என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் ஷிவம் டுபே.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்கள் அடித்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. அந்த அணி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

    நியூசிலாந்து வெற்றிக்கு 11 ஓவரில் 100 ரன்கள் தேவைப்பட்டது. 10-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை செய்பெர்ட் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். 4-வது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார்.

    முதல் நான்கு பந்தில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 5-வது பந்தை ராஸ் டெய்லர் பவுண்டரிக்கு துரத்தினார். அந்த பந்து நோ-பால் ஆக வீசினார் டுபே. இதனால் ஐந்து ரன்களுடன் ஒரு பந்தும் வீச வேண்டியிருந்தது. அந்த பந்தை டெய்லர் சிக்சருக்கு தூக்கினார். அதற்கு அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார்.

    ஆக மொத்தம் 6, 6, 4, 1, 4+1, 6, 6 என 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாவுக்கு எதிராக ஆறு பந்திலும் ஆறு சிக்சர்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக பர்னெல் 2012-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
    பிக் பாஷ் டி20 லீக்கில் அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடி, டேனியல் சாம்சின் சிறப்பான பந்து வீச்சால் சிட்னி தண்டர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
    பிக் பாஷ் டி20 லீக்கின் பிளே-ஆப்ஸ் சுற்றில் இன்று நாக்அவுட் போட்டி நடைபெற்றது. இதில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற சிட்னி தண்டரும், லீக் ஆட்டம் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்த அடிலெய்டு ஸ்டிரைக்கரும் மோதின.

    டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் முதலில் பேட்டிங் செய்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் 35 பந்தில் 59 ரன்கள் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிறிஸ் மோரிஸ் 14 பந்தில் 21 ரன்கள் அடிக்க சிட்னி தண்டர் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் களம் இறங்கியது. டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டும் குக் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் சிட்னி தண்டர் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேலங்சர் சுற்றுக்கு முன்னேறியது.

    டிராவிஸ் ஹெட் (32), அலெக்ஸ் ஹேரி (28), வெல்ஸ் (34) ஆகியோரின் ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர் 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட், 30 பந்துகள் உள்ள நிலையில் 47 ரன்கள்தான் தேவைப்பட்டது. அதன்பின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
    மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்- 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடிய டொமினிக் தீம் அதை 6-4 எனக் கைப்பற்றினார். அதோடு 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.

    4-வது செட்டை கைப்பற்றினால் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற நோக்கத்தில் டொமினிக் தீம் களம் இறங்கினார். ஆனால் ஜோகோவிச் அபாரமாக விளையாடி 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் ஐந்தாவது செட்டையும் 6-4 எனக்கைப்பற்றி ஜோகோவிச் 6-4, 6-4, 2-6, 6-3, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
    வெற்றிப் பழக்கத்தை இந்தியா வளர்த்துள்ளது என்று ஐந்தாவது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்று தொடரை 5-0 எனக் கைப்பற்றியது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

    பேட்டிங் செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியா பீல்டிங் செய்யும்போது கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 224 ரன்கள் விளாசினார்.

    வெற்றிக்குப்பின் அவர் கூறுகையில் ‘‘இந்தியா 5-0  என வெற்றி பெற்ற பின் நான் இங்கு நிற்பது சந்தோசம் அளிக்கிறது. நாங்கள் மிகவும் அற்புதமான வகையில் டி20 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்து எங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினோம். வெற்றியை நழுவ விடாமல் கைப்பற்றியது நம்பிக்கையை வளர்த்துள்ளது.

    வெற்றிப் பழக்கத்தை நாங்கள் வளர்த்துள்ளோம் என்று நினைக்கிறேன். வெற்றிக்கான வித்தியாசமான வழிகளை கண்டுபிடிப்பது எங்களுடைய பொறுப்பாகும். டி20 உலக கோப்பை பற்றி நான் சிந்திக்கவில்லை. இதுபோன்ற சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    த்ரில்லாக சென்ற ஐந்தாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து சாதனைப் படைத்துள்ளது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (60), கேஎல் ராகுல் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுல் கேப்டனாக பணியாற்றினார். கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடி கொலின் முன்றோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ப்ரூஸ் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.

    இதனால் 17 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு செய்பெர்ட் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றது.

    நியூசிலாந்து 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. 11 ஓவரில் 100 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 10-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் நான்கு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அப்போது போட்டி இந்தியாவின் கையில் இருந்து முழுவதுமாக விலகிச் சென்றது போல் இருந்தது. நியூசிலாந்து அணிக்கு 60 பந்தில் 60 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது.

    அந்த நிலையில் 11-வது ஓவரில் சாஹல் 9 ரன்களும், 12-வது ஓவரில் பும்ரா 6 ரன்களும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினர்.

    13-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் அடித்து அரைசதம் அடித்த சைபெர்ட் 4-வது பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சைனி அதிரடியாக விளையாடிய சைபெர்ட்-ஐ வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார். சைபெர்ட் 30 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்த ஓவரில் 3 ரன்கள் விட்டுக்கொடுத்த பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதனால் கடைசி ஆறு ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு ஓவர்களில் நியூசிலாந்து அணியால் 10 ரன்களே அடிக்க முடிந்தது.

    17-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் சான்ட்னெர், குகலின் ஆகியோரை வெளியேற்றி 4 ரன்களே கொடுத்தார் ஷர்துல் தாகூர். 18-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லரை ஆட்டமிழக்கச் செய்தார். அத்துடன் போட்டி இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி 12 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்டது 19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிம் சவுத்தியை வீழ்த்திய பும்ரா 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாகூர்

    கடைசி ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் அந்த ஓவரை வீசினார். 2-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் இஷ் சோதி. ஆனால் ஷர்துல் தாகூர் கடைசி இரண்டு பந்தையும் சிறப்பாக வீச நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து சாதனைப் படைத்தது. 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். லோகேஷ் ராகுல் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
    இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் மூலம் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி ராஸ் டெய்லர் சாதனைப் படைத்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. நியூசிலாந்து அணியில் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இடம் பிடித்திருந்தார். இது அவருக்கு 100-வது சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.

    இதன்மூலம் 100 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், 100 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 100-வது போட்டியில் களம் இறங்கிய ராஸ் டெய்லர் 47 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்கள் விளாசினார்.

    இதற்கு முன் பாகிஸ்தானின் சோயிப் மாலிக், இந்தியாவின் ரோகித் சர்மா ஆகியோர் 100 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
    ஷுப்மான் கில் இரட்டை சதமும் பன்சால், ஹனுமா விஹாரி சதமும் அடிக்க நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் நியூசிலாந்து ஏ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ஏ அணி 216 ரன்னில் சுருண்டது. ஷுப்மான் கில் 83 ரன்களும், ஹனுமா விஹாரி 51 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த சாப்மேன் 114 ரன்களும், விக்கெட் கீப்பர் க்ளீவர் 196 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 7 விக்கெட் இழப்பிற்கு 562 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    346 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் டக்அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஈஸ்வரன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு பிரியங் பன்சால் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. பன்சால் 67 ரன்களுடனும், ஷுப்மான் கில் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பன்சால் அதிரடியாக விளையாடி 164 பந்தில் 115 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்து இரட்டை சதம் நோக்கி சென்றார்.

    அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் சதம் அடிக்க, ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்தார். இந்தியா ஏ 3 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஹனுமா விஹாரி 113 பந்தில் 100 ரன்களுடனும், ஷுப்மான் ஹில் 279 பந்தில் 204 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு மனீந்தர், சஞ்சீவ் சர்மா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதேபோல தேர்வுக்குழு உறுப்பினரான ககன் கோடாவின் பதவியும் முடிந்தது.

    புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினரை தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை வரவேற்று இருந்தது.

    முன்னாள் வீரர்கள் எல். சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், அஜித் அகர்கர், நயன் மோங்கியா, ராஜேஷ் சவுகான், அமய் குருசியா, பிரிதம் காண்டே உள்ளிட்டோர் தேர்வுக்குழு பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

    இந்தநிலையில் முன்னாள் சுழற்பந்து வீரர் மனீந்தர் சிங், மிதவேக பந்து வீச்சாளர் சஞ்சீவ் சர்மா ஆகியோரும் தேர்வுக்குழு பதவிக்கு விண்ணப்பித்து இருப்பது தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    54 வயதான மனீந்தர் சிங் 35 டெஸ்ட் உள்பட 145 முதல்தர போட்டியில் விளையாடி உள்ளார். சஞ்சீவ் சர்மா 1990-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது 2 டெஸ்டில் விளையாடினார். அவர் ஜூனியர் அணி தேர்வாளராகவும் இருக்கிறார்.

    புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் ஒரு தேர்வாளரை 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோ சனை குழு தேர்வு செய்கிறது. இந்த குழுவில் மதன்லால், ஆர்.பி.சிங், சுலச்சனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
    ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப நியூசிலாந்துக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை. ஆகவே ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது. கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 35 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். கேஎல் ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.3 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தது.

    ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருக்கும்போது காயம் காரணமாக வெளியேறினார். அப்போது இந்தியா 138 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் நியூசிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சாளர் இந்தியாவால் ரன்கள் குவிக்க இயலவில்லை. ஷிவம் டுபே 6 பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    கேஎல் ராகுல்

    19 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் மணிஷ் பாண்டே. அதன்பின் நான்கு பந்தில் ஐந்து ரன்களே அடித்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 33 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 4 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
    நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி 20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    மவுன்ட் மாங்கானு:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இதில் 4-0 என்ற கணக்கில் டி 20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவ்ருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக பதவி வகிக்கிறார்.

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணி: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ரோகித் சர்மா, (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல், ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), டாம் புருஸ், டேரி மிட்செல், மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குக்ளே, டிம் சவுத்தி (கேப்டன்), ஐஷ் சோதி, ஹமிஷ் பென்னட்.
    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
    மவுன்ட் மாங்கானு:

    நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது. இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது.

    இந்த தொடரில் 3, 4-வது ஆட்டங்கள் சமனில் முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது வியப்புக்குரிய ஒன்றாகும். 20 ஓவர் தொடர் ஒன்றில் அடுத்தடுத்து இரு ஆட்டங்கள் சமன் ஆனது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். சூப்பர் ஓவரில் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய வீரர்கள் பிரமாதப்படுத்தினர்.

    நியூசிலாந்து மண்ணில் எந்த ஒரு அணியும் 5-0 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை வென்றதில்லை. புதிய வரலாறு படைக்கும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். அதே சமயம் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால் பரிசோதனை முயற்சிகள் தொடரும் என்று தெரிகிறது.

    லோகேஷ் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் சேர்க்கப்படலாம். இதே போல் பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்படலாம். விராட் கோலி இல்லை என்றால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார்.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்லவேண்டும். சொந்த ஊரில் அதுவும் 4 முறை டாஸ் ஜெயித்தும் ஒன்றில் கூட வெற்றிக்கனி பறிக்க முடியாததால் நொந்துபோய் உள்ளனர்.

    3-வது ஆட்டத்தில் 5 பந்தில் 3 ரன் தான் தேவைப்பட்டது. 4-வது ஆட்டத்தில் கடைசி 4 பந்தில் 3 ரன் தான் தேவையாக இருந்தது. கைவசம் விக்கெட் இருந்தும் நியூசிலாந்து வீரர்கள் சொதப்பினர். கடைசி ஓவர்களில் அவர்கள் ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதற்கு பதிலாக அதிரடியாக விளாச முயற்சித்ததாலேயே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இது போன்ற தவறுகளுக்கு இன்றைய ஆட்டத்தில் பரிகாரம் தேடும் முனைப்புடன் ஆடுவார்கள். இடது தோள்பட்டை வலியால் கடந்த ஆட்டத்தில் ஆடாத நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மவுன்ட் மாங்கானு நகரை சுற்றி மலைகள் அமைந்துள்ளன. காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் பந்து ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் கணித்து ஆடினால் ரன்வேட்டை நடத்தலாம். இங்கு இதுவரை நடந்துள்ள 6 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. முடிவு கிடைத்த 5 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது விராட் கோலி, மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது ஷமி.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், கேன் வில்லியம்சன் அல்லது டாம் புருஸ், ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ஹாமிஷ் பென்னட், ஸ்காட் குஜ்ஜெலின்.

    இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    கொச்சியில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
    கொச்சி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கொச்சியில் நேற்று நடந்த 72-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களின் ஆட்டத்துக்கு கேரளா அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் சென்னை அணி 3-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் கேரளா அணியின் வீரர் ஒக்பீச் ‘ஹாட்ரிக்’ கோல் (48, 65, 76-வது நிமிடம்) அடித்தார். ஆனாலும், சென்னை அணியினர் பதிலுக்கு கோல் மழை பொழிந்தனர்.

    நடப்பு தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் சென்னையின் வல்ஸ்கிஸ் (12 கோல்) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதியில், சென்னை அணி 6-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தான் ஆடிய 14  ஆட்டங்களில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என 21 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
    ×