என் மலர்
விளையாட்டு

மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீரர் முகமது சிராஜ் அறிமுகமானார். டெஸ்டில் அறிமுகமான 298-வது இந்திய வீரர் ஆவார்.அவர் 2 முக்கிய விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-
இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன். கேப்டன் ரகானே, பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை கிடைத்தது.
‘இன்ஸ்விங்’ பந்து வீசும் திறமை எனக்கு இயல்பாகவே உள்ளது. எப்போதுமே நான் விக்கெட்டுக்கு மிக அருகில் வீசி பந்தை சுவிங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகமது சிராஜ் தனது இன்ஸ்விங் பந்து மூலம் லபுசேன், கேமரூன்கிரீன் ஆகியோரை அவுட் செய்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டேவிட் வார்னர். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை.
இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், 3-வது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் ஆடுவது சந்தேகமே.
மவுண்ட் மவுக்கானு:
நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுக்கானுவில் நடைபெற்று வருகிறது.
முதலில் ஆடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து இருந்தது. முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 94 ரன்னும், ஹென்றி நிகோலஸ் 42 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது. வில்லியம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 82-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 23-வது செஞ்சுரி ஆகும்.
மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தை எடுத்தார். அவர் 56 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து வில்லியம்சன் 129 ரன் குவித்து வெளியேறினார்.அவரது ஸ்கோரில் 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.
பின்னர் வந்த வீரர்களில் வாட்லின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ரன்கள் எடுத்தார். 155-வது ஓவரில் நியூசிலாந்து அணி 431 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டும் யாசில் ஷா 3 விக்கெட்டும் முகமது அபாஸ், அசரப், நசீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான மசூத் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜமீசன் ஓவரில் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. அபிட் அலி 19 ரன்களுடனும் முகமது அபாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார்.பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் கில் 28 ரன்னும், புஜாரா 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 159 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.
2-வது விக்கெட் ஜோடி இணைந்து நிதானமாக ஆடி 50 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த சுப்மன்கில் 45 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அவர் 8 பவுண்டரிகள் அடித்தார்.
அப்போது இந்தியாவின் ஸ்கோர் 61 ஆக இருந்தது. சுப்மன்கில் பெவிலியன் திரும்பிய 2-வது ஓவரிலேயே புஜாராவும் ஆட்டம் இழந்தார். அவர் 17 ரன்கள் எடுத்தார். அவரையும் கம்மின்ஸ் தான் அவுட் செய்தார்.
கில், புஜாரா அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 64 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரஹானே-விகாரி ஜோடி நிதானமாக ஆடியது. மதிய உணவு இடை வேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. ரஹானே 10 ரன்னுடனும், விகாரி 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
4-வது விக்கெட் ஜோடி நிதானத்துடன் விளையாடியது. 40.4-வது ஓவரில் இந்தியா 100 ரன்னை எடுத்தது. ரஹானேயும், விகாரியும் இணைந்து 126 பந்துகளில் 50 ரன்னை எடுத்தனர்.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் இந்த ஜோடியை பிரித்தார். விகாரி 21 ரன்னில் அவரது பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 116 ரன்னாக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரஹானேயுடன் ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார்.
ரிஷப்பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை பின்பற்றினார். 52.3 ஓவர்களில் இந்தியா 150 ரன்னை தொட்டது.
இந்நிலையில் 3 பவுண்டரிகளை அடித்த ரிஷப்பண்ட் ஸ்டார்க் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பொறுப்புடன் ஆடிய ரஹானே டெஸ்டில் தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஹானே 104 ரன்களுடனும் ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் லயன் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
Top day 1 for us. Great display from the bowlers and a solid finish too. 🇮🇳👏
— Virat Kohli (@imVkohli) December 26, 2020






