என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வெல்லும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பிரையன் லாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட் கோலி தலைமையில் தற்போதுள்ள இந்திய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வெல்லும் திறன் படைத்தது. எந்த போட்டி தொடரிலும் கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி போன்ற முந்திய ஆட்டங்களில் இந்தியாவை எதிர்த்து விளையாட வேண்டியதிருக்கும் என்று ஒவ்வொரு அணியும் உணர்ந்துள்ளன. 2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. ஆனால் தற்போதைய அணி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    டெஸ்டில் எனது 400 ரன் சாதனையை முறியத்து டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது. விராட் கோலி முன்னதாகவே களம் இறங்கினால் 400 ரன் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    4-வது இடத்தில் களம் இறங்கும் ஸ்டீபன் ஸ்மித் எனது சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். அவர் சிறந்த வீரர் என்றாலும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரால் ஆதிக்கம் செலுத்தி விளையாட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் லாபஸ்சாக்னே சதமும், ஸ்மித் அரைசதமும் அடித்தனர்.
    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் உடல் நலக் குறைவால் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக கிளைன் பிலிப்ஸ், ஆஸ்லே, சோமர்வில் ஆகியோர் இடம்பெற்றனர்.

    காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் போல்டுக்கு பதிலாக மேட் ஹென்றி இடம் பெற்றார். கேப்டனாக டாம் லாதம் செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

    டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டேவிட் வார்னர் - லாபஸ்சாக்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    வார்னர் 45 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் ஸ்டீவ் ஸ்மித் களம் வந்தார். அவர் மிகவும் நிதானமாக விளையாடினார். 39 பந்தில்தான் தனது முதல் ரன்னை எடுத்தார். மறுமுனையில் லாபஸ்சாக்னே அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

    லாபஸ்சாக்னேவைத் தொடர்ந்து ஸ்மித்திற்கும் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய லாபஸ்சாக்னே சதம் அடித்தார்.

    இவரது சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் 283 ரன்கள் சேர்த்துள்ளது. லாபஸ்சாக்னே 130 ரன்னுடனும், மேத்யூ வடே 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    இந்திய ஹாக்கி அணியின் பின்கள வீராங்கனை சுனிதா லக்ரா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பின்கள வீராங்கனையான சுனிதா லக்ரா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்றைய தினம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாளாகும். சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற நான் முடிவு எடுத்துள்ளேன். 30 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தியா முதல்முறையாக பங்கேற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடியதை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வரும் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். முழங்காலில் ஏற்பட்ட காயம் எனது ஒலிம்பிக் கனவை தகர்த்து விட்டது.

    வருங்காலத்தில் எனது முழங்காலில் மற்றொரு ஆபரேஷன் செய்ய வேண்டியது அவசியமானதாகும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்ட எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். இந்திய அணிக்காக விளையாடியதன் மூலம் பெற்ற சில நல்ல நினைவுகள் என் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். காயம் அடைந்த காலத்தில் எனக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்த ஹாக்கி இந்தியா அமைப்புக்கும், எனக்கு பிடித்தமான ஹாக்கி ஆட்டத்தை நீண்ட நாட்கள் விளையாட ஆதரவு அளித்த குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு சுனிதா லக்ரா கூறியுள்ளார்.

    ஒடிசாவை சேர்ந்த 28 வயதான சுனிதா லக்ரா இந்திய அணிக்காக 139 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். 2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த சுனிதா லக்ரா 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் வகித்து இருக்கிறார். அந்த போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

    இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அற்புதமான ஹாக்கி வாழ்க்கையை பெற்ற சுனிதாவுக்கு வாழ்த்துகள். கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் களத்திலும், ஓய்வறையிலும் பகிர்ந்து கொண்ட சிறந்த தருணங்கள் மறக்க முடியாதவை. இனி அவற்றை தவறவிடுகிறேன். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    மல்யுத்த தகுதி போட்டியில் இருந்து காயத்தால் சு‌ஷில்குமார் விலகினார். இந்த போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை சம்மேளனம் நிராகரித்து விட்டது.
    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த மூத்த வீரர் சு‌ஷில்குமார். 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் தான். 2018-ம் ஆண்டு கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டிலும் முத்திரை பதித்தார்.

    அடிக்கடி காயத்தில் சிக்கிய 36 வயதான சு‌ஷில்குமார், பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி ரோமிலும் (ஜனவரி 15-18), ஆசிய சாம்பியன்‌ஷிப் போட்டி டெல்லியிலும் (பிப்ரவரி 18-23), ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று சீனாவிலும் (மார்ச் 27-29) நடக்கிறது.

    இதில் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மல்யுத்த உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று தொடங்குகிறது.

    இதில் பிரீஸ்டைல் 74 கிலோ எடைப்பிரிவில் ஜாம்பவான் சு‌ஷில்குமாரும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சு‌ஷில்குமார், ‘‘பயிற்சியின் போது எனக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. காயம் முழுமையாக குணமடைந்த பிறகே போட்டியில் பங்கேற்க முடியும். எப்படியும் 2 வாரத்திற்குள் உடல்தகுதியை எட்டி விடுவேன். எனவே எனது பிரிவுக்குரிய தகுதி போட்டியை தள்ளிவைக்க வேண்டும்’’ என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கேட்டுக் கொண்டார். மேலும் தனது காயம் தொடர்பான மருத்துவ சான்றிதழையும் மல்யுத்த சங்கத்துக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து ஆலோசனை நடத்திய இந்திய மல்யுத்த சம்மேளனம் சு‌ஷில்குமாரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. திட்டமிட்டப்படி தகுதி போட்டிகள் இன்று நடக்க உள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூ‌‌ஷன் ‌‌ஷரன் சிங், உதவிச் செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் கூறுகையில், ‘தகுதி போட்டியை தள்ளிவைக்கும் பேச்சுக்கே இடமில்லை. சு‌ஷில்குமார் காயமடைந்தாலும் கூட 74 கிலோ பிரிவில் பங்கேற்க எங்களிடம் வீரர்கள் உள்ளனர். இந்த பிரிவில் வெற்றி பெறும் வீரர் ரேங்கிங் தொடரில் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வோம். ஒரு வேளை மார்ச் மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்றுக்கு நம்மிடம் வலுவான வீரர் இல்லை என்று உணரும் பட்சத்தில், சு‌ஷில்குமாரை தகுதி போட்டியில் பங்கேற்கும்படி அழைக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

    உலக மல்யுத்த சாம்பியன்‌ஷிப்பில் அசத்திய ரவி தாஹியா (57 கிலோ), பஜ்ரங் பூனியா (65 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), வினே‌‌ஷ் போகத் (53 கிலோ) ஆகியோர் மட்டுமே இதுவரை இந்திய மல்யுத்தத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறார்கள்.

    பெண்களுக்கான தகுதி போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது.
    ஸ்டார்க், ஹாசில்வுட், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் லயன் யுனிட்டை எந்தவொரு காலகட்ட ஆஸ்திரேலிய பந்து வீச்சு யுனிட்டுடனும் ஒப்பிடலாம் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஸ்டார்க், ஹாசில்வுட், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் லயன் கூட்டணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சீசனில் ஸ்டார்க் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார், சராசரி (16.96). நாதன் லயன் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார், சராசரி (27.94).

    பேட் கம்மின்ஸ் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார், சராசரி (25.56). ஹாசில்வுட் 11 விக்கெட், சராசரி (20.00), ஜேம்ஸ் பேட்டின்சன் 6 விக்கெட், சராசரி (11.50).

    இந்நிலையில் இந்த கூட்டணி ஆஸ்திரேலியாவின் எந்தவொரு காலக்கட்டத்தின் பந்து வீச்சு யுனிட்டுடன் ஒப்பிட முடியும் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.

    கில்லெஸ்பி, பிரெட் லீ, ஷான் வார்னே உடன் பந்து வீச்சில் அசத்திய மெக்ராத் இதுகுறித்து கூறுகையில் ‘‘அவர்கள் பந்து வீச்சில் சரியான இடத்தில் இருக்கிறார்கள். இதில் சந்தேகம் ஏதும் இல்லை. அவர்களுடைய புள்ளி விவரங்கள் அதை காட்டுகிறது. அவர்களால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் எந்தவொரு காலக்கட்ட யுனிட்டுடன் போட்டியிட முடியும்.

    மெல்போர்ன் டெஸ்டில் 3-வது நாளில் ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரின் ஒரு ஸ்பெல், உலகில் நீங்கள் பார்த்த சிறந்ததில் ஒன்றாகும்.

    மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹாசில்வுட் சிறப்பாக உள்ளனர். நான்கு பேரும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள். சுழற்பந்து வீச்சில் நாதன் லயன் உள்ளார். இது சிறந்த பந்து வீச்சு அட்டக் யுனிட்’’ என்றார்.
    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் விலாசிய சாதனையை தற்போது உள்ளவர்களில் இந்த மூன்று பேரால் முறியடிக்க வாய்புள்ளது என லாரா தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் பிரையன் லாரா. அபாரமான ஆட்டத்தால் எந்தவொரு காலக்கட்டத்திலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 375 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார். ஆனால் ஹெய்டன் சாதனையை குறுகிய காலத்திற்குள் லாரா 400 ரன்கள் அடித்து முறியடித்தார்.

    கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 400 என்பதுதான் உடைக்க முடியாத சாதனையாக இருக்கிறது. சமீபத்தில் டேவிட் வார்னர் முச்சதம் அடித்தார். ஆனால் அணியின் வெற்றியை கருதி டிம் பெய்ன் டிக்ளேர் செய்ததால் 335 நாட்அவுட் உடன் விடைபெற்றார்.

    இந்நிலையில் தற்போதுள்ள வீரர்களில் இவர்களால் என்னுடைய சாதனையை ஒருவேளை முறியடிக்க முடியும் என லாரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாரா கூறுகையில் ‘‘4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித்தால் என்னுடைய சாதனையை முறியடிக்க மிகவும் கடினமானது. அவர் சிறந்த வீரர்தான், ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த அவரால் விளையாட முடியாது. டேவிட் வார்னர் போன்ற வீரர்களால் உறுதியாக முடியும்.

    பிரையன் லாரா 400 அடித்தபோது எடுத்த ஸ்கோர் போர்டு

    விராட் கோலி முன்னதாகவே களம் இறங்கினால் அவர் எட்டிவிடுவார். அவர் மிகவும் அட்டக்கிங் வீரர். ரோகித் சர்மாவுக்கு அவருடைய நாளாக அமைந்தால் உடைத்துவிடுவார். இவர்களால் என்னுடைய சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
    2008-ம் ஆண்டு நடைபெற்ற U-19 உலக கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் தற்போது நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கின்றனர்.
    சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது நட்சத்திர வீரர்களாக திகழும் பெரும்பாலான வீரர்கள் (விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜடேஜா, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், கோரி ஆண்டர்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் பேட்டின்சன், ஹசில்வுட்) 2008-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற U-19 உலக கோப்பையில் விளையாடியவர்கள்.

    அதேபோல் 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பயைில் (ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர்) இடம் பிடித்தவர்களும் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

    2008-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியிருந்தது. அரையிறுதியில் நியூசிலாந்து இந்தியா வீழ்த்தியிருந்தது. அப்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தார்.

    விராட் கோலி 235 ரன்கள் அடித்து முக்கியத்துவம் பெற்றாலும், கேன் வில்லியம்சன்தான் தனித்துவமா வீரர் என்று விராட் கோலி 2008 உலக கோப்பையை நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார்.

    ஜடேஜாவுடன் விராட் கோலி

    மேலும் U-19 உலக கோப்பை குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கேன் வில்லியம்சனுக்கு எதிராக விளையாடியதை நான் நினைத்து பார்க்கிறேன். அவர் அந்த அணியில் தனித்துவமான வீரராக திகழ்ந்தார். மேலும் அவரது பேட்டிங் திறமை அந்த தொடரில் மற்ற வீரர்களை விட மிகவும் வித்தியாசமாக இருந்தது.

    இந்தத் தொடரில் விளையாடிய கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஏராளமான வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களாக மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    டிரென்ட் போல்ட், கேன் வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், டிம் சவுத்தி

    எனது கிரிக்கெட்டில் அந்த உலக கோப்பை மிகப்பெரிய  மைல்கல். எங்களுக்கு சிறப்பான கிரிக்கெட் கேரியரை கட்டமைக்க மிகச் சிறந்த அடித்தளமாக அமைந்தது. ஆகவே, எனது மனது மற்றும் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டது’’ என்றார்.
    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரே ஆடுகளமான சிட்னியில், ஆஸ்திரேலியா லெவன் அணியில் மாற்றம் இருக்காது என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த், மேல்போர்ன் மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபாரமான வெற்றியை பெற்றது.

    இரண்டு ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. ஆஸ்திரேலியா 6 பேட்ஸ்மேன்கள், மூன்று வேகப்பந்து, ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது.

    3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களில் சிட்னி மட்டுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதனால் ஆஸ்திரேலியா தனது அணியில் மிட்செல் ஸ்வெப்சன் என்ற சுழற்பந்து வீச்சாளரை சேர்த்துள்ளது.

    மூன்று வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியா களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெல்போர்னில் விளையாடிய அதே லெவன் அணிதான் களம் இறங்கும் என அந்த அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘நாங்கள் ஆடுகளத்தை காலையில் பார்வையிட்ட பின்னர்தான் முடிவு எடுக்கப்படும். பெரும்பாலும் ஆடும் லெவன் அணியில் மாற்றம் இருக்காது. ஆனால், ஒருவேளை நாளை காலை ஆடுகளத்தை பார்வையிட்ட பின்னர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்வோம்.

    நாங்கள் ஒரு ஸ்பின்னருடன் விளையாட முடிவு செய்தால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தால் லாபஸ்சாக்னேவை பகுதி நேர பந்து வீச்சாளராக பயன்படுத்துவோம்’’ என்றார்.
    இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான திசாரா பெரேரா அந்நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளார்.
    இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் திசாரா பெரேரா. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், பேட்டிங்கில் கவனம் செலுத்தி ஆல்-ரவுண்டராக முன்னேறினார்.

    தற்போது அவர் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுவது புதிது அல்ல. ஏற்கனவே ஹெட்லெ வெரிட்டி, சர் டான் பிராட்மேன், கபில்தேவ், எம்எஸ் டோனி அகியோர் ராணுவத்தில் பணியாற்றிருக்கிறார்கள்.

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வெரிட்டி இரண்டாம் உலகப்போரின் போது தனது உயிரை தியாகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திசாரா பெரேரா இலங்கை அணிக்காக  6 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 79 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ஜேம்ஸ் ஆண்டர்சன் அல்லது ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரில் ஒருவரை நீக்கி, கூடுதலாக பேட்ஸ்மேன் ஒருவரை சேர்க்க வேண்டும் என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாஃப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் (ஆல்-ரவுண்டர்), பென் ஸ்டோக்ஸ் (ஆல்-ரவுண்டர்) ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

    அனுபவ வீரர்களான ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரால் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் பேட்டிங்கை சீர்குலைத்தனர்.

    இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தாததாலும், கேப் டவுன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருப்பதாக கருதுவதாலும் ஸ்டூவர்ட் பிராட் அல்லது ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரில் ஒருவர்தான் 2-வது டெஸ்டில் இடம் பெற வாய்ப்பு என இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ‘‘இங்கிலாந்து வெற்றி பெற வேண்டுமென்றால்  2-வது டெஸ்டில் பிராட் அல்லது ஜேம்ஸ் ஆண்டர்சனில் ஒருவரை நீக்கிவிட்டு, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும்’’ என ஆலோசனை வழங்கியுள்ளார்.
    கேப் டவுன் டெஸ்டுக்கு ஜாஃப்ரா ஆர்ச்சர் தகுதி பெறாவிட்டாலும், பெரிய வித்தியாசம் ஏதும் இருக்காது என்று டி காக் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. ஏற்கனவே, தென்ஆப்பிரிக்கா சென்றதில் இருந்து பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பயிற்சியின்போது வலது கை முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஜாஃப்ரா ஆர்ச்சர் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    போட்டி தொடங்குவதற்கு முன்புதான் ஆர்ச்சர் குறித்து முடிவு எடுப்போம் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜாஃப்ரா ஆர்ச்சர் பவுன்சர் பந்தால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வந்தார். முதல் இன்னிங்சில் 95 ரன்கள் விளாசிய டி காக்கையும் பவுன்சரால் அச்சுறுத்த நினைத்தார்.

    ஆனால் டி காக் ஷாட் பிட்ச் பவுன்சர்களை துணிச்சலாக எதிர்கொண்டு அடுத்தடுத்து சிக்சர்கள் அடித்தார். இதனால் டி காக்  VS ஜாஃப்ரா ஆர்ச்சர் என தொடர் மாறியுள்ளது.

    2-வது டெஸ்டிலும் இது தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆர்ச்சர் காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து டி காக் கூறுகையில் ‘‘ஜாஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக 2-வது போட்டியில் இடம்பெறாவிட்டாலும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இருக்காது’’ எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னணி பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 103 ரன்கள் முன்னிலை பெற முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிக்ஸ் அடிப்பதில் வல்வரான இடது கை பேட்ஸ்மேன் ஆல்-ரவுண்டரான ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி என நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ள அவர், கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறார்.

    நியூசிலாந்துக்கு செல்லும் இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஷிவம் துபே இந்திய அணியில் இடம் பிடித்தார். இடது கை பேட்ஸ்மேனான இவர் சிக்ஸ் அடிப்பதில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இணையாக உள்ளார். மேலும் மிதமான வேகத்தில் பந்து வீசுகிறார்.

    இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் இல்லாததை இந்திய அணி நிர்வாகம் பெரிதாக கருதவில்லை. இதற்கிடையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சரியான போட்டியாளர் ஷிவம் துபேதான் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

    இந்நிலையில் ‘‘நான் இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே இங்கே வந்துள்ளேன். ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டியாளர் என்று நான் நினைக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

    ஐந்தாம் தேதி தொடங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×