என் மலர்
விளையாட்டு




மவுண்ட்மங்கானு:
நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 129 ரன்னும், வாட்லிங் 73 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன்னும் எடுத்தனர். ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 401 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.
நியூசிலாநது வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.
80 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை இழந்தது. ஆபித் அலி 25 ரன்னில் ஜேமிசன் பந்தில் ‘அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து முகமது அப்பாஸ், அசார்அலி, ஹாரிஸ் சோகைல், பவாத் ஆலம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் திரும்பினார்கள்.
சவுத்தி, ஜேமிசன் தலா 2 விக்கெட்டும், போல்ட், வர்னர தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
7-வது விக்கெட்டான கேப்டன் முகமது ரிஸ்வான்- பகீம் அஸ்ரப் ஜோடி பாலோ ஆனை தவிர்க்க போராடினர்.
பாலோஆனை தவிர்க்க பாகிஸ்தான் 232 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் 187 ரன்கள் எடுத்த போது கேப்டன் ரிஸ்வான் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 142 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த வீரரகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது. இதனால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.
நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் சவுத்தி, போல்ட், வக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மெல்போர்ன்:
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி “பாக்சிங்டே” என்று அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் தொடங்கிய 2-வது போட்டியான பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் ரஹானே மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவரது 12-வது சதம் இதுவாகும். 112 ரன்களை எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.
மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரஹானே பெற்றார். இதற்கு முன்பு தெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் சதம் அடித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஹானேவின் பேட்டிங்கை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரஹானேவின் சதம் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்படும். நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் இதுவும் ஒன்று என்று கடந்த விட முடியாது. பாக்சிங் டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆட்டத்தின் போக்கு, ஆடுகள தன்மை, உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு என அனைத்துடன் கடுமையாக போராடி ரஹானே இந்த சதத்தை அடித்தார். இதனால் தான் இதை சிறந்த சதங்களில் ஒன்றுஎன்று கருதுகிறேன்.
ரஹானேவின் சிறந்த ஆட்டத்துக்கு இது ஒரு உதாரணமாகும். கோலி இல்லாத நிலையில் அணியின் ஆட்டத்தை பார்த்து அவரே அசந்து போய் இருப்பார்.
இவ்வாறு வார்னே கூறினார்.

மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீரர் முகமது சிராஜ் அறிமுகமானார். டெஸ்டில் அறிமுகமான 298-வது இந்திய வீரர் ஆவார்.அவர் 2 முக்கிய விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-
இந்திய அணிக்காக டெஸ்டில் விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன். கேப்டன் ரகானே, பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை கிடைத்தது.
‘இன்ஸ்விங்’ பந்து வீசும் திறமை எனக்கு இயல்பாகவே உள்ளது. எப்போதுமே நான் விக்கெட்டுக்கு மிக அருகில் வீசி பந்தை சுவிங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகமது சிராஜ் தனது இன்ஸ்விங் பந்து மூலம் லபுசேன், கேமரூன்கிரீன் ஆகியோரை அவுட் செய்தார்.






