search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நாதன் லயன் சுழலில் சரணடைந்த நியூசிலாந்து- முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
    X

    நாதன் லயன் சுழலில் சரணடைந்த நியூசிலாந்து- முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

    • ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.

    வெலிங்டன்:

    ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் (174 ரன்) சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா 383 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி 179 ரன்னில் அடங்கி 'பாலோ-ஆன்' ஆனது.

    நியூசிலாந்து அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்காமல் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதுடன், அதிகமாக பவுன்சும் ஆனது. இதனை பயன்படுத்தி நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். தொடர்ந்து ஆடிய நாதன் லயன் 41 ரன்னில் (46 பந்து, 6 பவுண்டரி) மேட் ஹென்றி பந்து வீச்சில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிய உஸ்மான் கவாஜா 28 ரன்னில் (69 பந்து, ஒரு பவுண்டரி) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல்லால் 'ஸ்டம்பிங்' செய்யப்பட்டார்.

    இதனையடுத்து டிராவிஸ் ஹெட் (29 ரன்), மிட்செல் மார்ஷ் (0) ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்தில் கிளென் பிலிப்ஸ் கபளீகரம் செய்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி (3 ரன்) மற்றும் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய கேமரூன் கிரீன் (34 ரன், 80 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரது விக்கெட்டையும் பிலிப்ஸ் கைப்பற்றி கலக்கினார். கேப்டன் கம்மின்ஸ் (8 ரன்), மிட்செல் ஸ்டார்க் (12 ரன்) நிலைக்கவில்லை.

    51.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 6 விக்கெட்டுகளை 37 ரன்களுக்குள் பறிகொடுத்தது. எனவே நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஹேசில்வுட் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸ் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட டாம் லாதம் 8 ரன்னில் நாதன் லயன் சுழலில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 9 ரன்னில் நாதன் லயன் பந்து வீச்சில் ஸ்டீவன் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 15 ரன்னில் டிராவிஸ் ஹெட் சுழற்பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித்திடம் பிடிபட்டார்.

    நியூசிலாந்து 59 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலையில் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.

    டிராவிஸ் ஹெட் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய ரச்சின் ரவீந்திரா அடுத்த ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி 77 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக டெஸ்டில் ஆடும் ரச்சின் ரவீந்திரா அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

    நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரச்சின் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய மிட்செல் 38 ரன்னில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

    இதனால் நியூசிலாந்து அணி 196 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேமரூன் க்ரின் தேர்வு செய்யப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×