என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனாவுக்கு பிறகு போட்டிகளை தொடங்குவது குறித்து மாநில விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய மந்திரி ஆலோசனை நடத்துகிறார்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் வீரர்கள் மட்டும் அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி பயிற்சியை தொடங்கலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?. விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச விளையாட்டு அமைச்சர்களுடன், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.

    இதில் முதல் நாளான நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்பட 18 மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘விளையாட்டு துறை மேம்பாட்டு விஷயத்தில் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கொரோனாவினால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பில் இருந்து விளையாட்டை மீட்டு நல்ல நிலைக்கு மேம்படுத்த சரியான செயல்திட்டம் இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாநிலமும் ஒன்று அல்லது இரண்டு விளையாட்டை தத்தெடுத்து அதனை முன்னேற்ற எடுக்கும் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் போதிய நிதியுதவி அளிக்கும்’ என்று தெரிவித்தார்
    20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிவு எடுப்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அனேகமாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூட்டம் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    சூப்பர் ஓவருக்கு மத்தியில் வென்ற 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. கடந்த ஆண்டு ஜூலை 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் அரங்கேறிய இறுதிசுற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட போது, அந்த அணி 14 ரன்களே எடுத்தது.

    வெற்றியை தீர்மானிக்க கொண்டு வரப்பட்ட சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் மறுபடியும் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து அதிக பவுண்டரி விளாசிய அணி என்ற வகையில் இங்கிலாந்து முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. பவுண்டரி எண்ணிக்கையின்படி வெற்றியாளரை முடிவு செய்யும் விதிமுறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த விதிமுறையை சில மாதங்களில் ஐ.சி.சி. நீக்கி விட்டது.

    கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திரில்லிங்காக அமைந்த அந்த இறுதிப்போட்டி நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. இதை நினைவு கூர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடு காரணமாக கடந்த 4 மாதங்கள் கொஞ்சம் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டில் ஓய்வில் இருந்தபடி 2019-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியை பார்க்கும் வாய்ப்பையும் இது உருவாக்கி தந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் டி.வி.டி. மூலம் மூன்று முறை உலக கோப்பை இறுதிப்போட்டியை முழுமையாக பார்த்து விட்டேன். இறுதி ஆட்டத்தை முதல்முறையாக ரசித்து கண்டுகளித்தேன். இதுவும் வியப்புக்குரிய ஒரு அனுபவம் தான். ஆனாலும் இந்த போட்டியை ஒவ்வொரு தடவையும் நாள் முழுவதும் உட்கார்ந்து முழுமையாக பார்க்கும்போது இன்னும் எனக்குள் பதற்றம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்டம் இடைவிடாது ‘நீயா-நானா’ என்று பரபரப்பும், நெருக்கடியும் நிறைந்ததாக நகர்ந்தது. இத்தகைய ஆட்டத்தில் நானும் பங்கெடுத்தது பெருமை அளிக்கிறது.

    இந்த இறுதிப்போட்டியை கிரிக்கெட்டை விட பெரியது என்று சொல்வேன். இங்கிலாந்து விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. இந்த வெற்றி நீண்ட நாட்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

    இந்த ஆட்டத்தை பொறுத்தவரை ஒரே ஒரு கட்டத்தில் மட்டுமே உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. அது ஆட்டத்தின் 49-வது ஓவர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம் ஒரு பந்தை வேகம் குறைத்து வீசினார். அப்போது களத்தில் நின்ற எங்கள் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (மொத்தம் 84 ரன் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்) பந்தை ‘லாங் ஆன்’ திசையில் தூக்கியடித்தார்.

    பந்து மேல்வாக்கில் பறந்ததே தவிர அதிக தூரத்துக்கு செல்லவில்லை. ஒரு வினாடி, ஸ்டோக்ஸ் அவுட் ஆகப்போகிறார், இத்துடன் நமது கதை முற்றிலும் முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். ஏனெனில் அப்போது வெற்றிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பந்து (எல்லைக்கோடு அருகே நின்ற டிரென்ட் பவுல்ட் பந்தை பிடித்து உள்ளே தூக்கிப்போட்டாலும் எல்லைக்கோட்டை மிதித்ததால் சிக்சரானது) சிக்சராக மாறியது.

    எந்த ஒரு அணியும் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற பின்னர் தொடர்ச்சியாக 20 ஓவர் உலக கோப்பையை வென்றதில்லை. அந்த சாதனையை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்த இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் ஏதாவது ஒன்றை வென்றாலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். இரண்டு 20 ஓவர் உலக கோப்பையையும் கைப்பற்றினால் அது 50 ஓவர் உலக கோப்பையை வென்றதை விட மகத்தான சாதனையாக இருக்கும்.

    ஏனெனில் இவ்விரண்டு உலக கோப்பை போட்டிகளும் வெளிநாட்டில் அதாவது ஒன்று ஆஸ்திரேலியாவிலும், மற்றொன்று இந்தியாவிலும் நடக்க இருக்கிறது. எனவே வெளிநாட்டில் இவ்விரு உலக கோப்பையையும் வென்றால், நிச்சயம் அது 50 ஓவர் உலக கோப்பையை விட பெரிது தான்.

    இவ்வாறு மோர்கன் கூறினார்.
    டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முன்னேற்றம் வகிக்கிறார்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 
    பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். 
    இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். 

    32 புள்ளிகளை கூடுதலாக பெற்றதால், அவரது தரவரிசைப் புள்ளி எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது. இது அவரது சிறந்த தரவரிசை மட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஒருவரின் அதிகபட்ச புள்ளியும் இதுதான்.

    இதே டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் மேலும் 46 புள்ளிகள் பெற்று மொத்தம் 726 புள்ளிகளுடன் ஒரு இடம் உயர்ந்து 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். டாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே (7-வது இடம்) அங்கம் வகிக்கிறார்
    கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அந்த அணியில் பேர்ஸ்டோவும் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் சேர்க்கப்படவில்லை. ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

    ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், 2-வது இன்னிங்சில் 9 ரன்களும் அடித்தார். கடைசியாக 12 டெஸ்ட் இன்னிங்சில் படலர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் 42 டெஸ்ட் போட்டிகளில் 31.46 சராசரியே வைத்துள்ளார். இதனால் பட்லர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.

    அவருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டுமா? என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு தொடரந்து வாய்ப்புகள்  வழங்கப்படும் என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சில்வர்வுட் கூறுகையில் ‘‘அவர் மீது இன்னும் நெருக்கடியை சுமத்தவில்லை. அது அவருக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க விரும்புகிறோம். 

    போட்டிக்கான பயிற்சி, போட்டி மற்றும் எல்லாவற்றிலும் சிறப்பாகவே காணப்பட்டார். முதல் இன்னிங்சிலும் நல்ல நிலையில்தான் இருந்தார். அவர் இன்னும் கூடுதல் நேரம் களத்தில் இன்று மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும். இது அவருக்குத் தெரியும்.

    அவர் நம்பிக்கையுடன் இருப்பதை எங்களால் உறுதி செய்து கொள்ள முடிகிறது. உண்மையிலேயே வெற்றிபெற அவருக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். மற்றவை எல்லாம், அவருக்கு ஒரு சிறந்த நாள் அமைந்து, அதிக ரன்கள் அடித்து. அதில் இருந்து அவர் செல்ல வேண்டும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வியாழக்கிழமை (ஜூலை 16-ந்தேதி) தொடங்குகிறது.
    ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதை தொடர்ந்து ஹேமங் அமின் பிசிசிஐ-யின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய ராகுல் ஜோரி, கடந்த டிசம்பர் மாதம் பிசிசிஐ அமைப்பில் கங்குலி தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியில் அமர்ந்தவுடன் தனது பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்தார்.

    பிறகு முடிவை மாற்றிக்கொண்டார். 2021 வரை அவருக்கு ஒப்பந்தம் உள்ளதால் அதுவரை பதவியில் இருக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் அவருடைய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.

    கங்குலி பிசிசிஐ தலைவராக ஆன பிறகு அவரும் செயலாளர் ஜெய் ஷாவும்தான் ஐசிசி கூட்டங்களில் பங்கேற்றார்கள். பிசிசிஐயின் முக்கியமான கூட்டங்களிலும் இவ்விருவருமே தலைமையேற்றார்கள். ஆனால், நிர்வாகக் குழுவின் (சிஓஏ) பொறுப்பில் பிசிசிஐ இருந்தபோது ராகுல் ஜோரி கூடுதலான அதிகாரம் பெற்றிருந்தார். 

    பிசிசிஐ நிர்வாகப் பணிகளில் மட்டுமல்லாமல் 2017-ல் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே பதவி விலகியதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் ராகுல் ஜோரி தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிசிசிஐ-யின் தற்காலிகத் தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஐபிஎல் போட்டியின் தலைமை அதிகாரியாக உள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எ்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசுகையில், ‘‘இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்படி செய்தால் எந்தவொரு தேர்வாளர் எந்த வீரரின் பெயரை எந்த காரணத்துக்காக தேர்வு செய்கிறார் என்பதை எல்லோரும் பார்க்க முடியும்.

    அத்துடன் அணி தேர்வு நியாயமானதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யவும் உதவிகரமாக இருக்கும். வழக்கமாக தேர்வு செய்யப்படாத வீரர்கள் ஏன்? புறக்கணிக்கப்பட்டேன் என்று கேட்டால் தேர்வாளர்கள் வேறு யாரையாவது காரணம் சொல்லுவார்கள்.

    தேர்வு விஷயத்தில் யார் மீதும் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் தேர்வு குழு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டியது அவசியமானதாகும்’’ என்று தெரிவித்தார்.
    லா லிகா கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    ஸ்பெயினில் நடந்து வரும் 20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட், அலாவ்ஸ் அணியை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் (71 சதவீதம்) வைத்து இருந்த ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் பெர்லான்ட் மென்டியை, எதிரணி வீரர் ஜிமோ நவரோ ‘பவுல்’ செய்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

    அதனை பயன்படுத்தி அந்த அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா அபாரமாக கோல் அடித்தார். இடைநீக்கம் செய்யப்பட்டதால் வெளியேற்றப்பட்ட கேப்டன் செர்ஜியோ ரமோஸ்க்கு பதிலாக கேப்டன் பொறுப்பை வகித்த கரிம் பென்ஜிமா இந்த சீசனில் அடித்த 18-வது கோல் இதுவாகும்.

    51-வது நிமிடத்தில் பென்ஜிமா தட்டிக் கொடுத்த பந்தை சக வீரர் மார்கோ அசென்சியோ கோலாக மாற்றினார். பதில் கோல் திருப்ப அலாவ்ஸ் அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் அலாவ்ஸ் அணியை வீழ்த்தியது. கொரோனா இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் தொடர்ச்சியாக சுவைத்த 8-வது வெற்றி இதுவாகும்.

    இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கி விட்டது. அந்த அணி 35 ஆட்டத்தில் ஆடி 24 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 80 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 36 ஆட்டத்தில் விளையாடி 79 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    ரியல் மாட்ரிட் அணிக்கு இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் ரியல் மாட்ரிட் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 14-ந்தேதி கிரானடா அணியை சந்திக்கிறது. பார்சிலோனாவுக்கு 2 ஆட்டங்கள் உள்ளன.

    ரியல் மாட்ரிட் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிவிடும். ரியல் மாட்ரிட் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று இரண்டில் டிரா செய்தால் 85 புள்ளிகளுடன் முதல் இடம் பிடிக்கும். பார்சிலோனா இரண்டிலும் வெற்றி பெற்றால் 85 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடிக்கும் விட்டுக்கொடுத்த கோல்கள், அடித்த கோல்கள் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

    ஒருவேளை பார்சிலோனா ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தால் அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதேவேளையில் ரியல் மாட்ரிட் 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு டிராவது செய்ய வேண்டும்.

    ரியல் மாட்ரிட் அணிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.
    சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து 10 வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அறிமுக போட்டியின் படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
    ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விளையாடிய காலத்தில் 2010-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து க்ரீன் தொப்பியை பெற்றுக் கொண்டார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான அறிமுக போட்டியில் 8 மற்றும் 9-வது நபராக களம் இறங்கி முறையே 1 மற்றும் 12  ரன்கள் அடித்தார். 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஆரம்ப காலத்தில் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அறியப்பட்ட ஸ்மித், அதன்பின் தன்னை தலைசிறந்த பேட்ஸ்மேனாக வளர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 

    இன்றோடு ஸ்மித் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. கிரிக்கெட்டில் இன்னும் 10 ஆண்டுகள் விளையாடலாம் என 31 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ஸ்டீவ் ஸ்மித் அறிமுக போட்டியில் தொப்பியை ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து வாங்கும் படத்தை வெளியிட்டு ‘‘நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. தற்போது வரை மிகவும் அற்புதமான பயணம். எனக்கு இன்னும் 10 வருடங்கள் இருக்கலாம்?’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் கால்பந்து கிளப்பின் வீரரும், ஐவரி கோஸ்ட் அணியின் கேப்டனுமான செர்ஜியின் சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
    ஐவர் கோஸ்ட் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் செர்ஜ் ஆரியர். இவர் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறது. இவரது இளைய சசோதரர் கிறிஸ்டோபர். இவர் பிரான்ஸ் டவுலஸில் உள்ள ரோடியோ என்ற உள்ளூர் அணிக்காக விளையாடி வந்தார்.

    இவர் இன்று அதிகாலை இரவு விடுதி ஒன்றில் மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் கொலை செய்த நபர்களை தேடிவருகின்றனர்.

    2017-ல் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செர்ஜ் ஆரியர் மாறினார். இவரது சகோதரர் மறைவுக்கு டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி இரங்கலை தெரிவித்துள்ளார்.
    ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது. அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் இந்தியாவின் சிறந்த கேப்டனாக கருதப்படுகிறார்.

    1996-க்குப்பிறகு இந்திய அணி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியபோது, கங்குலி 2000-த்தில் கேப்டனாக பொறுப்பேற்றார். அணியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்தார். சேவாக்கை தொடக்க வீரராக களம் இறக்கினார். ஜாகீர் கான், யுவராஜ் சிங், கைப், எம்எஸ் டோனி, ஹர்பஜன் சிங் போன்ற இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து உத்வேகம் கொடுத்தார்.

    இவரது தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி எண்ணிக்கையை அதிகரித்தது. அதன்பின் எம்எஸ் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் இந்தியா டி20, 50 உலக கோப்பைகள் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எனக் கைப்பற்றியது.

    இதனால் எம்எஸ் டோனி சாதனைக் கேப்டனாக கருதப்படுகிறார். என்றாலும் கங்குலி சிறந்த கேப்டனா? எம்எஸ் டேனி சிறந்த கேப்டனா? என்ற விவாதம் இன்னும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

    கவுதம் கம்பிர், இர்பான் பதான், குமார் சங்ககரா, கிரேம் ஸ்மித் யார் சிறந்த கேப்டன் என்று விவாதித்தனர். அப்போது கங்குலியை விட எம்எஸ் டோனிதான் சிறந்த கேப்டன் என்று கம்பிர் தெரிவித்தார்.

    இதுகுறித்து கம்பிர் கூறுகையில் ‘‘ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட எம்எஸ் டோனி சிறந்த கேப்டன். குறிப்பாக நீங்கள் சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து குறிப்பிடும்போது. ஐசிசி-யின் டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளார். ஐசிசி டிராபியை வெல்ல அவருக்கு வேறு ஏதும் இல்லை.

    ஒரு கேப்டனாக இதைவிட சிறந்த சாதனைகள் வைக்க முடியாது. ஆகவே, ஒயிட்-பால் கிரிக்கெட்டில் கங்குலியை விட எம்எஸ் டோனி உயர்ந்தவர்’’ என்றார்.

    மேலும், ‘‘கங்குலி கேப்டன் பதவியை ஏற்குமபோது சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, கைஃப் போன்ற அனுபவமிக்க வீரர்கள் கொண்ட அணியாக இருந்தது.

    எம்எஸ் டோனி கேப்டன் பதவியை ஏற்கும்போது இந்த வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக ஜொலித்தனர். இதுதான் காரணம். நெருக்கடியை எப்படி கையாள வேண்டும் என்று இவர்களை டோனி மாற்றவில்லை.

    ஆனால், சவுரவ் கங்குலியின் மூலம் அனுபவமிக்க வீரர்களாக உருவெடுத்தவர்களால் டோனி உயர்ந்தவராக மதிப்பிடப்படுகிறார்.

    நீங்கள் 2002 சாம்பியன்ஸ் டிராபி குறித்து பேசும்போது, இலங்கையுடன் இந்தியா சேர்ந்து கோப்பையை வாங்கியது. இந்திய அணிக்குதான் அப்போது வாய்ப்பு அதிகமாக இருந்தது. போட்டி முழுவதுமாக நடந்திருந்தால் இந்தியா தனியாக கோப்பையை வென்றிருக்கும். அப்போது கங்குலிதான் கேப்டன்.

    அப்படி பார்க்கும்போது டோனியும், எம்எஸ் டோனியும் சமமாகத்தான் இருந்திருக்கனும். 2003 உலக  கோப்பையை பற்றி பேசினால், இந்திய அணி அபாரமாக விளையாடியது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கங்குலி தலைமையில் கோப்பையை வென்றிருப்போம். அதனால் எம்எஸ் டோனிக்கும், கங்குலிக்கும் இடையில் டிராபியை ஒப்பிட்டுள்ளால் ஒரேயொரு போட்டி மட்டுமே’’ என்றார்.
    ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
    டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான் உள்ளார். தனது மாயாஜால பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் இவர், ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    அஜாதி ரேடியோவுக்கு பேட்டியளிக்கும்போது ‘‘ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் நிச்சயதார்த்தம் மற்றும் திருணம் செய்து கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

    இளம் வயதில் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரஷித் கான், வங்காள தேச அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியை முதன்முறையாக வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 104 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் சாய்த்ததுடன் 51 ரன்கள் அடித்தும் வெற்றிக்கு ஊறுதுணையாக இருந்தார்.

    உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் என்ற ரஷித் கானை டுவிட்டர்வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    ரஷித் கான் புதிய சல்மான் கான் என்றும், 2050 வரை உலக கோப்பையை வெல்ல ரஷித் கான் காத்திருக்க வேண்டும். திருமணத்தில் இருந்து தப்பிக்க சிறந்த திட்டம், ரஷித் கான் டூன் உலக கோப்பை என ட்ரோல் செய்துள்ளனர்.
    ×