என் மலர்
விளையாட்டு
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு மும்பையில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 189 ரன் இலக்கை டெல்லி எளிதாக எடுத்தது.
இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை அணி பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, மொய்ன் அலி, சாம் கர்ரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
கேப்டன் டோனி, தொடக்க வீரர் டுபிளசிஸ் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். அதே போல் பந்துவீச்சிலும் முன்னேற்றம் காண வேண்டும்.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினர். இதனை சரி செய்ய வேண்டும். பேட்டிங்கில் பலம் பொருந்திய பஞ்சாப்புக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்களை குவிக்க வேண்டியது அவசியமாகும்.
பந்துவீச்சில் தீபக் சாகர், ஜடேஜா, பிராவோ ஷர்துல் தாகூர் ஆகியோர் உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன், தீபக் ஹூடா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் 221 ரன்கள் குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் அதிரடியை காட்ட முயற்சிக்கும். அந்த அணி பந்துவீச்சில் முகமது சமி, ஜய் ரிச்சர்ட்சன் ரிலி மெரிடித், முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் இதழ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கவுரவித்துள்ளது.
இதன்படி 1970-களில் விவியன் ரிச்சர்ட்சும் (வெஸ்ட்இண்டீஸ்), 1980-களில் கபில்தேவும் (இந்தியா), 1990-களில் சச்சின் டெண்டுல்கரும் (இந்தியா), 2000-களில் முரளிதரனும் (இலங்கை), 2010-களில் விராட் கோலியும் (இந்தியா) சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டின் சிறந்த முன்னணி வீரருக்கான விருதை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றார். இவர், கடந்த ஆண்டு விளையாடிய 7 டெஸ்டில், 641 ரன், 19 விக்கெட் கைப்பற்றினார். சிறந்த முன்னணி வீராங்கனைக்கான விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனே கைப்பற்றினார். சிறந்த முன்னணி டுவென்டி20 வீரருக்கான விருதை விண்டீஸ் ஆல் ரவுண்டர் போலார்டு வென்றார்
கடந்த ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாம் சிப்லே, ஜாக் கிராலே, டேரன் ஸ்டீவன்ஸ், விண்டீசின் ஜேசன் ஹோல்டர், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இடம் பிடித்துள்ளனர்
பெண்கள் அணிக்குரிய பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான (முன்பு பெட் கோப்பை பெயரில் நடந்தது) டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இ்ந்திய அணி, லாத்வியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லாத்வியாவின் ஜுர்மலா நகரில் உள்ள உள்ளரங்க கடினதரை மைதானத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் நடக்கிறது.

அங்கிதா ரெய்னா கூறுகையில், ‘நாங்கள் பெரும்பாலும் கடின தரைபோட்டிகளில் தான் விளையாடி உள்ளோம். அதனால் களம் இறங்க மிகுந்த உற்சாகத்துடன் தயாராக உள்ளேன். தேசத்துக்காக ஆடும் போது எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்றார். முதல் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும், 2-வது நாள் ஆட்டம் மாலை 4.30 மணிக்கும் தொடங்குகிறது. போட்டியை யூரோ ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்பிடி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆகியோரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் அடுத்தடுத்து வெளியேற்றினார்.
அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.
கேப்டன் ரிஷப் பண்ட் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி 32 பந்தில் 9 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.
லலித் யாதவ் 20 ரன்களும், டாம் கர்ரன் 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா இறங்கினர். டெல்லி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இதனால் பட்லர் பட்லர் 2, வோரா 9, சஞ்சு சாம்சன் 4, ஷிவம் டூபே 2, ரியான் பராக் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டேவிட் மில்லர் அரை சதமடித்து 47 பந்தில் 62 ரன் அடித்து அவுட்டானார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுல் திவாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். கடைசியில் கிறிஸ் மோரிசும், உனத்கட்டும் போராடினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் 2 சிக்சருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மோரிஸ் 18 பந்தில் 4 சிக்சர்களுடன் 36 ரன்களுடனும், உனத்கட் 11 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
டெல்லி அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா கடந்த 6-ந் தேதி மும்பை வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து பாதியில் விலகிய அவர் சக வீரர் காஜிசோ ரபடாவுடன் இணைந்து இங்கு வந்தார். இந்த நிலையில் தனிமைப்படுத்தலின் போது அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் வாரிய கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையின் படி அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். அப்போது அவரிடம் கடைசி 2 நாட்கள் உள்பட 5 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகு தான் களம் இறங்க முடியும். நோர்டியா கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 22 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், அதிவேகமாகவும் பந்துவீசி அசத்தினார். அவர் ஆடமுடியாமல் போய் இருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவாகும். ஏற்கனவே டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் கொரோனா பாதிப்புக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (865 புள்ளி) விராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த வாரம் செஞ்சூரியனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 94 ரன்கள் குவித்ததால் 13 தரவரிசை புள்ளிகளை அறுவடை செய்த பாபர் அசாம் 2-வது இடத்தில் இருந்து நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அத்துடன் 41 மாதங்கள் நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் ஒரு மாற்றமாக ரஜத் படிதர் நீக்கப்பட்டு, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் சந்தீப் ஷர்மா, முகமது நபிக்கு பதிலாக ஷபாஸ் நதீம், ஜாசன் ஹோல்டர் இடம் பிடித்தனர்.
‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ‘பேட்’ செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரர்களாக கேப்டன் விராட்கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களம் கண்டனர். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் 2-வது பந்தை விராட்கோலி பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய தேவ்தத் படிக்கல் (11 ரன்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ‘கேட்ச்’ கொடுத்து விரைவில் நடையை கட்டி ஏமாற்றம் அளித்தார்.

முதலில் நிதானத்தை கடைப்பிடித்த மேக்ஸ்வெல் 11-வது ஓவரில் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 33 ரன்னில் (29 பந்து, 4 பவுண்டரி) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் விஜய் சங்கர் அருமையாக கேட்ச் செய்தார். சுழற்பந்து வீச்சில் கலக்கிய ரஷித் கான் தனது அடுத்தடுத்த ஓவர்களில் டிவில்லியர்ஸ் (1 ரன்), வாஷிங்டன் சுந்தர் (8 ரன்) விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த டேன் கிறிஸ்டியன் (1 ரன்) நடராஜன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் ‘கேட்ச்’ கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இறுதி கட்டத்தில் மேக்ஸ்வெல் அடித்த பவுண்டரி, சிக்சரால் அந்த அணி சற்று சவாலான ஸ்கோரை எட்டியது. கடைசி ஓவரில் ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் பந்தில் கைல் ஜாமிசன் (12 ரன்) வீழ்ந்தார். ஐ.பி.எல். தொடரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் (59 ரன்கள், 41 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும், புவனேஷர்குமார், ஷபாஸ் நதீம், நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா (1 ரன்) முகமது சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து விரைவில் ‘அவுட்’ ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான டேவிட் வார்னருடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய வண்ணம் இருந்தனர். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருந்த போது (13.2 ஓவர்) டேவிட் வார்னர் 54 ரன்னில் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கைல் ஜாமிசன் பந்து வீச்சில் டேன் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
17-வது ஓவரில் ஷபாஸ் அகமது தனது மாயாஜால சூழலில் ஜானி பேர்ஸ்டோ (12 ரன்), மனிஷ் பாண்டே (38 ரன், 39 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல் சமாத் (0) ஆகிய 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 3 ரன்னிலும், ஜாசன் ஹோல்டர் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.






