search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆன மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்
    X
    ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆன மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

    2-வது டெஸ்ட் போட்டி: இந்தியா சிறப்பான பந்து வீச்சு - 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 133/6

    இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது.
    மெல்போர்ன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 104 ரன்னும் (அவுட் இல்லை), சுப்மன்கில் 45 ரன்னும், ஜடேஜா 40 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 82 ரன்கள் முன்னிலை, கைவசம் 5 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது. ரஹானேவும், ஜடேஜாவும் தொடர்ந்து விளையாடினார்கள்.

    மிகவும் சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடி ஆட்டம் தொடங்கிய 8-வது ஓவரில் பிரிந்தது.

    ரஹானே 112 ரன்னில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 223 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை அவர் எடுத்தார்.

    அப்போது ஸ்கோர் 294 ஆக இருந்தது.ரஹானேவும், ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 121 ரன் எடுத்தது மிகவும் முக்கியமானதாகும். அடுத்து அஸ்வின் களம் வந்தார்.

    மறுமுனையில் இருந்த ஜடேஜா சிறப்பாக ஆடி 50 ரன்னை எடுத்தார். 50-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 15-வது அரை சதமாகும்.

    103.5-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது. ஜடேஜா 57 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 306 ஆக இருந்தது.

    அதன் பிறகு எஞ்சிய 3 விக்கெட்டுகள் 20 ரன்னில் எளிதில் சரிந்தன. உமேஷ் யாதவ் 9 ரன்னிலும், அஸ்வின் 14 ரன்னிலும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

    இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும்.

    ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தொடக்க ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார்.

    ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஜோபர்ன்ஸ் 4 ரன்னில் அவரது பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 4 ஆகும்.

    2-வது விக்கெட்டுக்கு மேத்யூ வாடேயுடன் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. குறிப்பாக லபுசேன் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்.

    அஸ்வின் தனது அபாரமான பந்து வீச்சால் இந்த ஜோடியை பிரித்தார். லபுசேன் 28 ரன்னில் வெளியேறினார். 42 ரன்னில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து வந்த சுமித் 8 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஹெட் மேத்யூ வாடே ஜோடி நிதனாமாக விளையாடியது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். 137 பந்துகள் சந்தித்து நம்பிக்கையுடன் விளையாடி மேத்யூ வாடே எல்பிடபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ஹெட்டும் கேப்டன் பெய்னும் நடையை கட்டினர்.

    அப்போது ஆஸ்திரேலியா அணியின் ரன்னின் எண்ணிக்கை 99 ஆக இருந்தது, இதனையடுத்து இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டும் பும்ரா, சிராஜ், அஸ்வின் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×