என் மலர்
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான் உள்ளார். தனது மாயாஜால பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் இவர், ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
அஜாதி ரேடியோவுக்கு பேட்டியளிக்கும்போது ‘‘ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் நிச்சயதார்த்தம் மற்றும் திருணம் செய்து கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரஷித் கான், வங்காள தேச அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியை முதன்முறையாக வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 104 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் சாய்த்ததுடன் 51 ரன்கள் அடித்தும் வெற்றிக்கு ஊறுதுணையாக இருந்தார்.
உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் என்ற ரஷித் கானை டுவிட்டர்வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரஷித் கான் புதிய சல்மான் கான் என்றும், 2050 வரை உலக கோப்பையை வெல்ல ரஷித் கான் காத்திருக்க வேண்டும். திருமணத்தில் இருந்து தப்பிக்க சிறந்த திட்டம், ரஷித் கான் டூன் உலக கோப்பை என ட்ரோல் செய்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைவதற்கு முதல் இன்னிங்சில் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்ததே காரணம் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் நடந்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்து 'ஆல் அவுட்' ஆனது. 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து
4-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்து இருந்தது. நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 313 ரன்னில் "ஆல் அவுட்" ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 200 ரன் இலக்காக இருந்தது.
கிராவ்லி 76 ரன்னும், சிப்லி 50 ரன்னும் எடுத்தனர். கேப்ரியல் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ராஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும், ஹோல்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பிளாக் வுட்டின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிளாக்வுட் 96 ரன்னும், ராஸ்டன் சேஸ் 37 ரன்னும் எடுத்தனர். ஆர்ச்சர் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே 117 நாட்களுக்குப் பிறகு நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
இந்த வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது;-
4-வது நாள் ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. பவுலர்களால் இந்த சிறப்பான வெற்றியைப் பெற்றோம். எனது தலைமையின் கீழ் நான் பார்த்த சிறந்த பந்து வீச்சு ஆகும். இங்கிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் ஜோ ரூட் இல்லாததும் எங்களுக்கு சாதகமே. எங்களது சிறப்பான வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்
தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. முதல் இன்னிங்சில் நாங்கள் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறு என்று கருதவில்லை.
350 முதல் 400 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்று இருப்போம். நாங்கள் கடுமையாக போராடிதான் தோற்றோம். ஸ்டூவர்ட் பிராட்டை அணியில் இருந்து நீக்கியதற்காக வருத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 16- ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் மீதான ஐரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் இரண்டு ஆண்டு கால தடை நீக்கப்பட்டுள்ளது.
இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மான்செஸ்டர் சிட்டி. 2018-19 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
மான்செஸ்டர் சிட்டி அணி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்ஸ் இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது. இதை எதிர்த்து விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் மான்செஸ்டர் சிட்டி முறையீடு செய்தது.
விசாரணை முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி மீதான குற்றாச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்று இரண்டு ஆண்டு தடையை நீக்கி தீர்ப்பாய் உத்தரவிட்டது. இதனால் வருகிற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணியால் பங்கேற்க முடியும்.
பார்முலா 1 கார் பந்தயத்தின் 2-வது சுற்றான ஸ்டிரியா கிராண்ட் பிரி-யில் மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. ஸ்பில்பேர்க்கில் நடந்த முதலாவது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) வெற்றி பெற்றார். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் 2-வது சுற்று பந்தயம் ஸ்டிரியா கிராண்ட் பிரி என்ற பெயரில் ஸ்பில்பேர்க் ஓடுதளத்திலேயே நேற்று அரங்கேறுகிறது.
கடந்த முறை 4-வது இடம் பிடித்த மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் முதல் இடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 1:22:50.683 நேரத்தில் கடந்தார். முதல் இடம் பிடித்த ஹாமில்டனுக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது. முதல் சுற்றான ஆஸ்திரியா கிராண்ட் பிரியில் முதல் இடம் பிடித்தது மெர்சிடஸ் அணியின் போட்டோஸ் 13.719 வினாடிகள் பின்தங்கி 2-வது இடம் பிடித்தார். இவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.
ரெட்புல் அணியின் வெர்ஸ்டாப்பன் 3-வது இடத்தையும், அல்போன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
கொரோனா அச்சத்தால் சில நாடுகளில் இந்த போட்டியை நடத்த முடியாமல் போனதால் பாதுகாப்பு கருதி ஒரே இடத்தில் இரண்டு பந்தயம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரியன் கிராண்ட் பிரி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது அங்கு தனிமைப்படுத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று நம்புவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளோம். இதற்காக டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறோம். அங்கு சென்றதும் தனிமைப்படுத்துதல் நடைமுறையாக 2 வாரங்கள் ஓட்டலிலேயே வெறுமனே முடங்கி இருந்தால் வீரர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாவார்கள். எனவே தனிமைப்படுத்தும் நடைமுறை காலத்தை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மெல்போர்னை தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது தனிமைப்படுத்தும் நாட்களை குறைப்பார்கள், சீக்கிரமாகவே கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.
இது நிச்சயம் கடினமான தொடராக இருக்கப்போகிறது. 2 ஆண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் நாம் கைப்பற்றினோம். அந்த தொடர் போல் இந்த தொடர் இருக்கப்போவதில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக உள்ளது. இந்திய அணியும் நல்ல நிலையில் உள்ளது. நாம் அங்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். உலகின் சிறந்த அணிகள் வெளிநாட்டிலும் பேட்டிங்கில் மிரட்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் நாடுகளில் நாம் வெற்றி கண்ட டெஸ்ட் போட்டிகளில் 400, 500, 600 ரன்கள் வரை குவித்தது உண்டு. இதைத்தான் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் சொல்லியிருக்கிறேன்.
கோலியின் பேட்டிங், கேப்டன்ஷிப்பின் தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. நீங்கள் (கோலி) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது, அணியை வெற்றிக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இது அவரது கேப்டன்ஷிப்பை தீர்மானிக்கும் தொடராக இருக்கப்போகிறது. மொத்தத்தில் இது சிறப்பு வாய்ந்த, மைல்கல் தொடராக அமையும்.
கொரோனா பரவலால் நமது வீரர்கள் 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர். தொடர்ந்து உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கோலியிடம் கூறியிருக்கிறேன். அது மட்டுமின்றி முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்ற பவுலர்களும் உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் போது அவர்களது உடல்தகுதி கச்சிதமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜேசன் ஹோல்டர் (6 விக்கெட்டுகள்), கேப்ரியல் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ப்ரூக்ஸ் 39 ரன்களும், ராஸ்டன் சேஸ் 47 ரன்களும், பிராத்வைட் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 61 ரன்களும் அடித்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராய் 42 ரன்களுடனும், சிப்லி 50 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
சற்று நிலைத்து நின்று ஆடிய சக் 76 ரன்களை அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும்போது தனது இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 199 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்ரியல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
பின்னர், ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரோஸ்டன் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால், நிலைத்து நின்று ஆடிய பிளாக்வுட் 154 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 95 ரன்கள் விளாசினார்.
இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கான 200 ரன்களை எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
137 ரன்கள் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பந்து வீச்சாளர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.
நீங்கள் விளையாடுவதை விட ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பேன் என்று விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என வென்று ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்தது.
அப்போது ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லை. தற்போது அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்கள். இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி கடந்த முறை போன்று டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஆவலாக உள்ளது. அதேவேளையில் இந்தியா மீண்டும் தொடரை கைப்பற்றுவது எளிதானது அல்ல என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். 2018-ம் ஆண்டு தொடர்போல் எளிதாக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடினமாக இருக்கப்போகிறது. 2018-ல் நமக்கு எப்படி இருந்ததோ, அதுபோன்று இருக்காது. தற்போதுள்ள அணி மிகவும் வலுவான அணி. ஆனால் நம்முடைய அணி சிறந்தது. சிறந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நம்மிடம் இருக்கிறது.
நம் அணி மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. இருந்தாலும் நாம் கொஞ்சம் கூடுதலாக சிறப்பான வகையில் பேட்டிங் செய்ய வேண்டும். வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளங்கிய அணிகள், சிறப்பாக பேட்டிங் செய்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நாம் வெளிநாட்டு மண்ணில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்) வெற்றி பெற்றபோது, நம்முடைய ஸ்கோர் 400, 500 மற்றும் 600-க்கு மேல் இருந்திருக்கும்.

விராட் கோலியின் தரம் உயர்ந்ததாக உள்ளது. நீங்கள் விளையாட போகும்போதும், உங்களுடைய அணியுடன் நீங்கள் செல்லும்போதும், நான் போட்டியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். நாங்கள் உங்களிடம் வெற்றியை எதிர்பார்ப்பேன். என்னை பொறுத்தவரைக்கும் இதுதான்.
ஏனென்றால், நீங்கள் ஒரு தரமான வீரராக நிலைகொண்டு விட்டீர்கள். அது மற்ற வீரர்களிடம் இல்லை. ஆகவே, அந்த உயர்ந்த நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். டிசம்பர் மாதம் வரை என்னுடைய பிசிசிஐ தலைவர் பதவி நீட்டிக்கப்படுமா? என்ற எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய கேப்டன் பதவி உறுதியாக நீடிக்கும். இது ஒரு சாதனைத் தொடராக இருக்கும்.’’ என்றார்.
ரஞ்சி கோப்பையை சவுராஷ்டிர கிரிக்கெட் அணி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த ஷெல்டன் ஜாக்சன் புதுச்சேரி அணிக்காக விளையாட இருக்கிறார்.
சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தவர் ஷெல்டன் ஜாக்சன். 2019-2020 ரஞ்சி கோப்பையை சவுராஷ்டிரா அணி முதன்முறையாக கைப்பற்றியது. இதற்கு ஜாக்சனின் சிறப்பான பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது. அவர் 10 ஆட்டங்களில் 809 ரன்கள் குவித்தார். சராசரி 50.56 ஆகும்.
தற்போது அவர் சவுராஷ்டிர கிரிக்கெட் அணி இருந்து விலகி புதுச்சேரி அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஷெல்டன் ஜாக்சன் கூறுகையில் ‘‘இது மிகவும் கடினமான முடிவு. இது எளிதான அல்ல, என்றாலும் தொழில்முறை கிரிக்கெட்டில் மற்றொரு அணி அல்லது மாநிலத்திற்காக விளையாட இது சரியான நேரம் என்று உணர்கிறேன்’’ என்றார்.
ஏற்கனவே, பங்கங் சிங், பராஸ் டொக்ரா ஆகிய இரண்டு வீரர்களும் புதுச்சேரி அணிக்கு மாறியுள்ளனர்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாடத் தயார் என ரகானே தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்யா ரகானே கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இதைத்தான் எனது உள்ளுணர்வும் சொல்கிறது. ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை தொடக்க வரிசையோ அல்லது 4-வது வரிசையோ எந்த வரிசையில் பேட்டிங் செய்ய சொன்னாலும் அதற்கு தயாராக இருக்கிறேன்.
ஆனால் வாய்ப்பு எப்போது வரும் என்பது தெரியாது. மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட மனரீதியாக தயாராக உள்ளேன். திறமை மீது நம்பிக்கை வைத்து நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது முக்கியம்’’ என்றார். இதுவரை 90 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் 32 வயதான ரகானே கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிவேக ஓட்ட பந்தயராக திகழும் உசைன் போல்ட், மீண்டும் களம் இறங்குவேன் என்று அறிவித்துள்ளார்.
உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.
2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற 33 வயதான உசேன் போல்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘‘எனது பயிற்சியாளர் கிளைன் மில்ஸ் மீண்டும் என்னிடம் வந்து, இதை செய்யலாம் (மறுபிரவேசம்) என்று சொன்னால், அதற்கு தயார். ஏனெனில் அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். நாம் இதை செய்யப்போகிறோம் என்று அவர் கூறினால், அது சாத்தியமே என்பதை அறிவேன். எனவே அவர் அழைத்தால் மறுபடியும் களம் இறங்க தயார்’’ என்றார்.
உசைன் போல்ட்- காசிபென்னட் தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ‘‘வாழ்க்கையில் ஒரு தந்தையாக நிறைய மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது. இது, ஒரு உலக சாதனையை படைப்பதை விட கடினம்’’ என்றும் போல்ட் வேடிக்கையாக குறிப்பிட்டார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் சிப்லி, கிராலே ஆகியோர் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜேசன் ஹோல்டர் (6), கேப்ரியல் (4) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ப்ரூக்ஸ் 39 ரன்களும், ராஸ்டன் சேஸ் 47 ரன்களும், பிராத்வைட் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 61 ரன்களும் அடித்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ரொரி பர்ன்ஸ் 42 ரன்னும்,
சிப்லி அரை சதமும், கிராலே 76 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 46 ரன்னும் எடுத்தனர்.
நான்காம் நாள் இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசை விட170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்ரியல் 3 விக்கெட்டும், சேஸ், ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிப்பதற்கு சுதந்திரம் அளிப்பதாகக்கூறி, அப்படி எதையும் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஷாருக் கான் இருந்தார். தற்போது அவர்தான் இருந்து வருகிறார்.
சவுரவ் கங்குலிக்குப் பிறகு கவுதம் கம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இரண்மு முறை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கம்பிர் அளித்த பேட்டியில் ‘‘ஷாருக் கான் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தார்’’ என்றார். கவுதம் கம்பிர் கூறியதை அறிந்த சவுரவ் கங்குலி, தனக்கு அப்படி ஒரு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க முழு சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கான் உறுதியளித்தார். ஆனால் அப்படி எதுவும் அளிக்கப்படவில்லை. அணியில் யாரை தேர்வு செய்வது என்பதில் பிறரின் தலையீடு இருந்தது. ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அந்த அணியின் கேப்டன் வசம் அணியை விட வேண்டும். உதாரணத்திற்கு சென்னை அணியை டோனிதான் நிர்வகிக்கிறார். இதேபோன்று மும்பையும் உள்ளது. அங்கு ரோகித் ஷர்மாவிடம் யாரை அணியில் சேர்க்க வேண்டும் என யாரும் கூறுவதில்லை’’ என்றார்.
கங்குலியின் தலைமையில் 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. ஒருமுறை 100 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டது.
இதனால் கங்குலியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. அவர் தலைமையில் கொல்கத்தா அணி 27 போட்டிகளில் 13 போட்டிகளை மட்டுமே வென்றது. இதையடுத்து 2011-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கங்குலி நிராகரிக்கப்பட்டு வெளியேறினார். அதன்பின்னர் கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 7 வருடம் விளையாடியது. இதில் 2 முறை கோப்பைகளையும் அந்த அணி வென்றது.






