search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nathan Lyon"

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நாதன் லயன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 10 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 196 ரன்களில் ஆல் அவுட் ஆகி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் கைப்பற்றி ஆக மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    நியூசிலாந்தில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயன் ஆவார். இதை தவிர நியூசிலாந்து மண்ணில் 2006-க்கு பிறகு 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் இவர் ஆவார்.

    மேலும் ஒருசாதனையாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரரை பின்னுக்கு தள்ளி 7-வது இடத்தை நாதன் லயன் பிடித்துள்ளார். லயன் 521 விக்கெட்டுகளுடன் கர்ட்னி வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்த பட்டியலில் இந்திய அணி வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் யாரும் தொட முடியாத இடத்தில் இருக்கிறார்.

    • ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.

    வெலிங்டன்:

    ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் (174 ரன்) சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா 383 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி 179 ரன்னில் அடங்கி 'பாலோ-ஆன்' ஆனது.

    நியூசிலாந்து அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்காமல் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதுடன், அதிகமாக பவுன்சும் ஆனது. இதனை பயன்படுத்தி நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். தொடர்ந்து ஆடிய நாதன் லயன் 41 ரன்னில் (46 பந்து, 6 பவுண்டரி) மேட் ஹென்றி பந்து வீச்சில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிய உஸ்மான் கவாஜா 28 ரன்னில் (69 பந்து, ஒரு பவுண்டரி) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல்லால் 'ஸ்டம்பிங்' செய்யப்பட்டார்.

    இதனையடுத்து டிராவிஸ் ஹெட் (29 ரன்), மிட்செல் மார்ஷ் (0) ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்தில் கிளென் பிலிப்ஸ் கபளீகரம் செய்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி (3 ரன்) மற்றும் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய கேமரூன் கிரீன் (34 ரன், 80 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரது விக்கெட்டையும் பிலிப்ஸ் கைப்பற்றி கலக்கினார். கேப்டன் கம்மின்ஸ் (8 ரன்), மிட்செல் ஸ்டார்க் (12 ரன்) நிலைக்கவில்லை.

    51.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 6 விக்கெட்டுகளை 37 ரன்களுக்குள் பறிகொடுத்தது. எனவே நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஹேசில்வுட் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸ் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட டாம் லாதம் 8 ரன்னில் நாதன் லயன் சுழலில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 9 ரன்னில் நாதன் லயன் பந்து வீச்சில் ஸ்டீவன் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 15 ரன்னில் டிராவிஸ் ஹெட் சுழற்பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித்திடம் பிடிபட்டார்.

    நியூசிலாந்து 59 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலையில் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.

    டிராவிஸ் ஹெட் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய ரச்சின் ரவீந்திரா அடுத்த ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி 77 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக டெஸ்டில் ஆடும் ரச்சின் ரவீந்திரா அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

    நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரச்சின் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய மிட்செல் 38 ரன்னில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

    இதனால் நியூசிலாந்து அணி 196 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேமரூன் க்ரின் தேர்வு செய்யப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.

    • 2-வது இன்னிங்சில் நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 41 ரன்கள் சேர்த்தார்.
    • இதுவரை 1500 ரன்களுக்கு மேல் அடித்தும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்கடனில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 6 பவுண்டரியுடன் 46 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்.

    நாதன் லயன் இதுவரை 128 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 162 இன்னிங்சில் 1501 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 12.72 ஆகும். ஆனால் ஒரு அரைசதம் கூட இதுவரை அடித்ததில்லை.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனை படைத்துள்ளார். அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1174 ரன்கள் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளார். இவரும் அரைசதம் அடித்தது கிடையாது. 41 அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 87 டெஸ்ட் போட்டிகளில் 1010 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்துள்ளார்.

    வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நாதன் லயன் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனது பயிற்சியாளர்களில் அஸ்வினும் ஒருவர் என ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் கூறினார்.
    • அஸ்வினிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.

    சிட்னி:

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தனியார் நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அஸ்வின் உலகத்தரம் வாய்ந்தவர். நிச்சயமாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் அவர் எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

    நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் அந்த 500 விக்கெட்களை எட்டுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என புகழாரம் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 489 விக்கெட்களும், நாதன் லயன் 496 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி நாதன் லயன் சாதனை படைத்திருந்தார்.
    • அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரரை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து விளையாடிய 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சாதனை படைத்த நாதன் லயன் ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காலில் அடிப்பட்டது. இதனையடுத்து அவர் ஓவர் வீசவில்லை.

    2-வது இன்னிங்சின் போது மட்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அதுவும் நொண்டி நொண்டியே ரன்களை சேர்த்தார். அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக மர்ஃபி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • நேற்றைய ஆட்டத்தின் போது நாதன் லயனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
    • உண்மையில் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இல்லை என்றால், அது எங்களுக்கு பெரிய இழப்பு என ஸ்மித் கூறினார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவர் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார். லயனின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.

    அவர் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகள் என 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவர் ஜொலித்தார். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கம்மின்சுடன் ஜோடி சேர்ந்து நாதன் லயன் சிறப்பான பார்னர்ஷிப்பை அமைத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

    இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் அவர் மீண்டும் அணியின் இணைவாரா என்பது சந்தேகம்தான்.

    இது குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இல்லை என்றால், அது எங்களுக்கு பெரிய இழப்பு. அவரது கை விரலில் ஏதும் பிரச்சினை இல்லை. அவர் வருகிற டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக டோட் மர்பி இடம் பெறுவார் என ஸ்மித் கூறினார். 

    • தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 பேட்ஸ்மேன்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் படைத்துள்ளார்.

    தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தவர்கள் பட்டியலில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம் பிடித்த நிலையில் 6-வது வீரராக லாதன் லயன் பந்து வீச்சாளராக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:-

    159 - அலஸ்டர் குக்

    153 - ஆலன் பார்டர்

    107 - மார்க் வாக்

    106 - சுனில் கவாஸ்கர்

    101 - பிரண்டன் மெக்கல்லம்

    100* - நாதன் லயன்

    • ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசினேன்.
    • புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் சுமித் பிடித்தது மிகவும் சிறப்பானது.

    இந்தூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

    2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய பேட்ஸ்மேன்களில் புஜாரா ஒருவர் மட்டுமே லயன் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடினார். அவர் 142 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன் எடுத்தார்.

    இந்த நிலையில் இளம் வீரர்கள் புஜராவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று லயன் கூறியுள்ளார். போட்டிமுடிந்த பிறகு இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

    டெல்லி டெஸ்ட் தோல்விக்கு பிறகு அணியை கட்டமைக்க நீண்ட ஓய்வு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணி திறமையானது. அவர்களுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆடுவது சவாலானது. நான் நம்பிக்கையுடன் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தேன். ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக வீசினேன். புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் சுமித் பிடித்தது மிகவும் சிறப்பானது.

    இக்கட்டான நேரத்திலும் எப்படி விளையாடுவது என்பதை இளம் வீரர்கள் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு லயன் கூறி உள்ளார்.

    • இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் கும்ப்ளே 111 விக்கெட் எடுத்து (20 போட்டி) முதல் இடத்தில் இருந்தார்.
    • இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரரான முரளீதரனையும் லயன் முந்தினார்.

    இந்தூர் டெஸ்டில் இந்தியாவின் சரிவுக்கு நாதன் லயன் காரணமாக இருந்தார்.

    35 வயது சுழற்பந்து வீரரான அவர் 23.3 ஓவர்கள் வீசி 64 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் லயன் புதிய வரலாறு படைத்தார். உமேஷ் யாதவ் விக்கெட்டை கைப்பற்றியபோது அவர் கும்ப்ளேயை முந்தினார்.

    இருநாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் கும்ப்ளே 111 விக்கெட் எடுத்து (20 போட்டி) முதல் இடத்தில் இருந்தார். அவரை முந்தி புதிய சாதனை புரிந்தார். லயன் 25 டெஸ்டில் 113 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். கும்ப்ளே 111 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் அஸ்வின் 106 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

    மேலும் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரரான முரளீதரனையும் லயன் முந்தினார்.

    • அஸ்வின் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார்.
    • அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.

    சிட்னி:

    பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். இருவரும் இதுவரையில் 31 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளனர். ஜடேஜா 17 விக்கெட்டுகளும், அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

    அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். 'நீங்கள் நீங்களாகவே இருங்கள்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    இந்தியாவில் விளையாடும்போது எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது நன்கு தெரியும். அஸ்வின் ஒரு ஸ்மார்ட்டான பவுலர். அவர் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஜடேஜா தனது பவுலிங் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

    டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஆனாலும், ஜடேஜா அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சில நேரங்களில் அப்படி நடக்கும். களத்தில் அவர்கள் செய்வதை உங்களால் (ஆஸி. வீரர்கள்) செய்ய முடியாது. அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.

    என சேப்பல் தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
    • இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என் நண்பரை 24 மணிநேரமும் பின்தொடர்கிறேன் என்று கூறினார்.

    இந்திய ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.


    இன்ஸ்டாகிராமில் ஜடேஜாவால் பின்தொடரும் ஒரே ஒரு நபர் நாதன் லயன் மட்டுமே.

    ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் "என் நண்பர் நாதன் லயனை 24 மணிநேரம் பின்தொடர்கிறேன்" என்று கூறினார்.

    • நாதன் லயன் 108 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • அஸ்வின் 442 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நடந்தது.

    இதில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் கைப்பற்றினார். 9 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் 10-வது இடத்தை பிடித்தார்.

    நாதன் லயன் 108 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 20 முறை 5 விக்கெட்டுகளையும் 3 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளுவார். அஸ்வின் 442 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×