என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பசியில் இருக்கிறேன் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தவர். மேலும் பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் புதிய பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.

    38 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

    கொரோனாவிற்கு பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்டில் இங்கிலாந்து அணி விளையாடியுள்ளது. இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

    இதற்கிடையே ஓய்வு குறித்து அவரிடம் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தற்போதும் ஓய்வு குறித்து கேட்ட கேள்விக்கு இன்னும் விக்கெட் வீழ்த்தும் பசியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அதுவரை விளையாட விரும்புகிறேன். இந்த வாரம் நான் செய்ததைப் போலவே நான் பந்துவீசினால், ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு என் கைகளில் இருந்து பறிக்கப்பட்டுவிடும். அது தேர்வு விவகாரமாகிவிடும்.

    கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தீராத பசியில் உள்ளேன். இந்த வாரத்தில் ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதால் ஓய்வு பற்றி பேசப்படுகிறது இது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியதாக நினைக்கிறேன். இது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம். எல்லோருக்கும் இதுபோன்ற மோசமான போட்டி அமையும். நான் சிறப்பாக பந்து வீசவில்லை. ரிதம் சரியாக கிடைக்கவில்லை என உணர்கிறேன். கடைசி 10 வருடத்தில் முதன்முறையாக மைதானத்தில் நான் சற்று எமோசனல் ஆகிவிட்டேன். விரக்கியடைந்தேன்.

    நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில், விரக்தியடையும்போது, சற்று கோபம் அடைந்து மேலும் வேகமாக பந்து வீச முயற்சி செய்வேன். அதற்கு எந்த பலனும் கிடைக்காது. தற்போது அந்த சம்பவம் எனக்கு இந்த போட்டி ஞாபகப்படுத்தியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்ன தேவை என்பதை என்னால் இன்னும் ரசிகர்களுக்கு காட்ட முடியும் என்று நம்புகிறேன். இது என்னுடைய கிரிக்கெட் கேரியரில் கடினமான நேரம் என்று நினைக்கவில்லை. எனது வாழ்க்கையில் இன்னொரு மோசமான விளையாட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன்

    நான் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணிக்கு போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் இதில்தான் கவனம் செலுத்தினேன். இனிமேலும் அதில்தான் கவனம் செலுத்துவேன். 600 விக்கெட் வீழ்த்தினால் மிகச்சிறப்பு. அந்த சாதனையை எட்ட முடியவில்லை என்றால் கிடைத்ததை வைத்து சந்தோசம் அடைவேன்.

    154 போட்டிகள் என்பது சற்று அதிகம் போன்று தெரிகிறது. ஆனால், எனக்கான ஆட்டங்கள் இன்னும் இருக்கின்றன என உணர்கிறேன்’’ என்றார்.
    உலகளவில் ஆன்-லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த வீரராக விராட் கோலி உள்ளார். விளம்பரம், சம்பளம் மூலம் அதிக வருமானம் பெறும் வீரராகவும் திகழ்கிறார். 

    விராட் கோலிக்கு அடுத்தப்படியாக சிறந்த வீரராக ரோகித் சர்மா உள்ளார். புகழ்பெற்ற பிரபலமாக எம்எஸ் டோனி திகழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில உலக அளவில் ஆன்-லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அணிகள் பற்றி ‘SEMrush’ ஆய்வு நடத்தியது. இதில் விராட் கோலி இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் வரை மாதத்திற்கு சராசரியாக 16.2 லட்சம் முறை தேடப்பட்டு முதல் இடத்தை பிடித்து்ளளார்.

    ரோகித் சர்மா பெயர் சராசரியாக 9.7 லட்சம் முறையும், எம்.எஸ்.டோனி 9.4 லட்சம் முறையும், ஜார்ஜ் மெக்கே 9.1 லட்சம் முறையும், ஜோஷ் ரிச்சார்ட்ஸ் 7.1 லட்சம் முறையும், ஹர்திக் பாண்ட்யா 6.7 லட்சம் முறையும், சச்சின் தெண்டுல்கர் 5.4 லட்சம் முறையும், கிறிஸ் மேத்யூஸ் 4.1 லட்சம் முறையும், ஷ்ரேயாஸ் அய்யர் 3.4 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளனர்.

    அணிகளை பொறுத்தவரைக்கும் இந்திய அணி சராசரியாக 2.4 லட்சம் முறை தேடப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே  அணிகள் முறையே .66, .33, .29, .23, .16, .12, .12, .09, .05, .04, and .03 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளன.
    ஐபிஎல் போட்டியை ஷார்ஜா, அபு தாபி மற்றும் துபாயில் நடத்த மத்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் 13-வது சீசனை இந்திய மண்ணில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா, அபு தாபி, துபாய் ஆகிய நகரங்களில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

    இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் வழங்கியது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்கான கடிதத்தை அனுப்பியதால் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வேலையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு இறங்கியுள்ளது.

    இதற்கிடையே போட்டியை வெளிநாட்டு மண்ணில் நடத்த மத்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் தற்போது முறையான அனுமதி கிடைத்துள்ளது. இந்த தகவலை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில் ‘‘மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் இருந்து முறையான எழுத்துப்பூர்வ அனுமதியை பிசிசிஐ பெற்றுள்ளது’’ என்றார்.

    மேலும், ‘‘முன்னதாக வாய்மொழியாக மத்திய அரசு சரி என்று சொன்னது. இதனால் நாங்கள் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் அறிவித்தார். தற்போது நாங்கள் பேப்பரில் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளோம். ஆகவே, ஐபிஎல் அணிகள் எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் ஆகஸ்ட் 21-ந்தேதி 24 மணி நேரத்திற்குள் இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு துபாய் புறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 22-ந்தேதி புறப்படுகிறது.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட்டின் 2018 முதல் 2022 வரையிலான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் விவோ நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால் லடாக் பிரச்சனைக்குப்பிறகு சீனா பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

    இந்த பிரச்சனை பெரிதாகிய சமயம் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ தொடர்ந்து நீடிக்கும் என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனால் சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்த நெட்டிசன்கள் ஐபிஎல்-ஐ புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசியல் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பின. 

    இதனால், ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் தொடர்பாக போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் இருந்து விவோ நிறுவனமும்-பிசிசிஐ-யும் விலகின. இந்த நடவடிக்கையால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், காலியாக உள்ள ஐபிஎல் 2020 ஸ்பான்சர் உரிமத்தை வாங்க சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஐபிஎல் ஸ்பான்சர் தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

    ஆயுர்வேத பொருட்கள் தொடர்பான விற்பனையை செய்துவரும் பதஞ்சலி நிறுவனத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருவாய் 8 ஆயிரத்து 329 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவேளை ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை பாபா ராம்தேவின் நிறுவனம் பெறும் பட்சத்தில் டிஎல்எஃப் ஐபிஎல், விவோ ஐபிஎல் வரிசையில் இனி பதஞ்சலி ஐபிஎல் இணையும்.


    ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் என்ற நிலையில், இந்த முறை ஒரேயொரு அணிதான் என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 லீக் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. இதில் ஏழு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய  இரண்டு அணிகள்தான் கைப்பற்றியுள்ளன. 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் அணி எது என்று யாரிடம் கேட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் என சற்றென்று சொல்வார்கள். ஒரு அணியை தனிப்பட்ட முறையில் கூற இயலாது.

    ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘ஐக்கிய அரபு அமீரகம் சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும். இதனால் அந்த அணிக்குத்தான் வாய்ப்பு. அவர்களுடைய பலமே, வீரர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகவும், வயதானவர்களாகவும் இருப்பதுதான். இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். என்றாலும் அவர்களை சுற்றி நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் வளம் வருகிறார்கள். இது அவர்களுடைய மிகப்பெரிய பலம்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த இரண்டு மூன்று வாரங்களின் வானிலையை நான் பார்த்த வரைக்கும் 40 டிகிரி வரை இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் ஆடுகளம் உறுதியாக டர்ன் ஆகும் வகையில் இருக்கும். இது சென்னை அணிக்கு மற்றொரு ஹோம் போன்று இருக்கும் என உணர்கிறேன். அவர்களுடைய அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் பந்தை டர்ன் செய்வார்கள். அவர்களுக்கு இந்த தொடர் மிகவும் சரியானதாக இருக்கும். அவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
    பார்முலா1 கார்பந்தயத்தின் 5-வது சுற்று போட்டியில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்தார்.
    சில்வர்ஸ்டோன்:

    பார்முலா1 கார்பந்தயத்தின் 5-வது சுற்று போட்டி இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பார்முலா1 கார்பந்தயத்தை தொடங்கி 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் நடந்த இந்த சுற்றில் வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 306.198 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 19 நிமிடம் 41.993 வினாடிகளில் எட்டி முதலிடம் பிடித்ததோடு 25 புள்ளிகளையும் தட்டிச் சென்றார்.

    இதன் மூலம் மெர்சிடஸ் அணியின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிய அவர் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை விட 11.32 வினாடி பின்தங்கிய 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) 3-வது இடத்தை பிடித்தார்.

    இதுவரை நடந்துள்ள 5 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 107 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெர்ஸ்டப்பென் 77 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 16-ந்தேதி ஸ்பெயினில் நடக்கிறது.
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் நபோலியை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது.
    பார்சிலோனா:

    கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ‘ரவுண்ட் 16’ எனப்படும் நாக் அவுட் சுற்று ஒன்றில் பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்), நபோலி (இத்தாலி) அணியை பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் நபோலியை தோற்கடித்தது. பார்சிலோனா அணியில் கிளைமென்ட் லெங்லெட் (10-வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (23-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மெஸ்சி 29-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தார். ஆனால் வீடியோ மறுஆய்வு ரீப்ளேயில் அவர் பந்தை கைகளால் கையாண்டது தெரியவந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது.

    இவ்விரு அணிகள் இடையே நடந்த முதலாவது லீக் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்திருந்தது. இதையடுத்து இரு ஆட்டங்கள் முடிவின் அடிப்படையில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் நபோலியை வெளியேற்றி தொடர்ந்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 4-1 என்ற கோல் கணக்கில் செல்சியாவை (இங்கிலாந்து) பந்தாடியது.

    ஏற்கனவே முதலாவது லீக்கிலும் பேயர்ன் முனிச் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டிருந்ததால் சிக்கலின்றி கால்இறுதியை உறுதி செய்தது.

    கால்இறுதி ஆட்டங்களில் அடலன்டா (இத்தாலி) -பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), லெப்ஜிக் (ஜெர்மனி)- அட்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), பார்சிலோனா-பேயர்ன் முனிச், மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)-லயன் (பிரான்ஸ்) ஆகிய அணிகள் மோதுகின்றன.
    இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக நியூசிலாந்து செல்ல இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். இவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆவார்.

    நேற்று நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் குறைந்த ரன்னில் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்நிலையில் அவர் உடனடியாக நியூசிலாந்து செல்ல இருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் குடும்பம் ஆகியவை இது அவரது தனிப்பட்ட விஷயம் மேற்கொண்டு ஏதும் கேட்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    கடந்த சில மார்ச் மாதத்தின் போது இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பென் ஸ்டோக்ஸின் தந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நியூசிலாந்தில் இருந்து வருகிறார். பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இறுதி வரை போராடி வெற்றி பெற முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடியது. யாசீர் ஷா 4 விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து 219 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ரன்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஏழு விக்கெட்டை இழந்து இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    தொடக்கத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் இங்கிலாந்து அணி 117 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றிபெறும் நிலையில் இருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 6 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்கள் குவித்து. இது பாகிஸ்தான் வெற்றியை தடுத்தது.

    இந்நிலையில் இந்தத் தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில் ‘‘ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட் இழந்த பிறகு, இங்கிலாந்தை வெற்றி பெற்றது ஏமற்றம் அளிப்பதாக உள்ளது. பட்லர், கிறிஸ் வோக்ஸ் திறமையான முறையில் எங்களது பந்து வீச்சை அதிரடியாக விளையாடி விட்டார்கள்.

    இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கனும். 300 டார்கெட் வைத்திருந்தால் சூழ்நிலை வேறு மாதிரியாக இருந்திருக்கும். சொந்த மண்ணில் தலைசிறந்த பந்து வீச்சை வைத்திருக்கும் இங்கிலாந்துக்கு எதிராக 2-வது இன்னிங்சில் ஓரளவிற்கு போதுமான ரன்கள் அடிப்பது மிகவும் முக்கியமானது.

    மிஸ்பா உல் ஹக்

    பட்லர் - கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்வதற்கு முன்பு வரை போட்டி எங்கள் கையில்தான் இருந்தது. அந்த ஜோடி முற்றிலும் சூழ்நிலையை மாற்றி போட்டியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டது. கடும் நெருக்கடியில் சிறப்பான பார்ட்னர்ஷிப்யை உருவாக்கியதுதான் போட்டியின் திருப்புமுனை.

    எங்களுக்கு இது கடினமான போட்டி. இதில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். இதைவிட சிறந்த கிரிக்கெட்டை எங்களால் விளையாட முடியும். தோல்வியில் இருந்து மீளும் திறமை இந்த அணியிடம் உள்ளது’’ என்றார்.
    ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன் ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளது.
    ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் வருகிற 21-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட இருக்கிறது.

    ஐக்கிய அரபு அமீரகம் சென்றபின் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் ஆகஸ்ட் 15-ந்தேதியில் இருந்து இந்திய வீரர்களை மட்டும் அழைத்து ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை நடத்த சிஎஸ்கே விரும்புகிறது. இதற்கான அனுமதியை தமிழக அரசிடம் பெற இருக்கிறது.

    அனுமதி கிடைத்தவுடன் கேப்டன் எம்எஸ் டோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா மற்றும் சில வீரர்கள் சென்னையில் ஒன்றிணைவர்கள். ஆகஸ்ட் 14-ந்தேதி அனைத்து வீரர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு 15-ல் பயிற்சி தொடங்க இருக்கிறது.

    வீரர்கள் சென்னைக்கு வந்தாலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், அவர்கள் சென்னை வருவதற்கு முன் இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்து, நெகட்டிவ் முடிவை தெரிவிக்க வேண்டும். இதனால் வருவதில் சிக்கல் இருக்காது’’ என்று கூறப்படுகிறது.

    எம்எஸ் டோனி, ரெய்னா

    ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு செல்ல வேண்டும். அதன்பின் எங்கும் செல்லக்கூடாது என்ற உத்தரவு வீரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. சென்னையில் இருக்கும்போது இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பின்தான் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’’ எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழக அரசின் அனுமதியை பெற சிஎஸ்கே நிர்வாகம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2020 சீசன் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியதை நிதி நெருக்கடி என்று கூறமாட்டேன் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கலி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் லீக்கின் டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2018-ல் இருந்து விவோ இருந்து வந்தது. தற்போது சீனா நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளதால் விவோ டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலக நேரிட்டது.

    இதனால் பிசிசிஐ-க்கு சுமார் 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நான் நிதி நெருக்கடி என்று கூறமாட்டேன் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘நான் இதை நிதி நெருக்கடி என்று கூற மாட்டேன். இது ஒரு சிறிய குறைபாடு மற்றும் தொழில் ரீதியாக வலுவாக இருப்பதன் மூலம் அதை குறிப்பிட்ட காலத்தில் மீட்டு எடுக்கக்கூடிய வழியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பெரிய விசயம் ஒரே நாள் இரவில் வந்து விடாது. அதேபோல் ஒரேநாள் இரவில் பெரிய விசயம் நம்மை விட்டு விலகிச் சென்று விடாது. பிசிசிஐ வலிமையான பவுன்டேசன் கொண்டது. விளையாட்டு, அதிகாரிகள் கடந்தகாலத்தில் மிகவும் வலிமையாக உருவாக்கி வைத்துள்ளார்கள். பிசிசிஐ-யிடம் இந்த சறுக்கலை எதிர்கொள்ளும் திறன் உள்ளது’’ என்றார்.
    மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.

    மெல்போர்னை உள்ளடக்கிய விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆஸ்திரேலிய விளையாட்டு அட்டவணையில் ‘பாக்சிங் டே’ போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும். இந்த போட்டிக்கு இன்னும் 4½ மாதங்கள் உள்ளன. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
    ×