என் மலர்tooltip icon

    விளையாட்டு

    எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவருக்கும் செர்பியாவில் பிறந்த மாடல் அழகி நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு நிச்சய தார்த்தம் நடந்தது.

    கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தபோது, ஹர்திங் பாண்ட்யா- நடாஷா ஜோடி மும்பையில் உள்ள வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நடாஷா கர்ப்பமாக இருப்பதால், ஹர்திக் பாண்ட்யா விரைவில் தந்தையாகிறார். இதை அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நானும், நடா‌ஷவும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது இன்னும் சிறப்பாக அமையவுள்ளது. எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம். உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் புதிய பரிணாமத்திற்கு செல்ல காத்திருக்கிறோம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    விரைவில் தந்தையாக இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முகமது ‌ஷமி, சாஹல், மயங்க் அகர்வால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    மல்யுத்த மங்கை வினேஷ் போகத், தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு கேல்ரத்னா விருது வழங்கக்கோரி விளையாட்டு சம்மேளனங்கள் பரிந்துரை செய்துள்ளன.
    புதுடெல்லி:

    விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான ராஜீவ்காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கின்றன. இதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும்.இந்த நிலையில் இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைப்பது என்று தேசிய மல்யுத்த சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ‘மல்யுத்தத்தில் கேல் ரத்னா விருது பரிந்துரைக்கு எங்களது ஒருமித்த தேர்வு வினேஷ் போகத் தான். அவரது பெயரை விளையாட்டு அமைச்சத்துக்கு இன்று அனுப்பி வைப்போம். அர்ஜூனா விருதுக்குரியவர்களின் பெயரை இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு நிறைய விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் தகுதியான விண்ணப்பத்தை சம்மேளன தலைவர் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புவார்’ என்று தேசிய மல்யுத்த சம்மேளன செயலாளர் வினோத் தோமர் தெரிவித்தார்.

    வினேஷ் போகத் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறார். அரியானாவைச் சேர்ந்த 25 வயதான வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவுக்கான தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆண்டின் தொடக்கத்தில் ரோம் ரேங்கிங் சீரிஸ் தொடரில் தங்க மகுடம் சூடினார். அதன் பிறகு டெல்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். மல்யுத்தத்தில் தொடர்ந்து அசத்தி வரும் அவருக்கு இந்த தடவை கேல்ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் ருசித்தவரான மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஏற்கனவே 2016-ம் ஆண்டு கேல்ரத்னா விருதை பெற்றிருக்கிறார். சமீப காலமாக அவர் வெகுவாக தடுமாறி வரும் நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கும்படி விண்ணப்பம் அனுப்பி உள்ளார். ஆனால் அவரது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது சந்தேகம் தான்.

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயரை தொடர்ந்து 3-வது ஆண்டாக கேல்ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனான 22 வயதான நீரஜ் சோப்ரா முழங்கை காயம் காரணமாக 2019-ம் ஆண்டு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் ஆகியோரது பெயரும் கேல்ரத்னா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7½ லட்சம் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    எனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைத்ததில் டோனியின் பங்களிப்பு முக்கியமானது என்று விராட் கோலி கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு கோலி பதில் அளித்து கூறியதாவது:-

    இந்திய அணிக்குள் நுழைந்ததில் இருந்தே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். எல்லா போட்டிகளிலும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன்.

    டோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாடிய போது அவருடன் நெருக்கமாக செயல்பட்டேன். அதாவது அவர் விக்கெட் கீப்பர், முதலாவது ஸ்லிப்பில் நான் நிற்பேன். அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு யோசனையை சொல்லிக் கொண்டே இருப்பேன். ‘இதை அப்படி செய்யலாம், இந்த மாதிரி முயற்சித்து பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்றெல்லாம் ஆட்டம் தொடர்பாக நிறைய யோசனைகளை தெரிவிப்பேன். சிலவற்றை நிராகரித்து விடுவார். சில யுக்திகளை ஏற்றுக்கொண்டு அது பற்றி விவாதிப்பார்.

    இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து எனது செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து கொண்டே இருப்பார். இதன் மூலம் தனக்கு பிறகு கோலியால் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டது. நானும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ‘டோனி விலகி விட்டார், அடுத்து அணியின் கேப்டன் நீங்கள் தான்’ என்று தேர்வாளர்கள் திடீரென சொல்வது போன்ற சம்பவம் எனக்கு நடந்து விடவில்லை. 6-7 ஆண்டுகள் எனது நடவடிக்கைகள், வளர்ச்சியை கவனித்து தான் கேப்டன் பொறுப்புக்கு என்னை டோனி பரிந்துரைத்திருக்கிறார். எனவே இந்திய அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டதில் டோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

    இவ்வாறு கோலி கூறினார்.

    டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு குறுகிய வடிவிலான போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் டோனி ஒதுங்கினார். இதனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் கோலி முழு நேர கேப்டனாகி விட்டார்.
    ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதத்தில் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த போட்டித் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

    தள்ளிபோடப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி தொடரை ஜூலை மாதத்தில் நடத்துவது குறித்து இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்புக்கான உரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி தொடரை நடத்தலாம் என்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவுக்கு வந்துள்ளன.

    இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் சவுதம்டன் மற்றும் மான்செஸ்டரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது டெஸ்ட் ஜூலை 8-ந்தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 24-ந்தேதியும் தொடங்குகிறது. போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த போட்டிக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி வருகிற 8-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் குறித்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கொள்கை ரீதியாக அனுமதி அளித்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய மருத்துவம் மற்றும் கிரிக்கெட் தொடர்பான பிரதிநிதிகள், ஆலோசகர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவம் மற்றும் பொது சுகாதார ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகம், எங்கள் நாட்டில் உள்ள பல்வேறு அரசுகளிடம் இருந்து வீரர்கள், அணியின் உதவியாளர்கள் இடம் பெயர்தல் மற்றும் அவர்களுக்கான தனி விமான பயணம், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்கான அனுமதிகளை பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின்போது வீரர்கள் மற்றும் அணியினருக்கு அளிக்கப்படும் மருத்துவ பாதுகாப்பு அம்சங்கள் குறித்த திட்டங்கள் எங்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது. அது குறித்து நாங்கள் முழுமையாக ஆய்வு செய்து விட்டோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜெர்மனியில் 3 மாதங்களாக தவித்த உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தாயகம் திரும்பினார்.
    பெங்களூரு:

    செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவரும், சென்னையைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், பன்டெஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றார். போட்டியை முடித்துக் கொண்டு மார்ச்சில் அவர் தாயகம் திரும்ப வேண்டியது. அதற்குள் கொரோனா வைரசின் ருத்ரதாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால் 3 மாதங்கள் அங்கு தவித்தார். ஆன்லைன் செஸ் போட்டியில் பங்கேற்பு, வர்ணனையாளர் பணி, சமூக வலைதளங்கள் மூலம் வீரர்களுடன் கலந்துரையாடல் என்று நேரத்தை செலவிட்டார்.

    தற்போது பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வழியாக நேற்று இந்தியாவுக்கு திரும்பினார். ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக பெங்களூருவுக்கு நேற்று பிற்பகல் வந்தடைந்த ஆனந்த் கர்நாடகாவில் பின்பற்றப்படும் நடைமுறைப்படி கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். பிறகு சென்னைக்கு சென்றதும் அவரது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். ஆனந்தின் மனைவி அருணா கூறுகையில், ‘நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சொந்த நாட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் முடிந்ததும் அவர் சென்னைக்கு வருவார்’ என்றார்.

    அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார்.
    அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதன்படி 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் சம்பாதித்த பரிசுத்தொகை, ஊதியம், போனஸ், போட்டிக்கட்டணம், விளம்பர ஒப்பந்த வருமானம், காப்புரிமைத் தொகை ஆகியவற்றை மதிப்பிட்டு உலக அளவில் கடந்த ஓராண்டில் அதிக வருவாய் ஈட்டிய வீரர், வீராங்கனைகளின் முதல் 100 பேர் பட்டியலை தயாரித்து தற்போது வெளியிட்டுள்ளது.

    எப்போதும் போல கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கோல்ப், குத்துச்சண்டை, கார்பந்தய வீரர்களே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

    கால்பந்து நட்சத்திரங்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’அரியணையில் ஏறியுள்ளார்.

    அவர் ஓராண்டில் குவித்த தொகை ரூ.802 கோடி. இதில் பரிசுத்தொகை ரூ.48 கோடியாகவும், விளம்பர ஒப்பந்த தொகை ரூ.754 கோடி அளவிலும் உள்ளது. 38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. ஆனாலும் விளம்பர ஒப்பந்தம் மூலம் அவருக்கு பணமழை கொட்டுகிறது. குறிப்பாக ஜப்பான் ஆடை தயாரிப்பு நிறுவனமான யுனிக்லோ 10 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் பெடரருடன் ரூ.2,265 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்த வகையில் மட்டும் பெடரருக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தம்தான் அவருக்கு ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ‘போர்ப்ஸ்’ 30 ஆண்டுகளாக இத்தகைய பட்டியலை வெளியிடுகிறது. இதில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒருவர் முதலிடம் பெற்றிருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

    2-வது இடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரரும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார். அவரது ஓராண்டு சம்பாத்தியம் ரூ.792 கோடியாகும். போட்டியில் பங்கேற்பதற்காக அவர் பெற்ற ஊதியம் மற்றும் பரிசு மட்டும் ரூ.452 கோடியாகும்.

    கொரோனா பாதிப்பால் கால்பந்து வீரர்களின் ஊதியம் இந்த சீசனில் சற்று குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ரூ.784 கோடியுடன் 3-வது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.720 கோடியுடன் 4-வது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் ரூ.666 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்த பட்டியலில் வீராங்கனைகளில் 2 பேர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்கள். டென்னிஸ் பிரபலங்களான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ரூ.282 கோடியுடன் 29-வது இடத்திலும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரூ.272 கோடியுடன் 33-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ரூ.336 கோடி தொகையுடன் 23-வது இடத்தில் இருக்கிறார்.

    விராட் கோலி

    இந்த பணக்கார விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பில், கிரிக்கெட்டில் இருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, இந்திய கேப்டன் விராட் கோலிதான். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி 66-வது இடம் வகிக்கிறார். ‘போர்ப்ஸ்’ இதழ் கணக்கீட்டின்படி ஒரு ஆண்டில் அவர் ஈட்டிய வருமானம் ரூ.196 கோடியாகும். இதில் பரிசு மற்றும் சம்பளம் மூலம் ரூ.15 கோடியும், விளம்பர ஒப்பந்த வாயிலாக ரூ.181 கோடியும் குவித்து இருக்கிறார்.

    31 வயதான விராட் கோலி இந்த பட்டியலில் 2018-ம் ஆண்டில் 83-வது இடத்திலும், 2019-ம் ஆண்டில் 100-வது இடத்திலும் இருந்தார். இப்போது மேலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
    கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து விளையாட்டுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட்டும் அடக்கம்.

    இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    கிரிக்கெட் உலகில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என செயலி ஒன்றின் மூலம் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளதாவது:

    கொரோனா வைரஸ் திடீரென உலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

    நம்மிடம் இந்த வைரசுக்கு மருந்து எதுவும் இல்லை. ஆனால், 6 அல்லது 7 மாதங்களில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

    கிரிக்கெட் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் ஆனால் கிரிக்கெட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி.க்கு நரக வேதனை தான். மருந்து கண்டுபிடித்த பின்னர் தான் கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என தெரிவித்துள்ளார்.
    விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஒயிட்-பால் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
    விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஒயிட்-பால் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

    மத்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விளையட்டு சங்கமும் சிறந்த வீரர்களின் பெயர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.

    விருதுக்கு தகுதியான நபர்தானா? என்பதை கண்டறிய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு நற்சான்றிதழ் அளித்தபின், மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    பிசிசிஐ


    2016 ஜனவரில் இருந்து 2019 டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்க இருக்கிறோம். அந்தந்த விளையாட்டு சங்கங்கள் பெயர்களை அனுப்பி வைக்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.

    இந்நி்லையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரோகித் சர்மா பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஷிகர் தவான், இஷாந்த் சர்மா பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    அதேபோல் தீப்தி சர்மா என்ற வீராங்கனை பெயரையும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    ரோகித் சர்மா கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடினார். ஐந்து சதங்களுடன் அதிக ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.
    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி தான் சிறந்த கேப்டன் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில் தேவ். அதற்கு அடுத்த படியாக டோனி உலகக் கோப்பை வென்று சாதித்தார்.

    கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) கைப்பற்றியது.

    மகேந்திர சிங் டோனி 2 உலகக் கோப்பையை வென்றார். 2007-ல் நடந்த அறிமுக 20 ஓவர் உலக கோப்பையை அவர் தலைமையிலான அணி கைப்பற்றியது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் உலகக்கோப்பையை (ஒருநாள் போட்டி) வென்று முத்திரை பதித்தார்.  இதைப் போல ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் (2013) பெற்றுக் கொடுத்தார்.

    இந்திய அணிக்காக சாதித்த டோனி தற்போது ஓய்வு முடிவை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. விரைவில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவுகின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் ஆடவில்லை.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி தான் சிறந்த கேப்டன் என்று முன்னாள் விக்கெட் கீப்பரும், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவருமான சையது கிர்மானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை இந்திய கேப்டன்களில் டோனி தான் சிறந்தவர். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவருக்கு இருக்கும் நற்சான்றிதழ் வேறு யாருக்கும் இல்லை. இதை நான் உரிய மரியாதையுடன் சொல்ல விரும்புகிறேன்.

    நான் இப்படி சொல்வதால் எனக்கு கேப்டன்களாக இருந்தவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சில உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

    டோனிக்கு தனது எதிர்காலம் குறித்து நன்றாக தெரியும். அவர் அமைதியாக இருக்கிறார். தனது எதிர்காலத்திட்டம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    இந்திய அணிக்காக டோனி மீண்டும் விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர் தனது கனவுகளையும், குறிக்கோளையும் ஏற்கனவே அடைந்துவிட்டார். அவர் சாதிப்பதற்கு இன்னும் எதுவும் இல்லை. இதனால் அவர் அணிக்கு திரும்ப வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

    எப்படி இருந்தாலும் முடிவு எடுக்க வேண்டியது டோனியின் கையில்தான் இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்தி மூலம் அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டி அவரது கடைசி ஆட்டமாக இருக்கலாம்.

    இவ்வாறு சையது கிர்மானி கூறியுள்ளார்.

    டோனி இந்திய அணிக்காக மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் சாதித்தார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை 3 முறை (2010, 2011, 2018) பெற்றுக் கொடுத்தார். 5 தடவை இரண்டாவது இடத்தை பிடித்தது.

    இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர் - நவம்பர்) ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
    ஜெர்மனியில் 3 மாதங்களாக தவித்த உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இன்று நாடு திரும்புகிறார்.
    சென்னை:

    5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் விஸ்வநாதன் ஆனந்த். சென்னையைச் சேர்ந்த இவர் பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்றார்.

    கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், ஆனந்த் சென்னை திரும்ப முடியாமல் தவித்தார்.

    ஜெர்மனியில் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஜெர்மனியில் சிக்கி தவித்த அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    அங்குள்ள இந்திய தூதரகத்திடம் முறையிட்டார். வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புகிறார்கள். இதேபோல ஜெர்மனியிலிருந்து விஸ்வநாதன் ஆனந்தும், நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் ஜெர்மனியில் சிக்கி தவித்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று நாடு திரும்புகிறார். அங்குள்ள பிராங்போர்ட்டிலிருந்து விமானம் ஒன்று டெல்லி மற்றும் பெங்களூருக்கு வந்தடைகிறது. அந்த விமானத்தில் ஆனந்த் வருகிறார். இந்த விமானம் இன்று பிற்பகலில் பெங்களூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறது.

    பெங்களூருக்கு வரும் ஆனந்த் அரசின் வழிகாட்டுதல் படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். தனிமைக் காலம் முடிந்தபிறகே ஆனந்த் அங்கிருந்து சென்னை திரும்புவார்.
    2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன் என்ற குழப்பத்திற்கு சங்கக்கரா விளக்கம் அளித்துள்ளார்.
    மும்பை:

    2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது. இதில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை இந்திய அணி டோனி (91 ரன்), கவுதம் கம்பீர் (97 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. முன்னதாக இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. உலக கோப்பை வரலாற்றில் இரண்டு தடவை ‘டாஸ்’ என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். குழப்பத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து அப்போது இலங்கை அணியின் கேப்டனாக இருந்த குமார் சங்கக்கரா விளக்கியுள்ளார். இந்திய வீரர் ஆர்.அஸ்வினுடன் நடந்த ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடலில் சங்கக்கரா கூறியதாவது:-

    இறுதி ஆட்டம் அரங்கேறிய மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் திரண்டு இருந்தது. இவ்வளவு கூட்டத்தை எங்கள் நாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லை. ஒரு முறை கொல்கத்தா ஈடன்கார்டனில் முதல் ஸ்லிப்பில் நின்ற வீரருடன் பேசுவது கூட கேட்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே போல் தான் வான்கடேயிலும் காணப்பட்டது.

    பூவா, தலையா? கேட்பதற்காக இந்திய கேப்டன் டோனி நாணயத்தை மேலே சுண்டி விட்டார். ஆனால் ரசிகர்களின் கரவொலியால் நான் என்ன கேட்டேன் என்பது டோனிக்கு சரியாக கேட்வில்லை. நான் ‘பூ’ என்று சொன்னதாக அவர் கூறினார். ஆனால் நான் ‘தலை’ தான் கேட்டதாக கூறினேன். போட்டி நடுவரும் நான் தான் ‘டாஸ்’ வென்றது போல் கூறினார். ஆனால் டோனி அதை ஏற்கவில்லை. இதனால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இன்னொரு முறை ‘டாஸ்’ போடலாமே என்று டோனி சொன்னார்.

    இதனால் 2-வது முறையாக ‘டாஸ்’ போடப்பட்டது. அதில் மறுபடியும் நான் கேட்டபடியே ‘தலை’ விழுந்தது. இது என் அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. நான் டாசில் தோற்று இருந்தால் அனேகமாக இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் அரைஇறுதியின் போது காயமடைந்ததால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. அது தான் எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. சரியான கலவையில்அணியை தேர்வு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்திருந்தால் நாங்கள் முதலில் பந்து வீச்சைத் தான் தேர்ந்தெடுத்திருப்போம். அதனால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும் என்று உறுதியாக சொல்லமாட்டேன். இருப்பினும் அணியின் கலவையில் சமநிலை ஏற்பட்டிருக்கும். அவர் 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது எங்களுக்கு கூடுதல் பலமாகும்.

    இந்த உலக கோப்பை போட்டியை திரும்பி பார்க்கும் போது நீங்கள் கேட்ச்சுகளை தவற விட்டது குறித்து பேசுவீர்கள். அது விளையாட்டில் ஒரு அங்கம். ஆனால் என்னை பொறுத்தவரை மேத்யூஸ் விலகலால் ஆடும் லெவனில் செய்யப்பட்ட மாற்றமே திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்வேன் என்று சங்கக்கரா கூறினார்.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து ஜூன் 10-ந்தேதி முடிவு செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐ.சி.சி.யின் போர்டு நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது.

    ஐ.சி.சி. தலைவர் ‌ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த காணொலி கூட்டத்தில் மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதன் தலைவர் கங்குலி பங்கேற்றார்.

    இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை 2 ஆண்டுக்கு தள்ளி வைக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஐ.சி.சி. இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.

    20 ஓவர் உலக கோப்பை மற்றும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஐ.சி.சி.யின் கூட்டத்தில் அதன் ரகசியத் தன்மை மீறப்படுவதாக பல வாரிய உறுப்பினர்கள் கவலை எழுப்பினர். ஐ.சி.சி. வாரிய விவகாரங்களின் புனிதத் தன்மையும், ரகசிய தன்மையும் மிக உயர்ந்த ஆளுமைக்கு ஏற்ப உறுதி செய்வதற்கு உடனடி கவனம் தேவை என்று உணரப்பட்டது.

    இது தொடர்பாக ஐ.சி.சி நெறிமுறை அதிகாரி தலைமையில் சுதந்திரமான விசாரணையை தொடங்குவது என்று ஒருமனதாக உடன்பாடு செய்யப்பட்டது. ஜூன் 10-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் போட்டி பாதிப்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலை, மறு திட்டமிடல் உள்பட அனைத்து விவாதங்களும் இந்தக் கூட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ.-யால் வரிவிலக்கு பெற முடியாத திறமையின்மை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    வரிவிலக்கு இல்லை என்றால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை (2021) இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) பொருளாளர் அருண் துமல் கூறியதாவது:-

    இதில் அச்சப்பட எதுவுமில்லை. நான் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஐ.சி.சி. மற்றும் மத்திய அரசிடம் எங்களது குழு தொடர்ந்து இணைப்பில் இருப்பதால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×