோஷ்ண நிலையை பொறுத்து ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்’ என்றார்.

    இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டியாகும். ஆட்ட எண்ணிக்கையில் சதம் அடிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘எங்களது பேட்டிங்கை பார்க்க நன்றாகத் தான் உள்ளது. அதனால் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் ஆடுகளத்தன்மையை ஆய்வு செய்து விட்டு, அதற்கு ஏற்ப ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

    டெல்லியில் நடந்த கடந்த ஆட்டத்தில் ஆடுகளத்தன்மைக்கு தகுந்தபடி வேகப்பந்து வீச்சு கூட்டணியை தீர்மானித்தோம். அதே போல் இந்த போட்டிக்கும் ஆடுகளத்தை பார்த்து விட்டு, எத்தகைய பந்து வீச்சாளர்கள் தேவை என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

    ராஜ்கோட் ஆடுகளம் (பிட்ச்) எப்போதும் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்கும். அது மட்டுமின்றி பந்து வீச்சாளர்களுக்கும் கொஞ்சம் ஒத்துழைக்கும். நிச்சயம் டெல்லியை விட சிறந்த ஆடுகளமாக இருக்கும். ஆட்ட வியூகம் குறித்து உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் எங்களது அணுகுமுறையில் மாற்றம் இருக்கும். அதை நீங்கள் பார்ப்பீர்கள். கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.

    100-வது ஆட்டத்தில் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்டபோது ‘2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் அறிமுகம் ஆனேன். இது நீண்டதொரு பயணம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டியில் நான் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். இதில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன்.’ என்று குறிப்பிட்டார்.

    ராஜ்கோட்டில் இதுவரை இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. 2013-ம் ஆண்டில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை இந்திய அணி விரட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2017-ம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 197 ரன்கள் இலக்கை நெருங்க முடியாமல் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது அல்லது ஷர்துல் தாகூர்.

    வங்காளதேசம்: லிட்டான்தாஸ், முகமது நைம் அல்லது முகமது மிதுன், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா (கேப்டன்), அபிப் ஹூசைன், மொசாடெக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், அல்-அமின் ஹூசைன் அல்லது அராபத் சன்னி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    இந்திய டென்னிஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை நினைத்து கவலைப்படவில்லை என்று முன்னாள் வீரர் மகேஷ்பூபதி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த செப்டம்பர் 14, 15-ந் தேதிகளில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு சென்று விளையாட முடியாது என்று இந்திய டென்னிஸ் அணியின் விளையாடாத கேப்டன் மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா உள்ளிட்ட சில வீரர்கள் அறிவித்தனர். அத்துடன் இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு சுமுகமாக இல்லாததால் இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு, அகில இந்திய டென்னிஸ் சங்கமும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த போட்டி வருகிற 29, 30-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடம் மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு கருதி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுவதாக கடந்த திங்கட்கிழமை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. ஆனால் நடைபெறும் இடம் எது? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு எதிரான டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணிக்கு விளையாடாத கேப்டனாக செல்ல மகேஷ்பூபதி மறுத்ததால் அவருக்கு பதிலாக ரோகித் ராஜ்பால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.

    இது குறித்து இந்திய அணியின் விளையாடாத கேப்டன் (களம் இறங்காமல் அணியை வழி நடத்துபவர்) மகேஷ்பூபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை நான் பெரிதாக நினைக்கவில்லை. புதிய கேப்டனுக்கான தருணம் இது என்று அவர்கள் சொல்ல முடியும். ஆனால் நான் தேசிய அணிக்காக பணி செய்ய மறுத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது என்று நான் உண்மையாகவே நினைத்தேன். அதனை தான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனமும் உறுதி செய்து இருக்கிறது.

    இனிமேல் நான் கேப்டனாக இல்லை என்று அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எழுத்துபூர்வமான தகவலை நான் எதிர்பார்க்கிறேன். இஸ்லாமாபாத் செல்லும் இந்திய டென்னிஸ் அணிக்கு ரோகித் கேப்டனாக இருப்பார் என்பது மட்டுமே நான் கேள்விப்பட்டேன். போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த தகவல் வெளியானது. கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருப்பதாக எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருப்பதுடன், நாட்டுக்காக 25 ஆண்டுகளாக விளையாடி இருக்கும் நான் அத்துடன் இந்த ஆட்டத்தை விட்டு ஒதுங்கி இருந்து விடவில்லை. இந்திய டென்னிஸ் முன்னேற்றத்துக்காக தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டி வருகிறேன். இளம் வீரர்களின் வளர்ச்சிக்காக நிதி திரட்டி கொடுத்துள்ளேன். அகில இந்திய டென்னிஸ் சங்கம் நான் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுங்குவதற்கு தயார். ஆனால் நான் நாட்டு அணிக்காக பணியாற்ற மறுக்கிறேன் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒருபோதும் நான் சொன்னது கிடையாது. பாகிஸ்தானுக்கு செல்வது சவுகரியமாக இருக்காது என்று சொன்னேனே தவிர, இந்த போட்டிக்கு பணியாற்ற தயாராக இல்லை என்று சொல்லவில்லை. டென்னிசுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள என் மீது தேவையில்லாமல் சேற்றை வாரி இறைக்க வேண்டாம். எனது தூண்டுதலில் பேரில் தான் மற்ற வீரர்களும் பாகிஸ்தான் செல்ல மறுத்ததாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் கருதி தான் என் மீது இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகேஷ்பூபதி விவகாரம் குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ராஜ்பால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது. மகேஷ்பூபதியுடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிந்து விட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று அவரே சொல்லி விட்டார். எனவே தான் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேர்வு செய்தோம்’ என்றார். 
    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கி வீழ்த்தியது.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை.

    இதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதியில் 86-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் பெரைரா ஒரு கோல் அடித்து ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தார்.

    இறுதியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது, இதன்மூலம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
    ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.
    ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இன்று பகல் - இரவு போட்டியான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

    ரஹ்மத் ஷா (61), இக்ரம் அலிகில் (58), அஸ்கர் ஆஃப்கன் (35) சிறப்பான விளையாடினர். மற்ற வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆப்கானிஸ்தான் 194 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. ஷாய் ஹோப், லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லிவிஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மையர் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 7.4 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ராஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ராஸ்டன் சேஸ் 94 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹோப் ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் 46.3 ஓவரில் 3 விகெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 77 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    இந்திய அணிக்காக ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடியதோடு வெளியேற எந்தவொரு வீரரும் விரும்பமாட்டார் என சாஹல் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு விளையாடி வருகிறது. தோல்வியடைந்தாலும் அணி நிர்வாகத்திடம் இருந்து நெருக்கடி ஏதுமில்லை என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறுகையில் ‘‘ஒன்றிரண்டு போட்டிகள் தவறாக செல்லலாம். ஆனால், நிர்வாகத்தில் இருந்து எந்தவித நெருக்கடியும் வரவில்லை. ஒரு விஷயம் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட போட்டியில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதுதான்.

    தற்போது அணியில் 11 பேர் களத்தில் விளையாடுகிறார்கள். இவர்கள் 15 பேர் கொண்ட அணியில் உள்ளவர்கள். அவர்களுக்கு தங்களுடைய பணி என்ன? என்பது தெரியும். யாராக இருந்தாலும் ஒன்றிரண்டு அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர், அணியில் இருந்து வெளியேற விரும்பமாட்டார்கள்.

    வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்தாலும் நேர்மறையான சிந்தனையோடு இருக்கிறோம். இதற்கு முன் நாங்கள் முதல் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், தொடரை வெற்றிருக்கிறோம்.

    முதல் போட்டி முடிந்துவிட்டது. கடைசி போட்டி பற்றி சிந்தித்தால் எதிர்மறையான சிந்தனை மனதிற்குள் வந்து விடும். நாங்கள் ராஜ்கோட்டிற்கு வருவதற்கு முன், தோல்வியடைந்த போட்டியை பற்றி மறந்து விட்டோம்.

    15 பேர் கொண்ட ஒட்டுமொத்த அணியும் புதிதாக போட்டியை தொடங்கும் நேர்மறையுடன் உள்ளோம். நாளைய போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’என்றார்.
    ‘பிங்க்’ பந்தில் விளையாட இன்னும் அதிகமான அனுபவம் தேவை என இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட இருக்கிறது.

    இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பகல்-இரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் ‘பிங்க்’ பந்தில் விளையாடியது கிடையாது. ரோகித் சர்மா ஒரேயொரு போட்டியில்தான் விளையாடியுள்ளார்.

    ரோகித் சர்மா ‘பிங்க்’ பால் டெஸ்ட் குறித்து கூறுகையில் ‘‘துலீப் டிராபி தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ‘பிங்க்’ பந்தில் விளையாடியுள்ளேன். இந்த பந்தில் விளையாடிய அதிகப்படியான அனுபவம் தேவை. ஆனால், பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இது சரியான நேரம்’’ என்றார்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குச் செல்வது உறுதியாகியுள்ளது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்தார். கடந்த இரண்டு சீசனில் முதல் பாதியில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடியது. அதன்பின் சொதப்பியது. இதனால் 2020 சீசனில் அஸ்வினை வெளியேற்ற பஞ்சாப் அணி விரும்பியது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அஸ்வினை வாங்க விருப்பம் தெரிவித்தது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா அஸ்வின் பஞ்சாப் அணியில் நீடிப்பார் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அஸ்வின் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இரு அணிகளுக்கு இடையில் உடன்பாடு எட்டியவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றில் சீனாவின் யான் யான் கய்-ஐ எதிர்கொண்டார்.

    9-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் 22-ம் நிலை வீராங்கனையிடம் 9-21, 12-21 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறினார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது

    3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் நாளை மறுநாள் நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்திருந்தார்.

    டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த உடன் 21-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு சிறந்த முறையில் புத்துணர்ச்சியுடன்  தயாராகுவதற்காக பேட் கம்மின்ஸ்க்கு 3-வது டி20 போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    2-வது போட்டி நடைபெற்ற கான்பெர்ராவில் இருந்து பெர்த்துக்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இதனால் அவரது சொந்த நகரான சிட்னிக்கு திரும்பும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.
    எம்எஸ் டோனியுடன் போட்டியா?, ரிஷப் பந்துடன் போட்டியோ? என்பது பிரச்சினை அல்ல. போட்டிக்கு தயாராக இருப்பதுதான் முக்கியம் என சகா தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சகா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுமார் ஓராண்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த சமயத்தில் ரிஷப் பந்த் டெஸ்ட் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆனார். ரிஷப் பந்த் வருகையால் சகாவின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    இந்த சமயத்தில்தான் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சகா தேர்வு செய்யப்பட்டார். சிறப்பான விக்கெட் கீப்பர் பணியால் அனைவரது மனதையும் ஈர்த்தார்.

    இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் கிடைக்கும் என சகா நம்பிக்கையில் உள்ளார்.

    எம்எஸ் டோனி அணியில் இருந்ததால் சுமார் ஓராண்டுகளுக்கு மேலாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்த சகா, தனது இடத்தை ரிஷப் பந்திடம் இழந்து மீண்டும் பெற்றுள்ள நிலையில், யாருடன் போட்டி என்பது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘போட்டி டோனிக்கு எதிராகவா அல்லது ரிஷப் பந்துக்கு எதிராகவா என்பது பெரிய விஷயம் அல்ல. போட்டியை எப்படி அணுகுகிறேனோ, அதேபோல் பயிற்சியை அணுகுகிறேன். நான் என்னை எப்போதுமே வர இருக்கிற போட்டிக்கு ஏற்ப தயார் படுத்திக் கொள்வேன்.

    என்னுடைய கவனம் யாருடன் போட்டியிட்டு அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அணித்தேர்வு உள்பட மற்ற விஷயங்கள் என்னுடைய கையில் இல்லை’’ என்றார்.
    ×