என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிக்ஸ் அடிப்பதில் வல்வரான இடது கை பேட்ஸ்மேன் ஆல்-ரவுண்டரான ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி என நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ள அவர், கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறார்.

    நியூசிலாந்துக்கு செல்லும் இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஷிவம் துபே இந்திய அணியில் இடம் பிடித்தார். இடது கை பேட்ஸ்மேனான இவர் சிக்ஸ் அடிப்பதில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இணையாக உள்ளார். மேலும் மிதமான வேகத்தில் பந்து வீசுகிறார்.

    இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் இல்லாததை இந்திய அணி நிர்வாகம் பெரிதாக கருதவில்லை. இதற்கிடையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சரியான போட்டியாளர் ஷிவம் துபேதான் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

    இந்நிலையில் ‘‘நான் இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே இங்கே வந்துள்ளேன். ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டியாளர் என்று நான் நினைக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

    ஐந்தாம் தேதி தொடங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான சுஷில் குமார் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான போட்டியை ஒத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவர், தோள்பட்டை காயத்தில் இருந்து இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை. இதனால் ஒலிம்பிக் தகுதி தொடருக்கான சோதனைப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவ சான்றிதழ் உடன் இந்திய மல்யுத்த பெடரேசனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மார்ச் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் தொடருக்கான தகதிச் சுற்று தொடர் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு இந்தியாவில் நடைபெறும்  போட்டியில் கலந்து கொண்டு தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுஷில் குமார் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மன்ஜோத் கல்ரா வயது முறைகேட்டால் ஓராண்டு தடை பெற்றுள்ளார்.
    நியூசிலாந்தில் நடைபெற்ற இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் மன்ஜோத் கல்ரா.

    இவர் ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியில் இடம் பிடிப்பதாக இருந்தார். ஆனால், கல்ரா வயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் குறைதீர்க்கும் அதிகாரியாக இருந்த முன்னாள் நீதிபதி பதார் துரேஸ் அகமது அவருக்கு இரண்டு ஆண்டு விளையாட தடைவிதித்துள்ளார். இதன்மூலம் இந்த வருட ரஞ்சி டிராபியில் விளையாட முடியாது. ஒரு வருடம் முடிந்த பின்னர் கிளப் வகையிலான தொடர்களில் விளையாடலாம்.

    ஏற்கனவே, டெல்லி அணியின் நிதிஷ் ராணா, ஹர்ஷ் தியாகி, ஷிவம் மவி, பிரஷாந்த் பண்டாரி, சரங் ராவத் ஆகியோர் இது போன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
    கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் இந்திய வீரர்தான் சிறந்த கேப்டன் என கிரிக்கெட் இணையதளம் தேர்வு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் இணைய தளங்களில் மிகவும் பிரபலமான ‘கிரிக்இன்போ’ கடந்த 10 ஆண்டுகளில் (2010-2019) சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கு சிறந்த கேப்டனாக டோனியை அந்த இணைய தளம் தேர்வு செய்துள்ளது. 2011-ம் ஆண்டு டோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்று சாதித்தது. இதனால் அவரை சிறந்த கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறது.

    அவர் இந்த 10 ஆண்டுகளில் 5640 ரன் எடுத்துள்ளார். 170 கேட்ச் பிடித்துள்ளார். 72 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

    ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவரான டோனி 20 ஓவர் ஆட்டங்களில் 5396 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 138.04 ஆகும். 154 கேட்ச் பிடித்துள்ளார். 77 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

    கேப்டனாக மட்டுமின்றி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் அவர் விக்கெட் கீப்பராகவும் தேர்வாகி இருக்கிறார்.

    ஒருநாள் போட்டி அணியில் மற்ற இந்திய வீரர்களில் விராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரும், 20 ஓவர் அணியில் விராட் கோலி, பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    விராட்கோலி ஒருநாள் போட்டியில் 11036 ரன் எடுத்துள்ளார். 20 ஓவர் ஆட்டங்களில் 8000 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 135.40 ஆகும்.

    ரோகித்சர்மா 7991 ரன் எடுத்துள்ளார். பும்ரா 174 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியை அந்த இணைய தளம் தேர்வு செய்துள்ளது. அவர் 7202 ரன் எடுத்துள்ளார். மற்ற இந்திய வீரர்களில் அஸ்வின் மட்டுமே இதில் இடம் பெற்றள்ளார். அவர் 362 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    விராட் கோலியை போலவே 3 வடிவிலான அணியிலும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டிவில்லியர்ஸ் தேர்வாகி உள்ளார்.

    ‘கிரிக்இன்போ’ கடந்த 10 ஆண்டுகளில் தேர்வு செய்துள்ள சிறந்த லெவன் (11 வீரர்கள்) வருமாறு:-

    டெஸ்ட்: விராட் கோலி (கேப்டன்), அலிஸ்தர் குக் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர், தென் ஆப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஹெராத் (இலங்கை).

    ஒருநாள் போட்டி: டோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), ரோகித் சர்மா, விராட் கோலி (இந்தியா), டிவில்லியர்ஸ், டெய்லர் (நியூசிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்), போல்ட் (நியூசிலாந்து), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), மலிங்கா (இலங்கை), இம்ரான்கான் தாகீர் (தென் ஆப்பிரிக்கா).

    20 ஓவர் போட்டி: டோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், சுனில் நரீன் (வெஸ்ட் இண்டீஸ்), விராட் கோலி, டிவில்லியர்ஸ், பொல்லார்ட், ஆந்த்ரே ரஸ்சல், வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்), மலிங்கா, பும்ரா (இந்தியா).
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
    கேப்டவுன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் செஞ்சுரியனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணி இந்த டெஸ்டிலும் வென்று தனது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

    இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த டெஸ்ட் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நெருக்கடிகளும் விமர்சனங்களும் தன்னை பாதிக்காது என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதன் பிறகு 7 தொடர்களில் வரிசையாக தோல்வியை தழுவினார். இந்த நிலையில் புத்தாண்டில் சாதிக்கும் வேகத்துடன் காத்திருக்கும் பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக பேட்மிண்டன் போட்டி உண்மையிலேயே எனக்கு சிறப்பானதாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சில போட்டிகளில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தேன். ஆனாலும் மனம் தளரவில்லை. நேர்மறை எண்ணத்துடனேயே செயல்பட்டேன். எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியம் கிடையாது. சில நேரங்களில் நீங்கள் அற்புதமாக விளையாடலாம். சில நேரம் நீங்கள் தவறு செய்யலாம். இந்த தவறுகளில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதும், வலுவான வீராங்கனையாக மீண்டு வருவதும் தான் முக்கியம்.

    என்னிடம் இருந்து எப்போதும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நெருக்கடியும், விமர்சனங்களும் எனது ஆட்டத்திறனை பாதிக்காது. ஏனெனில், நான் களம் இறங்கும் போதெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்று தான் மக்கள் எப்போதும் எதிர்பார்ப்பார்கள்.

    ஒவ்வொருவருக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தான் உயரிய இலக்காக இருக்கும். தற்போது தொழில்நுட்பம் மற்றும் திறமையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்தினால், இந்த ஒலிம்பிக் சீசன் நன்றாக அமையும்.

    ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவில் இருந்து மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே இரண்டு பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றி அந்த வரிசையில் நானும் இணைவேன் (ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்) என்று நம்புகிறேன். மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு இன்னும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியமாகும்.

    பேட்மிண்டனை பொறுத்தவரை இந்த 2020-ம் ஆண்டு சீசன் எளிதாக இருக்காது. ஜனவரி மாதத்தில் மலேசியா, இந்தோனேஷிய ஓபன் போட்டிகளில் இருந்து சவாலை தொடங்குகிறேன். சில தொடர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி சுற்றாகவும் இருக்கிறது. அதனால் எல்லா தொடர்களும் எங்களுக்கு முக்கியமானதாகும்.

    5-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டியை (ஜனவரி 20 முதல் பிப்ரவரி 9 வரை) ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் வலுவானவை தான். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இந்த பேட்மிண்டன் லீக் இளம் வீரர்களை ஊக்கமூட்டுவதுடன் அவர்களுக்கு, முன்னணி வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கி கொடுக்கிறது.

    இவ்வாறு சிந்து கூறினார்.

    உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் ஐதராபாத் ஹன்டர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

    வலது கை முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜப்ரா ஆர்ச்சர் விளையாடுவது சந்தேகம் என செய்தி வெளியாகியுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    2-வது டெஸ்ட் கேப் டவுனில் நாளைமறுநாள் (3-ந்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜாப்ரா ஆர்ச்சர் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரது வலது கை முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வலி ஏற்பட்டதால் பயிற்சியில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் 2-வது போட்டியில் களம் இறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது. இருந்தாலும் போட்டி தொடங்குவதற்கு சற்று முன் ஆர்ச்சர் குறித்து முடிவு எடுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை ஆர்ச்சர் களம் இறங்கவில்லை என்றால் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் களம் இறங்க வாய்ப்புள்ளது.
    இந்திய தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 16 மாதத்திற்குப் பிறகு இடம் பிடித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டருமான மேத்யூஸ் இடம் பிடித்துள்ளார்.

    இவர் இலங்கை டி20 அணியில் கடந்த 16 மாதங்களுக்கு முன் இடம் பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார். மேத்யூஸ் கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார்.

    இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. லசித் மலிங்கா (கேப்டன்), 2. தனுஷ்கா குணதிலகா, 3. அவிஷ்கா பெர்னாண்டோ, 4. மேத்யூஸ், 5. தசுன் ஷனகா, 6. குசால் பெரேரா, 7. நிரோஷன் டிக்வெல்லா, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. இசுரு உதானா. 10. பனுகா ராஜபக்சே, 11. ஒஷாடாபெர்னாண்டோ, 12. ஹசரங்கா, 13. லஹிரு குமாரா, 14. குசால் மெண்டிஸ், 15. சண்டகன், 16. கசுன் ரஜிதா.
    செர்பியாவில் பிறந்த மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான தனது நீண்டகால தோழி நடாசா ஸ்டான்கோவிச்சை கரம் பிடிக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பாண்ட்யா அவரது காதலியான நடாவுடன் டேட்டிங் செய்து வருவதாக சில காலமாகவே தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஹர்திக் பாண்ட்யா இதுகுறித்து ஏதும் பேசாமல் மவுனம் காத்து வந்தார்.

    இந்நிலையில் நடிகை நடாசா ஸ்டான்கோவிச் உடனான தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். புத்தாண்டு தினத்தன்று ஹர்திக் பாண்ட்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் கைப்பிடித்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில், ‘‘எனது பட்டாசுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஹர்திக் பாண்டியா தனது காதலி நடாசா ஸ்டான்கோவிச் உடன்

    இதற்கிடையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
    பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் திடீரென விலகியுள்ளார்.
    பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக இது கருதப்படுவதால் சர்வதேச வீராங்கனைகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

    இத்தொடரில் விளையாடுவதற்காக ரஷியாவின் மரியா ஷரபோவாவிற்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக பின்னடைவு ஏற்பட்டதால் துரதிர்ஷ்டவசமாக பிரிஸ்பேனில் தொடரில் பங்கேற்க முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

    வீனஸ் வில்லியம்ஸ்க்கு பதிலாக மாற்று வீராங்கனை யார் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் நாளை அறிவிக்கின்றனர்.

    வருகிற 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் முன்னணி வீராங்கனைகளான ஆஷ்லே பார்ட்டி, நவோமி ஒசாகா உள்பட முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் தொடர முடியாது என்பதற்கான ஒரு காரணத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை என லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கேப் டவுன் டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் சிக்கினார்.

    அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஓராண்டு தடைவிதித்தது. மேலும், கூடுதலாக ஒரு வருடம் கேப்டன் பதவிக்கு தடைவிதித்திருந்தது.

    அந்த காலக்கட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் பெய்ன் கேப்டனாக பதவி ஏற்றுக் கொண்டார். தொடக்கத்தில் ஆஸ்திரேலியா திணறினாலும் கடந்த வருடம் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி 2-2 என தொடரை டிரா செய்து கோப்பையை தக்கவைத்தது.

    சொந்த மண்ணில் பாகிஸ்தானை தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    ஆஷஸ் தொடரின்போது ஸ்மித் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார். ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்க ஆதரவு பெருகி வருகிறது.

    இந்நிலையில் டிம் பெய்னின் கேப்டன் பதவிக்கு எதிரான ஒரு காரணத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘உண்மையிலேயே டிம் பெய்னுக்கு எதிராக ஒரு காரணத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. மெல்போர்ன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி 70 ரன்களுக்கு மேல் சேர்த்தார். அத்துடன் 8 கேட்ச்களை பிடித்தார். அவர் உடற்தகுயுடன் இருப்பதால், விரும்பும் வரை ஏன் விளையாட முடியாது’’ என்றார்.
    இலங்கை தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்து போட்டிகளும் அங்குள்ள நான்கு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி வெளிநாட்டு வீரர்கள் விளையாட மறுத்து வந்தனர்.

    இதனால் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டு வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டின் பிற்பகுதி ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றது.

    இந்நிலையில் இந்த வருடத்திற்கான போட்டிகள் பிப்ரவரி 20-ந்தேதி முதல் மார்ச் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் 34 போட்டிகளும் பாகிஸ்தானில் உள்ள நான்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் 9 போட்டிகளும், லாகூர் கடாஃபி மைதானத்தில் 14 போட்டிகளும், முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் மூன்று போட்டிகளும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் 8 போட்டிகளிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த 36 நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 22 நாடுகளில் இருந்து 425 வீரர்கள் 2020 தொடரில் விளையாட தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
    ×